"ஹலோ தலைவரே.. சென்னையில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பங்கேற்கிறாராமே?''’

""காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட தேசிய கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கிற நினைவேந்தல் கூட்டம். அதில் பா.ஜ.க. சார்பில் அமித்ஷா கலந்துக்குறாரு. தேசிய கட்சித் தலைவர்களோடு, தி.மு.க.வின் புதிய தலைவரா மு.க.ஸ்டாலினும் அங்கே இருப்பாரு.''

alagiri

""28-ந் தேதி கூடும் தி.மு.க. பொதுக்குழுவில் அதை நிறைவேற்றுவதற்கான வியூகங்கள் கச்சிதமா நடந்துக்கிட்டிருக்கு. 63 மாவட்டங்களிலிருந்து ஸ்டாலினை தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமைக்கு அனுப்பப்பட்டிருக்கு. மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளிலிருந்தும் இதே மாதிரி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுது. 50 ஆண்டு காலம் கலைஞர் வகித்த தலைவர் பதவிக்கு அடுத்ததா ஸ்டாலின் வருவதால எதிர்பார்ப்பு அதிகமா இருக்குது. ஸ்டாலினும் 50 வருசமா தி.மு.க. கட்சிப் பணிகளில் ஈடுபட்டு படிப்படியா வளர்ந்து, தலைவர் பதவிக்கு வர்றாரு.''

""மிசா நெருக்கடி, சிறைவாசம், போராட்டம், வெற்றி-தோல்வின்னு கலைஞரைப் போல ஸ்டாலினுக்கும் கட்சி அனுபவம் நிறைய இருக்குதே!''

""ஆமா…கட்சித் தலைவரா கலைஞர் பதவி வகிச்ச காலத்தில் 2 முறை தி.மு.க. பிளவுபட்டுச்சு. அந்த சமயத்திலும் தேர்தல் வெற்றி-தோல்விகளைத் தாண்டி கட்சியைக் கட்டுப்பாடா வச்சிருந்த ஆற்றல்தான் கலைஞரோட பெரும் பலம். அதனாலதான் கலைஞர் 11 முறை தலைவரானாரு. கலைஞர் கட்டமைத்துத் தந்த கட்சியில் இனி பிளவுகள் ஏற்படாமல் காப்பாற்றவேண்டிய கடமை, புதுத் தலைவராகும் ஸ்டாலினுக்கு இருக்கு. அதற்கேற்றபடி, தலைவர் பதவிக்குக் கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளலாமான்னுகூட மேல் மட்டங்களில் ஆலோசனைகள் நடந்திருக்கு. ஸ்டாலின் ரொம்ப கவனமா ஸ்டெப் வைக்கிறாரு. பொதுக்குழு கூட்டுறது பற்றி பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களிடம் ஆலோசிச்சிருக்காரு. கட்சி அமைப்பு-சட்டவிதிகளில் இப்போதைக்கு அவசரம் காட்ட வேண்டாம்ங்கிறதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.''’’’

Advertisment

stalin

""தலைவராகும் ஸ்டாலினிடம் இருக்கும் தி.மு.க.வின் பொருளாளர் பதவிக்கு பலத்த போட்டி நிலவியதே?''’’’

Advertisment

duraimurugan""துரைமுருகன்தான் அடுத்த பொருளாளர்னு முடிவாயிடிச்சி. பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசான்னு பலரின் பெயர்கள் அலசப்பட்டாலும் சீனியர்களான துரைமுருகன், ரகுமான்கான், டி.ஆர்.பாலு இவங்களுக்கு முக்கியத்துவம் தரணும்ங்கிற அடிப்படையில் பொருளாளர் பதவி துரைமுருகனுக்குன்னு ஸ்டாலின் முடிவெடுத்திருக்காரு. துரைமுருகன் வகிக்கும் முதன்மைச் செயலாளர் பதவியை டி.ஆர்.பாலுவுக்குத் தரலாம்னு ஆலோசனை நடந்திருக்கு. அதுபோல ரகுமான்கானுக்கு மரியாதை தருவது பற்றியும் ஆலோசிச்சிருக்காங்க. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தொடங்கி, வட்டக் கிளை துணைச் செயலாளர் வரை கட்சியின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளிலும், பெண்களுக்கும் தலித்துகளுக்கும் தி.மு.க.வில் பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்கு. அதுபோல, சிறுபான்மையினருக்காக ஒரு துணைப் பொதுச்செயலாளர் பதவி தரலாம்ங்கிற கருத்துகளும் விவாதிக்கப்பட்டிருக்காம்.''

