"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் கட்சிகள் பலவும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை, தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் களமாகப் பார்க்கின்றன.''”
"ஆமாம்பா, த.வெ.க. தலைவரான நடிகர் விஜய், தேர்தல் குறித்த பதட்டத்திலேயே இருக்கிறார் போலிருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அவர் அண்மைக்காலமாக இரவு, பகலாகத் தேர்தல் வெற்றி குறித்தே சிந்திக்கிறார். இதைத் தொடர்ந்து அடிக்கடி அவர் விரக்தியிலும் மூழ்குவ தாக அவர் தரப்பினரே கூறுகிறார்கள். இந்த நிலையில், த.வெ.க. வின் மா.செ.க்கள் கூட்டம் 30ஆம் தேதி, அவரது பனையூர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கட்சி உறுப்பினர் சேர்க்கைக்காக வடிவமைக்கப் பட்ட ’"மை டி.வி.கே'’ எனும் "டிஜிட்டல் ஆப்'பை அவர் தொடங்கிவைத்தார். இதை அவர் கடந்த 20ஆம் தேதியே அறிமுகப் படுத்த நினைத்ததையும், தொழில் நுட்பக் கோளாறால் அந்த முயற்சி தள்ளிவைக்கப்பட்ட தையும் நாம் ஏற்கனவே பகிர்ந்துகொண்டிருக் கிறோம். தி.மு.க. பாணியில் வீடு வீடாகச் சென்று கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டிருகிறது.''”
"இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், "தான் மனம் தளர்ந்தாலும், வெற்றி நமக் குத்தான்னு தொண்டர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அவர் மா.செ.க்கள் மத்தியில் பேசும்போது, "தமிழக அரசியல் வரலாற்றில் 1967 மற்றும் 1977 ஆகிய தேர்தல்கள்தான் மிகப்பெரிதாகப் பார்க்கப்படு கிறது. இவை தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கிய தேர்தல்கள். அதேபோல 2026-ன் தேர்தல் அமையப் போகிறது. மேற்கண்ட 2 தேர்தல்களிலும், அதிகார பலம் மற்றும் அசுர பலம் வாய்ந்தவர்களை எதிர்த்து புதியவர்கள் வெற்றி பெற்றனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு மக்களைச் சந்தித்தித்து வெற்றி பெற்றார் கள். எனவே, அண்ணா சொன்னது போல மக்களிடம் செல், அவர்களிடம் கற்றுக்கொள், மக்களுடன் வாழ், திட்டமிடு என்று இருந்தால் வெற்றி நமக்குத்தான் என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். அடுத்து மதுரையில் நடத்த இருக்கும் மாநாடு குறித்தும் சிலவற்றை அறிவுறுத்தினாராம். இப்போ தெல்லாம் விஜய், அதிகபட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் பேச விரும்புவதில்லையாம். எனவே தனக்கு பேச்சைத் தயாரிப்பவர்களிடம் அவர் இதுகுறித்தும் பேசியிருக்கிறார். அவருக்கு உரைகளை மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறதாம்.''”
"பா.ஜ.க.வின் எதிரிபோல் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் விஜய்க்கு, அந்த செயலியையே, பா.ஜ.க. தரப்பைச் சேர்ந்த ஒருவர்மதான் தயார்செய்து கொடுத்திருக்கிறார் என்று செய்தி வெளியானதே?''”
"ஆமாங்க தலைவரே, நடிகர் விஜய்யின் புதிய செயலியை சமஸ்தான் இன்போ டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத் திருக்கிறது. இந்த நிறுவனம், பா.ஜ.க. பிரமுகரான சுப்ரமணியம் முத்துசாமி என்பவருக்குச் சொந்தமானது. இந்த சுப்பிரமணியம் முத்துசாமி, 2011-ல் மண்ணச்சநல்லூரிலும், 2015-ல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பா.ஜ.க. பிரமுகரிடம், விஜய் நட்பு வைத்திருப்பதும், செயலியை உருவாக்கித் தரச்சொல்லி வாங்கியிருப்பதும், அவரது த.வெ.க. கட்சியினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.''
