""எவன் கேட்டான் எட்டு வழிச்சாலை? சேலத்துல இருந்து சென்னைக்கு போறதுக்கு ஏற்கனவே நாலு ரோடு இருக்கு. மூணு மணி நேரத்துல சென்னைக்குப் போயே ஆகணும்னு மக்கள் யாரும் துடிக்கல. விவசாயத்தை அழிச்சு, விவசாயிங்க வயித்துல அடிக்கிற திட்டம் எதுக்கு? ஜிண்டால் கம்பெனிக்காரன் இங்கேயிருந்து கனிமங்களை வெட்டி எடுத்து சென்னை துறைமுகத்துக்கு கொண்டு போவானாம்.. அந்த கார்ப்பரேட் கம்பெனிக்காகத்தான் இந்த ரோடாம்...''’-சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் குமுறல் இது.

salem

அரசுத் தரப்பினர் நிலங்களில் நட்ட முட்டுக்கல்லை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தும், கறுப்புக்கொடி ஏற்றியும், கைதாகியும் அல்லல்படும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்களைச் சந்தித்தோம்.

தர்மபுரி மாவட்டம் -இருளப் பட்டியில் நாம் சந்தித்த சந்திரகுமார், மனோகரன், வேலவன் போன்ற விவசாயிகள், "தற்கொலைப்படை யாக மாறுவோம்'’என்று மனம் கொதித்தனர். தீர்க்கமாகப் பேசிய சந்திரகுமார், ""இங்கே நிலத்தை அளக்க வந்த அதிகாரிகள்கிட்ட, "நாங்க குடும்பத்தோடு தீக்குளிக்கிறோம்'னு சொல்லி, பெட்ரோல் கேனை தலையில கவிழ்த்துக்கிட்டோம்... திரும்பிப் போயிட்டாங்க. ஆனாலும், அன்னைக்கு சாயந்தரம் உளவுத்துறை ஆட்கள் எங்க வீட்டுக்கு வந்து, "உன் மகனுக்கு பேங்க் வேலை வாங்கித் தர்றோம். இழப்பீடு அதிகம் கிடைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறோம்... உங்க நிலத்தை மட்டும் குறைவா எடுத்துக்கிறோம். மாவட்ட எஸ்.பி.க்குன்னு ரகசிய நிதி இருக்கு. அதுல இருந்து உங்களுக்கு பணம் கிடைக்கிற மாதிரி பண்ணுறோம்'னு இஷ்டத்துக்கு அளந்துவிட்டாங்க.

Advertisment

salemsalem

நான், "எங்க மக்களுக்கு பணம் எதுவும் வேணாம். வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் மட்டும் வாங்கிக் கொடுத்திருங்க. ஏன்னா... ஏழடி உயரத்துல, ஊரை ரெண்டா பிளந்து ரோடு வருதுன்னு சொல்லுறாங்க. ரோட்டுக்கு இங்கிட்டு இருக்கிறவன் அங்கிட்டுப் போகணும்னா, 30 கி.மீ. சுத்தித்தான் போகணுமாம். ஹெலிகாப்டர் தந்தீங்கன்னா, பறந்து பறந்து போயி எங்க வேலை சோலிய பார்த்துக்குவோம்'னு சொன்னேன், எந்திரிச்சி போயிட்டாங்க. அப்புறம், நான் ஒரு கோடி வாங்கிட்டேன்னு கிளப்பி விட்டாங்க.

இங்கே 8 வழிச்சாலை வராது. வர விடமாட்டோம். சேர்ந்து போராடினால்தானே போலீசால் தடுக்க முடியும்? அவரவர் நிலத்தில் இருந்தே போராடுவோம். அபகரிக்க முயற்சித்தால், இங்கேயே தீக்குளித்து சாவோம். அது நக்சல்பாரிகள் போராடிய மண். அப்போது போலீஸ் போலி என்கவுன்டரில் 19 உயிரைப் பறித்தது. ஆனாலும், உரிமைக்காகப் போராடும் எங்க குணத்தைப் பறிக்க முடியாது. அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் எடப்பாடி அரசாங்கமே! அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை வேறு பாதைக்குத் திருப்பி விடாதே!''’என்று கர்ஜித்தார்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் -அத்திப்பாடி கிராமத்தில், தங்களுடைய நிலத்தில் முட்டுக்கல் நட விடாமல் வருவாய்த்துறையினரிடமும், காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் விஜயா குடும்பத்தினர். காக்கிகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நெருக்கடி தந்தனர்.

