"ஹலோ தலைவரே, தேர்தல் நேரத்தில் வெளியாகும் வீடியோக்கள் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்குவது வழக்கம்.''
""புதுசா வந்த கொடநாடு வீடியோவைச் சொல்றியா?''’
""ஆமாங்க தலைவரே, ஏற்கனவே கேரள பத்திரிகையாளர் மாத்யூஸ் டெல்லியில் வெளியிட்ட வீடியோ, கொடநாட்டுக் கொலை, கொள்ளையில் முதல்வர் எடப்பாடிக்குத் தொடர்பு இருப்பதாகச் சொன்னது. கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான மனோஜ், சயான் ஆகியோர் இதை அழுத்தம் திருத்தமாகவே அந்த வீடியோவில் சொல்லியிருந்தனர். அதற்குப் பதிலடிபோல, தேர்தல் நேரத்தில் கொடநாடு தொடர்பான வேறொரு வீடியோ வெளியிடப்பட்டிருக்கு. இந்த வீடியோ பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசுற எடப்பாடி, தனக்கு எதிராக பேசும்படி மனோஜ், சயான் ஆகியோரிடம் சிலர் பேரம் பேசியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரம்தான் அந்த வீடியோ. இதன் பின்னணியில் தி.மு.க. இருக்கிறதுன்னு குற்றம் சாட்டுறாரு.''
""உண்மை என்னவாம்?''
""விசாரிச்சேங்க தலைவரே.. சயானிடமும் மனோஜிடமும் பேரம் பேசுவது போன்ற அந்த வீடியோவைத் தயார் செய்தது கேரள மாநில கண்ணனூரைச் சேர்ந்த பிரதீப், ரஹீம் என்ற நபர்கள்தானாம். கொடநாட்டு விவகாரத்தில் எடப்பாடிக்கு இருக்கும் தொடர்பை அம்பலப் படுத்தும்படி அவர்கள் வலியுறுத் தும் வகையிலேயே அந்த வீடியோ பதிவு இருக்கிறதாம். அதிலிருந்து, ஆளுந்தரப்பு தங்கள் வசதிக்கேற்ப, 3 நிமிடத்திற்கு எடிட் செய்து இப்போது இந்த வீடியோவை வெளியிட்டிருக்கு. இந்த இருவரில் பிரதீப் என்பவர், ஏற்கனவே சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான போக்ஸோ சட்டப்படி தண்டிக்கப்பட்டவராம். ரஹீமோ, பெங்களூருவில் விபச்சார புரோக்கராக கொடிகட்டிப் பறக்கிறவராம். எடப்பாடி தரப்பு தங்களைப் பாதுகாக்கவும், எதிரணியை அட்டாக் பண்ணவும் இந்த வீடியோவை பிரச்சாரக் களத்தில் பயன்படுத்த நினைக்குது. ஆனாலும், பெருசா மக்களிடம் போய்ச் சேரலை.''’
""அ.தி.மு.க. அமைத்துள்ள மெகா கூட்டணியின் பிரச்சாரத்தில் இதுவரை பெருசா கவரலையே''
""முதலமைச்சர்களா இருப்பவர்கள் மக்கள் மத்தியில் தங்கள் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போட்டு ஓட்டு கேக்கறதுதான் வழக்கம். ஆனால் எடப்பாடியிடம் சாதனைப் பட்டியல் பெருசா இல்லாததால வீடியோ மாதிரியான டெக்னிக்கை நம்புறாரு. அதைவிட அதிகாரத்தை ரொம்ப நம்புறாரு. மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடியின் பி.ஏ.விடமிருந்து போன் போகுதாம். அதைக் கலெக்டர்கள் எடுத்துப் பேசினால், எடப்பாடியே லைனில் பேசுகிறாராம். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ரொம்பவும் கவனமாகப் பாருங்க.. எல்லாம் சரியா இருக்கான்னு பலமுறை செக் பண்ணுங்க. ரொம்ப கவனமா இருங்கன்னு சொல்றாராம்.''’
""அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மாதிரி ஏன் இத்தனை முறை வலியுறுத்தணும்?''’
""தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலும் வி.ஐ.பி.க்களே வேட்பாளர்களா நிறுத்தப்பட்டிருக்காங்க. அதோட அவங்க எல்லோருக்கும் தனிப்பட்ட செல்வாக்கும் இருக்கு. அவங்களோட வேட்புமனுக்களில் ஏதாவது குறைகளைக் கண்டு பிடிச்சா, உடனடியா தள்ளுபடி செஞ்சிடணும்ங்கிறதுதான், கவனிக்கச் சொல்வதன் நோக்கமாம். அதேபோல, எம்.பி. தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு சவாலா இருக்கிற தினகரனின் அ.ம.மு.க. மேலே கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லியிருக்காங்க. குறைந்த பட்சம் 10 வேட்பாளர்களையாவது களத்தில் இருந்து ஓரம்கட்டிவிட்டால், அந்தக் கட்சிகளின் டம்மி வேட்பாளர்களோடு ஈஸியா மோதலாம் என்பதுதான் எடப்பாடியின் வியூகம்.''’
""தேர்தல் களத்தில் சின்னம் ஒதுக்கும் விசயத்திலேயே ஆளுந்தரப்புக்கு ஒரு அணுகுமுறையும், எதிர்த்தரப்புக்கு ஒரு அணுகுமுறையும் தெரியுதே?''’
""பூத் வேலைகளில் ஈடுபடும் அரசு ஊழியர் களும் ஆசிரியர்களும் அரசியல் கட்சிகள் கொடுக்கும் சாப்பாடு ஸ்நாக்ஸை வாங்கக் கூடாதுன்னு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரசாத சாகு சொன்னாலும், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சி களான ம.தி.மு.க.வுக்கு பம்பரம் கிடைக்கலை. விடுதலைச் சிறுத்தைகளுக்கு மோதிரம் கிடைக்கலை. அதேபோல் தினகரனின் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் கிடைக்கலை. நாம்தமிழருக்கு மெழுகுவத்தி கிடைக்கலை. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்துவிட்டது. புதுவையில் உள்ள அங்கீகாரத்தை வச்சி தமிழக பா.ம.க.வுக்கு மாம்பழம் உறுதியாயிடிச்சி.''
""இதைப் பற்றி பப்ளிக்லேயே பேச்சு இருக்கே.. மீம்ஸ் எல்லாம் பார்த்திருப்பியே..''’
""தலைவரே, யாதவ சமூக மக்களிடம் செல்வாக்கு பெற்றவரான ராஜ.கண்ணப்பன், தி.மு.க.வுக்கு ஆதரவா களமிறங்கி, தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் பண்ணப்போறேன்னு அறிவிச்சதால் அவர் பிரச்சாரத்துக்குப் போகும் ஊர்களுக்கெல்லாம் அதே சமூகத்தைச் சேர்ந்த மாஜி மந்திரியான கோகுல இந்திராவைப் பிரச்சாரத்துக்குப் போகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதேபோல் 40+18 லும் நிற்போம்ன்னு அறிவித்த ச.ம.க. சரத்குமாரிடம் தொடர்ந்து நடந்த டீலிங்கிற்குப் பிறகு, 24-ந் தேதி இரவு 9 மணியளவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் அமைச்சர் ஜெயக்குமாரும், கொட்டிவாக்கத்தில் இருக்கும் சரத்தின் வீட்டிற்குச் சென்ற னர். உள்ளாட்சித் தேர்தலில் 10% இடம் உங்களுக்கு ஒதுக்கப்படும்ங்கிறது உள்பட பல உத்தரவாதங்களை சரத்திடம் கொடுத்திருக்காங்க. வாக்குறுதி காப்பாற்றப்பட்டால், சரத் களம் இறங்குவாராம்.''
""ஜெ’அண்ணன் மகள் தீபாவும் அ.தி. மு.க.வை ஆதரிப்பதா அறிவிச்சிருக்காரே?''’
""தனித்து நிற்பதா தன் அமைப்பில் உள்ள ராஜா உள்ளிட்ட ஒரு சிலரிடம் விருப்பமனு வாங்கிய தீபா, அ.தி.மு.க.வை ஆதரிப்போம்ன்னு 23-ந் தேதி அறிவிச்சார். இதை ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மணிகண்டன் ஆகிய அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடிகிட்ட உற்சாகமா சொன்னாங்க. எடப்பாடியோ, தப்பித்தவறி அந்தம்மாவையும் அவங்க தரப்பையும் நம்ம மேடையில் ஏத்திறாதீங்க. நாம ஜெயிச்சா, அது தன்னாலதான்னு அவங்க தமுக்கடிப்பாங்க. அப்படிப்பட்ட அவமானம் நமக்கு வேணாம்னு சொல்லிட்டாராம்.''’
""தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோட்டில் தனிச் சின்னத்தில் நிக்கப்போறேன்னு அறிவிச்ச ம.தி.மு.க., இப்ப தி.மு.க. சின்னத்தில் நிக்கப்போறதா தெரிவிச் சிருக்கே?''’
""இதன் பின்னணியைச் சொல்றேங்க தலைவரே, ஈரோடு மாவட்ட தி.மு.க. பிரமுகர்கள் கட்சித் தலைவரான ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு, உதயசூரியனைத் தவிர மத்த சின்னத்துக்கு ஓட்டுக்கேட்க எங்களுக்குத் தயக்கமா இருக்கு. அதோட புதிய சின்னத்தை தேர்தலுக்குள் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது கஷ்டம். அதனால் ஈரோட்டில் முடிவு சரியில்லாமல் போனால் எங்களைப் பொறுப்பாக்காதீர்கள்ன்னு சொன்னாங்க. ஸ்டாலின் இதை அப்படியே வைகோவிடம் சொல்ல, அவர், ஈரோடு வேட்பாளரான கணேசமூர்த்தி, எங்கள் கட்சியின் பொருளாளராக இருப்பவர். அவர் தி.மு.க. சின்னத்தில் நின்றால் எங்கள் கட்சிப் பதவியில் அவர் நீடிப்பதில் சட்டச் சிக்கல் ஏற்படுமேன்னு தயங்கினார். உடனே இது குறித்து வழக் கறிஞர்களிடம் ஆலோசிச்சார் ஸ்டாலின். அவர்கள், ம.தி.மு.க.வின் தேர்தல் ஆணைய அங்கீகாரம், ஏற்கனவே பறிபோய்விட்டது. அதனால் கணேசமூர்த்தி தி.மு.க. சின்னத்தில் நிற்பதால் எந்த இழப்பும் இல்லைன்னு சொன்னாங்க. இது மீண்டும் வைகோவிடம் சொல்லப்பட, இதன் பிறகே உதயசூரியன் சின்னத்தில் போட்டி என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கு.''’
""சின்னம் பிரச்சினையெல்லாம் சின்னப் பிரச்சினையாகி, நயன்தாரா விவகாரம் பேரலையாயிடிச்சே தி.மு.கவுக்குள்ளே?''’
"ஆமாங்க தலைவரே, "கொலையுதிர்காலம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் தி.மு.க. பேச்சாளருமான ராதாரவி, நயன்தாராவைப் பற்றி குறிப்பிட்டுப் பேச ஆரம்பிச்சி, அதற்கப்புறம் பொதுவா சினிமா துறை சார்ந்து அதிரடியா பேசினாரு. அது சமூக ஊடகங்களில் வைரலாக, நயன்தாராவுக்காக டைரக்டர் விக்னேஷ் சிவன் ராதாரவியை கண்டிச்சாரு. தேர்தல் நேரத்தில் இது வில்லங்கத்தை உருவாக்கிடும்ங்கிறதால, தி.மு.க ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, ராதாரவியை சஸ்பெண்ட் பண்ணிடிச்சி.''
""இந்த நடவடிக்கைக்காக ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவிச்சி அறிக்கை விட்டிருக்காரே.''
""நயன்தாராவுக்கு வெல்கம், ராதாரவிக்கு குட்பைங்கிற இந்த நடவடிக்கையும் அதற்கான நன்றியும்.. தி.மு.கவுக்குள் பேரலையா மாறியிருக்கு. ராதாரவி ஒரு சினிமா விழாவில் பேசியது தொடர்பா விளக்கம் கேட்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாமான்னும், நயன் தாராவுடன் படங்களில் நடித்த நடிகர் உதயநிதி தேர்தல் மேடைகளில் பேசுவதுகூடத்தான் சமூக ஊடகங்களில் சர்ச்சையாகுது. அதனால அவர் மேலே நடவடிக்கை எடுப்பாங் களான்னும் விமர்சனங்கள் வருது. ராதாரவியோ நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் கிளப்பிய வதந்தி அதுன்னு சொன்னதோடு, நயன்தாரா கிட்டேயும் விக்னேஷ் சிவன்கிட்டேயும் வருத்தம் தெரிவிச்சிக்கிறதா பேட்டி கொடுத்திருக்காரு. ஆனாலும் ராதாரவிக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கண்டனம் தெரிவிச்சிருக்காங்க.''’
