"ஹலோ தலைவரே, விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டனை காவல்துறையினர் சென்னையில் தேடிப்பிடிச்சி என்கவுண்டர் பண்றாங்க. ஆள் மாறாட்டம் மூலம் மும்பையில் நீட் தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் வாங்கிய சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவை திருப்பதிக் குப் போய் குடும்பத்தோட வளைச்சி மடக்கறாங்க. ஆனால் அதே சென்னை யில் இருக்கும் பள்ளிக்கரணையில் ’பேனர் மூலம் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணைக் கொன்ற ஆளும்கட்சிப் பிரமுகர் ஜெயகோபாலை மட்டும் நம்ம போலீஸால் துப்புதுலக்கிப் பிடிக்கமுடியலை.''’
""ஆமாம்பா நீதிமன்றமே இது பற்றிக் கேள்விகளை எழுப்பியிருக்கே?''
""உண்மைதாங்க தலைவரே, இது தொடர்பான வழக்கை நீதியரசர்களான சத்யநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்சின் முன் ஆஜரான அரசுத் தரப்பு, நாங்கள் லாரி ஓட்டுநரைக் கைது செய் திருக்கிறோம். ஏரியா காவல்துறை ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று அடுக் கியது. ஆனால் நீதியரசர்களோ, இந்த வழக்கில் லாரி டிரைவர் ஒன்றும் முக்கிய குற்றவாளி இல்லையே, உங்கள் நடவடிக்கை, கீழ் நிலை அதிகாரிகள் மீது மட்டும்தான் பாயுமா? குற்றவாளி ஜெயகோபால் எங்கே இருக்கிறார்? அவரை யார் தலைமையிலான டீம் தேடுகிறது. எப்படித் தேடுகிறீர்கள்? துண்டை விரித்து வலைவீசித் தேடுகிறீர் களா?’ என்றெல்லாம் கிண்டல் தொனிக்கக் கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். இதனால் திரிசங்கு நிலையில் இருக்கிறது போலீஸ். குற்றவாளியை நெருங் கினால் அமைச்சர்களின் பொல்லாப்பைச் சந்திக்க வேண்டும். கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தாக்குப்பிடிக்கவேண்டும். அதனால் விழி பிதுங்கிப்போய்க் கைபிசைகிறது காவல்துறை. குற்ற வாளியோ போலீஸுக்குத் தொடர்ந்து ’தண்ணி’காட்டறார்''’
""போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி, இப்ப யாருக்குத் தண்ணி காட்டிக்கிட்டு இருக்கார்?''’
""முதல்வர் எடப்பாடி, தண்ணீர் மீது ஏற்பட்ட திடீர் கரிசனத்தால் தமிழகத்துக்கும் கேரளத்துக் கும் ஒருசேர தண்ணி காட்டிக்கிட்டு இருக்கார். அண்மையில் அவர் கேரள முதல்வர் பினராய் விஜயனைத் தொடர்புகொண்டு, நதி நீர்ப்பிரச் சினைப் பற்றிப் பேச உங்களை நேரில் சந்திக்க விரும்பறேன்னு சொல்லியிருக்கார். இதைக் கேட் டதும் உற்சாகமான பினராய் விஜயன், வாங்க.. வாங்க உங்களைச் சந்திச் சிப் பேச நானும் ஆவ லோடு காத்திருக்கேன்னு சொன்னதோட, எங்க மாநிலத்தில் பெய்யும் மழை நீரில் பாதி நீர், விரயமாப் போவுது, இல் லேன்னா வெள்ளமா ஊரை அழிக்குதுங்கிற கவலை என் மனசை வருத்துது. அதனால் நாம உடனே சந்திச்சிப் பேசுவோம்னு அழைச் சிருக்கார். எடப்பாடி யோ, எங்களுக்கு இப்ப தண்ணியை விட அந்நிய தொழில் முதலீடு முக்கி யம். அதனால் அது தொடர்பா நான் இப்ப வெளிநாட்டுக்குப் போறேன். ரிடர்ன் ஆன தும் உங்களைச் சந்திக் கிறேன்னு சொல்ல, அப்படியே ஆகட்டும்னு பினராய் விஜயன் சம்மதம் சொல்லியிருக்கார். இந்த நிலையில்தான் 25-ந் தேதி கேரள முதல்வரை சந்திக்க எடப்பாடி கேரளாவுக்குப் போனார். கூடவே அமைச்சர் வேலுமணி, துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன், தலை மைச் செயலாளர் சண்முகம் உள் ளிட்டவர்களையும் அழைச்சிக்கிட்டுப் போனார். அங்க மஸ்கட் ஓட்டலுக் குச் சென்ற எடப்பாடியை கேரள முதல்வர் நேரில் வந்து வரவேற்றது அவரோட எளிமையைக் காட்டுச்சு''’
""பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?''’
""இருதரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் புடைசூழ நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, பரம்பிக்குளம் ஆழியாறு தொடர்பான பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அப்பவும் பினராய் விஜயன் முதல்வர் எடப்பாடியைப் பார்த்து, எங்கள் மாநிலத்தின் மழை நீரில் பெரும்பகுதி விரயமாவது வருத்தத்தைக் கொடுக்குது. இயற்கையின் கொடை யாகக் கிடைக்கும் நீர், மனித சமுதாயத்திற்குப் பலனளிக்காமல் போகுதேங்கிற உளைச்சல் எனக்கு இருக்குன்னு அழுத்திச் சொன்னார். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, இரு மாநில நதி நீர்ப்பிரச் சினை குறித்து ஆராய, இரு மாநிலத்தையும் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவை அமைக்க லாம்ன்னு தீர்மானிக்கப்பட்டிருக்கு. இந்தக் குழு, கடந்தகாலப் பிரச்சினைகளை எல்லாம் பார்க்காமல் நிகழ்காலத்துக்குத் தீர்வு சொல்லும் விதத்தில் ஆய் வறிக்கையைத் தரணும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கு. அமைக்கப்படும் குழுவின் முதல் ஆலோ சனைக் கூட்டம் சென்னையில் நடக்கும்ன்னு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொல்றாங்க.''’
""முதல்வர் எடப்பாடிக்கு தண்ணீர்ப் பிரச்சினை பற்றிய ஞானோதயம் எப்படி திடீர்ன்னு வந்தது?''’
""அதுக்கும் காரணம் இருக்குங்க தலைவரே, எடப்பாடியின் ஆஸ்தான ஜோசியர் ஒருவர், உங்கள் ராசிப்படி தண்ணீரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கு. நீங்கள் முதல்வராக இருப்பதால், தண்ணீர்ப் பிரச்சினையில் கவனம் செலுத்த லைன்னா, அது தொடர்பான பிரச்சினையில் சிக்கி மூச்சுத்திணற வேண்டியிருக்கும்னு சொல்லியிருக் கார். இதேபோல் இன்னும் சிலரும் சொன்ன தால்தான், தமிழகத்தில் எந்தெந்த வகையில் எல்லாம் தண்ணீர்ப் பிரச்சினை இருக்குன்னு யோசிக்கத் தொடங்கிட்டார் எடப்பாடி. முதற் கட்டமா தமிழக ஏரி, குளங்களைக் குடிமராமத் துங்கிற பேரில் தூர் வாருவதில் அக்கறை காட்டினார். இப்ப கேரளவோடு நதி நீருக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தறார்.''
""குடிமராமத்து பற்றி மதுரை கலெக்டர் நடத் திய கூட்டத்தில் விவசாயிகள் குமுறிட்டாங்களாமே?''
""ஆமாங்க தலைவரே... போன செவ்வாய்க் கிழமை மதுரை கலெக்டர் முன்னிலையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. அதில் உசிலம்பட்டி 58-ம் கால்வாய் திட்டம் முடிந்துள்ள நிலையில் பல கண்மாய்களுக்கு தண்ணீர் வர லைன்னும், 33 கால்வாய்கள் எங்கே இருக்குன்னும் தெரியலைன்னு விவசாயிகள் சொன்னாங்க. கண்மாய், குளம், கால்வாய் பராமரிப்புக்காக ஒதுக் கப்படுற பணத்தில் 35% கமிஷனா போயிடுதுன்னும், போன ஆண்டு செல்லூர் கண்மாயில் குடிமராமத்து பண்ணிட்டு இந்த ஆண்டும் அதே கணக்கை எழுதி, மொட்டை அடிச்ச தலையிலேயே முடி வெட்டியிருக்காங்கன்னும் குமுறியிருக்காங்க.''
""ஆக, கமிஷன் வெள்ளத்தில் குடிமராமத்து பணிகள் புரளு துன்னு புரியுது.... சிறையில் இருக் கும் ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிச்சிருக் காரே?''’
