"ஹலோ தலைவரே, ஏற் கனவே அரபிக்கடலில் "கியார்' புயல் மிரட்டுகிற நிலையில், அடுத்ததா "மஹா'ங்கிற இன் னொரு புயல் உருவாகி டபுளா மிரட்டுது. தமிழகம் முழுக்க பரவலா மழை பெய்துக்கிட்டும் இருக்கு. பேரிடர் நேரத்தில் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்னு சிறுவன் சுஜித் விஷயத்தில் பார்த்துட்டோம். இந்த இயற்கைச் சீற்றத்தை அரசு எப்படி எதிர் கொள்ளப் போகுதோ?''’ ’
""சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் தோல்விப் புயலைச் சந்திச்சிருக்கும் தி.மு.க., வரும் 10-ந் தேதி பொதுக்குழுவைக் கூட்டுதே?''’
""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் தோல்வியை விட வாக்கு வித்தியாசம்ங்கிறது கொஞ்சம் ஹைவோல்ட் அதிர்ச்சியையே கொடுத்திருக்கு. இந்த நிலையில்தான் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு கூடவிருக்குது. இதில் தோல்விக்கான காரணங்கள் விவாதிக்கப்படலாம் என்றாலும், முன்பு மாதிரி அங்கே நீண்ட விவாதங்களுக்கு இடம் கிடைப்பதில்லைங்கிறது கட்சி சீனியர்களின் ஆதங்கமா இருக்கு. முன்கூட்டியே தலைமையால் தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பேசுகிற வாய்ப்பு கிடைக்கும். அவங்களும் சாதக பாதகங்களை லேசாத்தான் தொட்டுப் பேசக்கூடிய நிலை இருக்கும்ங்கிற வருத்தம் தி.மு.க.விலேயே பலரிடமும் இருக்கு.''’
""தி.மு.க.வில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு நிலைமை எப்படி இருக்குதாம்?''
""சட்டமன்றத் தேர்தலில், உதயநிதிக்காக வேளச்சேரி அல்லது ஆயிரம்விளக்கு தொகுதியைத் தயார்படுத்தி வைக்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் சொல்லப்பட்டிருக்குதாம். மாவட்ட லெவலில் இருந்து மாநிலத் தலைமை வரை உதயநிதி விசயத்தில் அங்கே தீவிர கவனம் செலுத்தப்படுது. உதயநிதிக்குத் தரப்படும் அதிக முக்கியத்துவம், கட்சியிலேயே ஒரு பகுதியின ருக்கு உற்சாகத்தையும் இன்னொரு பகுதி யினருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கு. இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி யுடன் இளம்பெண்களுக்கான அமைப்பையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடக்குது.''’
""தி.மு.க.வில் மகளிரணின்னு தனி அமைப்பு இருக்குதே?''’
""ஆமாங்க தலைவரே, மகளிரணிச் செயலாளரா இருக்கும் கனிமொழி எம்.பி.யும் அந்த அணியின் நிர்வாகிகளும், இளைஞரணியில் இளம்பெண்களைச் சேர்க்க நடக்கும் முயற்சியைப் பார்த்து அதிருப்தி அடைஞ்சிருக்காங்களாம். இளம்பெண்களை இளைஞரணியில் சேர்க்கணும்னு சொன்னால், மகளிரணி என்ன முதியோர் அமைப்பா? என்கிற எரிச்சல் வெளிப்படுது. தனது தூத்துக்குடி தொகுதியில் மழை என்றதும், அங்கே ஓடிப்போய் மக்களோடு மக்களாக நின்றார் கனிமொழி. ஆனால் இடைத்தேர்த லில் அந்தளவு ஆர்வம் காட்டல. அப்ப செர்பியாவில் நடந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்ங்கிற முறையில் கலந்துக்கிட்டாரு. இளைஞரணியா? மகளிரணியாங்கிற ஃபைட் தி.மு.க.வில் நீடிக்குது.''’
""அதை விடுப்பா... காங்கிரஸ் இன்னமும் நம்புகிற ராகுல் காந்தி அடிக்கடி சீனிலிருந்து காணாமல் போயிடுறாரே?''’
