""ஹலோ தலைவரே, மேட்டூர் அணையை ஏறத்தாழ 8 வருசத்துக்குப் பிறகு ஜூன் 12-ந் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வச்சதால், காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையா இருக்காங்க.''
""கடைமடைப் பகுதி வரை தண்ணீர் பாயணும்னு குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதா அணையைத் திறந்த எடப்பாடி பழனிச்சாமி பெருமையா சொன்னாரே?''
""தலைவரே, தஞ்சை டெல்டா பாசனப் பகுதியில் 420 கோடி ரூபாய் அளவுக்குத் தூர்வாரும் பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்ட ஆளும்கட்சிப் புள்ளிகள்தான் இது தொடர்பான காண்ட்ராக்ட்டில் இறங்கி, நிதியை மும்முர மாத்தூர் வாரிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில் காவிரி நீர் கடைமடைக்கு வந்தால், தூர் வாரியதற்கான பில்பாஸ் ஆகாதேன்னு கவலைப்படும் அந்தப் புள்ளிகள், முக்கொம்பு மதகு உடைஞ்சது போன்ற ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தண்ணியை நிறுத்துங்கன்னு மேலிடத்திற்கு பிரஷர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. முக்கொம்பு தாண்டி, கல்லணைக்கு வந்து, புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் வரைக்கும் பாய்ந்தால்தான் டெல்டா பாசனம் சிறப்பா இருக்கும்.''
""மேட்டூர் அணையைத் திறக்கப்போன எடப்பாடியை, தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், சந்திச்சிருக்காரே?’’
""ஆமாங்க தலைவரே, மேட்டூர் அணை திறப்புக்காக சேலத்துக்குப் போயிருந்த எடப்பாடியை, கே.பி.ராமலிங்கம் சந்திச்சி ஏறத்தாழ 40 நிமிடம் பேசியிருக்கார். மு.க. அழகிரியின் ஆலோசனைப்படிதான் இந்த சந்திப்பு நடந்ததுன்னு, ராமலிங்கம் தரப்பிலேயே டாக் அடிபடுது. இந்த சந்திப்பின் போது, ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் நிவாரண உதவிகளைச் செய்யும் தி.மு.க. அதற்கான 90 சதநிதியையும், அதற்கான பொருட்களையும் தொழிலதிபர்கள், காண்ட்ராக்டர்கள், வியாபாரிகள்னு பல தரப்பினரையும் கட்டாயப்படுத்தித்தான் வாங்கியிருக்குன்னு எடப்பாடிகிட்ட கே.சி.பழனிச்சாமி சொன்னதோட, அது சம்பந்தமான பட்டியலையும் கொடுத்திருக் காராம். இதை எடப்பாடி விரைவில் பகிரங்கமாக்கி தி.மு.க.மீது தாக்குதல் தொடுக்கப் போறாருன்னு கே.பி.ராமலிங்கம் தரப்பு சொல்லுது. அதோடு, இந்த சந்திப்பின் போது, எடப்பாடியிடம் மு.க.அழகிரியை ராமலிங்கம் பேச வச்சாராம். எல்லாம் ஒரே லைனில் வரும்னு ராமலிங்கம் எதிர்பார்க்குறாரு.''
""அழகிரி என்ன சொன்னாராம்?''
""அழகிரிக்கு பா.ஜ.க, ரஜினி தரப்புன்னு பல சைடிலும் தொடர்பு இருக்குது. எடப்பாடியையும் அவர் பகைச்சிக்க விரும்பலை. ஒரு கட்டத்தில், தி.மு.க. தலைமைக்கு எதிரா கே.பி.ராமலிங்கம் பேசிக்கிட்டிருந்தப்ப அழகிரி அதைக் கண்டுக்கலை. தி.மு.கவிலிருந்து ராமலிங்கம் கட்டம் கட்டப்பட்டபிறகு, போன் செய்தால் அழகிரி அட்டெண்ட் பண்ணுறாராம். இந்த கொரோனா நேரத்தில், மதுரை வீட்டிலிருந்து அழகிரி வெளியே வருவதில்லை. பழைய விசுவாசிகளையும் சந்திக்கிறதில்லை.''
""எடப்பாடி லைனில் மு.க.அழகிரிங்கிறது பற்றி தி.மு.க.வோட ரியாக்ஷன் என்னவாம்?''
""குடும்ப உறவுகள் மூலமா அழகிரி தரப்போடு தி.மு.க. தலைமை டச்சில்தான் இருக்கு. அதே நேரத்தில், அழகிரிக்கோ அவர் குடும்பத்திற்கோ கட்சியில் எந்த முக்கியத்துவமும் தரப்படலை. அழகிரி என்ன முடிவெடுப்பார்னு யூகிக்க முடியலை.''
""தலைமைச் செயலகமே கொரோனா பீதியில் மூழ்கியிருக்கேப்பா?''’’
