""ஹலோ தலைவரே, சட்டசபைக் கூட்டத்துக்கு நடுவில் திடீரென அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கே?''’

""ஆமாம்பா, 27-ந் தேதி அப்படி அவசரமா அமைச்சரவை கூடுவதற்கு என்ன காரணமாம்? ‘சொல்றேங்க தலைவரே, அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா, தொழில்துறைச் செயலாளர் ஞானதேசிகன், வணிக வரித்துறைச் செயலாளர் பாலச்சந்திரன், டாஸ்மாக் எம்.டி. கிரிலோஷ்குமார் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்களும் கலந்துக்கிட்டாங்க. இதில், அரசு சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் தூக்கி நிறுத்தமுடியுமா இல்லை, தனியாரிடம் ஒப்படைச்சிடலாமான்னு விவாதங்களும் நடந்திருக்கு. கடைசியில், தனியாரிடம் ஒப்படைக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்காங்க.''’

""டாஸ்மாக்கை மட்டும் அரசாங்கமே நடத்துமா?''

""சரக்கு விலையை குடிமக்கள் தலையில் ஏற்றுவதுன்னு முடிவாகி யிருக்கு. வெளிநாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை 62 சதத்திலிருந்து 74 சதமாக உயர்த்து வதுன்னும் இந்தக் கூட் டத்தில் தீர்மானிக்கப் பட்டிருக்கு. அத்துடன், உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலை நடத்தாமல் தனி அதி காரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிப் பதற்கான மசோதாவை யும் இந்தக் கூட்டத்தில் நிறைவேத்தினாங்க.''’

Advertisment

""காவல்துறையைத் தவிர, எல்லாத் துறையும் மெல்ல மெல்ல தனியார் மயமாயிடும் போல…!''’’

stalin

Advertisment

""தலைவரே, சட்ட மன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஒன்றரை மணி நேரம் பேசிய மு.க.ஸ்டாலின், கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தப்ப, எப்படி குறிப்பெடுத்துக் கிட்டு பாயிண்ட் பாயிண்ட்டா செய்தி களை அடுக்குவாரோ அதே பாணியில் வாதங்களை எடுத்து வச்சாரு. தமிழகத்தின் நிலைமை கொதி நிலையில் இருக்குன்னு ஆரம்பிச்சி, தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு, கதிராமங்கலம் நெடுவாசல், ஜல்லிக்கட்டு போராட்டங்களை சுட்டிக்காட்டி, அதிலெல்லாம் காவல்துறை எவ்வளவு மோசமாக, அராஜக ஆட்டம்போட்டதுன்னு தெளிவாவும் விரிவாவும் ஸ்டாலின் எடுத்துச் சொன்னார். மக்களுக்காகப் போராடும் தலைவர்களைப் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்வதற்கும் அவர்களைக் குண்டர் சட்டத்தில் போடுவதற்கும் கடுமையான கண்டனங்களைத் தெரிவிச்சார். தன் பேச்சின் முடிவில் தமிழ்நாட்டின் அவல நிலையை விளக்குவதுபோல, விவேக சிந்தாமணியில் இருந்து சில வரிகளை ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேச்சை முடித்தார். ‘முதல்வரும் துணை முதல்வரும், இடை யிடையே குறுக்கிட்டுக் கேள்விகளை எழுப்பியும், ஸ்டாலின் தொடர்ந்து பேசியிருக்காரே?''’

cm

""ஆமாங்க தலைவரே, அரசியல் ரீதியா மட்டுமல்லாமல், காவல்துறையினரின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும்படியும் பேசி, அவர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கார் ஸ்டாலின். குறிப்பா, டி.ஜி.பி. உள்ளிட்ட காவல்துறையின் உயர் பதவிகளில், ஓய்வுபெற்ற அதிகாரிகளையே பதவி நீட்டிப்பு கொடுத்து உட்காரவைப்பதால், அந்த இடத்துக்கு வரவேண்டிய அதிகாரிகள், மேலே வரமுடியாமலே இருப்பதையும், அவர்களின் சர்வீசுக்கான மரியாதை கிடைக்காமல் போவதை யும் சுட்டிக்காட்டினாரு. பெண் காவலர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும், ஊர்க்காவலர்களுக்கு இருக்கும் ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகளையும், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டதுபோல் போலீஸ் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், எடுத்துச்சொல்லி, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரா ஸ்டாலின் ஸ்கோர் பண்ணிட்டாரு. இதையடுத்துதான், முதல்வர் எடப்பாடியும் தனது பதிலுரையில் காவல்துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்காருன்னு போலீஸ் ஏரியாவில் குரல் கேட்குது.''’’