"நோட்டிபிகேஷன் கொடுத்தாச்சு'’என்றார் ஸ்பெஷல் தாசில்தார் உதயகுமார்.

"இது எங்க நிலம்'’என்றார் விஜயா.

salem"இந்த நிலத்துல உனக்கு உரிமையில்லை. எந்த பட்டா நிலமா இருந்தாலும், அரசாங்கத்தின் தேவைக்கு எடுத்துக்கலாம்னு சட்டம் இருக்கு'’என்று குரலை உயர்த்தினார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம்.

"எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்க நிலத்தை எடுத்துக்கிறதுக்கு நாங்க ஒண்ணும் சம்மதிக்கலியே. நிலத்தை அளக்குறதுக்கு ஆர்டர் வச்சிருக்கீங்களா?' என்று கேட்டார் அருள்.

"உங்க சம்மதமெல்லாம் தேவையில்லை'’என்றார் ரிட்டயர்டு டி.ஆர்.ஓ. சிவராஜ்.

"திருப்பூர் போயி 15 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு இந்த நிலத்தை வாங்கினோமே' என்று அழுதார் விஜயா.

"டீக்கடை வச்சிருந்த ஓ.பி.எஸ். இன்னைக்கு எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதி. இருக்கிற சொத்து போதாதுன்னு இப்பக்கூட இங்கே மில்லு ஒண்ண வாங்கிப் போட்டிருக்கு எடப்பாடி குடும்பம். மினிஸ்டர் அன்பழகன் ஒரு ஸ்கூலை வளைச்சுப் போட்டிருக்காரு. பதிவுதான் பண்ணல. இப்படி ஊழல் பண்ணி சம்பாதிக்கிற அரசியல்வாதிகளுக்கு நம்ம கஷ்டம் எப்படி புரியும்? நீ அழாத'’என்று விஜயாவை சமாதானப்படுத்தினார் சவுந்தர்.

"நீங்க நாலு பேரா? கவர் மென்டா? இது சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்கீம். அரசுப் பணியை செய்யவிடாம தடுத்தீங்கன்னு உங்கள அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்'’என்று எச்சரித்தார் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம்.

salem"அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லைன்னா சுட்டுத் தள்ளுங்க...'’ என்று நெஞ்சை நிமிர்த்திய அருள், பொறுமை இழந்தவராக “"இந்த நிலம் எங்களுடையது. எங்க பரம்பரைக்கே சோறு போட்ட பூமி இது! மானம் மரியாதை உள்ள எவனும், உயிர் போனாலும், தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்கமாட்டான்' என்று தொடங்கி ஆவேசமாகத் தொடர்ந்து பேசினார்.

"என்ன இவன் ரொம்ப பேசுறான்? போலீஸும் சும்மா இருக்கு'’என்று வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் எரிச்சல்பட... "இவன் பேசல சார்.. "உரிமைக் குரல்'ல எம்.ஜி.ஆர். பேசிய டயலாக்...'’என்று விளக்கினார் அத்துறையின் ஊழியர்.

அப்போது பாலன் என்பவர், "தாலுகா ஆபீஸுக்கு வந்தா, 3 மணிக்கே சீட்ல ஆள் இருக்க மாட்டீங்க. இப்ப மணி ஆறு ஆயிருச்சு. ட்யூட்டி டைம் முடிஞ்சிருச்சு. இன்னும் உங்களுக்கு இங்கே என்ன வேலை? இனிமே இங்கே அசம்பாவிதம் ஏதாச்சும் நடந்தா, ஆல் ஆபீசர்ஸ்.. நீங்கதான் பொறுப்பு'’என்று உரத்துக் குரல் எழுப்ப... வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் வேகவேகமாக அங்கிருந்து கிளம்பினர்.

