நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பா.ஜ.க., சிறப்பு அந்தஸ்தைப் பிடுங்கி ஜம்மு-காஷ்மீர், மதச்சார்பற்ற ஜனதாதளம் -காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்த்து கர்நாடகம் என இந்தியா முழுக்கவும் பா.ஜ. மற்றும் கூட்டணிக் கட்சிகளே திகழும் அகண்ட பாரதக் கனவில் திளைத்துவருகிறது..
அடுத்த கட்டமாக புதுச்சேரியில் நேரடியாக பா.ஜ.க. ஆட்சியமைக்க முடியாதென்பதால் தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தலையாட்டிப் பொம்மை ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது. அதற்கு முன்னாள் முதல் வரும், எதிர்க்கட்சி தலைவருமான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மூலம் காய்களை நகர்த்திவருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம், புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கல்விக்கொள்கை, நீட் -நெக்ஸ்ட் என மத்திய அரசின் எந்த திட்ட மானாலும் தீவிரமாக எதிர்ப்பு காட்டும் நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்கவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.
கடந்த 19-08-2019 அன்று அண்ணாமலை ஓட்டலில் திடீரென கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினார் ரங்கசாமி. அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல். ஏ.க்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் ஆட்சி மாற்றம் குறித்து ரங்கசாமி பேசியுள்ளார். அதற் கடுத்த நாள் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபை அலுவலகம் சென்ற ரங்கசாமி, அதிரடியாக சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட்ராயரிடம் கடிதம் கொடுத்தார்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., “""புதுச்சேரியில் சபாநாயகர் தேர்தல் ஜனநாயகப்படி நடக்கவில்லை. அதனை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சுமிநாரா யணன், பாலன் ஆகியோரே எதிர்த்தனர். மேலும் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். எனவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொடுத் துள்ளனர். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பா.ஜ.க. முழுமையாக ஆதரிக்கிறது''“என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகனோ, ""நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென கடிதம் கொடுக்க கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் உடன்சென்றோம். கையெழுத்திடவில்லை. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை கேட்டு அதன்படி செயல்படுவோம்''’என்கிறார்.
புதுச்சேரி ஆட்சியில் மொத்தமுள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரஸ் கட்சி 14, கூட்டணி தி.மு.க. 3, சுயேச்சை 1 என 18 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள் வரிசை யில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜ.க. 3 (நியமன எம்.எல்.ஏ.க் களுக்கு வாக்குரிமை இருந்தால்) 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்வது தொடர்பாக சட்டசபை கூட்டம் தொடங்கியதும் சபா நாயகர்தான் முடிவுசெய்வார். அந்த கூட்டத்தில் ரங்கசாமி தனது தீர்மானத்தை வலியுறுத்தவேண்டும். தீர்மானத்தை எடுத்துக்கொள்ள 5-ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலேயே உள்ளனர்.
தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டால் அதுதொடர் பான விவகாரத்தை துணை சபாநாயகர்தான் கவனிக்க வேண்டும். தீர்மானத்தை விவாதத்துக்கு விட்டு அதன்பின் வாக்கெடுப்பு நடைபெறும். ஏற்கனவே துணை சபாநாயக ராக இருந்த சிவக்கொழுந்துதான் தற்போது சபாநாயக ராகி உள்ளார். துணை சபாநாயகர் பதவி தற்போது காலி யாகவே உள்ளது. எனவே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் சபையை நடத்துவதற் காக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான லட்சுமி நாராயணன், அனந்தராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர்தான் இந்த விவகாரத்தையும் நடத்தவேண்டும்.
ஆளுங்கட்சி தரப்பில் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் 11 பேர் மட்டுமே உள்ளனர். எனவே தாங்கள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்ய ஆளுங்கட்சி தரப்பிலிருந்து 5-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை இழுக்கவேண்டிய நிலையுள்ளது. எதிர்க்கட்சிகள் அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளன.
இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வையாளர் களிடம் பேசியதில், “ஏற்கனவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் அணிக்கு வருமாறு அல்லது ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்குமாறு பேரம் பேசியதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண் டன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க ஆளுங்கட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்துவரும் நிலையில், சபா நாயகர் அப்படியொரு நட வடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே சபாநாயகரை குறிவைத்து இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மான விவகாரம் வந் துள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க் கள் மீதான தகுதி நீக்க நடவடிக் கையை சபாநாயகர் கிடப்பில் போட்டுவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் ரங்கசாமி கைவிட்டுவிடுவார்''’என்கின்றனர்.
ஒரே கட்சி, ஒரே நாடு எனும் இலக்கில் இயங்கிவரும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளே இருக்கக்கூடாது என இயங்கிவரு கிறது. இதற்கு புதுச்சேரி ஆட்சி பலியாகுமா என போகப்போக தெரியும்.
-சுந்தரபாண்டியன்