""தலைவரே... மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிஞ்ச வேகத்தி லேயே 30-ந் தேதி அவர் வெளிநாடு கிளம் பிட்டார். இந்தமுறை அவர் இந்தோனேஷியாவில் தியானம் செய்யப்போயிருப்பதா சொல்லப் படுது. அவர் தியானத்துக்குக் கிளம்பும் முன், காங்கிரஸின் தமிழக மேலிடப் பார்வையாளரான முகுல்வாஸ்னிக்கைக் கூப்பிட்டு, நாங்குநேரியை தி.மு.க.விடம் கொடுக்காம நாம வாங்கி ஜெயிப்போம்னு சொன்னீங்க. இந்தத் தோல்விக்கு என்ன காரணம்ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். நான் திரும்பி வர்றதுக்குள்ள அது சம்பந்தமான ரிப்போர்ட்டைத் தயார்பண்ணிக் கொடுங்கன்னு சொல்லிட்டு ப்ளைட் ஏறிட்டாராம். நாங்குநேரி தோல்விக்கு என்ன காரணம்னு தமிழக காங்கிரஸ் பிரமுகர்களிடம், முகுல்வாஸ்னிக் விளக்கம் கேட்டிருக்கார். தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் ராகுல் மீதே எரிச்சலடைஞ்சிருக்காங்களாம். கட்சித் தலைவர் பதவியையும் ஏத்துக்கமாட்டார். தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூப்பிட்டாலும் வரமாட்டார். பிரச்சினைகளைச் சொன்னாலும் காதில் வாங்கமாட்டார். ஆனால் விளக்கம் மட்டும் கேட்டுக்கிட்டே இருப்பார்னு அதிருப்தியை வெளிப்படுத்தும் மாநில நிர்வாகிகள், வெளிநாட்டு தியானத்தை முடிச்சிக்கிட்டு திரும்பிய பிறகாவது, கட்சி வளர்ச்சி தொடர்பா உபயோகமான ஞானோபதேசத்தை ராகுல் செய்வாரா?ன்னு கேள்வி எழுப்பறாங்க.''’
""மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தனது அரசை நிலைநிறுத்துவதில் சகல அஸ்திரத்தையும் பயன்படுத்தியிருக்கே?''
""ஆமாங்க தலைவரே, மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு கூட்டணிவைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க., 105 தொகுதிகளைக் கைப்பற்றுச்சு. சிவசேனா 56 தொகுதிகளை ஜெயிச்சிது. இவங்க ரெண்டுபேரும் சேர்ந்தா 161-ங்கிற அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெறலாம். ஆனால் சிவசேனாவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையில் அதிகார யுத்தம் ஆரம்பமாயிடுச்சு. இதனால் அங்கே 54 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸோடு கைகோர்க்க சிவசேனா முடிவெடுத்துச்சு. இந்தக் கூட்டணியை பின்னால் இருந்து ஆதரிக்க காங்கிரஸும் ரெடியாச்சு. இதனால் தங்கள் கையருகே இருக்கும் ’வடை’ போயிடுமோன்னு நினைச்ச பா.ஜ.க., காங்கிரஸில் ஒரு பகுதியினரை தங்கள் பக்கம் இழுக்கவும், ஏறத்தாழ 25 சுயேட்சைகளையும் தங்கள் பக்கம் வளைக்கவும் டீலிங் நடத்தியது. இந்த அண்டர் டீலிங் வேலைகளால் 31-ந் தேதி வரை இழுபறி நிலவரமே அங்கே நீடிச்சாலும், ஆட்சியமைப்பதில் பா.ஜ.க. உறுதியாகத்தான் இருந்தது.''’
""காஷ்மீரில் கவர்னரின் ஆலோசகராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார், வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டாராமே?''’
""காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்துசெய்த பா.ஜ.க. அரசு, அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்தது. அங்கு மக்களின் போராட்டங்களும் கடுமையாக ஒடுக் கப்பட்டன. இந்த முயற்சியின்போது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டதாகவும், அதற்குக் காரணமாக இருந்தவர் இந்த விஜய குமார்தான்னும் பலரும் குற்றம் சாட்டினாங்க. இந்த நிலையில் அவருடைய பணி நீட்டிப்புக்காலம் 30-ந் தேதியோடு முடிவடைஞ்சிடுச்சு. மீண்டும் தனக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும்ன்னு விஜய குமார் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜம்மு- காஷ்மீரையும், லடாக்கையும் தனித்தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த மோடி அரசு, அதை செயல்படுத்திய நாளில் விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸுக்கு பணி நீட்டிப்பைத் தராமல், அவரை வீட்டுக்கு அனுப்பி வச்சிடுச்சு.''’
""இங்கு ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி வாரா வாரம் கலக்கறாராமே?''’
""உண்மைதாங்க தலைவரே, வாரம்தோறும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பார்ட்டி நடக்குது. இதில் காவல்துறை அதிகாரிகள் பலரும் கலந்துக்கறாங்க. அதில் அவங்களுக்கிடையில் நட்புணர்வு இறுகுதாம். அண்மையில் கூட தீபாவளிக்கு ஸ்பெஷல் பார்ட்டியா அது நடந்துச்சாம். இந்த பார்ட்டியின் நாயக ரான அந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஏற்கனவே டி.ஜி.பி. பதவிக்கு முயற்சிபண்ணி முடி யாததால், இப்ப சென்னையில் சிட்டி. கமிஷனராகணும்னு ஆசைப்படறாராம். அதுக்குத் துறையில் இருக்கும் சகாக்கள் அனுசரணையா இருக்கணும்னுதான் இப்படி பார்ட்டி வச்சி அன்பு காட்டறாராம்.''
""ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மெகா டிரான்ஸ்பர் லிஸ்ட் ஒண்ணும் தலைமைச் செயலகத்தில் தயாராகுதாமே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்க நினைக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களை நாடியிருக்காங்க. அதேபோல் சில அமைச்சர்கள் தங்களுக்குத் தோதான அதிகாரின்னு நினைச்சவங்களைத் தங்கள் மாவட்டத்துக்கு அழைச்சிக்க விரும்பு னாங்க. அதனால் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாறுதல் தொடர்பான அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதம் தலைமைச் செய லகத்தில் ஏகத்துக்கும் குவிஞ்சிருக்கு. அதிலிருந்து இப்ப ஒரு டிரான்ஸ்பர் பட்டியல் தயாராகிக்கிட்டு இருக்குதாம். அதே நேரம், சில சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், மன்னார்குடித் தரப்புக்கு நெருக்க மான அதிகாரி களுக்கும், அவங்க விரும்பும் இடங் களில் இடமாற்றம் செய்யவேண் டாம்ன்னு காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடியிடமிருந்து உரியவர்களுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்குதாம்.''’
""திருச்சி சிறையில் இருக்கும் கைதிகளை வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்குவதாகத் தகவல் வருதே?''’
""திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியவாதக் கைதிகள், முஸ்லிம் கைதிகள், மாவோயிஸ்டு கைதிகள் ஆகியோரை, அடிக்கடி வெளியில் இருந்து ஃபோர்ஸை வரவழைத்து, கடுமையாகத் தாக்கும் கொடூரம் தொடர்கதையா இருந்திருக்கு. இந்த விவகாரம் வெடிச்சி வெளியில் வந்ததும், இனி அப்படி எல்லாம் நடக்காதுன்னு திருச்சி எஸ்.பி.ஜியாவுல் ஹக், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே வருத்தம் தெரிவிச்சிருக்கார். இது தொடர்பா நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஒருவர், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைத் தீவிரவாதம் இருக்கும் மாநிலங்களாகக் காட்ட மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிது. அப்பதான் எளிதா தங்களுக்கு எதிரானவர்களை விருப்பம்போல் ஒடுக்கமுடியும்னு அது கணக்குப்போடுது. இப்ப மத்திய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. படையினர், தமிழகம் முழுக்க ரெய்டுகளை நடத்தி இதுவரை 40 பேர்வரை கைது பண்ணியிருக்காங்க. இது தொடர்பா யார், என்ன கேட்டாலும் எந்த விபரமும் கிடைக்காது. இதே பாணியில் கேரளாவில் மணிவாசகம் என்பவர் உள்ளிட்ட 4 பேரை போன 28-ந் தேதி நக்சலைட்டுகள்ன்னு சொல்லி என்கவுண்ட்டர் பண்ணியிருக்கு அங்கிருக்கும் அதிரடிப்படை. உண்மையில் காவல்துறையிடம் சரணடைய வந்தவர்களைத்தான் அவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்ன்னு அங்குள்ள சி.பி.எம். அரசுக்கு எதிராகவே புகார்கள் கடுமையா வைக்கப்படுது. இப்படி எல்லாப் பக்கமும் கவலைகளே சூழ்ந்துக்கிட்டு இருக்கு.''’
""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் குழாயில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 10 லட்ச ரூபாய் தி.மு.க. சார்பில் நிதி உதவியையும் செய்தார். இந்த நிலையில் பா.ஜ.க. தரப்பு, யாராக இருந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பது என்றால் காசோலை வழியாகத்தான் கொடுக்கமுடியும். இந்த நிதி வரன்முறைக்கு மாறாக கொடுத்த ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வருமானவரித்துறைக்கு புகார் அனுப்பியிருக்குதாம்.''’
___________
இறுதிச்சுற்று
ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!
"ஐந்தாம்வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்திருப்பது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. ஏற்கனவே, இதுகுறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக்குரல் உருவானது. ஆனால், யாருடைய கருத்தையும் காதுகொடுத்து கேட்காத தமிழக அரசு இப்படியொரு உத்தரவை கொடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறனோ, ""குறிப்பாக, இது ஏழை எளிய தாழ்த்தப்பட்ட குழந்தைகளை மிகவும் பாதிக்கும். அரசுப்பள்ளிகளை மூடுவதற்கான வேலையை செய்கிறது அரசு. கல்வி சீர்திருத்தம் என்கிற பெயரில் மாணவர்களின் மனநலத்தை கெடுக்க வேண்டாம்'' என்று எச்சரிக்கிறார்.
-மனோ