"ஹலோ தலைவரே, தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதில் மத்திய அரசு நாளுக்கு நாள் தீவிரம் காட்டுது''’

""ஆமாம்பா, தமிழ் நாட்டு மக்கள் கவனிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க.''

""நீட் தேர்வு மூலம், ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கனவைக் கலைச்ச பா.ஜ.க. அரசு, இப்ப பொருளாதார அடிப்படை யிலான இட ஒதுக்கீடுன்னு சொல்லி தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலையும் தன் கொடூரமான இரும்புக் கரங்களால் நசுக்கப் பார்க்குது. போதாக்குறைக்கு புதிய கல்விக் கொள்கைங்கிற பேரில், பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டுவரும் தந்திரத்தையும் மெல்ல மெல்லக் கையில் எடுக்குது. காவிரிப் படுகை விவசாயிகளை மேலும் நோகடிக்கும் விதமாய், திருவாரூர் மாவட்ட திருக்காரவாசலில் இருந்து நாகை மாவட்ட கரியாப் பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏலத்தையும் அனுமதிச்சிருக்கு. இப்படி தமிழகத்தின் மீது தொடர் தாக்குதலை மோடி அரசு தொடுத்துக்கிட்டு இருக்கு''’

""இங்க இருக்கும் எடப்பாடி அரசு என்ன பண்ணிக்கிட்டு இருக்கு?''’

Advertisment

rationshop

""அவங்க கவலை எல்லாம், அரசு சார்பில் தமிழக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசான 1000 ரூபாயை, எப்படி உயர்நீதிமன்றத் தடையைத் தாண்டி விநியோகம் பண்றது என்பதிலேயே இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலை மனசில் வச்சி, பொங்கல் பரிசுங்கிற பேரில் ரேசன் கார்டு உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரெண்டு ஐநூறு ரூபாய்த்தாளைக் கொடுத்துடனுங்கிற துடிப்பில் இருக்காங்க. நீதிமன்ற நிபந்தனைக்கான உத்தரவு கையில் கிடைக்கிறதுக்குள்ள இயன்ற வரை பண விநியோ கத்தை நடத்திடணும்னு, புதன்கிழமை விடிய விடிய ரேசன் கடைகளைத் திறந்து வச்சி பல இடங்களில் பணப் பட்டுவாடாவை நடத்தி யிருக்காங்க. இன்னமும் பணம் கிடைக்காத வங்களின் கோபம் அரசுக்கு எதிராத் திரும்பியிருக்கு. அதனால் இவங்களுக்கும் எப்படியாவது பணத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்துடணும்ங்கிற கவலைதான் இப்ப எடப்பாடி அரசை ஆட்டிப் படைக்கிது''’

Advertisment

""விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சைடிலிருந்தும், அரசுக்கு எதிரா சில பரபரப்புத் தகவல் வருதே''’

officers

""தமிழக விளயாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலரா இருந்த ரீட்டா ஹரிஸ் தாக்கர், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கியில் பங்கேற்ற ஸ்ரீ ஜோஸ் என்ற கேரள வீரரை தமிழக வீரர்ன்னு பரிந்துரை பண்ணியதை யும், இதை நம்பி முதல்வர் எடப்பாடி அந்த வீரருக்கு 20 லட்ச ரூபாயைப் பரிசா கொடுத்ததையும் நக்கீரன்தான் அம்பலப்படுத்துச்சு. இதைத் தொடர்ந்து ரீட்டா, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கார். இந்த நிலையில் ரீட்டாவுக்காகக் களமிறங்கிய சில அதிகாரிகள், அந்த ஸ்ரீஜோஸை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்து, சென் னையில் தற்போது நடக்கும் தேசிய ஹாக்கிப் போட்டி யில், தமிழகத்தின் சார்பில் விளையாட வைக்க முயற்சி எடுத்தாங்க. அப் படி விளையாட வைப்பதன் மூலம் அவரைத் தமிழக வீரர்ன்னு நிரூபிப்பதுதான் அவர்கள் திட்டம். கோபமான தமிழக ஹாக்கி வீரர்கள் எங்கள் தமிழக அணியில் நீ எப்படி விளையாடமுடியும்?ன்னு கேட்டுத் துரத்தியடிச்சிட் டாங்க . இந்த விவகாரமும் அரசின் தலையை உருட்டுது''’

""அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற விரும்புறேன்னு ஜெ.’ அண்ணன் மகள் தீபா, அறிவித்திருக்கும் நிலையில், அவர் கணவர் மாதவன் தரப்பில் குளறுபடியாமே!''