""எந்தத் தரப்பும் விடுபடக்கூடாதுங்கிறதிலே ஸ்டாலின் கவனமா இருக்காரு போல?''

""தி.மு.க.வைப் பொறுத்தவரை இன்னும் நிறைய பதவிகளை உருவாக்கி அதில் இளைஞர்கள், பெண்களை அதிகமா நியமிச்சால்தான் தேர்தல் களத்தில் புதிய சுறுசுறுப்பைக் கட்சியினரிடம் பார்க்கலாம்ன்னு ஸ்டாலின் நினைக்கிறார். ஆனா, அவசரப்படாம செயல்படுத்த நினைக்கிறாரு. அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வில் கட்சித் தலைவரா பங்கேற்ற பிறகு, மற்ற செயல்பாடுகளில் அவர் கவனம் செலுத்துவாருன்னு சொல்றாங்க.''’’’

cvsanmugam

""கோபாலபுரம் வீட்டில் 22-ந்தேதியன்னைக்கு கலைஞரின் 16ஆம் நாள் நினைவு கடைப்பிடிக்கப்பட்டிருக்கு. அன்னைக்கு சாயங்காலம் அண்ணா சமாதியில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், திருவண்ணாமலை மா.செ. எ.வ.வேலு டீம் பாட்டுப்பாடி கச்சேரி நடத்தியிருக்கு. இந்த நிலையில், செப்டம்பர் 5-ந் தேதி பேரணி நடத்த திட்டமிட்டிருக்கும் மு.க.அழகிரி, தன்னிடம் கடைசியாகக் கலைஞர் ஏதோ சொன்னார்ன்னு பரபரப்பை கிளப்பியிருக்காரே?’’

""அழகிரியைப் பொறுத்தவரை, ஸ்டாலின் கையில்தான் கட்சி இருக்குங்கிறது தெரியும். ஆனாலும், தன்னை மீண்டும் தி.மு.க. உறுப்பினரா அங்கீகரிக்கணும்ங்கிற எதிர்பார்ப்பும், தென்மாவட்டத்தில் தனக்கு மதிப்பு தரக்கூடிய கட்சிப் பதவி தரணும்ங்கிற விருப்பமும் இருக்கு. பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னாடி இதற்கான சிக்னலை எதிர்பார்க்குறாரு. ஸ்டாலின் தரப்போ, பொதுக்குழு வரை வேற எதிலும் கவனம் செலுத்துவதா இல்லை. அதனால, ஸ்டாலின் தரப்பின் கவனத்தை கவரும் வகையிலும், அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கும் விதத்திலும் அழகிரி சில பிட்டுகளைப் போடுறாரு.''

""பேரணிக்கான ஏற்பாடுகள் எப்படி இருக்குதாம்?''