""குரல்னு சொன்னதும் கல்லூரி மாணவி களிடம் தவறான முறையில் பேசி, நம்ம நக்கீரனால் அம்பலமான நிர்மலாதேவிக்கு சென்னையில் நடந்த குரல் டெஸ்ட் ஞாபகம் வருதுப்பா..''

nirmala devi""நக்கீரன் மூலமா வெளிப்பட்ட ஆடியோவில் இருந்த நிர்மலாதேவியின் குரலை செக் பண்ணு வதற்காக மதுரையிலிருந்து, 27-ந் தேதி சென்னை- புழல் சிறைக்கு அழைச்சிட்டு வந்தாங்க. இரவு 6:55-க்கு அவர் கொண்டுவரப்பட்டப்ப சிறை நிர்வாகிகளிடமும் கைதிகளிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. நிர்மலா தேவி ரொம்ப கேஷுவலா இருந் தாரு. சப்பாத்தியாவது சாம்பார் சாதமாவது கொடுங்கன்னு கேட்டுவாங்கி, இரவு உணவை முடிச் சிக்கிட்டார். மறுநாள் காலை 8:30-க்கே கிளம்பி ரெடியா இருந்த அவரை 9:12-க்கு போலீஸ் வேனில் ஏத்தினாங்க. அப்ப வேனில் ""உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு, என் ராசா என் மேல் ஆசை இல்லையா''ங்கிற ரஜினியின் "ராஜாதி ராஜா' படப்பாட்டு ஒலிக்க, எல்லோர் முகத்திலும் சிரிப்பு வழிஞ்சிது’

""டி.ஜி.பி.அலுவலக வளாகத்தில் இருக்கும் தடயவியல்துறை அலுவலகத்துக்கு நிர்மலா தேவியை அழைச்சிக்கிட்டுப் போய் குரல் டெஸ்ட் எடுத்திருக்காங்களே..''

""ஆமாங்க தலைவரே.. நிர்மலா தேவியின் ஆடியோ பேச்சில் இருந்து சில பகுதிகளை, அதேபோல் பேசிக்காட்டச் சொன்னாங்க. குறிப்பா "கவர்னர்.. தாத்தா.. இல்லை'னு பேசியதை 10 முறைக்கு மேல் பேசச் சொல்லி பதிவு பண்ணியிருக்காங்க. ஆடியோவில் கொச்சையா பேசியிருந்த வார்த்தைகளையும் திரும்பப் பேச வச்சிருக்காங்க. இதெல்லாம் அதிகாரத்தின் பல மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. நிர்மலாதேவி சொல்ற தாத்தா யாருங்கிற கேள்வி அதிகாரிகளிடம் புழங்கியிருக்கு. நிர்மலாதேவியோ யாருன்னு தெரியாதாங்கிற மாதிரி சிரிச்சாராம். பத்து தடவைக்கு மேல் கவர்னர்.. தாத்தா..ங்கிற வார்த்தைகளை பதிவு செய்தப்ப, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாடுலேஷனில் இருந்திருக்கு. அதனால ஆடியோவிலும் டெஸ்ட்டிங்கிலும் குரல் மாறுதுன்னு சொல்லி, ராஜ்பவன் வட்டாரத்தை சி.பி.சி.ஐ.டி காப்பாற்றும்னு போலீஸ் ஏரியாவில் இருக்கு.''

