ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட் களை நம்பித்தான் ஏழை எளிய, கிராமப்புற, நகர்ப்புற மக்கள் உயிர் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். அதில் 1480 கோடி ரூபாய் ஊழல் செய்து ஏப்பம் விட்டிருக்கிறார்கள் உணவுத்துறை அதிகாரிகளும் பிரபல தனியார் நிறுவனமும் என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமாக விசாரிக்க ஆரம்பித்தோம்…
தமிழக அரசின், டி.என்.சி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்தான் (Tamil Nadu Civil Supplies Corporation) ரேஷன் கடைகளுக்கு அத்தியா வசிய பொருட்களை வாங்கி சப்ளை செய்துவரு கிறது. சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில்தான் கிட்டத்தட்ட 1480 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. சர்க்கரை டெண்டர்களில் கடந்த ஒரு வருடத்தில் தமிழக அரசு வாங்கிய 17.5 கோடி கிலோ சர்க்கரையில் மட்டும் அரசாங் கத்திற்கு 111 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. பாமாயில் டெண்டர்களில் கடந்த 3 ஆண்டு களில் வாங்கிய 35 கோடி பாக்கெட்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப் பின் மதிப்பு 499 கோடி ரூபாய். மேலும், பருப்பு டெண்டர்களில், கடந்த 5 ஆண்டுகளில் கொள் முதல் செய்யப்பட்ட 5 லட்சம் டன் பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு 870 கோடி ரூபாய்.
அதாவது, "சர்க்கரை 111 கோடி ரூபாய், பாமா யில் 499 கோடி ரூபாய், பருப்பு 870 கோடி ரூபாய் என ஆகமொத்தம் 1480 கோடி ரூபாய்' ஊழல் என்று குற்றஞ்சாட்ட, ஏழை-எளிய மக்கள் வயிற் றுப்பசியைப் போக்கும் ரேஷன் பொருட்களில் எப்படி ஈவு இரக்கமில்லாமல் ஊழல் செய்கிறார் கள் என்று நாம் மேலும் விசாரித்தபோதுதான் ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடும் முட்டையில் 1100 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட அதே கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் குழுமம்தான் இதிலும் 1480 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது என்பது தெரியவந்துள் ளது. இதுகுறித்து, சி.பி.ஐ.யில் புகார் கொடுத் துள்ள அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசன் நம்மிடம், “""கடந்த 5 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் விதமாக இத்தனை வருடங்கள் டி.என்.சிஸ். சிற்கு ரேஷன் பொருட் களை விநியோகம் செய்து வந்த மற்ற நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாதபடி, டெண்டரில் பங்கெடுப் பதற்கான தகுதி விதிகள் (சர்க்கரையில் 2019-ஆம் ஆண்டிலும் பாமாயிலில் 2017-ஆம் ஆண்டிலும் பருப்பில் 2015-ஆம் ஆண் டிலும்) மாற்றப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, 2016 பாமாயில் டெண்டரில் 10 லட்சம் லிட்டர் பாமாயில் சப்ளை செய்வதற்கான அனுபவம், 5 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்திருந் தால் போதும் என்று விதிமுறை இருந்தது. ஆனால், கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் குழும நிறுவனங்கள் டெண்டரை எடுப்பதற்காக பாமாயில் 10 லட்சம் லிட்டர் என்பதை மாற்றி எந்தவிதமான உணவுப் பொருளை 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய் திருந்தாலும் போதும் என்று மாற்றியிருக்கிறார்கள். மேலும், 5 கோடி ரூபாய் டர்ன்ஓவரை 18 கோடி ரூபாய் என வேண்டுமென்றே
அதிகப்படுத்திவிட் டார்கள். இதனால், வழக்கமாக பங்கேற்ற மற்ற 14 நிறுவனங்களை பங்கேற்கவிடாமல் ரிஜக்ட் பண்ணி விட்டார்கள். மேலும், எம்.எம்.டி.சி., எஸ்.டி.சி., கேந் திரிய பண்டர் ஆகிய மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களையும் கிறிஸ்டி ஃப்ரைட் குழும நிறுவனங்களையும் டெண்டரில் போட்டிபோடு வதுபோல் கோக்குமாக்கு செய்து கிறிஸ்டி குழுமத் துக்கே டெண்டரை கொடுத்து நம்மை ஏமாற்றி யிருக்கிறார்கள்'' என்றவரிடம் எப்படி? என்று விளக்கம் கேட்டோம். உதாரணத்துக்கு 2018-ல் 1 பாமாயில் பாக்கெட்டை 77 ரூபாய் 50 பைசாவுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு விநி யோகம் செய்வதாக 1 லட்சத்து 56,000 பாமாயில் பாக்கெட்டுகளை மத்திய பொதுத்துறை நிறுவன மான கேந்திரிய பண்டர் நிறுவனம் டெண்டர் எடுத்திருக்கிறது. ஆனால், அப்படி எடுத்து விட்டு ஒரு பாமாயில் பாக்கெட்டை 77 ரூபாய் 10 பைசா என கிறிஸ்டி ஃபரைட் கிராம் குழும நிறுவனத்திடமிருந்து பர்ச்சேஸ் செய்துகொள்கிறது. கிறிஸ்டி ஃப்ரைடு கிராம் குழும நிறுவனமோ ஏற் கனவே டெண்டரில் ரிஜக்ட் செய்யப் பட்ட 14 நிறுவனங்கள் இருக்கிறதல்லவா? அவர்களி டமே 60 ரூபாய் 50 பைசாவுக்கு பர்ச்சேஸ் செய்து விநியோகம் செய்கிறது. தமிழக அரசின் நுகர் பொருள் வாணிபக்கழகம் நேரடியாக அந்த 14 நிறு வனங்களை விநியோகம் செய்ய வைத்திருந்தால் ஒரு பாக்கெட்டுக்கு சுமார் 17 ரூபாய் நஷ்டமாகியிருக்காது.
அதேபோல், ஒரு கிலோ சர்க்கரை 38 ரூபாய்க்கு பழைய நிறுவனங்கள் சப்ளை செய்துவந் தன. கிறிஸ்டி குழுமம் உள்ளே நுழைந்ததும் 47 ரூபாய் 50 பைசாவுக்கு விநியோகம் செய்யப்படு கிறது. பருப்பு 55 ரூபாய்க்கு ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், 2017-ல் 86 ரூபாய் 50 பைசாவுக்கு விநியோகம் செய்யப்படு கிறது. அதாவது, 28 ரூபாய் கூடுதலாக விநியோகம் செய்கிறது. கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரை எடுத்துவிட்டு, வெறும் பில் போடும் வேலையை மட்டும் செய்துதான், 1480 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. அதனால், உடனடியாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் உள் ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந் தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எம்.எம்.டி.சி, எஸ்.டி.சி., கேந்திரிய பண்டரின் பொது ஊழியர் களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் அவர்.
ஊழல் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்த அமைச்சர் காமராஜோ, சந்தை மதிப்பை விட கூடுதலாக ஏன் பொருட்களை வாங்கி விநியோகம் செய்யப்படுகிறது என்று விளக்க வில்லை.
-மனோசௌந்தர்