"இதுகுறித்த செய்தி வெளியே வந்ததும், இந்த செயலிக்கு ‘"வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு'’ என விஜய், திடீரெனப் பெயர் சூட்டியிருக்கிறார். இருந்தாலும், அவரது செயலியில் பா.ஜ.க. வாடைதான் வீசுகிறது.''
"அ.தி.மு.க.வினர் வரும் தேர்தல் பற்றி என்ன நினைக்கிறாங்க?''”
"அ.தி.மு.க. தரப்பிலேயே பேசினேங்க தலைவரே, அவர்கள், ’2026 தேர்தலை அ.தி.மு.க.வுக் கான வாழ்வா? சாவா? என்கிற போராட்டமாகப் பார்க்கிறோம். ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம். அதற்கான அஸ்திரங்களை பயன் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறிப்பாக, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை அ.தி.மு.க.வுக்கு வாருங்கள், வாருங்கள் என அழைக் கிறார் எடப்பாடி. அவர்களோ, மறுத்து வருகிறார் கள். வராதவர்களை வா வா என்று அழைக்கிற எடப்பாடி, எந்த நிபந்தனையுமின்றி அ.தி.மு.க.வில் இணைகிறோம் என்று தூது விடுகிற ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரைச் சேர்த்துக் கொள்ளவேண்டியதுதானே! கட்சியின் வெற்றியை விட தனது சுயநலம்தான் அவருக்குப் பெரிதாக இருக்கிறது’ என்றெல்லாம் குமுறுகிறார்கள். விஜய் கட்சியின் கூட்டணியில் ஓ.பி.எஸ். சேர திட்ட மிடுகிறார் என்கிற சூழ லில்தான் அ.தி.மு.க.வில் இப்படிப்பட்ட குமுறல் கள் எதிரொலிக்கிறது. இப்போது சத்தமில் லாமல் எதிரொலிக்கும் இந்த குமுறல்கள், ஒரு கட்டத்தில் பகிரங்கமாக வெடிக்கக்கூடும் என்று தெரிகிறது.''”
"ஓ.பி.எஸ். புதுக்கட்சி தொடங்கவிருக் கிறார்னு அவர் தரப்பிலிருந்தே தகவல்கள் வருகிறதேப்பா?''
"பா.ஜ.க. கூட்டணிக்கு நம்மையும் கூப்பிடு வார்கள் என காத்திருந்து, காத்திருந்து பொறுமை யிழந்த ஓ.பி.எஸ்., ‘"தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது, கல்வி உரிமை சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற் கும் எதிரானது'’என்று முதன்முதலாக எதிர்க் குரலை எழுப்பியிருக்கிறார். அடுத்து தன்னைக் காக்கவைத்து அலட்சியப்படுத்திய பா.ஜ.க.வை விமர்சித்தும் அவர் அறிக்கை விடப்போகிறாராம். இந்த நிலையில், அரசியலில் தன்னை நிலைநிறுத் திக்கொள்ள, புதுக்கட்சி தொடங்க முடிவெடுத் திருக்கும் ஓ.பி.எஸ்., அக்கட்சிக்கு "எம்.ஜி.ஆர். அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்', அல்லது "எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகம்', அல்லது "எம்.ஜி.ஆர். தி.மு.க.' என்ற பெயர்களை தன் புதுக்கட்சிக்குச் சூட்டும் ஆலோசனையில் இருக் கிறாராம். இந்தப் பெயர்களை அவர் தரப்பு பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.''”
"இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் நெருக் கடி ஒன்று எடப்பாடிக்குக் காத்திருக்கிறதே?''”
