""ஹலோ தலைவரே, மோடியின் மதுரை வருகை அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் தரப்பிலும் எதிர்ப்பலைகளைக் கிளப்பினாலும் மோடியின் கடைக்கண் பார்வை மீண்டும் தனக்குக் கிடைச்சதில் பூரிச்சிப் போயிருக்காரு ஓ.பி.எஸ்.''’
""இந்த விஷயத்தில் மட்டும் இ.பி.எஸ்.ஸை ஓவர்டேக் பண்ணிட்டாரோ!''’
""ஆமாங்க தலைவரே, எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்காக 27-ந் தேதி மதுரைக்கு மோடி வந்தப்ப, ஏர்போர்ட்டில் அவரை வரவேற்க முதல்வர் எடப்பாடி உள்ளிட்டவர்கள் காத்திருந்தார்கள். மோடியிடம் பேசுவதற்கு உதவியாக அமைச்சர் ஜெயக்குமாரையும் தன் பக்கத்திலேயே நிற்கவச்சிருந்தார் எடப்பாடி. ஆனால் மோடிக்கான கார் விமான தளத்துக்குள் நுழைஞ்சி, விமானத்துக்கு அருகிலேயே போனதால், எடப்பாடி உட்பட அனைவரும் அங்கே ஓடினார்கள். ஆனால் மோடியோ, எடப்பாடிக்குப் பின்னால் வந்த ஓ.பி.எஸ்.சைப் பார்த்து புன்னகைத்தார். அன்போடு அவரை அருகே அழைத்து நலம் விசாரிச்சார். பிறகு அவருடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை மத்திய இன்பர்மேஷன் பீரோ அதிகாரிகளை கூப்பிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடச் சொன்னார். இதைப்பார்த்த எடப்பாடியின் முகம் சுருங்கிடிச்சி.''’
""மோடி விளையாட்டு காட்டறார் போலிருக்கு.''’
""உண்மைதாங்க தலைவரே, இதையேதான் அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் இருக்கும் சீனியர்கள் சொல்றாங்க. அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. சார்பில் கூட்டணிப் பேச்சு வார்த்தை சீக்ரெட்டாக நடந்துவரும் நிலையில், இது குறித்து மோடி மதுரையில் அறிவிப்பார்னு இரு தரப்பினரும் எதிர்பார்த்தாங்க. ஆனால் மோடி கலந்துகிட்ட ரெண்டு நிகழ்ச்சியிலும் அதைப்பற்றி வாய் திறக்கலை. அதேசமயம், தாங்கள் கொண்டு வரும் 10 சதவித இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்னு அழுத்திச் சொன்னார் மோடி. இது, அந்த இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் எதிர்த்த தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க.வினரையும் தாக்குவதாக அமைந்ததால் அங்கே இருந்த இரு தரப்பினருமே குழம்பிப் போயிட்டாங்க.''’
""ஏர்போர்ட்டிலும் கூட்டணி பற்றிய தன் முடிவை சொந்தக் கட்சியினரிடம் கூட மோடி சொல்லலையாமே?''
""தலைவரே, மோடியை வழியனுப்ப தமிழக பா.ஜ.க பிரமுகர்களான தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் ஏர்போர்ட்டுக்குப் போயிருந்தாங்க. அப்ப ஹெச்.ராஜா, மோடியிடம், "தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கும் மனநிலையில் இருக்காங்க. அதனால் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைத்தால், தி.மு.க.வை ஓரம்கட்டி நாம் ஆட்சியைப் பிடிக்கலாம்'னு சொன்னார். இதைக்கேட்ட மோடியே, "வரும் தேர்தலில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டியிருக்கும். அதனால் ஊழல்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். எந்தக் கட்சியோடு கூட்டணி வைப்பது என்பதை டெல்லியில் நாங்கள் முடிவுசெய்கிறோம்'னு சொல்லிவிட்டு ப்ளைட் ஏறிவிட்டார். அதனால் மோடி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி உண்டுங்கிறாரா? இல்லைங்கிறாரா?ன்னு புரிஞ்சிக்க முடியாமல், அவங்க எல்லோரும் குழப்பத்தோடுதான் வெளியில் வந்திருக்காங்க.''’
""மோடி இப்படி குட்டையைக் குழப்பிவிட்டுப் போனாலும், அ.தி.மு.க.வோடு எப்படியாவது கூட்டணி சேரணும்ங்கிற தவிப்பு பா.ஜ.க. சைடில் தெரியுதே?''