""உண்மைதாங்க தலைவரே, திகார் சிறையில் இருக்கும் ப.சிதம் பரம், உட்கார நாற்காலியோ, படுக்கத் தலையணையோ கொடுக்கப்படாத தால் முதுகு வலியில் அவ திப்பட்டுக்கிட்டு இருக் கார். இதில் கட்சிக்காரர் கள் அலட்சியம் வேறு அவரை மன உளைச்ச லில் ஆழ்த்தியிருக்கு. இந்த நேரத்தில் ப.சி.க்கு, பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத் தை அனுப்பியிருக்கார். அதில் "எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தரட்டும்'ன்னு சொல்லியிருப்பதோட "இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்"னும் குறிப் பிட்டிருக்கார். ஜெயிலில் அவதிப்பட்டுகொண்டிருக் கும் தன்னை, மோடி கிண்டலடிப்பதாக நினைத்த ப.சி., மோடி பாணியிலேயே "பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம். துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசின் விசாரணைத் துறைகள் அதற்கு தடையாக இருக்கின்றனவே?' என்று கிண்டல் தொனிக்க டிவிட்டரில் பதில் கொடுத்திருக்கிறார். இந்த இருவரின் தகவல் பரிமாற்றத்துக்கிடையில் இழையோடும் நகைச்சுவை நயம், அரசியல் தாண்டி பலராலும் ரசிக்கப்படுகிறது.''’
""மோடி தமிழகத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சியைப் புறக்கணிச் சிட்டார்ன்னு தகவல் வருதே''’
""விபரமாச் சொல்றேங்க தலைவரே, இந்தியக் கப்பல் துறை, நம்ம தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி, "வராஹா' என்ற போர்க்கப்பலை தயாரித் திருக்கிறது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவுக்கு மோடியை அழைத்தபோது, எனக்காகக் காத்திருக்க வேண் டாம். துறை அமைச்சரான ராஜ்நாத்சிங்கை அழைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள்னு சொல்லிவிட்டார். அதனால், போன 25-ந் தேதி அந்த நிகழ்ச்சியை ராஜ் நாத்தை வச்சே நடத்தி முடிச்சிட்டாங்க. இதில் இன்னொரு கூடுதல் விசயம் என்னன்னா, இந்த நிகழ்ச்சிக்காக முதல் நாளே சென்னை வந்து கவர்னர் மாளி கையில் ஹால்ட் அடிச்ச ராஜ்நாத் சிங்கை சந்திச்ச எடப்பாடி, நான் நதி நீர்ப்பிரச்சினை பற்றிப் பேச நாளை கேரளா போவதால், கப்பல் விடும் விழாவில் கலந்துக்க முடியலை. எனக்குப் பதில் ஓ.பி.எஸ். கலந்துக்குவார்ன்னு சொல்ல, அது ராஜ்நாத்சிங்கிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்துச்சாம். இந்த சந்திப்பின் போது, சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கான கட்டிடங்களைக் கட்ட, அவற்றின் அருகே இருக்கும் பாதுகாப்புத் துறைக் குச் சொந்தமான இடத்தைக் கேட்டு, கோரிக்கை மனு ஒன்றையும் ராஜ்நாத்சிங்கிடம் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி.''
""தமிழக பால்வளத் துறையில் ஏகக் களேபரம் நடக்குதாமே?''’
""ஆமாங்க தலைவரே, ஆவின் நிறுவன சேர்மன் பதவியைக் கைப்பற்ற மாஜி மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்துவரும் போர்ஜரி வேலைகளைப் பற்றியும், அது தொடர்பாக அவர் மீது வானாபுரம் பால் சொஸைட்டித் தலைவர் பச்சமுத்து வழக்கு போட்டி ருப்பதைப் பற்றியும் ஏற்கனவே நக்கீரன் விரிவாகவே எழுதியிருந்தது. இதனால் பச்சமுத்து மீது கடுப்பான அக்ரி கிருணமூர்த்தியின் ஆட்கள், அவரை கடத்திச் சென்று வழக்கை வாபஸ் பெறச் சொல்லி கடுமையாக மிரட்டி யிருக்கிறார்கள். இதில் மிரண்டு போன அவர், நேரா நீதிமன்றத்துக்குப் போய், வழக்கை வாபஸ் பெறுகிறேன்னு மனு கொடுத்திருக்கார். இதையறிந்து கொதிப்படைந்திருக்கும் திருவண்ணா மலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கள் அக்ரிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருப்பதோடு, அவர்களில் சிலர் அவர் மீது வழக்குத் தொடுக்கவும் தயாராகி வருகின்றனர். ஆவின் துறையே கொதித்துப் போய் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.''’
