""ஹலோ தலைவரே, கோட்டையில் யாகம்ங்கிற செய்தி, இப்ப தமிழக அரசியல்ல பெரும் புகைச்சலை உண்டாக்கியிருக்கு''

""ஆமாம்பா, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வச்ச நெருப்பு, பலவிதமா புகையுதுன்னு சொல்லு''

ops""உண்மைதாங்க தலைவரே, யாகம் ஹோமம்னு எதுவும் இல்லாத சுயமரியாதை திருமணத்தை சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் குடும்பத்திற்காக நடத்தி வைத்த ஸ்டாலின் பேசும்போதுதான், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியின் முதல்வர் பதவிக்கு சிக்கல் இருக்குன்னு நினைச்சி, சந்தடி சாக்கில் மீண்டும் முதல்வர் நாற்காலியில் உட்காரணும்னு ஓ.பி.எஸ். கனவு காண்கிறார். அதற்காகக் கோட்டையில் இருக்கும் தன் அறையில் அவர் ஸ்பெஷல் யாகமெல்லாம் செஞ்சிருக்கார் என்ற ரீதியில் பேசினார். இதை ஓ.பி.எஸ். மறுத்ததுடன், யாகம் செய்தால் முதல்வராக முடியும் என தி.மு.க. நம்புகிறதா என கேட்டார். உண்மையில் என்னதான் நடந்ததுன்னு கோட்டை வட்டாரத்தில் விசாரிச்சேன். இப்ப, ஓ.பி.எஸ்.சுக்கு ஜாதக ரீதியா தோஷம் இருப்பதால், அதிலிருந்து நிவர்த்தி பெற, அவருடைய அலுவலகத்தை வாஸ்துப்படி மாற்றம் செய்து, பிரம்ம முகூர்த்தமான அதிகாலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்தாகணும். அது அவரை உயர்ந்த பதவியை நோக்கி நகர்த்திச் செல்லும்னு அவருடைய ஜோதிடர்களால் சொல்லப்பட்டிருக்கு. அதன்படிதான் 20-ந் தேதி அதிகாலையில் கோட்டையில் உள்ள அவர் அறையில் ஒரு பூஜை நடந்தது. ஆனா ஓ.பி.எஸ். அங்கே இல்லை. அவர் மகன் மட்டும்தான் இருந்தார். பூஜை முடிஞ்சதும்தான் ஓ.பி.எஸ். வந்தார்னு சொல்றாங்க''

Advertisment

""எடப்பாடியோட நேரம் எப்படி இருக்குதாம்?''

""ஊடகவியலாளர் மேத்யூஸ் எழுப்பிய கொடநாடு குற்றச் சாட்டு முதல்வர் எடப்பாடிக்கு பெரும் சிக்கலைக் கொடுத் திருக்கு. யாராவது இதுதொடர்பா நீதிமன்றத்துக்குப் போனால், அது சி.பி.ஐ. விசாரணைக்குப் போகும்னு எடப்பாடி யோசிக் கிறார். ஏன்னா, மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எடப்பாடியின் மகன் மிதுன், புத்தம் புது ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளோடு சி.பி.ஐ.யிடம் பெங்களூரில் சிக்கி கைதானார். இதுபோன்ற சிக்கல்கள் தனக்கும் அணிவகுக்கு மோன்னு அவர் ரொம்பவே மிரண்டு போயிருக்கார். அவர் இப்படி இறங்குமுகம் நோக்கிப் போவதால், ஓ.பி.எஸ். நம்பிக்கை யோடு ஏறுமுகம் நோக்கி நடைபோட ஆரம்பிச்சிருக்காரு. தன் தம்பி ராஜா விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராம னோடு மோதல் போக் கைக் கடைப்பிடித்து வந்த ஓ.பி.எஸ்.சை, சமீபத்தில் சமாதானப்படுத்தி வைத்திருக் கிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அதனால் ஓ.பி.எஸ்.சின் பா.ஜ.க. நட்பு இப்ப வலுவடைஞ்சிருக்கு. அதோட கட்சியிலேயே இருக்கும் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சிலரும் இப்ப ஓ.பி.எஸ். பக்கம் வந்திருக்காங்க. அதனால் அவர் புதுவேகம் எடுக்க ஆரம்பிச்சிருக்காராம்''’’

""அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தர் எடப் பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் கோபக்கடிதம் ஒன்னை எழுதியிருக்காராமே?''’

Advertisment

mlapandiyan""ஆமாங்க தலைவரே, சிதம்பரம் அருகே இருக்கும் குமராட்சி ஒன்றியத்தில் சுவாமி சகஜானந்தாவின் மணிமண்டபம் இருக்கு. அண்மையில் அதுக்கு காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துச்சு. அப்ப, தொகுதி எம்.எல்.ஏ.வான பாண்டியன், அந்தப் பணிகளுக்குக் கட்சிக்காரர்கள் சிலரைப் பரிந்துரை செய்து, செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜுவிடம் பரிந்துரைக் கடிதம் கொடுத்திருந்தாராம். ஆனால் அமைச்சரோ, மாவட்ட அமைச்சரான எம்.சி.சம்பத் பரிந்துரைத்த நபர்களுக்கு அந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். இதனால் டென்ஷனான எம்.எல்.ஏ. பாண்டியன், நான் எம்.எல்.ஏ.வா இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. யாருக்கும் எதையும் செய்யமுடியலை. எந்தப் பரிந்துரையையும் மதிக்கிறதும் இல்லை. இங்கே நான் எம்.எல்.ஏ.வா இருப்பதைவிட லண்டன்ல என் சொந்தக்காரர் நடத்தும் ஓட்டல்ல போய் ஏதாவது வேலை பார்க்கலாம்னு எடப்பாடிக் கும் ஓ.பி.எஸ்.சுக்கும் கடிதம் எழுதி, தன் ஆதங்கத்தைச் சுடச்சுடக் கொட்டியிருக்காராம்''’

""அந்தச் சூடு இருக்கட்டும்பா, கொடநாட்டு விவகாரம் இப்ப சூடான எரிமலையா வெடிக்கக் காரணம், தி.மு.க.தான் என்றும் ஊடகவியலாளர் மேத்யூஸுக்குப் பின்னால தி.மு.க.தான் இருக்குன்னும் போட்டோ ஆதாரங்களைக் காட்டுறாரே எடப்பாடி?''