""ஆமாங்க தலைவரே, தீபாவுக்கு அரசியல் ஆசையே போய்விட்டதாம். ஆனால் அவர் கணவர் மாதவனோ, தீபாவை அ.தி.மு.க.வுக்குக் கொண்டு வர்றேன்னு சொல்லி, அமைச்சர் வேலுமணியிடம் உறுதி கொடுத்து பலன் பெற்றதோடு, கட்சியிலும் தனக்கு மாநில அளவில் ஒரு பதவி வேண்டும்ன்னு டிமாண்ட் வைத் திருக்கிறாராம். இதனால் தீபாவை நிர்பந்தம் செய்துதான், அ.தி.மு.க.வில் இணைய விரும்புவதாக அவர் அறிவிக்கச் செய்திருக்கிறாராம். தீபாவைப் பொறுத்தவரை ஜெ.’வின் சொத்துக்கள், அவரது வாரிசு என்ற வகையில் தனக்குக் கிடைத்தாலே போதும்ன்னு நினைக்கிறாராம். ஆனால், தன் சகோதரர் தீபக் மூலம், அதற்கு சசிகலா இடைஞ்சல் செய்வாரோ?ங்கிற கவலையும் தீபாவை வாட்டுதாம்.''’

""ஜெ.’ சொத்து விவகாரம் இருக்கட்டும்பா. சமீபகாலமா குறட்டை விட்டுக்கிட்டிருக்கும் குட்கா விவகாரம் மறுபடியும் வீரியமாகும்னு சொல்லப்படுதே?''’

""இப்படியொரு டாக் பரபரப்பா அடிபடக் காரணம், உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்புதாங்க தலைவரே. போன காங்கிரஸ் ஆட்சியில் சி.பி.ஐ. இயக்குநரா நியமிக்கப்பட்ட அலோக் வர்மாவுக்கும், பா.ஜ.க. ஆட்சியில் அதன் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜேஷ் அஸ்தானாவுக்கும் இடையில் உண்டான மோதலும், இதைத்தொடர்ந்து இந்த இருவரையும் மோடி அரசு கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பியதும், இவர்களுக்கு பதில் துறையின் இணை இயக்குநரான நாகேஷ்வர ராவ் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டதும் ஊரறிந்த ரகசியம். சி.பி.ஐ.யின் இயக்குநர் நாற்காலியில் உட்கார்ந்த நாகேஸ்வரராவ், ஒரே இரவில் அலோக் வர்மாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை எல்லாம் டிரான்ஸ்பர் செய்தார். இதில் தமிழ்நாடு குட்கா ஊழலை விசாரித்துவந்த அதிகாரிகளும் அடக்கம். இதனால் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருந்த குட்கா வழக்கு நத்தையானது. இந்த நிலையில் அலோக் வர்மா, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறுன்னு உச்சநீதிமன்றத்துக்குப் போனார். நீதிமன்றமோ, கடந்த 8-ந் தேதி, அவருக்குத் தரப்பட்ட கட்டாய விடுப்பை ரத்துசெய்து தீர்ப்பு கொடுத்தது. இதன்படி மீண்டும் தனது நாற்காலியில் அமர்ந்த அலோக் வர்மா, நாகேஸ்வர ராவால் போடப்பட்ட டிரான்ஸ்பர் உத்தரவுகளை எல்லாம் ரத்துசெய்துவிட்டார்.''’

cvsanmugam,vijaysanthi

""ஓ...''’

""தலைவரே, அதேபோல் மோடி அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கும் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் பற்றிய எல்லா விவரத்தையும் அலோக் வர்மா முழுதாக அறிந்து வைத்திருப்பவராம். அதில் நடந்திருக்கும் கோல்மால்கள் பற்றிய விபரங்களும் அவர் கையில் இருக்குதாம். அதனால் அவர் ரஃபேல் விவகாரத்தில் ஏதாவது ஒரு அணுகுண்டை வீசினால் என்ன செய்வதுன்னு மோடி அரசும் பயப்படுறதால், அவர் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்கான கமிட்டி அமைப்பதில் படு ஸ்பீடா செயல்பட்டு, அவரை நீக்கியிருக்கு மோடி அரசு.''’

""தமிழக ஆட்சிக்கு எதிரான ஊழல் வழக்கு விறுவிறுப்பாகிற நேரத்தில், விழுப்புரத்திலிருந்து புது மாவட்டமா கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டிருக்கே?''’

""இதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருக்குங்க தலைவரே. முதல்வர் எடப்பாடிக்கும் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் மணல் விவகாரத்தில் முட்டல் மோதல். சசிகலா தரப்பு மறுபடியும் அ.தி.மு.க.வில் நுழைஞ்சிடக் கூடாதுன்னு சி.வி.சண்முகம் கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணம், கட்சிக்கு மாதந்தோறும் வெயிட்டாக நிதி கொடுக்கும் வழக்கத்தை சசிகலா வைத்திருந்ததுதானாம். இந்த நிலையில் முக்குலத்தோர் லாபி, கவுண்டர்கள் லாபின்னு சாதி ரீதியிலான லாபிகள், அ.தி.மு.க.வை ஆட்டிப் படைப்பது போல், சி.வி.சண்முகம் வன்னியர் லாபியை உருவாக்கி விடுவாரோங்கிற பயம் எடப்பாடிக்கு இருக்குதாம். அதனால் சி.வி.சண்முகத்துக்கு எதிராக சொந்த மாவட்டத்தில் அரசியல் செய்துவரும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவை கையில் எடுத்திருக்கும் எடப்பாடி, அவருக்கு அதிக பவரை உண்டாக்கவே விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்துவிட்டாராம். இதனால் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம் இப்ப 6 தொகுதிகளைக் கொண்ட மாவட்டமாகக் குறுகிவிட்டது. மிச்ச 5 தொகுதிகளைக் கொண்ட கள்ளக் குறிச்சி மாவட்டம், புதிதாய் பிறக்கிறது. இதனால் தமிழகத்தின் மாவட்ட எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. இதை பா.ம.க.வினர் உள்பட பலரும் வரவேற்றிருக்காங்க.''’