"அ.தி.மு.க.வின் அடிப்படை சட்டவிதிகளை யும் மாற்றியும், புறம்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை அறிவித்துக்கொண்ட எடப்பாடியின் பதவியைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு, அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞராக இருந்த விழுப்புரத்தை சேர்ந்த பொன்.சிவா என்பவர் புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தப் புகார்க் கடிதம் குறித்து எந்த முடிவையும் தெரிவிக்காமல் ஆணையம் இருப்பதை சுட்டிக்காட்டி, மீண்டும் அவர் ஒரு நினைவூட்டல் செய்திருக்கிறார். இந்த நிலையில், "உங்கள் புகார் எங்களின் ஆய்வில் இருக்கிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம். விரைவில் இதில் தீர்வு காணப்படும்' என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறதாம். இதனையடுத்து கிடப்பில் கிடந்த இந்த புகார் மீது தற்போது கவனம் செலுத்தி வருகிறதாம் தேர்தல் ஆணையம். இது எடப்பாடிக்கு நெருக்கடிதரக் காத்திருக்கிறது என்கிறார்கள்.''”
"மாஜி அ.தி.மு.க. மந்திரி கடம்பூர் ராஜு கட்சி மாறலாம் என்று ஒரு செய்தி பரவி வருகிறதே?''”
"வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை ஜெயலலிதா 99-ல் கவிழ்த்தது வரலாற் றுப் பிழை என்று, கோயில்பட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. மாஜி மந்திரி கடம்பூர் ராஜு முழக்கமிட, அது பெரும் சர்ச்சையை அக்கட்சியில் ஏற்படுத்திவருகிறது. இதனால் டென்சனான எடப்பாடி, அவரை அழைத்து, அம்மாவையே விமர்சிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்று கேட்டு, ஏகத்துக்கும் அவருக்கு அர்ச்சனை நடத்தினாராம். இதைத் தொடர்ந்துதான், அப்செட் மூடில் இருக்கும் கடம்பூர் ராஜு, அன்வர்ராஜா பாணியில் கட்சி மாறலாம் என்று ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.''”
"மருத்துவர்கள் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி யும், முதல்வர் கேட்கவில்லை என்கிறார்களே?''”
"அப்பல்லோவில் இருந்து வீடு திரும் பிய முதல்வர் ஸ்டா லிளை, ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும், ஓய்வு எடுக்க விரும் பாமல் வழக்கமான ஆட்சிப் பணிகளையும் கட்சிப் பணிகளையும் கவனித்தபடி இருக்கிறார். இதனால் அவரது நலன் விரும்பிகள் வருத்தப்படுகிறார்கள். டாக்டர்கள் அறிவுறுத்திய படி ஒரு வாரம் ஓய்வு எடுக்கலாமே, அந்த ஒரு வாரமும் சின்னவர் பார்த்துக் கொள்ளப்போகிறார் என்று ஆதங்கப்படுகின்றனராம். இந்த ஆதங்கம் முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட, அது குறித்து வழக்கமான ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தபடி, அவர் அடுத்த பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டாராம். இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் விரைவில் மாற்றப்பட இருக்கின்றனர். இது குறித்த டிஸ்கஷனும் நடந்துள்ளது என்கிறார்கள்.''”
"அடுத்த டி.ஜி.பி. நியமனத்துல திடீர் திருப்பமாமே?''
"ஆமாங்க தலைவரே, தற்போது தமிழக டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். அதுக்கப்புறம், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் அபய்குமார் சிங், சிறப்பு கூடுதல் டி.ஜி.பி.யாக தமிழக அரசால் நியமிக்கப் படவுள்ளார். அபய்குமார் சிங்கின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இருப்பதால், ஜனவரி மாதத்தில், தற்போது சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கின்ற டேவிட்சன் தேவாசிர் வாதத்திற்கு பதவி உயர்வு வருகிறது. அவருக்கு சீனியாரிட்டிபடி நேரடியாக டி.ஜி.பி.யாக பதவி உயர்வு தர இயலாதென்பதால் உளவுத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு, கூடுதலாக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி.யாகவும் நியமிக்கப்பட இருக்கிறாராம் தலைவரே''
"மாநில வரித்துறையில் சலசலப்பு தெரிகிறதே?''”
