"சென்னைக்கு மிக அருகில்' என்ற விளம்பரத்துடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. இதற்காக லோக்கல் அரசியல் செல்வாக்கு ரியல் எஸ்டேட் அதிபர்களுக்குத் தேவைப்பட, அரசியல் ஆதாயக் கொலைகளும் அதிகரித்தன.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், திருப்போரூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தி.மு.க.வின் இதயவர்மன்; பரம்பரை நிலங்களும், லோக்கல் செல்வாக்கும் உள்ளவர்.
இதேபகுதியைச் சேர்ந்த ஆறு முகம், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா தோட்டத்தைப் பராமரித்தவர். இதன்மூலம், சசிகலாவிடம் கிடைத்த அறிமுகத்தை வைத்தே, ஆறுமுகத்தின் மகன்களான தாண்டவமூர்த்தியும், இமயம்குமாரும் ரியல் எஸ்டேட் துறையில் உச்சத்தைத் தொட்டார்கள்.
இந்த இரண்டு தரப்புமே உறவினர்களாக இருந்தும், ஈகோ பிரச்சனையால் அடிக்கடி உரசல் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில்தான், செங்காடு பகுதியில் எம்.எல்.ஏ. இதயவர்மனின் வீட்டுக்கருகில் இமயம் குமார் வாங்கிய 50 ஏக்கர் நிலத்தில் பிரச்சனை வெடித்தது. இங்கிருக்கும் சங்கோதியம்மன் கோவிலின் பொதுவழியை கேட்டு குமார் பேச்சுவார்த்தை நடத்த, முட்டுக்கட்டை போட்டுள்ளார் இதயவர்மன். கேளிக்கை பூங்கா அமைப்பதற்காக குமார் வாங்கிய பலநூறு ஏக்கர் நில விவகாரத்திலும், இதய வர்மன் தடையாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, சமீபத்தில் பெய்த கனமழையால் குமாரின் நிலத்தில் தேங்கிய நீர், இதயவர்மன் மற்றும் ஊர்மக்களின் விவசாய நிலங்களுக்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து, பொக்லைன் வைத்து குமாரின் நிலத்தை சீரமைத்திருக்கிறது இதயவர்மன் தரப்பு. இதுதொடர்பாக இதயவர்மன் மீது போலீஸில் புகாரும் சென்றிருக்கிறது.
இந்நிலையில், 11ந்தேதி மதியம் படப்பை பாஸ்கர் கொலைவழக்கில் தொடர்புடைய கண்ணகிநகரைச் சேர்ந்த ரவுடிகள் அப்பு மற்றும் இட்லி வெங்கடேசனுடன் தனது நிலத்தை குமார் சீரமைப்பதாக தகவல் சென்றிருக்கிறது. இதன் பேரில், எம்.எல்.ஏ. இதய வர்மனின் தந்தை லட்சுமிபதி உள்ளிட்டோர் சென்று விசாரித்த போது, ரவுடிகள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் லட்சுமி பதியுடன் சென்ற சிலர் படுகாய மடைந்தனர். தந்தை தாக்கப்படுவதை அறிந்துவந்த இதயவர்மன், தனது துப்பாக்கியால் அங்கிருந்த கார்மீது இரண்டுமுறை சுட்டிருக்கிறார்.
இதில், தோட்டா பட்டு சிதறிய கண்ணாடித்துண்டுகள், அந்தவழியே வந்த கீரை வியாபாரியான சீனிவாசன் மீது பட்டு காயமானது. துப்பாக்கிச் சத்தத்தால் பதறிப்பொன ரவுடிகள் தப்பியோடியதும், அவர்களது பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்தப்பகுதியே கலவரக்காடாக காட்சியளித்தது. எம்.எல்.ஏ.விடம் துப்பாக்கி லைசென்ஸ் இருக்கிறதாம்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனிடம் கேட்டபோது, “எம்.எல்.ஏ. தரப்பில் 8 பேர் மீதும், குமார் தரப்பில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சீனிவாசனை எம்.எல்.ஏ. தரப்பு கடத்திவிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்கிறோம்’’என்று வழக்கமான போலீஸ் பாணியில் விளக்கமளித்தார்.
-அரவிந்த்