ஜூன் 24ம் தேதி காலை 10.30 மணிவாக்கில் தூத்துக்குடி மாவட்டத்தின் குறுக்குச்சாலை அருகேயுள்ள சந்திரகிரி சாலையில், கனிமக் கற்களை ஏற்றிவந்த லாரி ஒன்று எதிரே வந்த பைக் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. மோதிய வேகத்தில் தூக்கிவீசப்பட்ட பைக்கிலிருந்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒட்டப்பிடாரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக் கிறார்கள்.
விபத்தில் இறந்தது கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவியான வள்ளியம்மாளின் கணவர் முத்து பாலகிருஷ்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அன்றைய தினம் காலையில் குறுக்குச் சாலை வந்த முத்து பாலகிருஷ்ணன், வேலையை முடித்துவிட்டு தனது ஊரான கொல்லம்பரும்புவிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த போதுதான் எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியதில் பலியாகியிருக்கிறார். விபத்து குறித்து தகவலறிந்த முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டிருக்கிறார்கள். அதன் பின்பே பின்னணியிலிருந்த வில்லங்க விவகாரங்கள் வெடித்து பதற்றத்தைக் கிளப்பியிருக்கின்றன.
"இது விபத்து கிடையாது. முத்து பால கிருஷ்ணன் லாரி ஏற்றிக் கொலை செய்யப் பட்டுள்ளார். அதை விபத்து என்ற கணக்கில் முடிக்கப்பார்க்கிறார்கள். இதற்கு காரணமான நபர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!' என வலியுறுத்தியதோடு, உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் உறவினர்கள். விபத்து குறித்து வழக்கு பதிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், டிப்பர் லாரி டிரைவர் சவுந்திரராஜன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட சிலரையும் விசாரித்துக் கைது செய்ய வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசியதில் கிடைத்த தகவல்கள் அதிரவைக்கின்றன.
கொல்லம்பரும்பு கிராமத்தில் அ.தி.மு.க.வின் கிளைக் கழகச் செயலாளராகப் பொறுப்பி லிருப்பவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள், கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்துத் தலைவியாகப் இருந்தவர். கொல்லம்பரும்பு பகுதி, கரடுமுரடான கற்களைக் கொண்ட பகுதியென்பதால், அங்கே முக்கிய தொழிலதிபர்கள் நிலங்களை வாங்கி குவாரிகளை அமைத்து கற்களை வெட்டியெடுத்து வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தனர். அங்கே ரியல் எஸ்டேட் தொழிலும் விரிவடைந்திருக்கிறது.
இவரது மனைவியே பஞ்சாயத்துத் தலைவி என்பதால் அந்த செல்வாக்கில் ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார் முத்து பாலகிருஷ்ணன். இப்பகுதியில் இவருக்கு போட்டியாக சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியிருக்கிறார்கள். இவரது அரசியல் செல்வாக்கால் பாதிக்கப்பட்ட எதிர்த் தரப்பினரோடு பகைமைகள் உருவாகியிருக் கின்றன.
காலப்போக்கில் பஞ்சாயத்தின் தலைவர் பதவி தி.மு.க. வசம் போனபோதும், உள்ளாட்சித் தேர்தல், தொழில் போட்டியால் முத்து பாலகிருஷ்ணனுக்கு சிலருடன் தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், தனக்கு வேண்டப்பட்ட சவுந்திரராஜன் என்பவரை அங்குள்ள குவாரி கம்பெனி ஒன்றில் டிப்பர் லாரி டிரைவராக வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார் முத்து பாலகிருஷ்ணன். இந்தத் தொழிலோடு சவுந்திரராஜன் தரப்பினர், நிலத்தரகர்களாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்களாம். இந்நிலையில், டிரைவர் சவுந்திரராஜன் தரப்பினர் அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் முத்து பாலகிருஷ்ணன், மிகப்பெரிய மதிப்பிலான 650 ஏக்கர் நிலத்தை முக்கியப் பிரமுகருக்கு முடித்துக் கொடுத்திருக்கிறாராம். இதன்மூலம் கணிசமான கமிஷன் கிடைக்க, தொழில்போட்டி தகராறும் அதிகரித் திருக்கிறதாம்.
இதனிடையே டிரைவர் சவுந்திரராஜன் தரப்பினர் ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது விவகாரமாகி, முத்து பாலகிருஷ்ணனின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதில் சந்தேகப்பட்ட முத்து பாலகிருஷ்ணன் அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்தபோது, அது வேறு ஒரு நபருக்கு சொந்தமானது என்பது தெரியவர, அவரிடமிருந்து அந்த நிலத்தை முறையாகக் கிரையம் வாங்கிய முத்து பாலகிருஷ்ணன், அதை தனியார் காற்றாடி கம்பெனி ஒன்றிற்கு விற்றிருக்கிறாராம். இந்த விவரம் தெரியவந்த சவுந்திரராஜன், முத்து பாலகிருஷ்ணன் மீது கொலை வெறியில் இருந்திருக்கிறார். ஒன்றரை ஏக்கரை கைமாற்றியதால் தனக்கான ஆதாயம் இல்லை. அதனை ஈடுகட்ட தனக்கு அந்த விவகாரத்தில் 6 லட்சம் வேண்டும் என்று அந்த காற்றாடி கம்பெனியினரிடம் மிரட்டியிருக்கிறாராம் சவுந்திரராஜன். இதுதொடர்பாக முத்து பாலகிருஷ்ணனுக்கு கடும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் முத்து பாலகிருஷ்ணன் மீது ஜூன் 24ஆம் தேதி, டிப்பர் லாரியால் மோதவிட்டு கொலை செய்திருக்கிறார்கள். எனவே, இக்கொலைக்கு காரணமான நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்று புகாரளித்த முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள், அவர்களைக் கைது செய்யாதவரை உடலை வாங்கப் போவதில்லை என்று போராடியிருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை சரகத்தில் விசாரித்தபோது, ""சவுந்திரராஜனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். புகாரில் குறிப்பிட்ட அனைவர் மீதும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அவர்களையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள். இந்த கொலைச் சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.