மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் தேதி அதிகாலை 5.30-க்கு பொதுமக்கள், உடன்பிறப்புகள் அஞ்சலிக்காக அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்சில் இருந்து கண்ணாடிப் பேழையில் இருக்கும் கலைஞரின் உடலை இறக்கி, எல்லோரும் பார்ப்பதற்கு ஏதுவாக, சாய்வாக வைத்த போது, உள்ளே இருந்த கலைஞரின் உடல் ஒருபக்கமாக சரிவதைப் பார்த்து அனைவரும் பதறிவிட்டனர். உடனடியாக அனைத்தும் சரிசெய்யப்பட்டு, ராணுவத்தினர் தேசியக் கொடியை கலைஞரின் உடலில் போர்த்தினர்.
கலைஞர் உடல் வருவதற்கு முன்பே, ராஜாஜி ஹால் மைதானத்தில் பல்லாயிரக் கணக்கானோர் குழுமியிருந்தனர். 6.00 மணிக்கு பொழுது புலர்ந்து சூரியன் உதித்தபோது அண்ணா சாலை மட்டுமல்ல, அந்தப் பகுதியின் அனைத்து சாலைகளும் மனித அலைகளால் திணற ஆரம்பித்தன. முதல் ஆளாக அஞ்சலி செலுத்த வந்தார் அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அடுத்ததாக, முதல் நாள் இரவு கோபாலபுரம் சென்று திரும்பிய ரஜினி, ராஜாஜி ஹாலுக்கு தனது மனைவி லதாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
7 மணிக்கு அமைச்சர்கள், து.சபா தம்பிதுரை சகிதம் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் அஞ்சலி செலுத்த வந்தனர். மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்கும் விவகாரத்தில் அரசியல் பண்ணியதால், எடப்பாடிக்கு எதிராக தி.மு.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினார்கள். "வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்' என்ற முழக்கமும் கேட்டது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் என வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
வி.ஐ.பி.க்களுக்கு எந்தளவு முக்கியம் இருந்ததோ அந்தளவுக்கு தொண்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வைத்தனர். கட்சியின் பெரும்பாலான மா.செ.க்கள் எந்தவிதமான வாகன ஏற்பாடுகள் செய்யாவிட்டாலும் தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னெழுச்சியாக திரண்டு வந்தனர் தி.மு.க. உடன்பிறப்புகளும் பொதுமக்களும். சென்னையில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் இவைகளில் பயணித்து சாரை சாரையாக வந்து ராஜாஜி ஹாலில் குவியத் தொடங்கியது ஜனக்கூட்டம்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்த பிறகு, அனைத்து வயது பெண் வாக்காளர்களும் கலைஞர் மீது வெறுப்பில் இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வரை அந்த பிம்பத்தை கட்டிக் காக்க பெரும்பாடுபட்டனர். ஆனால் கலைஞரோ தனது ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உட்பட ஏராள மான திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வந்தார். ஆனாலும் ஜெ. தான் பெண்களுக்கான ரோல்மாடல் என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. அதையெல்லாம் மீறி, பெண் களுக்கான உரிமைகளை மீட்ட கலைஞருக்கு பெரும் மரியாதை இருந்ததை ராஜாஜி ஹாலில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த பெண்களின் கதறலிலும் கண்ணீரிலும் காண முடிந்தது.
காலை 9.30 மணிக்கு மெரினா இடஒதுக்கீடு வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த தகவல் கிடைத்ததும், தொண்டர்கள் மத்தியில் ஆவேசத்தின் அளவு கூடியது. ஆவேசத்தைக் குறைக்க, சென்னை மா.செ. மா.சுப்பிரமணியன் பெரும்பாடுபட்டார். காலை 10.30-க்கு சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடி 11 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு வந்தார். அவர் வந்த நேரம், மெரினாவில் கலைஞருக்கு இடம் உண்டு என்ற தீர்ப்பும் வந்தது. தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் மூலம் தீர்ப்பு தகவல் கிடைத்ததும் ஸ்டாலினிடம் கூறினார் ஆ.ராசா.