மறுநாள், அருள் உள்ளிட்ட நால்வரை கல்லாவி காவல்நிலைய காக்கிகள் அள்ளிக் கொண்டுபோக, எதிர்ப்பதற்கு ஆள் இல்லாத நிலையில், விஜயா குடும்பத்தினர் நிலத்தில் முட்டுக்கல் நடப்பட்டது.

அத்துமீறி நிலஅளவீடு செய்ய முற்பட்ட போது, செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் இளங்கோவும் அவர் மனைவியும் தீக்குளிக்க முயற்சித்தனர். மண்மலையைச் சேர்ந்த மணிகண்டனோ கிணற்றில் குதித்து உயிரைவிடத் துணிந்தார்.

விஷத்தை விதைக்கிறது அரசாங்கம்!

சேலம் மாவட்டம் -பருத்திக்காடு, -குப்பனூரில் "அகில இந்திய விவசாயிகள் சபை'யில் அங்கம் வகிக்கும் அய்யாதுரை, செல்வராஜ், மாணிக்கம், கிருஷ்ணன், பொறியாளராக இருந்தும் முழுநேரமும் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் ஹரிஹரன் ஆகியோர், ""நாங்கள்லாம் சிறு, குறு விவசாயிங்க. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்ன்னு ரோட்டுக்காக, எங்ககிட்ட இருக்கிற நிலத்தைப் பறிச்சிட்டா, அப்புறம் எங்களுக்கு எதிர்காலமே இல்ல''’என்று வேதனையை வெளிப்படுத்திய நிலையில், அவர்களிடம் கலந்துரையாடினோம். அவர்களின் ஆதங்கம் இதோ...

""தொழில் வளர்ச்சிங்கிறாங்க. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்கிறாங்க. விவசாயமும் வேலைவாய்ப்பு தருதுங்க. ஒவ்வொரு விவசாயியும், வருஷம் முழுக்க, பருவத்துக்குப் பருவம்னு, குறைஞ்சது 150 பேருக்காச்சும் வேலை கொடுக்கிறான். ஒரு விவசாயி பண்ணுற உற்பத்தியால, நேரடியாகவும் மறைமுகமாவும் 100 பேராச்சும் பயனடையறாங்க. எங்க நிலத்துக்கு நாங்களே முதலாளி; நாங்களே தொழிலாளி. எங்க குடும்பம் யார்கிட்டயும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்ல. கேவலம் ரோட்டுக்காக விவசாய நிலத்தை எப்படி விட்டுக் கொடுப்பான்?

நிலத்தைக் கொடுத்துட்டு பணத்த வாங்கிட்டுப் போங்கன்னு ஐ.ஏ.எஸ். படிச்ச கலெக்டர்களே, உள்நோக்கத்தோடு பேசுறாங்க. அங்கே ஒரு விவசாயி தற்கொலை பண்ணிக்கிட்டான்; இங்கே ஒரு விவசாயக் குடும்பமே உசிர விட்டிருச்சு. உங்க பிள்ளைங்களும் விவசாயத்தைக் கட்டி அழணுமான்னு அப்பாவி விவசாயிங்க மனசுல விஷத்தை விதைக்கிறாங்க. விவசாயம்னா கேவலமில்லை.. அது மனுசனோட உசுரு. எங்களை விலைபேச நினைக்கிற முதலமைச்சரோட வயித்த நிரப்புறதும் விவசாயிதான்'' என்றனர் பொட்டில் அடித்ததுபோல.

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' என விவசாயிகள் சொல்வதை எடப்பாடி அரசாங்கத்துக்கு யார் எடுத்துச் சொல்வது?

-சி.என்.இராமகிருஷ்ணன், து.ராஜா

படங்கள்: எம்.ஆர்.விவேக்