முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். சில வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாததற்கு காரணம் ஒன்றிய அரசுதான் என திருச்சி ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ பேசினார்..
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதி ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அண்ணாவின் 117-வது பிறந்த நாளன்று ம.தி.மு.க. சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் பேசிய துரை வைகோ, "பெரியார், அண்ணா பங்களிப்பு இல்லையென்றால் இந்த மண்ணில் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, இருமொழிக் கொள்கை என எதுவுமில்லாமல் போயிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம்தான் காரணம்.
ஆங்கில மொழியைத் தவிர்த்துவிட்டு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்த வடமாநில நிலை நமக்குத் தெரியும். இருமொழிக் கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.
தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மீது மத்திய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தை தகர்த்துவிட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பா.ஜ.க முயல்கிறது.
இந்தியைத் திணிப்பதன் மூலம் தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதியைத் தரமறுக்கிறார்கள். கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி என எந்த நிதியையும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு முழுமையாகவும் முறை யாகவும் வழங்குவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில சுயாட்சி கொள்கைக்கு வேட்டுவைக்கிறார்கள் ம.தி.மு.க.வை அழிக்க 32 ஆண்டுகளாக சிலர் முயற்சித்தார்கள். அது எப்போதும் முடியாது'' என்றார்.
பின்பு மாநாட்டில் பேருரையாற்றிய வைகோ, "மனிதர்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் என் பயணம் நிற்காது என்கிற ஆங்கில கவிதை போன்றதுதான் ம.தி.மு.க.வின் பொதுவாழ்க்கை. ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியது, முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தது, நியூட்ரினோ ஆலையைத் தடுத்தது, என்.எல்.சி தனியார்மயமாவதைத் தடுத்தது உள்ளிட்ட எண்ணற்றவற்றை ம.தி.மு.க செய்துள்ளது.
நாட்டில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளை அடுக்கடுக்காக துரை வைகோ கூறினார். துரை. வைகோ பேச்சைக் கேட்டு நான் திகைத்துவிட்டேன். அவர் பேச்சுக்கு ஆற்றல்தந்தது நீங்கள்தான். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 30 நாட்கள் சிறையிலிருந்தால் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற சட்டம் கொண்டு வருவது ஹிட்லர், முசோலினியின் பாசிசப் போக்கு. இதை கட்சி வித்தியாசமின்றி அனைவரும் எதிர்க்கவேண்டும்.
மொழிப் பிரச்சனையில் தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடத்தி, அதில் நாட்டின் பெயரை பாரத் என மாற்றவேண்டும், முஸ்லீம்களுக்கு ஓட்டுரிமை கிடையாது, சமஸ்கிருதமும், இந்தியும்தான் ஆட்சி மொழி உள்ளிட்ட பிரகடனத்தைச் செய்துள்ளார்கள்.
1967 தேர்தலுக்கு முன்பாக அண்ணா, தி.மு.க.வினருக்கு கொடுத்த அறிவுரை "உங்கள் கவனம் அனைத்தும் தேர்தலில்தான் இருக்கவேண்டும், தேர்தலில் நாம் வெல்ல வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது என குறிப்பிட்டார், அதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன்.
தி.மு.க.வினரோடு பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். திராவிட மாடல் ஆட்சி நடத்த முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவருகிறார். சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் குறுக்கே சுவர் எழுப்பி தடுத்துக் கொண்டுள்ள மத்திய அரசுதான்.
திராவிட இயக்கங்களின் கொள்கைகளைக் காக்க, அண்ணா, கலைஞரின் லட்சியங்களை வென்றெடுக்க நாம் போராடுவோம். என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை. இனியும் விமர்சிக்கமாட்டேன். வசவாளர்கள் வாழ்க!'' என்றார்.
2026 தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். அதற்கு ம.தி.மு.க. பாடுபடும், சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிப் போம். மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் மூலம் நாங்களும் தேர்தலுக்கு தயார் என அறிவித்துள்ளது ம.தி.மு.க.