"ஹலோ தலைவரே, ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் தலைமை சர்ச்சை ஓயலை போலிருக்கே… ''’
""ஆமாம்ப்பா. அண்மையில் நடந்த மா.செ.க் கள் கூட்டத்திலேயே இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் "நீயா? நானா?'ங்கிற பவர் யுத்தத்தில் இறங்கி இருக்காங்களே?''’
"" தலைவரே… ஆட்சியில் மட்டுமில்லாமல் கட்சியிலும் தன்னை டம்மியாக்குவதா ஓ.பி.எஸ். வருத்தப்படுறாரு. கட்சியைப் பொறுத்தவரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், எனக்குக் கீழ் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர்தான்னு ஓ.பி.எஸ். தன் சகாக்கள்கிட்டே சொன்னாலும் எடப்பாடிகிட்டேயிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. 11-ந் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடந்தப்ப, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி போன்ற சீனியர்கள் பேசியபின், எடப்பாடி, ஓ.பி.எஸ்.சைப் பார்த்து, "அண்ணே நீங்க பேசுங்க'ன்னு சொன்னார். உடனே ஓ.பி.எஸ்., "இல்லண்ணே, முதல்ல நீங்க பேசுங்க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நான், நிறைவாப் பேசுறேன்'னு குரல்ல அழுத்தம் கொடுத்துச் சொன்னார். திகைச்சுப் போன எடப்பாடி, வேற வழியில்லாமல் மைக்கைப் பிடிச்சார். அவருக்குப் பின் கடைசியாப் பேசிய ஓ.பி.எஸ்., "எல்லோரும் எந்த வேறுபாடும் இல்லாம, ஈகோ பார்க்காம ஒன்றுபட்டு உழைக்கணும். கட்சியை பலப்படுத்தி, தேர்தல்ல நாம் ஜெயிச்சிக் காட்டணும்னு எடப்பாடியையும் சேர்த்து அனைவருக்கும் அட்வைஸ் பண்ணித் தன்னோட இருப்பை நிலைநாட்டிக்கிட்டாரு''’
""எடப்பாடியின் பதவிகளைக் குறிவைச்சும், ஓ.பி.எஸ். மறைமுக அஸ்திரத்தைப் ஏவினாராமே?''’
""ஆமாங்க தலைவரே, தன் பேச்சில் ஓ.பி.எஸ்., "கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிங்கிற விதிமுறை யைக் கொண்டு வரணும். கட்சியின் ஒருங்கிணைப் பாளராவும், கட்சியின் பொருளாளராவும் இருக்கும் நான், என்னிடம் இருக்கும் ஒரு பதவியை இதற்காக விட்டுக் கொடுக்கவும் தயாரா இருக் கேன்'னு சொல்ல, கைதட்டல் பலமா எழுந்திருக்கு. காரணம், முதல்வர் எடப்பாடி, கட்சியின் இணை ஒருங் கிணைப்பாளர் பதவியோடு, தலைமை நிலையச் செயலாளர் பதவியையும், சேலம் புறநகர் மா.செ. பதவியையும் வச்சிருக்கார். அவரிடம் இருக்கும் உபரிப் பதவிகளை பிடுங்கணும் என்பதற்காகத்தான் இந்த டெக்னிக்கை ஓ.பி.எஸ். கையாண்டார். எடப்பாடிக்கு தர்மசங்கடமாயிடிச்சி.
""கட்சி நிர்வாகிகள் நிலைமை எப்படி?''’’
""நாமும் சசிகலா தரப்பும் இணைய வாய்ப் பிருக்கான்னு ஒரு மா.செ. கேட்க, அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. வர்ற இடைத் தேர்தல்ல இப்பவே நமக்கு 8 தொகுதிகள் சாதகமா இருப்பதா சர்வே சொல்லுதுன்னு சொல்லிக் கூட்டத்தை சாமர்த்தியமா திசை திருப்பினார் எடப்பாடி. தேர்தல் கமிஷனின் விதிமுறைப்படி, டிசம்பர் 31-க்குள் கட்சியின் செயற்குழு பொதுக் குழுவைக் கூட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க. இருக்கு. அப்ப ’ஒருவருக்கு ஒரு பதவி விவகாரம்’ பூதாகரமா வெடிக்கும்னு சொல்லப்படுது''
""சசிகலா தரப்பிலேயே தினகரனுக்கு எதிரான பூகம்பம் வெடிச்சிக்கிட்டு இருக்கே?''’
""கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளைக் கைல வச்சிக்கிட்டு, சிறையில் தன்னை தன் ஆதரவாளர்கள் யாரும் சந்திக்காதபடி தினகரன் பாத்துக்கிறதா, சசிகலா ஏகக் கடுப்பில் இருக்கார். நாளுக்கு நாள் தனக்கு சிக்கல்கள் அதிகரிப்பதாகவும் அதுபத்தி தினகரன் கொஞ்சமும் கவலைப்படலைன்னும் சசிகலா புலம்புறாராம். இந்த நிலையில் 13,14 தேதி களில் வருமான வரித்துறை அதிகாரிகள், பரப்பன அக்ரஹார சிறைக்கே போய், சசிகலாவிடம் விசாரணை நடத்தி, அவரை மிரள வச்சிருக்காங்க. எந்த நிபந்தனையும் இல்லாமல் எம்.பி. தேர்த லுக்குள் எடப்பாடி அணியுடன் இணையணும்கிற டிமாண்ட்டை வச்சிதான், அவருக்கு இப்படி என்கொயரி டார்ச்சர் தரப்படுதாம். அதனால் சசிகலா ஏகக் குழப்பத்தில் இருக்கிறாராம்''
""தினகரன் என்ன செய்றார்?''’
""தினகரனின் அணி கலகலத்துக்கிட்டு இருக்கு. அவர் அணியில் இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க.பக்கம் கிளம்பியது போல் இன்னும் பலரும், அங்கிருந்து வெளியேற வாய்ப்புகளைத் தேடிக் கிட்டு இருக்காங்களாம். இந்த நிலையில் திவா கரனின் மகனான ஜெய் ஆனந்த் தன் டிவிட்டர் பக்கத்தில், செந்தில் பாலாஜியையும் மிச்சமிருக்கும் தினகரன் தரப்பினரையும் மனசில் வச்சிக்கிட்டு, "ஓடினவனுக்கு ஒன்பதுல குரு. இருக்கிறவங்களுக்கு அஷ்டமத்தில் சனி'ன்னு பதிவிட்டு சீண்டியிருக் காரு. இந்தச் சூழலில், எம்.எல்.ஏ. பதவியை பறிகொடுத்தவர்கள் சார்பில் சசிகலாவை சந்திக்க தங்கத் தமிழ்செல்வன் ரூட் போட்டுக்கிட்டு இருக்கார். தினகரனை ஓவர்டேக் பண்ணி போடுற ரூட் இது. விரைவில் தினகரன் இடத்தில், திவாகரன் உட்காரவைக்கப்படுவாருன்னு பேச்சு அடிபடுது. தினகரன்கிட்டே இதன்பிறகும் அணுகுமுறையில் மாற்றமில்லை. கட்சியின் சீனியரா இருந்தாலும் தினகரனோட உதவியாளர் ஜனா மூலம்தான் அவரிடம் பேசமுடியுங்கிற நிலை இருக்குதாம். சசி தரப்பின் தளபதியாக திவாகரன் ஆனபின், அ.தி.மு.க.வுடன் இணைப்பு முயற்சி தொடங்கும்னு சொல்லப்படுது''’’
""கட்சிகளை இணைச்சிட்டு, கல்விக்கூடங் களை மூடுகிற முயற்சி நடக்குது போலிருக்கே!''’
""உண்மைதாங்க தலைவரே, மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி போன ஆண்டு 400 பள்ளிகளை இழுத்து மூடும் முடிவுக்கு பள்ளிக் கல்வித்துறை வந்துச்சு. இதை அறிந்ததும் பா.ம.க.வில் தொடங்கி பலரும் எதிர்த்ததால, மூடுவிழா தடுத்து நிறுத்தப்பட்டுச்சி. இந்தமுறையும் அதிகாரிகள் ஆய்வுசெய்து தமிழகம் முழுக்க மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் 1300 பள்ளிகளைப் பட்டியல் எடுத்து, மூடுவிழா நடத்த ரெடியாகுறாங்களாம்.'’