"தேனி துணை ஆணையர் (மாநில வரி) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்துவரும் மாணிக்கராஜா என்பவர், இந்த 31 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் இலங்கையில் 1982-ல் படித்ததாக பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்டிருப்பதாக, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது இந்திய தூதரகம் மூலமாக அந்தக் கல்விக்கான அங்கீகாரம் தரப்படவில்லை. மேலும் வேலை வாய்ப்பகத்தின் மூலமாக அவருக்கு பணி வழங்கப்பட்டதற்கான பதிவும் இல்லை. அப்படியிருக்க அவருக்கு அரசு வேலை எப்படி கொடுக்கப்பட்டது, இவ்வளவு காலம் இவர் எப்படி அரசுப்பணியில் நீடித்தார் என்றெல் லாம் கேள்வி எழுப்புகிறார் கள் துறை ஊழியர்கள். இப்படிப்பட்ட மாணிக்க ராஜா, கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்துள்ள தாக, இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற புகார்கள், மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவர் ஆளுங்கட்சி மந்திரி ஒருவருக்கு வேண்டியவர் என்றும் கூறுகிறார்கள்.''’
"அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடிசெய்த நபரை, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் அபார்ட்மெண்ட் டில் கைது செய்திருப்பது பரபரப்பாகியிருக்குதே?
"ஆமாங்க தலைவரே. விருகம்பாக்கத்தில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் தாய்ஷா அரசு குடியிருப்பில் "டி' பிளாக்கிலுள்ள மலர்விழி ஐ.ஏ.எஸ். வீட்டில் கணேசன் என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தன்னை அரசு செயலாளராக சொல்லிக்கொண்டு ஏமாற்றிவந்திருக்கிறார். இவருடன் புரோக்கராக இருக்கும் அருள் என்பவர், "உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? 25 லட்சம் கொடுங்கள்... நம்மிடம் அரசு செயலாளரே இருக்கிறார்' எனக் கூறி தாய்ஷா அரசு குடியிருப்புக்கு அழைத்துவந்து கணேச னிடம் அறிமுகப்படுத்துவாராம். அரசு குடியிருப்பில் வசிப்பதால், அருள் சொல்வதை நம்பி பணத்தை கொடுக்க, அனைத்தையும் ஆட்டையை போட்டுள்ளனர். சிலருக்கு போலி அரசாணையை கொடுக்க, அவர்கள் பணிக்கு செல் லும்போது அந்த மோசடி தெரியவந்து, அவர்கள் கணேசனை கைகாட்ட... இதுகுறித்து உயரதிகாரி களுடன் விவரித்த போலீசார், வெளியே தெரிந்தால் அவமானமெனக் கருதி, நுங்கம்பாக்கம் போலீசார் கணேசனை கமுக்கமாக கைதுசெய்து விசாரித்து வருகிறார்களாம்!
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். போதைப்பொருள் விற்பனையும், நடமாட்டமும் சென்னையின் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுவதாக இருந்துவருகிறது. பெரும்பாலும், தனியார் கல்லூரி வளாகங்களில்தான் இது அதிகம் புழங்குகிறது. ஒருசில லோக்கல் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி, உதவி ஆணையர்கள் வரை அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். சரிவர மாமூல் தராதபோது மட்டும் ஓரிருவரைக் கைது செய்து, கணக்கு காட்டுகிறது போலீஸ். இது குறித்த புகார்கள் தொடர்ந்து உயரதிகாரி களுக்குச் செல்கிறது. ஆனாலும் எச்சரிக்கை செய்வதோடு நின்றுவிடுகிறார்கள். போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தை யாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாதவரை, இப்படிப்பட்ட குற்றங்களைக் குறைக்க முடியாது என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.''”