""ராமேஸ்வரம் பக்கத்தில் உள்ள தங்கச்சிமட விவகாரமும் காவல்துறையை அதிரவச்சிருக்கே?''’

bullets""ஆமாங்க தலைவரே, ராமநாதபுரம் மாவட்ட தங்கச்சி மடத்தில், கழிவுநீர் சாக்கடைக்காக பள்ளம் தோண்டிய போது, பெட்டி பெட்டியா துப்பாக்கி ரவைகளும், வெடிகுண்டுகளும் ராக்கெட் லாஞ்சர்களும் ஏராளமா கிடைச்சிருக்கு. போலீசார் தொடர்ந்து விசாரிச்சப்ப, இந்திராகாந்தி பிரதமரா இருந்த நேரத்தில், எல்.டி.டி.இ., டெலோ, ப்ளாட்னு தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் ராணுவப் பயிற்சியும், அவர்களுக்கு ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அமைதிப்படை ஈழத்துக்கு அனுப்பப்பட்ட நேரத்தில் இனி தங்களுக்குத் தேவைப் படாதுன்னு இ.பி.எல்.ஆர்.எஃப். அமைப்பின் பத்மநாபா தரப்பு, புதைச்சிவச்சிட்டுப் போன ஆயுதங்கள்தான் இப்ப கிடைச்சிருக்காம். ஆனாலும் முழுசா தோண்ட வேண்டிய சங்கதிகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க.''

""தினகரன் தரப்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் நியமிச்ச 3 ஆவது நீதிபதியான விமலா, இப்போது மாற்றப்பட்டு அவருக்கு பதில் நீதிபதி சத்யநாராயணா நியமிக்கப்பட்டிருக்காரே?''’

""தினகரன் தரப்பில் தங்க. தமிழ்ச்செல்வன் நீங்கலாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும், சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்கள். அதில், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி விமலாவின் மருமகள், தமிழ்நாடு அரசின் வழக்கறிஞராக இருக்கிறார். அதனால் நீதிபதி தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகத் தான் நடந்துகொள் வார். அதனால் சுப்ரீம்கோர்ட்டே, இந்த வழக்கை விசாரிக்கணும்னு, குறிப்பிட்டிருந்தாங்க. இவங்க மனுவை முன்னாள் அட்வகேட் ஜெனரல் கே.சுப்பிரமணியம்தான் தயாரித்துக் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளான சஞ்சய் கிஷன் கவுலும் அருண் மிஸ்ராவும், இதில் நீதிபதி குறித்த அவதூறு வாசகங்களை நீக்குங்கள்ன்னு எரிச்ச லானார்கள். அது நீக்கப்பட்டபின், இந்த வழக்கை விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணா விசாரிப்பார்ன்னு சஞ்சய் கிஷன் கவுல் அறிவிச்சிட் டார். இதற்குக் காரணம், இவர் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தபோது, தமிழகம் சார்ந்த வழக்குகளின் போது, அவர் நீதிபதி சத்யநாராயணாவிடம்தான் ஆலோசிப் பாராம். அவரது நேர்மை குறித்துத் தெரிந்த தால்தான் அவரைக் கவுல் நியமிச்சிருக்கார்ன்னு சுப்ரீம்கோர்ட் வட்டாரம் சொல்லுது. இந்த வழக்கை சரியான இடத்துக்கு சரியான நேரத்தில் தினகரன் நகர்த்திக்கிட்டு வந்திருக்கார்ன்னு, வழக்கை கூர்ந்து கவனிப் பவர்கள் சொல்றாங்க. வழக்கு ஆகஸ்டிலேயே முடிஞ்சிடும் னும், சுப்ரீம்கோர்ட்டுக்கு மீண்டும் இது வந்தாலும் இந்த வருடத்தை எடப்பாடி அரசு தாண்டாதுன்னும் தினகரன் தரப்பு நம்பிக்கையா சொல்லிக்கிட்டு இருக்கு.''’