""தொழில் துறை வட்டாரத்திலும் சலசலப்பும் பரபரப்பும் தெரியுதேப்பா?''’
""ஆமாங்க தலைவரே, தொழிற்துறை அமைச்சரான எம்.சி.சம்பத், அண்மையில் வெளிநாடு போயிருந்தார். அந்த நேரத்தில் துறையின் செயலாளரான ஞானதேசிகனும், அதே துறையில் இருக்கும் அருண்ராய் என்ற அதிகாரியும் சேர்ந்து 12 உதவிப் பொறியாளர்களை நியமிச்சிருக்காங்க. இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடியே கொடுத் திருக்கார். இது தொடர்பான விபரங்கள் தமிழகம் திரும்பிய அமைச்சர் சம்பத்துக்குத் தெரியவர, அவர் முதல்வர் எடப்பாடியிடம் போய், இந்த நியமனத்தில் பண விவகாரம் விளையாடி இருக்குன்னு முறையிட்டு அவரையே திகைக்க வச்சிருக்கார். இன்னொரு பக்கம் டெல்லியும் ஒரு அதிரடித் தகவலைக் கொடுத்து முதல்வர் எடப்பாடியைத் திகைக்க வச்சிருக்குது''’
""என்ன மேட்டர்?''’’
""தமிழகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரிச்சி ஆடுதுன்னு புகார்கள் வருது. அதனால் நாடாளுமன்றத் தேர்தல் வரை அடக்கி வாசிக்கிறது உங்களுக்கு நல்லது, உங்க தலைமைச் செயலாளர் கிரிஜாவை நாங்கள் மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறோம். அவர் இருந்த பதவியில், கவர்னரின் கூடுதல் செயலாளரா இருக்கும் ராஜகோபாலை போடுங்கன்னு எடப்பாடி அரசுக்கு மத்திய அரசு தகவல் கொடுத்திருக்கு. கிரிஜாவைவிட டபுள் மடங்கு டெல்லியுடன் தொடர்புடைய ராஜகோபாலைத் தலைமைச் செயலாள ராக்குவது பற்றிய யோசனையில் இருக்காரு எடப்பாடி.''’
""வடக்கே 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் தமிழ்நாடு காங்கிரசாரும் உற்சாகத்தில் இருக்காங்களே! ''’
""ரொம்ப நாள் கழிச்சிக் கிடைச்சிருக்கும் வெற்றிச் செய்தி. அதனால் இங்கிருக்கும் கோஷ்டித் தலைவர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சியில் திளைக்கிறாங்க. இந்த வெற்றியின் மூலம் கட்சியின் செல்வாக்கு வளர்ந்திருப்பதைத் தி.மு.க.வுக்கு உணர்த்தி டபுள் டிஜிட்டில் சீட்டு கேளுங்கள்னு கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஒரே மூடில் கடிதம் எழுதத் தொடங்கியிருக்காங்க. 3 மாநிலங்களுக்கும் முதல்வரைத் தேர்வு செய்வதில் தொடங்கி, எம்.பி. தேர்தல் கூட்டணி வரை பல வேலைகள் இருப்பதால் ராகுல் ரொம்ப கவனமா செயல்படுறாரு.''’
""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விரைவில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நலமுடன் அரசியல் களத்துக்கு வருவார்ன்னு அவர் மகன் நம்பிக்கையோடு சொல்லியிருக்காரு. சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி, மேம்பாலம் கட்டுவதற்காக தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டது. இதைக் காரணமா காட்டிதான் அவர் அரசியல் என்ட்ரி கொடுத்தார். கல்யாண மண்டபம்தான் கட்சி அலுவலகமானது. இப்ப மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்காக விஜயகாந்த் அலுவலகத்தின் முழுப் பகுதியையும் காலி பண்ணச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்குது. இதில் அப்செட்டான விஜயகாந்த் தரப்பு, பலவிதமாகப் பேசிப் பார்த்தும், இடத்தைக் காலி பண்ணு வதைத் தவிர வேறு வழியில்லைன்னு கறாராகவே சொல்லிடுச்சாம் மெட்ரோ ரயில் நிர்வாகம். செம கடுப்பில் இருக்காரு கேப்டன்.''