""ஹலோ தலைவரே.. எம்.பி. சீட்டுக்காக அ.தி.மு.க.வில் விருப்பமனு கொடுப்பது திங்கட்கிழமையன்னைக்கு தொடங்கிடிச்சி.''

""சிட்டிங் எம்.பி.க்கள் ஆர்வமா இருக்காங்களா? புதுசா யார் யார் விருப்பமனு கொடுத்திருக்காங்க?''

""பெரிய இடத்து வாரிசுகள்தான் வரிசை கட்டி நிற்குது. தி.மு.க. ஒரு குடும்பக் கட்சின்னு புகார் சொல்லித்தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சார். ஜெ. காலத்தில் பி.ஹெச்.பாண்டியன், ஜெயக்குமார் போன்றவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எச்சரிக்கையாவே இருந்தார். ஓ.பி.எஸ்.சின் மகனுக்கு அம்மா பேரவையில் மாவட்டப் பொறுப்பு கொடுக்கப்பட்டதை அறிந்தபோது கூட, ஓ.பி.எஸ்.சைக் கூப்பிட்டுக் கடுமையாகக் கண்டிச்சார் ஜெ. இப்ப நிலைமை மாறிடிச்சி.''’

""யார் யாரோட வாரிசுகள் போட்டி போடுறாங்க?''’

Advertisment

ops-son

""பிசினஸில் பிஸியா இருக்கும் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் இந்த லிஸ்ட்டில் இல்லை. பிப்ரவரி 4-ந் தேதி வழங்கப்பட்ட விருப்ப மனுக்கான விண்ணப்பத்தை முதல் ஆளாக வாங்கியவர் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத். போனவாரமே, அவர் எம்.பி. ஆய்ட்டதா நினைச்சி, ’எங்கள் ஓ.பி.ஆர்...., தேனி டூ டெல்லின்னு’ அதிரடிப் போஸ்டர்களை அவரோட ஆதரவாளர்கள் தேனி பகுதிகள்ல ஒட்டி, அப்பகுதி மக்களை அதிர வச்சிருக்காங்க. அதேபோல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெயிட்டான அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோரும் தங்கள் வாரிசுகளைக் களத்தில் இறக்கும் முயற்சியில் இருக்காங்க. அமைச்சர் சி.வி.சண்முகம், தன் அண்ணன் ராதாகிருஷ்ண னை நிறுத்தத் திட்டமிட, இவரைப் போலவே அமைச்சர் வீரமணியும் தன் சகோதரர் அழகிரி யை எம்.பி.யாக்கிடணும்னு மும்முரமா இருக்காரு.

Advertisment

“""அமைச்சர்கள் சைடில் இந்தளவு வாரிசுரிமையா?''

""இதுக்கு காரணம் என்னன்னா, மந்திரி கள்தான் அவரவர்களின் எம்.பி. தொகுதிகளில் தேர்தல் செலவைப் பார்த்துக்கணும்னு முதல்வர் எடப்பாடி சொல்லிட்டார். அதனால் யாருக்கோ சீட் கொடுத்து, நாம அதற்கு செலவு செய்றதுக்கு பதில், நம்ம குடும்ப வாரிசையே களத்தில் நிறுத்திச் செலவு பண்ணிடுவோம்ங்கிற எண் ணத்தில் இருக்காங்க நம்ம மாண்புமிகுக்கள். நிலைமை இப்படி ஏறுக்கு மாறா போவதால் அ.தி. மு.க.வின் சிட்டிங் எம்.பி.க்கள் பலரும் கொந்தளிப்பில் இருக்காங்க. கட்சிக்குள் இது முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கிட்டு இருக்கு.''’

""நிர்வாக ரீதியிலான சிக்கல்களும் முதல்வர் எடப்பாடியை முற்றுகை யிடுதாமே?''’

minister""ஆமாங்க தலைவரே, ஆட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்திய குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. மறுபடியும் சுறுசுறுப்பாயிடிச்சி. சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர் தினகரன், சி.பி.சி.ஐ.டி. துறையின் ஐ.ஜி. ஸ்ரீதர், இதே துறையின் டி.ஐ.ஜி.யான ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரைக் கடந்த 1-ந் தேதி சம்மன் கொடுத் துத் தங்கள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏற்கனவே விசாரிக்கப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தற்போதைய விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் கொடுத்த வாக்குமூலங் களின் அடிப்படையில், கிடுக்கிப்பிடி கேள்வி களைக் கேட்டு, மூவரையும் குடைஞ்சிருக்காங்க. அவங்களோ, ’எங்களுக்கும் லஞ்சத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. அதே சமயம் குட்கா விவகாரத்தில் ஏகத்துக்கும் லஞ்சம் விளையாடி யது உண்மைதான்னு வாக்குமூலம் கொடுத்திருக் காங்களாம். இதையடுத்து டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரனுக்கும் முன்னாள் சிட்டி கமிஷனரான ஜார்ஜுக்கும் சம்மன் அனுப்பி, அவர்களையும் விசாரிக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கு சி.பி.ஐ. இதையறிந்த எடப்பாடி, பட்ஜெட் நேரத்தில் இப்படியொரு சோத னையான்னு குழப்பத்தில் இருக்கிறாராம்.''’

""மத்தியஅரசின் இடைக்கால பட்ஜெட் போல, மாநில அரசின் பட்ஜெட்டிலும் அதிரடிகள் இருக்குமா?''

