""ஹலோ தலைவரே, எடப்பாடியை சந்திக்க, ரெண்டு நாளைக்கு முன், தனி விமானம் பிடிச்சி ஓடி வந்திருக்காரே ஓ.பி.எஸ்.''’’
""அப்படி ஒரு ரொம்ப காஸ்ட்லியான சந்திப்புக்கு என்ன அவசரம்?''’’
""குடல் இறக்க அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில்... எடப்பாடி, கிரீன்வேஸ் சாலை வீட்டில் ஓய்வெடுத்துக்கிட்டிருக்கிறார். அவர் உடல்நலன் சீராக கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்தியிருக்காங்க. ஒருசிலர் நேரிலும் போய் விசாரிக்கிறாங்க. கொரோனா பாதிப்புக்கு ஆளான ராகுல்காந்தி, விரைவில் குணமடையணும்னு வாழ்த்து தெரிவிச்ச துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., எடப்பாடியை போனில் கூப்பிட்டுக்கூட விசாரிக்கலை. இது புகைச்சலை ஏற்படுத்திடுச்சு. இதனால் கொஞ்சம் தாமதமாக சுதாரித்துக் கொண்ட ஓ.பி.எஸ்., செஸ்ட் ஏர்கிராஃப்ட்ங்கிற தனி விமானத்தைப் பிடிச்சி சென்னைக்கு வந்துட்டார்.''’’
""அதிக வாடகையோ?''’’
""ஆமாங்க தலைவரே, ஒரு நாள் வாடகை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாம். இந்த சிறிய ரக விமானத்தில் மூன்று பேர்தான் பயணிக்க முடியும். சென்னை வந்த ஓ.பி.எஸ்.சுடன் தமிழ்ச்செல்வன், எக்தாசிங்னு ரெண்டுபேர் கூடவே பயணிச்சிருக் காங்க. அவங்க யாருன்னு எடப்பாடி தரப்பு இப்பவரை தலையை பிச்சிக்கிட்டு இருக்கு. லேட்டா நலம் விசாரிக்க வந்த ஓ.பி.எஸ்.கிட்ட, எடப்பாடி சம்பிரதாயமா பேசியிருக்காரு.''’’
""ரிசல்ட் பற்றி பேச்சு இருந்திருக்குமே?''’’
""அது இல்லாமலா? தேர்தலில், அமைச்சர்கள் பலரும் அவரவர் தொகுதிகளில் கவனம் செலுத்தினாங்களே தவிர, தங்கள் பொறுப்பிலிருந்த அக்கம்பக்கத் தொகுதிகளைக்கூட அவங்க கவனிக்கலை. அது நமக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்னு தோணுது. தி.மு.க. 200 தொகுதிகள் வரை ஜெயிக்கும்னு அதிகாரிகள் தரப்பே எங்கிட்ட சொல்லுது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும், ஆட்சி மாற்றம் ஏற்படலாம்னு தோணுது. அப்படி ஏற்பட்டால், நமக்கு தி.மு.க. ரொம்பவே குடைச்சல் கொடுக்கும்னு கள நிலவரத்தை வருத்தமான குரலில் சொல்லியிருக்காரு.''
""எடப்பாடி என்ன சொன்னாராம்?''’’
""ஓ.பி.எஸ். டென்ஷன் ஏத்துறாருன்னு புரிஞ்சிக்கிட்ட எடப் பாடி சிரிச்சிக்கிட்டே, "நீங்க நம்பிக்கையை இழக்காதீங்க, உங்க அமைச் சர் பதவி தொடரத்தான் போகுது'னு சொன்னதோட, "மத்திய உளவுத் துறையும் ஒரு ரிப்போர்ட் எடுத்திருக்கு, நம்முடைய மாநில உளவுத் துறையும் ஒரு ரிப்போர்ட் எடுத்திருக்கு. இந்த ரெண்டு ரிப்போர்ட் டுமே 125 முதல் 132 சீட் வரை அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கும்னு சொல் லுது. ஓட்டுப்போட்ட நேரத்திலேயே கேட்டால் யாரும் உண்மையைச் சொல்லமாட்டாங்கன்னு, தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு எடுத்த கணிப்பு இது'ன்னு சொல்லி ஓ.பி.எஸ்.ஸை அனுப்பி வச்சாராம்.''’’
""ஓட்டுப் போட்டபோது உண்மையைச் சொல்ல விரும்பாதவங்க, அதுக்கப்புறம் யாராவது சர்வேன்னு வந்து கேட்டால் சந்தேகமா பார்ப்பாங்களா? சரியா சொல்லுவாங்களா?''’’