""உண்மைதாங்க தலைவரே, தலைமைச் செயலகத்தில் கொரோனா பரவும் வேகம் பற்றி நாம் ஏற்கனவே பேசி இருக்கோம். அங்கே நிலைமை மோசமாக இருப்பதால், தலைமைச் செயலக பணியாளர் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, எடப்பாடிக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதியிருக்கார். அதில், நிலைமையை விவரித்துவிட்டு, பணியாளர்கள் பணிக்கு வரவே பயப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. அதனால், பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள்னு குறிப்பிட்டிருக்கார். இதேபோல் ஐ.,ஏ.எஸ். அதிகாரிகளும் எடப்பாடியை சந்திச்சி, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தேவையான அதிகாரிகளைக் கோட்டைக்கு அழையுங்கள். முக்கிய கோப்புகளை வீட்டில் இருந்தபடி நாங்கள் கவனிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க. எடப்பாடியோ, கோப்புகளை வீடுகளுக்கு எடுத்துக்கிட்டுப் போறது சரியா இருக்காதுன்னு மறுத்துட்டார். அதுக்கு பதில், சனி, ஞாயிறில் கோட்டைப் பகுதி முழுக்க கிருமிநாசினியைத் தெளிக்கச் சொல்லியிருக்காராம். இதனால் அதிகாரிகள் தரப்பு அப்செட்டில் இருக்கு.''
""கொரோனா மக்கள் பிரதிநிதிகளையும் துரத்துதே?''
""கொரோனாவின் வேகம் டெல்லியையும் திகைக்க வச்சிருக்கே.''
""ஆமாங்க தலைவரே, அதனால் தான் ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதைத் தீவிரமாக்குவது பற்றி, மாநில முதல்வர்களுடன் மோடி விவாதிக்க தயாராகுறாரு. அந்த விவாதத்தில் என்ன டாபிக்கை எடுத்துக்குறதுன்னு மத்திய அமைச்சர்களான அமீத்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருடன் மோடி கலந்து பேசியிருக்கார். கொரோனா தொற்றில் நாம் முதலிடத்தை நோக்கி இந்தியா நகர்வது போலிருக்குன்னு சொன்ன மோடி. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் இன்னும் சீரியஸ் காட்டலைன்னு ரொம்பவே வருத்தப்பட்டிருக்கார். கொரோனா பாதிப்பு குறைவா உள்ள மாநில முதல்வர்களுடன் ஜூன் 16-ந் தேதியும், அதிகமா தொற்று பரவும் டெல்லி, தமிழகம், உ.பி., மேற்கு வங்கம், குஜராத், உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர் களோட 17-ந் தேதியும் மோடி விவாதிக்கிறார்.''
""நிலைமையை எப்படி சமாளிக்கப் போறாங்களாம்?''
""கொரோனாவைத் தடுப்பதில் சுகாதாரத்துறைக்கும் நிதித்துறைக்கும் இருக்கும் சவால், எமெர்ஜன்சி காலகட்டத்தை நோக்கி நகர்த்துதுன்னு ராஜ்நாத்சிங் கருத்து தெரிவிச்சிருக்கார். அதனால் இந்த இரு துறைகளிலும், மாநில அரசுகளைத் தாண்டி மத்திய அரசே அதிரடி முடிவுகளை எடுக்க இருக்குதாம். இது தொடர்பான உத்தரவுகள் சில நிதித்துறைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போயிருக்குதாம். நிதித்துறை, மாநில சுகாதாரத்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகுதுன்னு பேச்சு. இதற்கிடையே கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும் பிரதமர் அலுவலகம் ஒரு ரிப்போர்ட் தயாரிச்சிருக்கு. அதில், மூத்த அமைச்சர்கள் சிலர் உட்பட 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் செயல்பாடுகள் பாஸ் மார்க்கை கூட எட்டலையாம். அதனால் வீக்கான அமைச்சர்களை மாத்துங்கன்னு அமீத்ஷா வலியுறுத்த, அதுக்கான நேரம் இது இல்லையேன்னு மோடி தயங்கறாராம்.''
""தமிழ்நாட்டு நிலவரமும் சரியில்லையே... லாக்டவுன் நீடிக்குமோ?''
""அதற்கான தெளிவை எடப்பாடி இன்னும் எட்டலைன்னு அதிகாரிகள் தரப்பே ஆதங்கப்படுது. அதே சமயம், பிரதமர் மோடியுடனான காணொலி சந்திப்பில், வழக்கம் போல நிதி ஒதுக்கீடு செய்யனும்ன்னு கேட்கப்போறாராம். அதற்கான அவரது உரையை தலைமைச் செயலாளர் சண்முகம் தயார் பண்ணிக்கிட்டு இருக்கார். குறிப்பா, தான் முதல்வராகப் பதவியேற்ற 2017 ஆம் நிதியாண்டில் இருந்து, இப்பவரை நிலுவையில் உள்ள மொத்த ஜி.எஸ்.டி. தொகையையும் விடுவிக்கனும்னு அழுத்தம் கொடுக்கப்போறாராம். அந்த வகையில் இதுவரை உள்ள நிலுவை தொகை மட்டுமே 5,727 கோடியே 62 லட்ச ரூபாய். மேலும், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான வரியை முழுதாக நீக்கணும்ங்கிற கோரிக்கை யையும் அவர் வைக்கப்போறார்ன்னு கோட்டைத் தரப்பு சொல்லுது.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழகம் முழுதும் உள்ள 1014 ஊர்களின் பெயர்களைத் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதனும்ன்னு எடப்பாடி அரசு அண்மையில் உத்தரவிட்டுச்சே, அது தமிழறிஞர்கள் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள் மத்தியிலேயே விமர்சன அலைகளை எழுப்பியிருக்கு. இது தொடர்பான புகார்களும் தமிழ்வளர்ச்சி துறையில் குவியத் தொடங்கிடிச்சி. இதைப் பார்த்த சீனியர் அமைச்சர்கள் பலரும், இந்த உத்தரவுக்கான கெஜட் அறிவிப்பாணையை உடனே ரத்து பண்ணுங்கன்னு எடப்பாடியிடம் வலியுறுத்தறாங்களாம்.''