"ஹலோ தலைவரே, தி.மு.க. கூட்டணி குறித்த சர்ச்சைகள், சலசலப்புகள், பரபரப்புகள்னு இருந்த நிலையில், எந்தெந்தப் பக்கம் அதிருப்தி இருக்குன்னு கவனிச்சி, அதையெல்லாம் சமாளிச்ச ஸ்டாலின், 29-ந் தேதி அவங்களோடு சேர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி, மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் 4-ந் தேதி கண்டனப் போராட்டத்தையும் அதிரடியா அறிவிச்சிருக்காரே.''’

""பார்த்தேம்பா. இது கூட்டணியா? தோழமையா?''

""தி.மு.க.வைப் பொறுத்தவரை அடுத்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதிக இடங்களில் நின்றால்தான் அதிக வெற்றி வாய்ப்பைப் பெறமுடியும்னும், அதன்மூலம் கட்சியை பலப்படுத்த முடியும்னும் நினைக்கிது. தி.மு.க.வோடு தோழமையா இருக்கும் கட்சிகளும் தங்கள் தகுதிக்கு உரிய பங்கு கிடைச்சாகணும்னு நினைக்குது. இந்த விசயத்தில் இரு தரப்புக்குமான மனப்போக்கு, சமநிலை ஆகும்வரை அவர்களின் நிலை தோழமைதான். சமநிலை ஆகிவிட்டால் அப்புறம் கூட்டணி.''’

allpartymeet

Advertisment

""சரிப்பா, ம.தி.மு.க.வோடும், விடுதலைச் சிறுத்தைகளோடும் தி.மு.க. கொண்டிருப்பது தோழமையா கூட்டணியா? தெளிவா சொல்லு?''’

""துரைமுருகன் கொடுத்த பேட்டியால், நண்பர்களா, கூட்டணியான்னு தி.மு.க. தொண்டர்களிடமும் தோழமைக் கட்சித் தொண்டர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துச்சு. தி.மு.க. தலைவர் ஸ்டாலினை 27-ந் தேதியன்னைக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா சந்திச்சார். டிசம்பர் 10-ந் தேதி தாங்கள் நடத்த இருக்கும் "தேசம் காப்போம்' மாநாட்டிற்கு வரும்படி ஸ்டாலினுக்கு நேரடியாகவே அழைப்பும் விடுத்தார். ஸ்டாலினும் இதில் பங்கேற்க உடனே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேபோல், 28-ந் தேதி வைகோவும் ஸ்டாலினை சந்திச்சி பேசினார். வெளியில் வந்து, 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, நாங்கள் நடத்த இருக்கும் ராஜ்பவன் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இதிலேயே கூட்டணி குறித்த விளக்கம் இருக்கிறது என்றார் உற்சாகமாய். இப்படியாக, துரைமுருகனால் எழுந்த சர்ச்சைகளும் சலசலப்புகளும் மீடியாக்களில் பலத்த விவாதங்களுக்குப் பிறகு அடங்கிடுச்சு.''

Advertisment

""தி.மு.க. கூட்டணிக்கு "விளம்பரம்' தந்த மீடியாக்களுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின், 29-ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாரே?''’

vaiko-stalin""ஆமாங்க தலைவரே, காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டும் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தந்ததைக் கண்டித்து அறிவாலயத்தில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, தோழமைக் கட்சிகளை "அணைத்துக்'கொள்ளும் கூட்டமாக ஸ்டாலின் நடத்தியிருக்காரு. டிசம்பர் 4-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்னு அறிவிக்கப்பட்டிருக்கு. பொதுவாகத் தேர்தலுக்கு முன்பு, திருச்சியில் மாநாடு நடத்தினால் திருப்புமுனைங்கிறது தி.மு.க.வின் சென்டிமெண்ட். இந்தமுறை அதை ஆர்ப்பாட்டமாகத் தி.மு.க. நடத்துது. இதற்கிடையே, தேர்தல் கூட்டணி, சீட் பங்கீடு போன்றவை முடியும்வரை, அனைவரும் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தராதபடி, வாயை மூடிப் பேசவும்னு தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் ஒரு ஜெண்டில்மேன் ஒப்பந்தத்தை தங்களுக்குள் போட்டிருக்கு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ம.ந.கூ.வால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தி.மு.க.வும் மறக்கலை. அந்தக் கூட்டணியை உருவாக்கிய கட்சிகளும் மறக்கலை. அதை உணர்ந்து எல்லாத் தரப்பும் செயல்படுது.''