""நயன்தாராவுக்கு ஆதரவா கமல் குரல் கொடுத்திருப்பதோடு, தி.மு.க.வின் நடவடிக் கையையும் வரவேற்றி ருக்காரே?''
""அதனால்தான் தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சியின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், எதிர்த் தரப்புக்கு சாதகமாகிடக் கூடாதுன்னு தி.மு.க.வில் ஒரு தரப்பு சொல்லுது. கமலுக்கும் ராதாரவிக்கும் பலவித உரசல்கள் உள்ள நிலையில் அவர் இதில் கருத்து சொல்றாரு. அதுபோல, ஏற்கனவே மீ டூ விவ காரத்திலிருந்து ராதாரவி மீது விமர்சனம் வைக்கும் சின்மயி தரப்பும் இந்த விவகாரத்தில் பொங்கியிருக்கு. ஆனா, இந்த மீ டூ குரூப்பெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன் கொடூரத்துக்காக வெளியே வரலை. கனிமொழி பற்றி, குஷ்பு பற்றி இன்னும் பல அரசியல்பெண்கள் பற்றி அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள் விமர்சிச்சப்ப கண்டனம் தெரி விக்கலை. அப்படிப்பட்டவங்களுக்கு, நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி மீது தி.மு.க. எடுத்த நடவடிக்கை பர்சனல் பகையைத் தீர்க்க வாய்ப்பா அமைஞ்சிடிச்சின்னும் சொல்றாங்க.'
_________
இறுதிச்சுற்று!
ஏடாகூட சுப்பிரமணிய சாமி!
பா.ஜ.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான சுப்ரமணிய சாமி, கடந்த 24—ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அதில் அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையை சீரியசா எடுத்துக்க வேண்டியதில்லை. நீட் தேர்வை ரத்து பண்ணமாட்டோம், எட்டு வழிச்சாலையை கொண்டு வருவோம், ராஜீவ்காந்தி வழக்கில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யமாட்டோம். மத்திய அரசின் துணையோடுதான் நீரவ் மோடி, மல்லையா போன்றவாள் வெளிநாட்டுக்குப் போனா. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், வந்தா ஜெயிலுக்குப் போயிருவார் என ஏடாகூடமாக பேட்டி கொடுத்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வலி யுறுத்தப்படும், 7 பேர் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்பது போன்ற பல வலியுறுத்தல்களை அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ள இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும், சாமியின் பேட்டிக்கு பா.ஜ.க. தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
போட்டியிடாமல் பல்ஸ் பார்க்கும் கமல்!
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 21 எம்.பி.தொகுதிகளின் வேட்பாளர் கொண்ட முதல் பட்டியலை, கடந்த 20—ஆம் தேதி சென்னையில் அறிவித்தார் கட்சியின் தலைவரான கமல். தான் போட்டியிடு வேனா இல்லையா என்பது குறித்து, 24—ஆம் தேதி கோவையில் தெரிவிப்பதாகவும் சொல்லியிருந்தார். அதேபோல், கடந்த 24—ஆம் தேதி, 19 எம்.பி.தொகுதிகளின் வேட்பாளர்களையும் 18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வேட்பாளர்களை யும் அறிவித்துவிட்டு, இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார். தலைவரே தேர்தலில் போட்டியிட்டால் தான் கட்சிக்கு தெம்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ம.நீ.ம. நிர்வாகிகளும் தொண்டர்களும் இருந்தனர். ஆனால் கமலோ, "நான் பல்லக்கில் போக விரும்ப வில்லை. மற்றவர்களை பல்லக்கில் தூக்கிச் சுமக்கவே விரும்பு கிறேன்'' என விளக்கம் தந்தார். "இந்தத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பொறுத்து தான் அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்பதால், கவனமுடன் பல்ஸ் பார்க்கும் விதமாகத் தான் கமல் போட்டியிடவில்லை'' என்கிறது ம.நீ.ம.வின் உயர்மட்டம்.
-பரமு