""உண்மைதாங்க தலைவரே, ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் மோடிக்காக வரிஞ்சிகட்டிப் பேசிக்கிட்டு இருப்பவர் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான். அவர்தான் தமிழக அரசியலைக் கவனிக்கிற பா.ஜ.க. பொறுப்பாளர். கடந்த வாரம் திருச்சிக்கு வந்து சங்கம் ஓட்டலில் நிர்மலா சீதாராமன் தங்கினார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட அமைச்சரான வெல்லமண்டி நடராஜன், எம்.பி.க்களான வைத்திலிங்கம், திருச்சி குமார், பெரம்பலூர் மருதராஜா ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்ப அவர், "நம்ம கூட்டணி உருவாகுது. அதனால் தேர்தல் வேலையை கவனமா பார்க்கணும். ஏற்கனவே பொங்கல் போனஸ்னு தமிழக மக்களுக்கு 1000 ரூபாய் கொடுத்ததுக்கு மத்திய அரசு உதவியிருக்கு. அடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்ல ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப் போறோம். இது தவிர மற்ற இழப்பீடுகளிலும் தாராளம் காட்டப் போறோம். அரசு நிதி, நம்ம நிதின்னு ஏறத்தாழ 3 ஆயிரம் கோடி ரூபாயை மக்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போறோம். அதனால் மக்கள் மனதில் நாம் நிற்போம். எனவே, கவனமா செயல்படுங்க'ன்னு ரொம்பவே தெம்பூட்டியிருக்காராம்.''’
""அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைஞ்சா அதில் பா.ம.க.வும் நிச்சயம் இருக்குமாமே?''’
""பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ், இந்தக் கூட்டணியை விரும்பாத போதும், பா.ஜ.க. தலைமை, டாக்டர் அன்புமணியோடு பேசிக்கிட்டுதான் இருக்குது. இது குறித்து டெல்லித் தரப்பிடம் விசாரிச்சப்ப, பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துக்கொள்வதை பெரும்பாலான அ.தி.மு.க.வினர் விரும்பவில்லை. அதே போன்ற மனநிலைதான் பா.ம.க.வினருக்கும் இருக்கு. இருந்தும் பா.ஜ.க. இவர்களை விடுவதாக இல்லை. அ.தி.மு.க.வுக்கு 20 சீட் என்றும் பா.ம.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் மிச்சம் 20 என்றும், அணியில் உள்ள மற்றவர்களுக்கு பா.ஜ.க., தங்கள் சீட்டுக்களில் இருந்து ஒதுக்கும்னும் பேசப்பட்டிருக்குது. கூட்டணிக்கு இணக்கம் காட்டும் அ.தி.மு.க.வினரும்கூட 30 சீட்டுகளுக்குக் குறையாமல் அ.தி.மு.க. போட்டியிடும்படி பார்த்துக்கொள்வோம்ங்கிறாங்களாம்.''’
""பா.ஜ.க.வோடு கூட்டணி கூடவே கூடாதுன்னு அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்கள் கலகக்குரல் எழுப்பறாங்களே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, மத்திய அரசு தமிழக அரசை மிக மோசமாக நடத்திவரும் நிலையிலும், அ.தி.மு.க.வினரை ரெய்டுகளால் டார்ச்சர் கொடுத்துவரும் சூழலிலும், பா.ஜ.க.வை எதற்குத் தூக்கிச் சுமக்கணும்னு சி.வி.சண்முகம் நினைக்கிறார். மேலும் பா.ஜ.க.வோடு கூட்டணிவைத்தால், வரும் தேர்தலில் தன் சகோதரர் ராதாகிருஷ்ணனுக்கு எம்.பி. சீட் வாங்கும் தன் கனவும் பலிக்காதுன்னு கருதுகிறார். அதனால்தான் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அதே நேரம் அவரிடம் வருமானம் கொழிக்கும் சுரங்கத்துறை இருப்பதால்தான் தைரியமா பேசுறதா எடப்பாடி தரப்பே முணுமுணுக்கிறது. அதோடு, முதல்வரிடம் வளமான துறைகள் எல்லாம் இருக்கும் போது அவர்தான் தேர்தல் செலவைப் பார்க்கவேண்டும்னு சண்முகம் கச்சை கட்டுகிறார். இது குறித்துக்கூட நக்கீரனில் செய்தி விரிவா வந்திருக்கு. இது எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கும் டெல்லி, கூட்டணிக்கு எதிராக இருக்கும் சி.வி.சண்முகம் தரப்பை வருமான வரித்துறை மூலம் குறிவைத்துக் கண்காணிக்கிறது.''’