""கூட்டணியில் காங்கிரஸ் செட்டில் ஆயிடுச்சுங்குறாங்களே!''’

""ஸ்டாலினை சந்திரபாபுநாயுடு சந்திச்ச பிறகு, காங்கிரஸ் கூட்டணி விவகாரம் ஒரு தெளிவான நிலையை எட்டியிருக்கு. ராகுலும் சந்திரபாபுவும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. மத்தியிலும் மாநிலத்திலும் பலமான கூட்டணி அமைய, எந்த அளவிற்கு வேண்டுமானாலும் காங்கிரஸ் விட்டுக்கொடுக்க ரெடின்னு ராகுல் சொன்ன செய்திதான், தி.மு.க.வை, காங்கிரஸ் பக்கம் அக்கறையா திரும்ப வச்சிருக்கு. ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 5 சீட்டுதான் தரமுடியும்னு காங்கிரஸிடம் சொல்லிவந்த தி.மு.க., இப்ப 7 சீட்டுகள் தர முன்வந்திருக்குதாம். அந்த 7 சீட்டுகள் யார் யாருக்குன்னும் காங்கிரசுக்குள்ள இப்பவே ஒரு பட்டியல் ரெடியாயிருக்கு. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருக்கு ராமநாதபுரம், தங்கபாலுவுக்கு சேலம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குத் திருப்பூர், பீட்டர் அல்போன்ஸுக்கு நெல்லை, கார்த்தி சிதம்பரத்துக்கு தென்சென்னை அல்லது சிவகங்கை, ராணிக்குத் திருவள்ளூர், முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி மகன் விஷ்ணுபிரசாத்துக்கு ஒரு தொகுதின்னு குறிப்பிடப்பட்டிருக்கு.''’

""எதிர்க்கட்சி ஏரியா ஓரளவு செட்டில் ஆகியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சித் தரப்பு உள்கட்சிப் புயல், டெல்லியின் ரெய்டுப் புயல்னு ஆரம்பிச்சி, இப்ப கஜா புயல்வரை அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்திச்சிக்கிட்டு இருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, கஜாவால் சீரழிக்கப்பட்ட சேதப் பகுதியில், அரசைத் தாண்டி, பலவிதமான தன்னார்வக் குழுக்கள் அங்கே உதவிக் கரங்களை நீட்டிக்கிட்டு இருக்கு. புயல் ஏற்படுத்திய சேதம் மிக அதிகம். எல்லோரும் முதலுதவி போன்ற நிவாரணங்களைக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. அமைச்சர்கள் களமிறங்கியும் போதுமான அளவுக்கு காரியம் நடக்கலை. அமைச்சர் காமராஜோடு திருவாரூர், மனனார்குடி பகுதிகளில் களமிறங்கிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடலே இல்லாத தன் விருதுநகர் மாவட்டத்தில், இப்படியொரு புயல் சேதத்தைப் பார்த்ததில்லை என்பதால், தன் கைக்காசையும் வாரி இறைத்து நிவாரண உதவிகளைச் செய்திருக்கார். தி.மு.க.வில் இருக்கும் ஒவ்வொரு அணியும் களமிறங்கியிருக்கு. கனிமொழி எம்.பி. தன் சொந்த பொறுப்பில் தொடர்ந்து உணவு வழங்குறாரு. இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் களமிறங்கியும் டெல்டா மக்களின் கண்ணீரை முழுசா துடைக்க முடியலை.''

""மத்தியக் குழு வந்துட்டுப் போயிருக்கே... பலன் இருக்குமா?''

""அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய டேனியல் ரிச்சர்ட், மத்திய உள்துறையின் இணைச்செயலாளரா இருப்பவராம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நாங்கள் சம்பந்தப்படவில்லைன்னு உள்துறை அமைச்சகம் மறுத்துவரும் நிலையில், அவர்களுக்கான விடுதலைக் கோரிக்கையை நிராகரிக்கணும்னு கவர்னர் மாளிகைக்கு உள்துறையின் சார்பில் குறிப்பு அனுப்பியவர் இந்த ரிச்சர்டுதான் என்கிறார்கள். தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ரிச்சர்ட், தமிழகத்துக்கு முழுமையான நிவாரண நிதி கிடைக்க உதவுவாரா? என்ற சந்தேகத்தையும் எழுப்பறாங்க.''’’

raghul

""தமிழக அரசின் நிதி நிலவரம் எப்படி இருக்கு?''’

""உண்மையைச் சொல்லப்போனால், இப்ப எடப்பாடி அரசு, நிதி நெருக்கடியில் மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. தமிழக அரசின் கடன் நிலவரம் நாலரை லட்சம் கோடியா ஆயிடுச்சி. இப்ப புயல் நிவாரணத்துக்கே மத்திய அரசு ஏதாவது கொடுத்தாத்தான் செய்ய முடியும்ங்கிற நிலையில் பரிதவிச்சிக்கிட்டு இருக்கு. கஜா புயல் சேதத்தை சமாளிக்க பொது நிதியையும் தமிழக அரசு திரட்ட ஆரம்பிச்சிருக்கு. அரசின் டார்கெட் 500 கோடி. இதுக்காக அரசு தன் நாலாபுறக் கதவையும் திறந்துவச்சிக்கிட்டு காத்திருக்கு. தி.மு.க. 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிச்சதோட, அரசிடம் 1 கோடி ரூபாயைக் கொடுத்தது. அப்புறம் ஒரு ஜவுளிக்கடை அதிபர் 2 கோடி கொடுக்க, ஒரு தொலைக்காட்சிக் குழுமமும் 2 கோடி ரூபாயைக் கொடுத்தது. வேறு பெருசா நிதி கிடைக்கலை. பிற மாநிலங்களும் கண்டுக்கலை. கேரள மழை வெள்ளத்தின் போது 10 கோடி ரூபாயைத் தமிழக அரசு நிவாரண நிதியா கொடுத்திருந்தது. முதல்வர் எடப்பாடி, தலைமைச் செயலாளர் கிரிஜா மூலம், கேரள அதிகாரிகளிடம் பேச கேரள முதல்வர் பினராயி விஜயன், நாங்களும் 10 கோடி தருகிறோம் என்று தொகையை அனுப்பிவிட்டார். அதேபோல், லாட்டரி அதிபரான மார்ட்டின் தனது அறக்கட்டளை மூலமாக 5 கோடி ரூபாய் கொடுத்திருக்கார். அப்படி இருந்தும் 25 கோடியைத் தாண்டலை. அதனால் எடப்பாடி பலத்த அப்செட்டில் இருக்கார்.''’’

""ம்...''’

saghu""தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் தமிழகத்தில் அனுமதிக்கணும் என்றும் இதனால் 10 லட்சம் பேருக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும் மார்ட்டின் உள்ளிட்ட பழைய லாட்டரி அதிபர்கள் தரப்பு ஜெ. காலத்தில் இருந்தே கோரிக்கை வச்சிக்கிட்டு இருக்கு. அண்மையிலும் இது தொடர்பாக எடப்பாடி தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துச்சு. தன் பதவிக் காலம் முடியும் தருவாயில் மீண்டும் லாட்டரிக்கு அனுமதி கொடுத்துவிட்டுப் போகலாம்ங்கிற எண்ணத்தில் இருக்காராம் எடப்பாடி.''’’

""அமைச்சர்களுக்குள் முட்டல் மோதல்னும் ஒரு தகவல் வருதே?''

""கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கு. அதனால் குடிநீரில் குளோரின் கலக்கப்படணும். அதேபோல் சாலைகள்தோறும் பிளீச்சிங் பவுடர்களையும் அடிச்சாகணும். இதற்காக இந்த ரெண்டையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொள்முதல் செய்ய முடிவெடுத்தார். இதை அறிந்ததும், சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம், எனக்குத் தெரிஞ்ச கம்பெனியிடம் இருந்து அவற்றை நான்தான் வாங்கித் தருவேன்னு அடம்பிடிக்க, உள்ளாட்சித்துறை அமைச்சரான வேலுமணி, இதெல்லாம் எங்க துறை சம்பந்தப்பட்டது. அதனால் அதை நான்தான் வாங்குவேன்னு வரிஞ்சிகட்டி இருக்கார். அமைச்சர்களின் இந்த கடுமையான முட்டல் மோதலால், குளோரின், பிளீச்சிங் பவுடர் கொள்முதலே இப்ப இழுபறியில் நிக்கிதாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படலை.''’’

grijavidyanathan

""இடைத் தேர்தலும் இப்ப இழுபறியில் நிக்கிது போலிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, காலியாக இருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளோடு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளையும் சேர்த்து, வரும் பிப்ரவரிக்குள் தேர்தலை நடத்தி முடிச்சிடணும்னு தலைமைத் தேர்தல் ஆணையம் நினைக்குது. ஆனால், இப்ப தேர்தல் வச்சா, கரையேறுவது கஷ்டம்ன்னு எடப்பாடி அரசு நினைக்குது. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, வாக்குப் பதிவு நெருக்கத்தில், பணப் பட்டுவாடாவைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து பண்ணிட்டு, எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம்னு தீர்ப்புவந்த உடனேயே தேர்தல் தேதியை அறிவிச்சி, தேர்தலையும் நடத்தியது தமிழகத் தேர்தல் ஆணையம் . அதேபோல், கன மழையைக் காரணம் காட்டியும் ஆளுங்கட்சியினரின் விருப்பத்தின் பேரில் 2 தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், இப்போது ஆட்சிக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் குமுறலும் அதிகமாக இருப்பதால், எப்படி இடைத்தேர்தலை எதிர்கொள்வதுன்னு எடப்பாடி அரசு திகைத்துப் போயிருக்கு. அதனால்...''

""அதனால...?''

""அதை ஒத்திவைக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கு. இதைத் தொடர்ந்து தமிழகத் தேர்தல் அதிகாரியான சத்யபிரசாத் சாகுவும் தலைமைச் செயலாளர் கிரிஜாவும் கலந்து ஆலோசிச்சி இருக்காங்க. புயல் பாதிப்பால் இப்போது தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை என்று, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட் அனுப்பும் முடிவில் இருக்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம். தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம், அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப இயங்குவது சரிதானா? என நடுநிலையாளர்கள் கவலையோடு கேள்வி எழுப்பறாங்க.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்பா. குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற்றுத் தருகிறேன் என்றபடி, திருவாரூர் ஜெகதீஷ் என்பவர், பல ஏஜெண்டுகள் மூலம் பல மாவட்டங்களிலும் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, பணம் கொடுத்தவர்களுக்குப் பட்டை நாமம் போட்டிருக்கிறார். இது தொடர்பாக புகார்கள் போக, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், ஜெகதீஷைத் தொடர்புகொண்டு விசாரிச்சிருக்கார். அந்த ஜெகதீஷோ, நான் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்தின் ஆள். அவருக்காகத்தான் வசூலிச்சேன். என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சவால் விட்ருக்கார். இதனால் கடுப்பான போலீஸ் டீம், ஜெகதீஷைக் கைது செய்து அதிரடியா ஜெயிலுக்கு அனுப்பிவச்சிது. இப்போது ஜாமீனில் வெளியே வந்து தெனாவெட்டாக திரிகிறாராம் ஜெகதீஷ். போலீஸோ இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ். மகனை எப்படி விசாரிப்பது என கை பிசைந்துகொண்டிருக்கிறது.''