வி.பி.சிங் ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் கமிஷன் நடைமுறைக்கு வந்த ஆக.07-ஆம் தேதி மறைந்தார் கலைஞர். 08-ஆம் தேதி மெரினாவில் அவருக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பைக் கேட்டதும் ஆர்ப்பரித்த தொண்டர்களை நோக்கி கைகூப்பி வணங்கி வெடித்து அழுது, துரைமுருகன் மீது சாய்ந்தார் ஸ்டாலின். அப்போது கனிமொழியும் கண்ணீருடன் தன் அண்ணனை கைதாங்க, சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பின் மீண்டும் கலைஞரின் காலடியில் நின்றார் ஸ்டாலின். தலைவர் தன்னுடைய மரணத்திலும் நீதிப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதை தொண்டர்கள் தங்களுடைய முழக்கங்களால் கொண்டாடினர். அந்த உணர்ச்சிகரமான சூழலில், வருகை தந்த பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, ஒரு முறை கலைஞரின் உடலைச் சுற்றி வந்து, ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டார். மெரினாவில் முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காக துரைமுருகன், ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டதும் கூட்ட நெரிசல் அதிகமானது.
புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம், முதல்வர்கள் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். அனைவரும் ராஜாஜி ஹாலை நோக்கியும் மெரினாவை நோக்கியும் போய்க் கொண்டிருக்க, ஏகப்பட்ட பேர் கோபாலபுரத்திற்குச் சென்று, கலைஞரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஃபோட்டோவை வணங்கி கண்ணீர்விட்டனர். சொக்கலிங்கம் என்ற தொண்டர் "வீரவணக்கம் வீரவணக்கம் தலைவருக்கு வீரவணக்கம்' என முழங்கிக் கதறினார்.
கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இளைஞர்கள் அதிகளவில் வந்து கொண்டிருந்தனர். எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான அஜயன்பாலா தனது காரில் வந்து கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்டிருக்கிறார். அவரிடம் அஜயன்பாலா விசாரித்த போது, “""அய்யா கலைஞர் இலவச பஸ் பாஸ் கொடுத்ததாலதான் என்னால கிராமத்துலருந்து நகரத்துக்குப் போய் படிச்சு இந்த நிலைமைக்கு வரமுடிஞ்சது. அந்த நன்றி என்னோட சந்ததிக்கும் இருக்கும்ங்க'' என்றதைக் கேட்டதும் நெகிழ்ந்து விட்டார் அவர்.
சென்னை தரமணியில் டைட்டல் பார்க்கை திறந்து அது அமைந்திருக்கும் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என பெயரிட்டார் கலைஞர். அதன் பின் அந்த சாலையில் பெருகிய ஐ.டி. நிறுவனங்களால் பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர் இஞ்சினியர்கள் உருவானார்கள். அந்த ராஜீவ்காந்தி சாலையிலிருந்து கலைஞர் உடல் இருக்கும் அண்ணா சாலைக்கு வெள்ளமென திரண்டு வந்தனர் ஐ.டி. இளைஞர்கள். இதேபோல் தென்மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை டாக்டர்களாக்கியவர் கலைஞர். ""தலைவருக்கு நன்றியைக் காணிக்கையாக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை'' என்றார் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர்.
எல்லா வயதினரும், எல்லா மதத்தினரும் நிறைந்திருந்த கலைஞரின் இறுதி ஊர்வலம், மாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு அண்ணா உறங்கும் மெரினாவைச் சென்றடைந்தது. கலைஞருக்கு இறுதிச் சடங்குகள் முடியும் வரை இருந்தார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கலைஞரின் குடும்பத்தினர், அவரின் உடன்பிறப்புகளான தொண்டர்கள், கோடானு கோடி தமிழர் களின் கண்ணீருடன் விடைபெற்றார், சரித்திர நாயகரான சளைக்காத போராளி கலைஞர்.
-ஈ.பா.பரமேஷ்வரன், ஜீவாபாரதி, அரவிந்த், அருண்பாண்டியன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக், குமரேஷ்
___________________________
இறுதி வரை கலைஞருடன்!
