""ஹலோ தலைவரே, டாஸ்மாக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலமே க்ரீன் சிக்னல் பெற்றுவிட்ட எடப்பாடி அரசு அடுத்த சில மணிநேரங்களிலேயே ஏழு கலரில் டோக்கன் ரெடி பண்ணி, சனிக்கிழமையிலிருந்து கல்லா கட்ட ரெடியாயிடிச்சே...''

""தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுப்பிரியர்கள் டோக்கனுக்கு அலைமோதுவாங்களே.. அதனால கிராமப்புறம் வரைக்கும் கொரோனாவை வலிந்து அழைத்ததுபோல களை கட்டுமே?''

""உண்மைதாங்க தலைவரே, சென்னை தவிர மற்ற இடங்களில் கடந்த 7-ந் தேதியே எடப்பாடி அரசு டாஸ் மாக் கடைகளைத் தோரணம் கட்டித் திறந்து வச்சிது. இது தொடர்பா வழக்குகள் குவிஞ்சதால், டாஸ்மாக்கில் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படாததைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் 17-ந் தேதிவரை டாஸ் மாக்கை மூட உத்தரவிட்டுச்சு. அதோட அரசுத் தரப்பின் விரிவான பதிலைத் தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில்தான் எடப்பாடி அரசு, சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்து, டாஸ்மாக் மீதான தடையை உடைச்சிருக்கு.''

ttk

Advertisment

""ஆமாம்பா, எடப்பாடி அரசு சார்பில் வாதாடிய முன்னாள் அட்டர்னி ஜெனரலும் காஸ்ட்லி வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி, டாஸ்மாக்கைத் திறக்கும் அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாதுனு வாதாடினாரே!''

""தலைவரே.. தொற்று அதிகமுள்ள மாராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலேயே டாஸ்மாக் திறக்கப்பட்டிருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக்காட்டுனாங்க. உச்சநீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட ஆன்லைன் விற்பனைக்கான சாத்தியங்கள் சரிப்படாதுன்னு தமிழக அரசு வாதாடியது. எதிர்பார்த்தபடியே சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக் விற்பனைக்கு க்ரீன் சிக்னல் கிடைச்சிடிச்சி. அதே சமயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் போடப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் பெஞ்ச், மக்களின் உயிரைவிடவும் அரசின் வருமானம் பெரிதா? டாஸ்மாக் கடைகளின் மூலம் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால் அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதுன்னு எடப்பாடி அரசைக் கடுமையாக எச்சரித்து, தன் தீர்ப்பை 16-ந் தேதிக்குத் தள்ளி வச்சிருக்கு. இருந்தும் சுப்ரீம் கோர்ட்டின் தயவால் 16-ந் தேதியே டாஸ்மாக்கைத் திறக்க ஜரூராயிடிச்சி. டாஸ்மாக் டோக்கன்களை விநியோகிக்கும் போது, அ.தி.மு.க.வினருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுமாம். இனி கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்.''

""அரசியல் காய்கள் எப்படி நகர்கின்றன?''

Advertisment

sasi

""லாக் டவுனுக்கு முன்னாடி பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுக்கும் அ.தி.மு.க தரப்புக்கு மான சந்திப்பும், அதன் தொடர்ச்சியான டீலும் இப்ப தெரிய வந்திருக்கு. செப்டம்பர் வாக்கில் சசிகலா ரீலீஸôவார்ங்கிற எதிர்பார்ப்பு எடப்பாடித் தரப்பிலேயே இருக்குது. தினகரனின் கடுமையான விமர்சனம் பற்றி எடப்பாடித் தரப்பு சிறை சந்திப்பில் சசியிடம் புகார் வாசிச்சி ருக்கு. அதற்கு சசி, தினகரன் தனியாக் கட்சி நடத்துறதை நான் ஆரம்பத்தில் இருந்தே ஆதரிக்கலைன்னு சொன்னா ராம். இது சம்பந்தமா நான் தினகர னுக்கு எழுதிய கடிதத்தின் நகல், என் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டிய னிடமே இருக்கு. வேணும்னா வாங்கிப் பார்த்துக்கங்கன்னு சொன்னதோட, அதுக்கப் புறம் சொன்னதுதான் எடப்பாடித் தரப்பைத் திகைக்க வச்சிருக்கு.''

""அப்படி என்ன சொன்னாராம் சசி?''

""நான் என்னைக்குமே அ.தி.மு.க.தான். நான் அக்கா ஜெயலலிதாவால் கட்சிக்குள் அழைக்கப்பட்டவள். அதனால் என்னை யாராலும் வெளியில் அனுப்பமுடியாது. நான் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராத்தான் சிறைக்குள் வந்தேன். அதேமாதிரி நான் வெளியில் வரும் போதும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராத்தான் வருவேன். அதனால் என் ரிலீஸýக்கு முன்னாடியே அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி, என்னைப் பொதுச் செயலாளரா தேர்ந்தெடுக் கனும்ன்னு எடப்பாடிக்கிட்ட சொல்லுங்கன்னு கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொன் னாராம்.''