""நீதிபதி மாறிய மாதிரியே தமிழக அரசியல் கட்சிகளிலும் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்ன்னு டாக் அடிபடுதே?''’

judge-sathayanaranya

""தி.மு.க.வில் நடந்த கள ஆய்வுக்குப் பிறகு, கொங்கு மண்டலத்தில் ஓரளவுகளை யெடுப்பு நடத்திய மு.க.ஸ்டாலின், அடுத்ததா தென் மாவட்டங்களை குறி வச்சிருக் காராம். மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் இவற்றைச் சேர்ந்த 6 மா.செக்கள் உள்பட பல நிர்வாகிகள் களையெடுக்கப்படலாம்னு அறிவா லயத்தில் பரபரப்பு நிலவுது. எம்.எல்.ஏ.க்களாக இருக்கிற மா.செ.க்கள் தப்பலாம்னும் பேச்சு அடிபடுது. இதற்கிடையில், தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளரான முரளீதரராவ், இங்கிருந்து டெல்லிக்குப் போகும் பா.ஜ.க. பிரமுகர்களிடம், ஜூலை 9-ந் தேதி அமித்ஷா தமிழகத்துக்கு வந்து ஆய்வு நடத்தப் போறாரு. அதற்கப்புறம் தமிழக மாநிலப் பொறுப்பாளர்கள் மாற்றப்படுவாங்க. ராஜஸ் தான், ம.பி, அரியானா மாநிலங்களிலும் இப்படித்தான் நிர்வாகிகள் மாற்றம் பற்றிய விவரங்களை அமித்ஷா தொகுத்திருக்கார்ன்னு சொல் றாராம். இது தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுக்கு பதற் றத்தை உண்டாக்கியிருக்கு.''

""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். பா.ம.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் ஐக்கியமான அணைக்கட்டு முன்னாள் எம்.எல்.ஏ.கலையரசன், பண்ருட்டி ராமச்சந்திரனின் தீவிர சிஷ்யர்.. பண்ருட்டியார் போட்ட கோட்டைத் தாண்டாதவராம். அப்படிப்பட்ட கலையரசன் அண்மையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குத் தாவிட்டாரு. பண்ருட்டி கொடுத்த ஐடியாவா இருக்குமோன்னு அவரை சந்தேகப்படுது இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.தரப்பு.''

இறுதிச் சுற்று!

அவிழாத மரண மர்மம்!

judge-arumugasamyஜெ.வின் மரணத்தைப்பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் தனது க்ளைமேக்ஸ் நிகழ்வாக சசிகலாவின் சாட்சியத்தை பதிவு செய்ய காத்திருக்கிறது. அதற்கு முன்பாக, கால நீட்டிப்பு பெற்று பலரையும் விசாரிக்க முடிவெடுத்துள்ளது. ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் சம்பந்தமாக... அப்பல்லோ மருத்துவமனை அளித் திருக்கும் பைல்களை ஆராய ரகசிய டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறது. அந்த டாக்டர்கள் குழு, ஜெ.வுக்கு மருத்துவ சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட உணவு வகைகள் தொடர்பான சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அதேபோல் ஜெ.வுக்கு சிகிச்சை சமயத்தில் இடது வென்ட்ரிக்கிள் என்கிற இதயப்பகுதியில் இரண்டுமுறை மாரடைப்பு வந்திருக்கிறது. இரண்டாவது முறை வந்த மாரடைப்பே மரணத்திற்குக் காரணம்.

ஜெ.வுக்கு வீட்டிலிருந்து சசிகலா கொண்டு வந்து கொடுத்த உணவுப் பொருட்கள்தான் இதற்குக் காரணம் என்கிற அடிப்படையிலான கேள்விகளோடு ஆணையம் தயாராக இருக்கிறது. இதற்கிடையே சசிதான் ஜெ.வின் மரணத்திற்குக் காரணம் என ஓ.பி.எஸ். தொடங்கிய தர்மயுத்தத்தின் பின்புலமாக இருந்த ஆடிட்டர் குருமூர்த்தியை சாட்சியமளிக்க கூப்பிட்டனுப்பியது விசாரணைக் கமிஷன். ""நான் ஜெ.வை வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் பார்த்தேன். சம்மனுக்கு பதிலளிக்க வரமாட்டேன்'' என சொல்லிவிட்டார் குருமூர்த்தி.

-தாமோதரன் பிரகாஷ்