""எடப்பாடி வெளிநாட்டு டூரை முடிச்சிக்கிட்டு வந்து மூன்று வாரத்துக்கு மேல் ஆகியும், அது தொடர்பான சர்ச்சைகள் ஓயலையேப்பா?''’
""உண்மைதாங்க தலைவரே, இந்த டூரின் போது கடைசியா எடப்பாடி துபாய்க்குப் போனார். வழக்கமா தமிழ்நாட்டில் இருந்து எந்த வி.ஐ.பி. போனாலும் அங்குள்ள தமிழர் அமைப்புகள் அவர்களை தடபுடலா வரவேற்கும். அந்த வகையில் அங்குள்ள தமிழ் அமைப்பினர் எடப்பாடியை வரவேற்க ஆசைப் பட்டிருக்காங்க. ஆனால் அவர்களை இங்கிருந்து போன அதிகாரிகள் நெருங்கவே விடவில்லையாம். அங்கிருந்த வட இந்திய பிரமுகர்களை மட்டும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் வழிகாட்டுதலின் படி சந்திச்சிருக்கார் எடப்பாடி. அதே சமயம் இங்கிருந்து போன ஐ.ஏ.எஸ். அதிகாரியான கார்த்திகேயன், ஒரு திடீர் தமிழ்ச் சங்கத்தை அங்கே ஆரம்பிச்சி, அதன்மூலம் எடப் பாடியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கார். அப்படி சந்திக்கப்போனவங்க கையில் ரெட்டை இலைச் சின்னம் வச்சிருந்தாங்க.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல் றேன். அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமான கரிகாலன் என்பவரும் அவர் தம்பி கருப்பையாவும் தமிழகம் முழுக்க அத்துமீறி மணல் எடுத்து, இஷ்டம் போல் கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க. இப்ப அந்த கரிகாலன் சிங்கப்பூரில் ஒரு நட்சத்திர ஓட்டலை சைலண்டா வாங்கியிருக்காராம்''’
கோட்டை காதல்!
தமிழக அமைச்சருக்கும் அவர் துறை சார்ந்த பெண் உயரதிகாரிக்கும் சமீபகாலமாக காதல் மலர்ந்து, அவர்கள் சிறகடித்துப்பறக்கும் விவகாரம்தான் கோட்டை வட்டாரத்தை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது. இந்த விவகாரம் டெல்லி வரை பரவிய நிலையில், இது குறித்து தமிழக அரசின் உயரதிகாரியிடம் டெல்லி விசாரித்துள்ளது. அப்போது, "இந்த காதல் விவகாரம் சம்பந்தப்பட்ட இருவரின் தனிப்பட்ட விசயம். அதனை அவர்கள் அவர்களது சொந்த வீட்டில் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். துறைசார்ந்த அமைச்சக அலுவலகத்திலோ, அதிகாரியின் அலுவலகத்திலோ அந்த காதல் கண்றாவிகளெல்லாம் இருக்கக் கூடாது. அப்படி நடப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. அதனால், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை கண்டித்து வையுங்கள்' என கறாராக சொல்லியிருக்கிறதாம் மத்திய அரசு.
____________
இறுதிச்சுற்று
சின்மயானந்த் வெளியே!… மாணவி உள்ளே…!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த மாணவியொருவர் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின் சாமியாரும் மூன்று முறை மக்களவை உறுப்பினருமாக இருந்த சுவாமி சின்மயானந்த் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். இருநாள் சிறைவாசத்துக்குப் பின் உடல்நலத்தைக் காரணம்காட்டி, அவர் மருத்துவமனையில் இருந்துவருகிறார். சின்மயா னந்த்மீது புகார் கொடுத்த மாணவியும், சில மாணவர் களும் சின்மயானந்தை மிரட்டி பணம்பறிக்க முயன்றதாக வழக்குப் பதியப்பட்டு, செப் 24-ல் கைதுசெய்யப்பட்டனர். இந்த கைது சம்பந்தப்பட்ட மாணவியை அச்சுறுத்துவதற்கும் வழக்கை வாபஸ் பெறுவதற்குமே என சில சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சின்மயானந்த் தற்போது பா.ஜ. உறுப்பினர் இல்லை என கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். கட்சிப் பதிவேடுகள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதால், சின்மயானந்த் எப்போதிருந்து கட்சியில் உறுப்பினராக இல்லை என்பதைச் சொல்லமுடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
-க.சுப்பிரமணியன்