""சிறைத் தகவல் தனக்கு வந்ததும் எடப்பாடி சில நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியில் ஆழ்ந்துட்டாராம்.''

""ஓ.பி.எஸ் மூவ் என்ன?''

""அவர் தரப்பில் இருந்தும் பெங்களூரு சிறைக்கு ஒரு கடிதம் போயிருக்கு. அதில், அம்மா ஜெ.’ எனக்குக் கொடுத்த கட்சியின் பொரு ளாளர் பதவியிலேயே நான் தொடரனும். அதேபோல் அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் சின்னம்மாவான நீங்கள்தான் இருக்கனும். அப்பதான், கட்சியைப் பழையபடி பலப்படுத்த முடியும். எடப்பாடி முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. அவர், அம்மாவின் நம்பிக்கையைப் பெற்ற என்னையே மரியாதை இல்லாமல் நடத்தறார்ன்னு குறிப்பிட்டிருப்பதோடு, அமைச்சர்களில் 90 சதம் பேர், உங்களைத்தான் அம்மாவின் மறுவடிவமாப் பார்க்கறாங்கன்னும் குறிப்பிட்டு, சசியின் மனதைக் குளிரவச்சிருக்காராம்.''

ops

""நாம ஏற்கனவே பேசியதுபோல, அமைச்சர்களின் கொரோனா நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரமா கண்காணிக்கிறாராமே எடப்பாடி?''

""ஆமாங்க தலைவரே, தமிழக அமைச்சர்கள் அவரவர் மாவட்டங்களிலும் செய்துவரும் கொரோனா நிவாரண உதவிகள் பற்றி ஸ்பெஷல் டீம் போட்டுத் தீவிரமாக விசாரிச்சிருக்கார் எடப்பாடி. இதையறிந்த சீனியர் அமைச் சர்கள் சிலர், முதலில் எடப்பாடி தனது சேலம் மாவட்டத்திலும், தனது ஊரான எடப்பாடியிலும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டு, நம்மை வேவு பார்க்கட்டும்னு தங்களுக்குள் பொங்கித் தீர்த்திருக்காங்க.''

""எடப்பாடியின் சொந்த ஏரியாவில் நிவாரண நிலவரம் என்ன?''

""உளவுத்துறையிடமும் சேலம் மாவட்ட ஆட்சியரிடமும் ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் எடப்பாடி. இரண்டு தரப்பும், நீங்க நம்பிய ஆட்கள் சரியா நிவாரணத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கலைங்கிற ரீதியிலேயே ரிப்போர்ட் கொடுத்திருக்கு. குறிப்பா அவருடைய எடப்பாடி தொகுதியில் மட்டும் 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொறுப் பையும் நிதியையும் சிலரிடம் அவர் ஒப்படைச்சிருந்தார். ஆனால் அந்த நபர்களோ, பணத்தைப் பங்கிட்டுக்கிட்டு, ரேசன் பொருட்களை தங்களோட நிவாரணம் போல அதிகாரிகள் துணையோடு விநியோகிச்சிட்டாங்கன்னு எடப்பாடிக்கு ரிப்போர்ட் போயிருக்கு. அவர் பயங்கர ஷாக்.''

""அமைச்சர் வேலுமணியும் தன் பங்கிற்கு எடப்பாடிக்கு டார்ச்சர் கொடுக்கறாராமே?''

velumani

""கோட்டை வட் டாரத்தில் அப்படித் தான் டாக் அடி படுது. அமைச்சர் வேலுமணி, தன் துறை தவிர பல்வேறு துறைகளிலும் கூட அவர் மூக்கு நுழைக்கிறாராம். இந்த நிலையில் அவரிடமிருந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையை வேறு ஒரு அமைச்ச ரிடம் எடப்பாடி மாற்றிக் கொடுக்க முயற்சித்த போது, அதை ஏற்க மறுத்திட்டாராம் வேலுமணி. அவரை அடக் கிவைக்க முடியாமல் ஒரு பக்கம் எடப்பாடி திணற, இன்னொரு பக்கம் தன் துறையிலும் குறுக் கிடும் அவர் மீது ஏகக்கடுப்பில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.''

""அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் அவர் பி.ஏ.வுக்கும் லடாய்ன்னு காற்று வாக்கில் தகவல் வருதே?''

""ஆமாங்க தலைவரே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பி.ஏ.வாக இருக்கும் கதிர் முருகன், அமைச் சரின் பர்சனல் உலகத்துக்கும் அனுசரணையா இருக்காராம். அந்த உரிமையில் அவரே ஆக்டிங் மினிஸ்டர் போலவே நடந்துக்க றாராம். அதோட, அமைச்சரின் வலது கைங்கிற கோதாவில் இவர் ஏகத்துக்கும் சொத்துக்களைக் குவிக்க, இது அமைச்சரின் மகனான கதிரீஸ்வரனுக்கு எரிச்சலைக் கொடுக்க, இது தொடர்பா கதிர்முருகனிடம் அவர் தட்டிக்கேட்டிருக்கார். இந்த விவகாரம் இருவருக்கும் இடையில் கைகலப்பு வரை போயிருக்குதாம். இதனால் கதிர் முருகனை ,நீக்கனும்ன்னு அமைச்சரிடம் அவர் மகன் கொடிபிடிக்க, விழிபிதுங்கி நிற்கிறாராம் அமைச்சர். இது ஒருபக்கம்னா, தன் மகன் கேட்ட நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட் கிடைக்கலைன்னு வைத்திலிங்கம் எம்.பி., எடப்பாடியிடமே நேரில் கோபத்தைக் காட்டிட்டாராம்.''

