சேலம் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையின் கீழ் 1,262 முழுநேர ரேஷன் கடைகள் இயங்கிவருகின்றன. இவற்றில், காலியாக உள்ள 152 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிச. 9-ஆம் தேதி வரை நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
விற்பனையாளர் பணிக்கு 13,708 பேரும், கட்டுநர் பணிக்கு 2,021 பேரும் விண்ணப் பித்திருந்தனர். நேர்காணல் முடிந்து ஜனவரி மாதமே பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிருந்த நிலையில், முழுமையான ரிசல்ட்டை வெளியிட மாதக் கணக்கில் இழுத்தடித்தனர். ஒருவழியாக, ரேஷன் விற்பனையாளர், கட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜூலை 2-ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் உருவான காலியிடங்களையும் சேர்த்து மொத்தம் 220 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, விற்பனையாளர் பணிக்கு 7 முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலும், கட்டுநர் பணிக்கு 5 லட்சம் ரூபாயும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் வசூலித்து கல்லா கட்டியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
மொத்த காலியிடங்களில், சேலம் மத்திய மா.செ. ராஜேந்திரன், சேலம் மேற்கு மா.செ. டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மா.செ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோ ருக்கு தலா 30 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள கட்சித் தலைமை ஒதுக்கியதாக சொல்லப் படுகிறது. மீதமுள்ள 130 காலிப்பணியிடங்களையும் அ.தி.மு.க., பா.ம.க. கட்சியினர் சிபாரிசு செய்தவர்களுக்கு வழங் கப்பட்டதாக தி.மு.க.வினர் தரப்பிலிருந்தே ஒரு தகவல் கசிந்தது.
ரேஷன் ஊழியர்கள் நியமனத்தில் மா.செ.க்கள் மட்டுமே வலுவாக கல்லா கட்டிவிட்டனர் என்றும் தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தி கிளம்பியது.
""தி.மு.க.வில் தற்போது 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்துவருகிறது. அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இந்த மண்டலத்துக்கு உட்பட்ட 41 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆக. 3-ஆம் தேதி, ராணிப்பேட்டையிலுள்ள அமைச்சர் காந்திக்குச் சொந்தமான 'ஜீகே மில்லெனியா' ஹோட்டலில் நடந்தது. உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருக்கிறது என எ.வ.வேலு பேசியதை யடுத்து, நன்றி உரை சொல்வதற்கு முன்னதாக பார்வையாளர்கள் வரிசையிலிருந்த டி.எம்.செல்வகணபதி எம்.பி., திடீரென்று மைக்கை வாங்கி னார்.
""சேலம் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் வெளிப் படைத்தன்மை இல்லை. அ.தி.மு.க., பா.ம.க. உள்பட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். இதனால் சேலம் மேற்கு மாவட்டத்தில் கட்சிக்காரர்களைச் சந்திக்கமுடியாத அளவுக்கு சவாலான சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் கட்சி நிர்வாகிகள் இப்பிரச்னை குறித்து பேசுகின்றனர். கேட்டால், கட்சி மேலிடமே நிறைய பணியிடங்களை நிரப்பிவிட்டதாகச் சொல் கின்றனர். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்கவேண்டும்'' என்று புதிய புயலைக் கிளப்பினார் டி.எம். செல்வகணபதி.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் எ.வ.வேலு, ""இந்தப் புகார் குறித்து விசாரிக்கிறேன். தவறு நடந்திருந்தால் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அத்துடன் கூட்டமும் முடிவுபெற்றது. கூட்டம்முடிந்து வெளியேவந்த நிர்வாகிகள் மத்தியில் "செல்வ கணபதி எம்.பி., பேசிய சப்ஜெக்ட்தான் பரபரப்பு பேச்சாக இருந்தது' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மற்றொரு தரப்பினரோ, ""சேலம் கிழக்கு மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர் தவிர மற்ற தி.மு.க. ஒ.செ.க்கள் சிபாரிசு செய்த கட்சிக்காரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் யாருக்கும் ரேஷன் விற்பனையாளர் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியின் 'நிழல்' இளங்வோவன் மற்றும் பா.ம.க.வினர் பரிந்துரைத்த நபர்களுக்கு எல்லாம் தாராளமாக நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய மாவட்டத்திலும், மேற்கு மாவட்டத் திலும் இதே நிலவரம்தான். கிராம உதவியாளர்கள், வாரிசு வேலை நியமனங்கள் அனைத்திலும் மா.செ.க்களும், அமைச்சர்களும் மட்டும்தான் கல்லா கட்டுகின்றனர். ஒ.செ.க்கள், ப.செ., பேரூர் நிர்வாகிகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை. ரேஷன் பணியாளர்கள் நியமனத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் கைதான் ஓங்கியிருந்தது. ராணிப்பேட்டை கூட்டத்தில், செல்வகணபதி எம்.பி., இதுகுறித்து பேசும்போது அமைச்சர் ராஜேந்திரன் இறுக்கமாகக் காணப்பட்டார்'' என பொடிவைத்துப் பேசுகிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமாரின் விளக்கம் பெறுவதற்காக அவரை தொடர்ந்து இரு நாள்களாக பலமுறை செல்போனில் அழைத்தோம். குறுந்தகவலும் அனுப்பினோம். ஆனால் அவரோ, அழைப்பை ஏற்கவில்லை. தொடர்புக்கும் வரவில்லை. அதேநேரம் கூட்டுறவுத்துறை முக்கிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ""சேலம் மாவட்டத்தில் 90% ரேஷன் ஊழியர் காலியிடங்கள், அமைச்சர் ராஜேந்திரன் அலுவலகம் மூலமாகவே நிரப்பப்பட்டது. 10% காலியிடங்களை நிரப்பி கல்லா கட்டும் வாய்ப்பை தற்போதைய இணைப்பதிவாளர் ராஜ்குமார் வசம் ஒப்ப டைத்தனர். அதனால்தான் அவர் பயந்துகொண்டு பேச மறுக்கிறார். ஒரே பணியிடத்திற்கு ஆளுங்கட்சியினர், பல பேரிடம் பணம் வசூலித்துள்ளனர். பணம் கொடுத்த பிறகும் பணி நியமன ஆணை கிடைக்காத பலரும் இப்போது சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர்'' என்றார்.