amitsha

""அழகிரியோடு இருப்பவங்கதான் அதில் தீவிரமா இருக்காங்க. அவங்ககிட்ட, ஒவ்வொரு ஏரியாவிலிருந்தும் எத்தனை வாகனம் வருது, அதிலே எத்தனை சீட்டுன்னு அழகிரி கேட்டுக்கிறாரு. வியாழக்கிழமை ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துவதா இருந்த அழகிரி கடைசியில் அதையும் நடத்தலை. எங்கெல்லாம் ஸ்டாலினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், ஓரங்கட்டப்பட்ட ஆட்கள், புறக்கணிக்கப்பட்ட நபர்கள் இருக்காங்களோ அவங்களோடு அழகிரி டீம் தொடர்பு கொள்ளுது. அவங்களைத் தேடித் தேடி பிடிப்பதில் மும்முரமா இருக்குது. இதுவரை பெருசா இல்லைன்னாலும், டயம் வரும்னு எதிர்பார்க்குறாங்க. தன்னை கட்சியில் சேர்த்து மதிப்பு கொடுத்தா ஓரணியா செயல்படுறது, இல்லைன்னா தனியா பேரணி நடத்துறதுங்கிறதுதான் அழகிரி பார்முலா.''

""தென்மாவட்டங்களில் மட்டுமில்லாமல் நாமக்கல்-ராசிபுரம்னு மேற்கு மாவட்டம் பக்கமும் அழகிரி கவனம் திரும்பியிருக்கே?''

""தி.மு.க.வின் வாக்குவங்கி பலவீனமா இருக்கிற இடங்களில் உள்ள அதிருப்தி ஆட்கள்தான் அழகிரி டீமின் டார்கெட். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள் தொடங்கி நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர்னு கொங்கு பெல்ட் வரை கவனம் செலுத்தப்படுது. அதோடு, தன்னோட மதுரை ஏரியாவுக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் முக்கியத்துவத்தைக் காட்டணும்ங்கிற கணக்கும் அழகிரிகிட்ட இருக்கு. ஆனா, அவர் கணக்குப் போடுற அளவுக்கு நெருக்கமா வரக்கூடிய அளவுக்கு ஆட்கள் எண்ணிக்கை இன்னும் வரலை. அழகிரியின் மனநிலையை தி.மு.க. தலைமை எப்படி புரிஞ்சிக்கிட்டு செயல்படப் போகுதுங்கிறதைப் பொறுத்துதான் அடுத்த கட்டத்தை தெரிஞ்சிக்கலாம்.''’’’

""எதிர்க்கட்சியில் என்ன நடக்குதுங்கிறதை ஆளுங்கட்சியும் தெரிஞ்சிக்க ஆசைப்படுமே?''’’

""அவங்க ஆட்சிக்கு சிக்கல் வருமா-வராதாங்கிறதை தெரிஞ்சிக்கிறதிலேதான் ஆளுந்தரப்பு ஆர்வமா இருக்கு. எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய எடப்பாடி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் போக்கு, ஏற்கனவே தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி கொடுத்த தீர்ப்பு பாணியில், தங்களுக்குச் சாதகமாகவே இருக்கும்ன்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்கார். ஆனா, அமைச்சர்கள் விஷயத்தில் எடப்பாடியால் முழுசா ஒத்துப்போக முடியலையாம்?''’’’

""என்னாச்சு?''’’’

sunipalival

""நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலும் வரலாம்ன்னு முதல்வர் எடப்பாடி கணக்குப் போடுறார். அதனால், தேர்தல் நிதி குறித்து தன் அமைச்சரவை சகாக்களிடம் அவர் பலவிதமா பேசியிருக்கார். அந்த வகையில் விழுப்புரம் போயிருந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தைத் தொடர்புகொண்ட எடப்பாடி, தேர்தல் செலவுக்காக திரட்டி வச்சதெல்லாம் ரெய்டில் போயிடுச்சி. அதனால் மறுபடியும் பணத்தைத் திரட்டியாகணும். அதனால் உங்கள் சார்பில் 500 ‘ சி’யை ரெடி பண்ணிக்கொடுங்கன்னு கேட்டிருக்கார். இதைக் கேட்டு எரிச்சலான சி.வி.சண்முகம், நீங்கதான் பொதுப்பணி, நெடுஞ்சாலைன்னு கொழுத்த துறைகளைக் கையிலயே வச்சிருக்கீங்களே. அப்புறம் எங்ககிட்ட எதுக்குக் கேட்கறீங்கன்னு எகிறியிருக்கார். இதில் ரெண்டு பேருக்கும் இடையில் வார்த்தைகள் தடிக்க, எடப்பாடியோ, நீங்கள் இப்படியெல்லாம் பேசினால் அமைச்சராக நீடிக்க முடியாதுன்னு கோபத்தைக் காட்டியிருக்கார். சி.வி.சண்முகமும் பதிலுக்கு, என்னை நீக்கினால், நீங்க சி.எம். நாற்காலியில் உட்கார்ந்திருக்க மாட்டீங்கன்னு பாய்ஞ்சிருக்கார். இவர்களின் மோதல் விவகாரம் தெரிஞ்ச சீனியர் மந்திரிகளோ, தேர்தல் நெருக்கத்தில் நிதி விவகாரத்தைப் பார்த்துக்கலாம்னு சொல்லி, சமாதானப்படுத்தி இருக்காங்க.''’’’