""இப்படி எல்லாப் பக்கமும் சங்கடத்தை சந்திக்கும் எடப்பாடிக்கு, மோடி அரசு அறிவித்திருக்கும் இருபது லட்சம் கோடிக்கான நிதித் தொகுப்பு எந்த வகையிலாவது தன் கட்சியினர் விரும்பும் டெண்டர்களை கொடுத்து சமாளிக்க கைக்கொடுக்குமா?''

""மத்திய அரசின் இந்த நிதித் தொகுப்பு குறித்து தமிழக நிதித்துறை அதிகாரிகளுடன் விவாதிச்சிருக்கார் எடப்பாடி. அப்போது தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய அரசின் நடப்பு ஆண்டின் பட்ஜெட்டே 30.42 லட்சம் கோடிதான். அதனை நிறைவேற்றவே நிறைய கடன் வாங் கணும். அப்புறம் எப்படி 20 லட்சம் கோடி நிதி வரும்? இப்படியொரு ஹம்பக் அறிவிப்புக்குப் பதில் மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை அவர்கள் கொடுத்தாலே, நிலைமையைச் சமாளிச்சிடலாம்னு எடப்பாடியிடம் விவரிச் சிருக்காங்க. அவரும் சக அமைச்சர்களிடம், பிரதமரின் 20 லட்சம் கோடிங்கிறது ஹம்பக் அறிவிப்புன்னு விமர்சிக்கிறாராம்.''

""இந்த ஊரடங்கு நேரத்திலும் பா.ஜ.க. தரப்பில் ஒருவித உற்சாகம் தெரியுதே?''

""உண்மைதாங்க தலைவரே, மோடியின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சி, வரும் 30-ந் தேதியோடு ஒரு வருடத்தை எட்டிப் பிடிக்கிது. இதைப் பிரமாண்டமாகக் கொண் டாடத் திட்டமிட்டிருந்த மோடி, கொரோ னாவால், அடக்கிவாசிக்க நினைக்கிறார். ஆனால் மாநில பா.ஜ.க தலைவர்கள் பலரும், இந்த ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் ஸ்லோகத்தை உருவாக்கி, அதன் மூலம் விழாவை முன்னெடுக்கலாம்ன்னு கட்சியின் அகில இந்தியத் தலைவர் நட்டாவிடம் சொல்ல, மோடியோ, இந்த நேரத்தில் இதைச் செய்தால், மக்களின் அதிருப்திதான் அதிகமாகுன்னு மறுத்திருக்கார். இருந்தும் பா.ஜ.க.புள்ளிகள் தங்கள் கொண்டாட்ட மனநிலையைக் கைவிட்டதாத் தெரியலை.''

rr

""மத்திய அரசு, ஊரடங்கு விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவுக்கு வரலை போலிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, மத்திய சுகா தாரத்துறையும் ஐ.சி.எம்.ஆர். அமைப்பும், மே 17-க்குப் பிறகும் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள் ளக்கூடாது. போக்குவரத்தை முழுமையாக அனுமதித்தால் கொரோனாத் தொற்றின் வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் போய்விடும். அதனால் ஜூன் வாக்கில் தளர்வு பற்றி யோசிக்கலாம்னு எச்சரிக்கை மணி அடிச்சிருக்கு. ஆனால், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியோ, கொரோனா வைரஸ், செயற்கையாக உருவாக்கப்பட்டது போல் தெரிவதால் அது லேசில் அடங்காது. அதனால், அந்த வைரஸýடன் வாழப் பழகிக்கனும். எனவே ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வாங்கன்னு மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறாராம். இது மத்திய அமைச்சர்கள் மத்தியிலேயே விவாதத்தை எற்படுத்தியிருக்கு.''

""நானும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துக்கறேன்... மார்ச் வாக்கில் அமெரிக்காவில் இருக்கும் தனது மகளைப் பார்க்கப் போன தலைமைத் தேர்தல் அதிகாரியான சுனில் அரோரா, கொரோனா ஏற்படுத்திய லாக்டவுனால் அங்கேயே சிக்கிக்கிட்டார். அதனால் அவரை சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைச்சிக்கிட்டு வர பிரதமர் அலுவலகம் முயற்சி செய்தது. ஆனால் சுனிலோ, விடுப்பு எடுத்துக்கிட்டு தான் வந்திருக்கேன். அதனால் எனக்காக யாரும் சிரமப்பட வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம். விடுப்பில் இருந்த போதும், காணொலி மூலம் அவர் தனது தேர்தல் ஆணையப் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம்.''