""அதைத்தான் மந்திரிகள் தரப்பும் கேட்குதுங்க தலைவரே.. எடப்பாடியைப் பார்க்கும்போது நீங்கதான் முதல்வர்னு சொல்லும், அவருக்கு நெருக்கமான அமைச்சர் தங்கமணியே மற்ற அமைச்சர்களையும் கட்சி நிர்வாகிகளையும் பார்க்கும்போது, ஆட்சி மாற்றம் இருக்கும்னு சொல்லிக்கிட்டிருக்காராம். காரணம் கேட்டால், வேட்பாளர் தேர்விலேயே குளறுபடி ஆரம்பிச்சிடிச்சி... அதனால் ஆட்சி அமைய ஒரு சதவீத வாய்ப்புக்கூட இல்லைன்னு சொல்றாராம். அதேநேரம், அவர் குடும்பத்து ஆட்களும் -அவருக்கு நெருக்கமான கட்சி ஆட்களும் வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள்வரை எவ்வளவு கல்லாகட்ட முடியும்னு கணக்குப் போட்டு அவரோட துறைகளான மின்வாரியத்தில் இருந்து டாஸ்மாக் வரை, சகலத்திலும் கை வைக்கிறாங்களாம். இந்த நிலையில், அமைச்சர்களான தங்கமணிக்கும் வேலுமணிக்கும் இடையில் சில காரணங்களால் முட்டல் மோதலும் நடக்குதாம். ஒருவரை ஒருவர் கவிழ்க்க, ரகசியமாக காய் நகர்த்தறாங்களாம்.''’’
""தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், உதிக்கும் சூரியன்னு கவுண்ட்டவுன் டைமிங் வச்சிருக்காங்க. அதாவது, மே 2-ந் தேதிக்கு தகுந்த மாதிரி கவுண்ட் டவுன் ஓடுது. ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாட்டு அரசியலில் சூரியன் உதிக்கும்ங்கிற நம்பிக்கையோடு இந்த கடிகாரம் செட் பண்ணப்பட்டிருக்கு. ஸ்டாலினும் தன்னோட அறிக்கைகளில் காபந்து அரசுன்னுதான் அ.தி.மு.க.வை குறிப்பிடுறாரு. மே 2க்குப் பிறகு முழு லாக்டவுன் போடும் நிலைமையை உருவாக்காதபடி காபந்து அரசின் அதிகாரிகள் கவனமா இருக் கணும்னு சொல்றாரு. தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிச்சிட்டாங்க. இது போன்ற நம்பிக்கையான வார்த்தைகளோ செயல்பாடுகளோ அ.தி.மு.க. தரப்பில் இல்லைன்னு அவங்க தரப்பிலிருந்தே சொல்றாங்க''.’’
""ஆமாங்க தலைவரே.. அவங்க செயல் பாடெல்லாம் மே 2ந் தேதிக்கு முன்னாடி எவ்வளவு தேறும்கிறதுதான். சிவில் சப்ளைஸ் சார்பில், அரசுக்கு நெல்லை அரைத்துத் தந்துவந்த தனியார் ஆலைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஆர்டர்களை வெகுவாகக் குறைத்துவிட்டார்களாம். அதற்குப் பதில், மணப்பாறையிலும் மண்ணச்ச நல்லூரிலும் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகள்தான் முழுக்க முழுக்க அரவை வேலைகளைச் செய்கிறதாம். அரசின் சத்துணவு திட்டத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை சப்ளை செய்யும் கிறிஸ்டிஃபுட் நிறுவனத்துக்கும் அமைச்சரின் ஆலையே அரிசி அரைக்கிறதாம். இதற்கான மாத மாமூல் முதல்வர் தரப்பு வரை போகிறதாம்.''’’
""அதிகாரிகள் துணை இல்லாமல் இது நடக்குமா?''
""சிவில் சப்ளை கார்ப்பரேசனின் மேனேஜிங் டைரக்டராக இருக்கும் சுதாதேவிதான் கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்துக்கு சப்போர்ட்டா இருக்காரு. அந்த நிறுவனத்தைக் குறிவைத்து ரெய்டுகள் நடந்தபோது, இந்த சுதாதேவி வீடும் ரெய்டில் சிக்கியதை நாம் மறந்திட முடியாது. அப்போது, இதுபோன்ற சிக்கலில் இருந்து பீலா ராஜேஷைக் காப்பாற்றிய முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம்தான், இவரையும் காப்பாற்றினார் என்கிறது கோட்டைத் தரப்பு. தற்போது, அமைச்சர் காமராஜும் இந்த சுதாதேவியும் சேர்ந்து, மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 1.5 லட்சம் டன் ரேசன் அரிசியை, வெளி மாநிலங்களுக்கு விற்று கல்லா கட்டிவிட்டார்கள் என்கிற புகார், இப்போது மத்திய அரசின் விசாரணையில் இருக்கிறது.''’’
""மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளராக இருந்த கமீலா நாசர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறாரே?''’’