சண்முகநாதன்
தி.மு.க.தொடங்கப்பட்ட காலத்தில் கலைஞரின் மேடைப் பேச்சுகளை குறிப்பெடுத்து அனுப்பும் உளவுத்துறை சுருக்கெழுத்தராக இருந்தவர் சண்முகநாதன். அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானதும் தனக்கு உதவியாளராக சண்முகநாதனை சேர்த்துக் கொண்டார் கலைஞர். அப்போது குறிப்பெடுத்த சண்முகநாதன், அதன் பின் கலைஞரின் இறுதிக் காலம் வரை, அவரின் குறிப்பறிந்தும் உளம் அறிந்தும் இயங்கும் உண்மை ஊழியனானார். கலைஞர் முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அவரின் பேச்சுக்களை குறிப்பெடுத்து மின்னல் வேகத்தில் பத்திரிகைகளுக்கு அனுப்புவது, முரசொலியில் கலைஞர் எழுதும் கடிதங்களை பிழைதிருத்தி அனுப்புவது என தேனீயின் சுறுசுறுப்புக்கு இணையாக இருந்த சண்முகநாதன் ஏறத்தாழ 50 ஆண்டு காலம் கலைஞரின் நிழலாக இருந்தவர். கலைஞர் உடல்நலிவுற்று வீட்டிலேயே இருந்த போது அவருக்கு பக்கத்துணையாய் இருந்தவர் சண்முகநாதன். கலைஞரின் உடல் கோபாலபுரத்தில் இருந்த போது, அந்த உடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நித்யா(எ) நித்யானந்தம்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கலைஞரின் தனி உதவியாளராக இருந்தவர். கோபாலபுரத்தில் கலைஞர் இருந்த அறைதான் இவரின் வாழ்விடம். சக்கர நாற்காலியில் கலைஞர் அமரும் நிலை ஏற்பட்டதும், அந்த நாற்காலியைச் செலுத்தும் சாரதியாக இருந்தவர் நித்யா. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வீட்டிலிருந்தபடியே கலைஞர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுப்பது, அவரை கவனமாக பார்த்துக் கொள்வது, உடைகளை சரிசெய்வது என முழுக்க முழுக்க கலைஞருக்கு சேவை செய்து வாழ்ந்தவர். கலைஞரின் பேரன் போன்று கோபாலபுரத்தில் வலம் வந்தவர். காவேரியில் கலைஞர் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மரணிக்கும் வரை ஐ.சி.யூ.வார்டு அருகேயே இருந்து மருகியவர். மெரினாவில் கலைஞருக்கு அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்திய போது நித்யாவுக்கும் அந்த அந்தஸ்தைக் கொடுத்தனர்.
டாக்டர் கோபால்
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கலைஞரின் தனி மருத்துவராக இருந்து 24 ஷ் 7 சேவைக்குச் சொந்தக்காரர். இத்தனை ஆண்டு காலம் கலைஞருக்கு பி.பி., சுகர், கொலஸ்ட்ரால் போன்றவை அண்டாமல் பார்த்துக் கொண்டதில் டாக்டர் கோபாலின் மருத்துவ சேவைக்கும் முக்கிய பங்குண்டு. கலைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கோபால் வந்து பார்த்து முதலுதவி செய்த பின்தான் மற்ற ஸ்பெஷலிஸ்ட்டுகள் உதவிக்கு வருவார்கள். 94 வயதை கலைஞர் தாண்டுவதற்கு இவரின் மருத்துவ சேவையே பிரதானம்.
டாக்டர் எழிலன்
கலைஞரின் நடைப் பயிற்சி நண்பரும் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் நாகநாதனின் புதல்வர். இரண்டு வருடங்களாக வீட்டிலேயே அமைக்கப்பட்ட மினி மருத்துவமனையில் கலைஞர் சிகிச்சை எடுத்த போது தினமும் வந்து சின்சியராக கவனித்துக் கொண்டவர். ஜூலை 27-ல் காவேரியில் கலைஞர் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றியவர். பெரியாரின் சமூகநீதிக் கொள்கையைக் கட்டிக் காத்த கலைஞர், மருத்துவப் படிப்பில் கொண்டு வந்த சமூகநீதியால் மருத்துவர் ஆனதற்கு நன்றிக் கடனாக சமூகநீதி பற்றி இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருபவர்.
_____________________
அபார அமுதா ஐ.ஏ.எஸ்!
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டுமென்கிற நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, உடல் அடக்கத்தின் இறுதி நிகழ்வை கவனிக்கும் பொறுப்பாளராக ஐ.எ.எஸ். அதிகாரி அமுதாவை நியமித்திருந்தது எடப்பாடி அரசு. சுற்றிச் சுழன்று பணியாற்றிய அவர் அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக்கினார். ஐந்து மணி நேரத்தில் அனைத்துப் பணிகளையும் செவ்வனே முடித்து அண்ணா நினைவிடத்தை தயாராக வைத்திருந்தார் அமுதா. உடல் அடக்கத்தின் போது, ஸ்டாலின் உள்பட கலைஞரின் உறவினர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் பொறுமையாக கேட்டறிந்து அவர்களுக்கு உதவியதுடன் வந்திருந்த வி.வி.ஐ.பி.க்களையும் கவனித்துக் கொண்டார். கலைஞரின் உடலுக்கு ஒரு பிடி உப்பும் மண்ணும் இறுதியில் அவர் அள்ளிப்போட்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
-இளையர்