""தலைவரே... மேத்யூசின் ஆவணப் படத்தில், கொடநாடு தொடர் மரணங்களுக்கு காரணம் எடப்பாடிதான்னு வாக்குமூலம் கொடுத்திருந்த சயான், மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விட, உடனடியாக தலைக்கு ரெண்டுபேர் சூரிட்டி கொடுக்கணும்னு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களான பிரபாகரன், திருமாறன், அக்பர்பாஷா, புருஷோத்தமன் ஆகியோர் தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த கட்சிப்பிரமுகர்களை சூரிட்டி கொடுக்கக் கூப்பிட்டாங்க. அதன்பேரில் அவர்களுக்கு முன்னாள் மேயர் மா.சு.வின் போட்டோ கிராபரான சுந்தர்ராஜன், 170- ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் மோகன்குமார், இளைஞரணி வட்டச் செயலாளர் கதிர்வேல் மற்றும் த.மா.கா.வைச் சேர்ந்த ராஜா ஆகியோர் சூரிட்டி கொடுத்தனர். இதைத்தான் போட்டோ ஆதாரமா காட்டி முதல்வர் எடப்பாடி குற்றம்சாட்டுறாரு. இதற்குப் பதில் சொல்லியிருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினோ, வழக்கறிஞர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடலாம். எவருக்கும் வேண்டுமானாலும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்யலாம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் செய்ததில் தவறில்லைன்னு சொல்லியிருப்பதால் விவாதம் சூடாகியிருக்கு.''’

""தேர்தல் வேலைகள்லயும் ஜரூர் காட்றாரே ஸ்டாலின்?''’

""தி.முக. சார்பில் ஊராட்சிசபை கூட்டங்கள் பரவலா நடந்துக்கிட்டு இருக்கு. அதைப் பற்றிய ரிப்போர்ட்டுகளை கேட்டு வாங்கும் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தலைமையில் ஐ.பெரியசாமி, ஆ.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் அடங்கிய குழுவை அமைச்சிருக்கார். அதேபோல் கட்சியின் முதன்மைச் செயலாளரான டி.ஆர்.பாலு தலைமையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவையும் உருவாக்கி யிருக்காரு.''

eelam

""நானும் ஒரு மிக முக்கியமான தகவலைச் சொல்றேன். அண்மையில் இலங்கையின் வடபகுதியான மன்னார் பகுதியில், கூட்டுறவுத்துறை சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியபோது, அங்கே தோண்டத் தோண்ட, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எலும்புக் கூடுகள் காட்சியளித்தன. இந்தத் தகவல் உலக அளவில் அதிர்வை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. இந்த நிலையில், 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட தமிழர்களின் சடலங்களை அந்தந்த இடத்திலேயே புதைத்தால் அது போர் முறைகேடுகளுக்கு ஆதாரமாகக் கிடைத்துவிடலாம் என்பதால், அவற்றை எல்லாம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் லாரிகளில் அள்ளிச்சென்று புதைத் திருக்கிறார்கள் என்ற விபரம் இப்போது கிடைத்திருக்கிறது. அதோடு இப்போது எலும்புக் கூடுகள் கிடைத்த இடம் மயானம் இல்லையாம். இதுபோல் இலங்கையின் இன்னும் எந்தெந்த பகுதியில் இதுபோல் தமிழர் சடலங்கள் புதைக்கப்பட்டி ருக்கின்றன என்ற உண்மையை அறியவும் இப்போது அங்குள்ள தமிழ் அமைப்புகள் களமிறங்கிவிட்டன''’

முதலீட்டாளர் மாநாடு! ஜெ.வும் எடப்பாடியும்!

23, 24 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுன்னாலும் பெருசா எதிர்பார்ப்பு இல்லை. ஏற்கனவே ஜெ.’ இருந்தபோது 2015-ல் இப்படியொரு மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்துக்கும் முதலீடுகள் கிடைத்ததாக ஆடம்பரமாக அறிவிக்கப்பட்டன. ஆனால் அதில் 40 சதவீத அளவிற்கே இங்கே முதலீடாக்கப்பட்டன. மற்றவை, இங்கு நிலவும் கமிஷனுக்கு பயந்தும், உரிமங்களைப் பெறுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு வேலைகளை வெறுத்தும், முதலீடாக்கப்படவில்லை.

இந்த மாநாடு குறித்து தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டபோது, ""இந்தமுறையும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை இதில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்றும் அதில் 50 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களாக இருக்கவேண்டும் என்றும் அரசால் திட்டமிடப்பட்டது. இதற்காக அமைச்சர்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் பறந்துசென்று, அங்குள்ள தொழிலதிபர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்துவிட்டு வந்தார்கள். இருந்தும் ஏறத்தாழ 250 நிறுவனங்கள் கலந்துகொள்வதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கே தமிழகத்துக்கு முதலீடுகள் கிடைக்கலாம்'' என்கிறார்கள் சுரத்தில்லாமல்.