""ஜெ.வின் நெருங்கிய தோழியும் முன்னாள் வக்பு வாரியத் தலைவருமான பதர் சயீத், காங்கிரஸில் திடீர்ன்னு சேர்ந்திருக்கிறாரே?''’
""முன்னாள் எம்.எல்.ஏ.வான பதர் சயீத், அரசியல்ல மறுபடியும் ஆக்டிவ்வா இருக்கணும்னு ஆசைப்பட்டார். நட்சத்திர ஓட்டல் ஒன்றின் அதிபரான நண்பர்தான் காங்கிரஸ் கட்சியை அவரிடம் பரிந்துரை பண்ணியிருக்கார். காங்கிரஸ் கட்சியின் சீனியர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்திடம் நேரில் அறிமுகமும் செய்து வைத்ததன் அடிப்படையிலேயே பதர் சயீத் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார். சேர்ந்த வேகத்திலேயே அவருக்கு கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கு. கடந்தவாரம் தமிழக காங்கிரஸ் நிலவரம் குறித்துக் கட்சியின் சீனியர்களுடன் ராகுல் விவாதிச்சிக்கிட்டு இருந்தப்ப, தி.மு.க. கூட்டணியில் நமக்கு 7 சீட்டுகள் தரப்படும்னு தெரியுது. இந்நாள் முன்னாள் மாநிலத் தலைவர்களுக்கு அதிலிருந்துதான் நாம் சீட் கொடுத்தாகணும்னு ராகுல் சொல்லியிருக்காரு. அப்போது குலாம் நபி, பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் செய்யும் நாம் முஸ்லிம், தலித் என பிரதிநிதித்துவ அடிப்படையிலும் சீட் கொடுத்தாகணும். அந்த வகையில் கட்சியில் சேரவிரும்பும் பதர் சயீத்துக்கு காங்கிரஸில் வாய்ப்பளிக்கலாம்ன்னு சரியான நேரத்தில் காய் நகர்த்தியிருக்கார். தென் சென்னைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அங்கு நான்தான் வேட்பாளர் என்று பதர் சொல்லத் தொடங்கியிருக்கிறாராம்.''’
""பா.ஜ.க. கொண்டுவரும் 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து, தி.முக. வழக்குப் போட்டிருக்கும் நிலையில், இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு தரலைன்னு டாக் அடிபடுதே?''’
""இட ஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில்தான் வலுவான வழக்கு போடப்பட்டது. இருந்தாலும் தி.மு.க.வில் இருக்கும் முதலியார், ரெட்டியார் போன்ற உயர் சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், பொருளாதார ஒதுக்கீட்டால் தங்கள் சமூகத்துக்கும் பயன் கிடைக்கும்னு நினைக்கிறாங்க. இவங்க சபரீசன் மூலம் லாபியை உருவாக்குற முயற்சியிலே இருக்காங்களாம். இந்த சமயத்தில், சமூக நீதி சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைச்சி பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எதிரா பெரும் போராட்டம் நடத்த தி.க. தலைவர் கி.வீரமணி முயற்சியெடுக்க, உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதால அதன் போக்கைப் பார்த்துட்டு களமிறங்கலாம்னு ஊராட்சி சபை கூட்டங்களில் பிஸியா இருக்கும் ஸ்டாலின் சொல்லிட்டாராம்.''
""நானும் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்துக்க விரும்பறேன். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், அந்தக் கட்சியின் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்காக, இளைஞரணி சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கு. கட்சியில் தீவிர ஆர்வம் காட்டும் ஜூனியர் விஜயகாந்த்தான விஜய பிரபாகரனையும் இந்தக் குழுவில் இணைச்சிக்கணும்ன்னு சிலர் சொல்ல, ரொம்பவும் இளைஞராக இருக்கும் அவர் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அது சரியா இருக்காது. அதை சீனியர்களான நாங்களே பார்த்துக்கொள்கிறோம்னு அவரை நாசுக்காகத் தவிர்த்துவிட்டாராம் சுதீஷ்.''