""அமைச்சர்கள் சைடில் சமாதானக் கொடி, ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள் விஷயத்தில் அதிரடி டிரான்ஸ்பர் நடந்திருக்கே.''’’’

""ஆமாங்க தலைவரே, கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இங்கே உரிய பாதுகாப்பு தராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துச்சு. இது தொடர்பா பல்வேறு விசாரணைகள் நடப்பதைப் பத்தி நாம ஏற்கனவே பேசியிருக்கோம். இந்த நிலையில் மத்திய அரசு, இந்த விவகாரம் தொடர்பா போலீஸ் உயரதிகாரிகள் வரை கவனிச்சிது. அதில் ஒரு சிலரைக் காப்பாற்ற எடப்பாடிகிட்ட சீனியர் அமைச்சர்களான வேலுமணி போன்றவங்க முயற்சி செஞ்சாங்க. இருந்தாலும், டெல்லிக்குக் கணக்குக் காட்டியாகணுமேன்னு, அடிஷனல் கமிஷனர்களான சாரங்கனையும், ஜெயராமனையும் வெவ்வேறு பணிகளுக்குத் தூக்கியடிச்சிருக்கு எடப்பாடி அரசு. அதேபோல், மண்டபம் அகதிகள் முகாம் பொறுப்பில் இருந்த ஏ.டி.ஜி.பி.அருணாசலத்தை போக்குவரத்துத் துறைக்கு மாற்றி சென்னைக்கு அழைச்சிக்கிட்டாங்க. ஐ.ஜி. முருகன் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் விசாகா கமிட்டியில் அருணாசலமும் இருப்பதால், அவர் சென்னையில் இருக்கணுமேன்னுதான் இந்த டிரான்ஸ்பராம்.''

""ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பரும் இப்படித்தானா?''

""அதில் சில அதிரடிகள் இருக்கு. அதைப் பற்றி நான் சொல்றேன்.. தலைவரே.. அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மதிப்பெண் மோசடி விவகாரம் உள்பட பல புகார்கள் வந்த நிலையில், உயர்கல்வித்துறைச் செயலாளரான சுனில் பாலிவால் மாற்றப்பட்டிருக்காரு. அவருக்கு பதிலா கவர்னரின் செயலாளர் ராஜகோபாலுக்கு வேண்டியவரான, மங்கத்ராம் சர்மாவை நியமிச்சிருக்காங்க. குடிசைமாற்று வாரிய நிர்வாக இயக்குநர் ஷம்பு கல்லோலிகர், தன் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை மரியாதை இல்லாமல் நடத்துறாருன்னும், யாரையும் உட்காரக்கூட அனுமதிக்காமல் அதிகாரமா நடந்துக்குறாருன்னும் பொதுமக்களிடமிருந்து முதல்வர் அலுவலகத்துக்குப் புகார்கள் குவிஞ்சிக்கிட்டிருந்தது. அவரையும் மாத்திட்டாங்க. அதே நேரத்தில், சில நல்ல அதிகாரிகளை தேவையில்லாம இடமாற்றம் செய்திருப்பதாகவும் கோட்டையில் எதிரொலிக்குது.''’