""கமலுக்கும் நடிகர் நாசருக்கும் நல்ல நட்பு உண்டு. மக்கள் நீதி மய்யத்தை கமல் ஆரம்பித்த நாளில் இருந்தே, அதில் தீவிரமாகப் பணியாற்றியவர் நாசரின் மனைவி கமீலா நாசர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்டு வெற்றியை நழுவவிட்டார் கமீலா. கமல் அவரை, இந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்டாலினை எதிர்த்துக் கொளத்தூரில் நிற்கச் சொல்ல... கமீலாவோ, ஸ்டாலினை எதிர்ப்பதென்றால் தீவிரமாக வேலை செய்யவேண்டும். நானோ, உடல்நிலை சரியில்லாத என் மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதனால் என் வீடு இருக்கும் விருகம்பாக்கம் தொகுதியில் நான் நிற்க விரும்புகிறேன்னு சொல்லியிருக்கிறார். கமலோ, ஸ்டாலினை எதிர்த்து நின்னால்தான் சீட்டுன்னு சொல்லி, கமீலாவுக்கு சீட்டே கொடுக்காமல் புறக்கணித்துவிட்டார். தேர்தல் முடியும்வரை பொறுமையாக இருந்த கமீலா, அண்மையில் தனது கட்சிப் பதவியை மட்டும் ராஜினாமா செய்ய, அவர்மீது கோபமான கமல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே கமீலா நாசரை நீக்கி, ஷாக் கொடுத்திருக்கிறார்...''’’
""தமிழர்களைப் போல சிறுபான்மை முஸ்லீம்களுக்கும் இலங்கை அரசு ஷாக் கொடுத்திருக்கே?''’’
""ஆமாங்க தலைவரே, ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை அறிக்கை, அண்மையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுக்கப்பட்டிருக்கு. அந்த அறிக்கை பரிந்துரைத்த தாகச் சொல்லி 11 முஸ்லீம் அமைப்புகளுக்கு அதிரடியாகத் தடை விதித்த கோத்தபய, தீவிரவாதக் கும்பல்களுக்கு உதவினார்னு சொல்லி, அங்குள்ள இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரான ரிஷாத் பதியூதீன் எம்.பி.யையும் கைது செய்திருக்கிறார். இதனால் இலங்கையின் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் அதிர்ச்சி யடைந்திருக்குது. இந்த ஒருதலைப் பட்சமான ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு இஸ்லாமியத் தலைவர்களும் கண்டனம் தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க. இந்த விசாரணை அறிக்கையில் சில சிங்கள அமைப்புகளின் பெயர் இருந்தும் அதனைத் தடை செய்யலை.''’’
""’வாக்கு எண்ணிக்கை நெருங்கும் நிலையில், சசிகலா தரப்பில் பரபரப்பு தெரியுதே?’''’
""எடப்பாடி தலைமையில் தேர்தலைச் சந்தித்த அ.தி.முக. வெற்றிபெறக் கூடாதுங்கிறதுதான் சசிகலா திட்டம். பதவியும் அதிகாரமும் பறிபோனால் எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள், பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஆகிவிடுவார்கள் என்பதும், அதன்பின் அ.தி.மு.க.வின் லகானைத் தான் எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என்பதும் அவர் போட்டு வைத்திருக்கும் கணக்குகளாம். அதனால்தான், தேர்தல் நேரத்தில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்குத் தன் சார்பில் தலா 50 லட்சத்தைக் கொடுத்த சசிகலா, அக்கட்சியில் சொல்லும்படியாக இருக்கும் தஞ்சாவூர் ரெங்கசாமி, திருச்சி சாருபாலா தொண்டைமான், திருச்சி மனோகரன், ஒரத்தநாடு சேகர் ஆகிய சிலருக்கு மட்டும் "5 சி' வரை கொடுத்தாராம். இப்போதே ஆட்சிமாற்றம் இருக்கும் என்று பயப்படுகிற ஆளும்கட்சியினர் பலரும் சசிக்கு ரூட் விடுகிறார்களாம். குறிப்பாக ஓ.பி.எஸ். தரப்பே, சமாதானக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறதாம்''’’
""நானும் சசிகலா தொடர் பான ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். எப்பவும் சசிகலா வுடன் இளவரசியும் அவரது மகள்களான கிருஷ்ணவேணி, ஷகீலா ஆகியோர்தான் இருப்பார்கள். சமீபகாலமாக, அவர்கள் தரப்பைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரின் மனைவி பிரபாவதியும், டாக்டர் வெங்க டேஷும்தான் சசிகலாவின் முக்கிய பாதுகாப்பு அரண் களாக இருக்கிறார் களாம். இவர்கள் அனுமதி இல்லாமல் யாரும் சசிகலாவை இப்போது எளிதில் அணுகமுடியா தாம்.''’’
_________________
இறுதிச்சுற்று
ஸ்டெர்லைட்! தற்காலிக அனுமதி!
திங்களன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் இரண்டரை மணி நேரம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க.வின் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். "ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையைத் திறக்க அனுமதிப்பது" என்றும், "4 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி அளித்து, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை ஸ்டெர்லைட்டுககு மீண்டும் வழங்குவது' என்றும் முடிவெடுக்கப்பட்டது. "தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜன் போக, மீதியிருந்தால்தான் வெளி மாநிலங்களுக்குத் தரவேண்டும்' எனவும், "கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆலையின் செயல்பாட்டைக் கண்காணிப்பது' எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் நிர்வாகமோ, "அரசுக் கட்டுப்பாட்டுக்குள் போய்விடக்கூடாது' என உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.