""நாகை மாவட்டத்தில் இருந்து மாயவரத்தையும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தையும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் தனி மாவட்டமாகப் பிரிக்கணும்னு அந்தந்த பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைச்சிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில் விழுப்புரத்தை மட்டும் பிரிச்சா மற்ற பகுதி மக்களிடமிருந்து எதிர்ப்பும் எரிச்சலும் கிளம்புமே?''

deepa

""விழுப்புரம் மாவட்டத்திலேயே அந்தக் குமுறல் இருக்கு. திருக்கோவிலூர் தொகுதியைப் புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எடப்பாடி அரசு சேர்ப்பதை, அத்தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் தி.மு.க. அமைச்சருமான பொன்முடி எதிர்க்கிறார். அதனால் 9-ந் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனை சந்திச்ச பொன்முடி, எங்கள் திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டத்திலேயே இருக்கணும்னு கோரிக்கை வச்சார். கலெக்டரோ, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை. இருந்தாலும் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு போகிறேன்னு சொல்லியிருக் காராம்''’

""பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்திச்சிருக் காரே?''’

""தலைவரே, தெலுங்கானா மாநில காங்கிரஸில் தீவிரமாக இயங்கிவரும் நடிகை விஜயசாந்தி, சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்திச்சார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், சோனியாவுக்கும் ராகுலுக்கும் நெருக்கமான விஜயசாந்தி, எதற்காக சசிகலாவை சந்திக்கணும்ங்கிற சந்தேகப் பார்வை எல்லாப் பக்கமும் எழுந்தது. மோடி தரப்பு தற்போது சசி தம்பி திவாகரனை டெல்லிக்கு அழைத்து, அ.தி.மு.க. அணிகளின் இணைப்பு குறித்துத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் நிர்பந்தத்துக்கு இணங்கி, அ.தி.மு.க.வோடு இணைந்துவிடாதீர்கள். ஆட்சி மாறியதும் உங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கிறோம்னு காங்கிரஸ் தலைமை கொடுத்த செய்தியை எடுத்துக்கொண்டுதான் விஜயசாந்தி, சசிகலாவைச் சதிக்கப் போனார்னு ஒருபக்கம் தகவல் பரவிக்கொண்டே இருக்குது. விஜயசாந்தியின் நட்பு வட்டாரமோ, சாந்தி எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி, அவர் ஜெ.’வையும் சசிகலாவையும் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இப்போது ஜெ.’இல்லாத நிலையில் சசிகலாவை அவர் நட்பு ரீதியாகவே சிறையில் சந்திச்சிருக்கார். இதில் பெரிதாக எந்த ரகசியமும் இல்லைங்குது.''’

""கத்திரிக்காய் முத்தினா கடைவீதிக்கு வந்துதான் ஆகணும். திருவாரூர் தொகுதிக் கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தி.மு.க.வும் தினகரனின் அ.ம.முக.வும்தான் ஒன்றை ஒன்று முந்திக்கிட்டு வேட்பாளர்களை அறிவிச்சி போட்டா போட்டி போட்டுது. இடைத்தேர்தல் ரத்தான நிலையில் அந்த இரண்டு கட்சிகளும் ஒன்றோடு ஒன்று விமர்சன யுத்தம் பண்ணிக்கிட்டு இருக்கு. தோல்வி பயத்தால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தி.மு.க. ஆதரிக்குதுன்னு தினகரன் விமர்சிக்க, தி.மு.க. கோட்டையான திருவாரூரில் போட்டியிட நாங்கள் ஏன் பயப்படப் போறோம்? தினகரன் மேல்தான் ஏகப்பட்ட வழக்கு இருக்கு. 20 ருப்பீஸ் தினகரன்னு பெரும் பேரும் இருக்குன்னு ஸ்டாலின் விமர்சிச்சாரு. உடனே தினகரன் தரப்போ, கலைஞர், ஸ்டாலின், உதயநிதின்னு கோபாலபுரக் குடும்பத்தையே வம்புக்கு இழுத்து டுவிட்டர் போட, பதிலுக்குத் தி.மு.க. தரப்பும் சசிகலா, தினகரன், இளவரசின்னு மன்னார்குடிக் குடும்பத்தையே தெருவுக்கு இழுத்து கடுமையா விமர்சிச்சிருக்கு. முரசொலியிலும் கட்டுரை வந்தது. உலகப்போர் மாதிரி சூரியனுக்கும் குக்கருக்குமான இந்த கலகப் போர்தான் தமிழக அரசியல்ல பரபரப்பா பார்க்கப்படுது.''