""தேர்தலை மனதில் வச்சி, நிறைய அம்சங் கள் இருக்கும். அதோடு, விழுப்புரம் மாவட்டத் தில் இருந்து புதிதாகக் கள்ளக்குறிச்சி மாவட்டத் தை அறிவிச்சது போல், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியைத் தலைநகராகக் கொண்ட ஒரு புதிய மாவட் டத்தை அமைக்க திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி அரசு. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் நிர்மல்குமாரிடம் இருந்து ஒரு கருத்துரு வாக்க அறிக்கையை அரசு கேட்டு வாங்கியிருக்கு. ஒரு மாவட்டத் துக்கு குறைந்த பட்சம் இரண்டு வருவாய்க் கோட்டம் இருக்கணும்ங்கிறதால தென்காசி யோடு, சங்கரன்கோயிலைப் புதிய வருவாய்க் கோட்டமாக்கி, தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் பணிகள் அவசர கதியில் வேலை நடக்குது. அதனால் தென்காசி மாவட்டம் குறித்த அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இருக்கலாம்ன்னு தெரியுது.''’

""மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், எதிர்க்கட்சிகளை அலர்ட் பண்ணியிருப்பதா தகவல் வருதே.''’

chandrababu naidu

""தாறுமாறா திட்டங்களை அறிவிச்சிருப்ப தால, எதிர்க்கட்சிகள் ரொம்ப கவனமா இதைப் பார்க்குது. பா.ஜ.க. அரசுக்கு எதிராக தேசிய அளவில் காங்கிரஸையும் உள்ளடக்கிய ஒரு பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுதான். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் காங்கிரஸோடு கைகோக்கத் தயக்கம் காட்டியதால் அந்த முயற் சியில் முன்னேற்றம் ஏற் படலை. மேற்கு வங்கத் தில் மம்தா, எதிர்க்கட்சி களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு ஒரு மெகா மாநாட்டை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் சார்பில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வச்சாரு.''

""தற்போதைய நில வரம் என்ன?''

IAS officiers

""மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் டில் மோடி அரசு வெளி யிட்டிருக்கும் சலுகை அறிவிப்புகள் எல்லாமே பெரும்பாலான மக்க ளுக்குப் போய்ச்சேராத போலிச் சலுகைகள்னு உணர்ந்த சந்திரபாபு நாயுடு, மம்தாவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்காரு. மோடி அரசின் அறிவிப்புகளை மக்கள் நம்பிவிடக் கூடிய அபாயம் இருப்பதால் எதிர்க்கட்சிகளான நாமெல்லாம் நம் தனிப் பட்ட பிரச்சினைகளை ஓரம் கட்டிவிட்டு, ஓரணியில் கைகோக்கணும்னு சொல்லியிருக்கார். மம்தா ஓ.கே. சொன்னதோடு, இதற்கான முயற்சிகளில் நாயுடுவே இறங் கணும்னு கேட்டிருக்காரு. எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து ஆந்திராவில் ஒரு பிரமாண்டமான மாநாட்டை நடத்த முடிவெடுத் திருக்கார் நாயுடு. அதில் காங்கிரசும், காங்சிரசை தவிர்த்து வந்த மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றோரையும் பங்கேற்கும்படி செய்யப் போகிறாராம் சந்திரபாபு நாயுடு. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் மோடி எதிர்ப்பு சூறாவளி தீவிரமடையும்னு எதிர்பார்க்கப்படுது.''’

""நான் ஒரு தகவல் சொல்றேன். கிண்டி சிட்கோவில் நிலம் அபகரித்ததா சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் மீது உடனே வழக்குப் பதிவு செய்யச் சொல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வாவுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்கிட்டேயிருந்து அவசர நெருக்கடி. ஃபைலை பார்த்த அபூர்வா, முறையாத்தான் நிலம் வாங்கப்பட்டிருக்குன்னு சொல்லியும், மா.சு. மீது வழக்குப் பதியச் சொல்லியிருக்கார் கிரிஜா. அதற்கு மறுத்த அபூர்வா, வேணும்னா என்னை டிரான்ஸ்பர் பண்ணிக்குங்கன்னு சொல்ல, இரவோடு இரவா டம்மியான ஆவண காப்பகத் துறைக்கு மாற்றப்பட்டு விட்டார் அபூர்வா ஐ.ஏ.எஸ்.''

______________

இறுதிச்சுற்று

கோவையைக் கலக்கும் சின்னத்தம்பி!

elephant

குடும்பத்தை பிரிந்ததாலும், காட்டில் சாப்பிட ஏதும் கிடைக்காததாலும் கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதிக்கு வருகைதந்த யானைதான் சின்னத்தம்பி. வனத்துறையினர், ஊசிமூலம் மயக்கமருந்து செலுத்தி உடலில் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் கொண்டுபோய் சின்னத்தம்பியை விட்டுவந்தனர். இரண்டே நாளில் கோட்டூர், அங்கலக்குறிச்சி தோப்பு பக்கம் தென்பட்டு, வனத்துறையினரைத் திகைக்கவைத்துள்ளது. ஏற்கெனவே ஒருமுறை மயக்கமருந்து பயன்படுத்திவிட்டதால் மீண்டும் உடனடியாக மயக்கமருந்து பயன்படுத்தமுடியாமல் அதிகாரிகள் திகைத்தனர். 100 கி.மீ. மேல் நடந்த சோர்வால், மடத்துக்குளம் குடியிருப்பு பகுதியில் அது ஓய்வெடுத்துக் கொண்டு நடையைத் தொடர, அதனை கும்கி யானையாக மாற்றலாமென்றார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதற்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர் அருண்பிரசன்னா, உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். "சின்னத்தம்பியை கும்கியாக்கும் திட்டமில்லை' என அரசுத் தரப்பு பதிலளித்தது.

-க.சுப்பிரமணி