"ஹலோ தலைவரே, ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். போஸ்ட்டிங்குகளில் உள்ளுக்குள் குமுறல்கள் இருந்தாலும், மு.க.ஸ்டாலின் அமைக்கும் குழுக்களும் அதில் இடம் பெறுகிறவர்களும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்கள்.''”
"ஆமாப்பா... ... கொரோனா கட்டுப்பாட்டுக்காக சட்டமன்றக் கட்சிகளை உள்ளடக்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அ.தி.மு.க, பா.ஜ.க. உள்பட பல கட்சிகளும் உள்ளடக்கிய அந்தக் குழுவுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. +2 பொதுத் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுப்பதற்கும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் -கல்வியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்திதான் முடிவெடுக்கப்பட்டது.''”
"ஆமாங்க தலைவரே... ... நீட் தேர்வினால் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதை ரத்து செய்வதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் முதல்வர் அமைத்துள்ள குழுவும் முக்கியமானது. 2007ல் கலைஞர் அரசு கொண்டு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதையே பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்பதை ஏ.கே.ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.''”
"அதுபோல மாநில வளர்ச்சிக் குழுவுக்கும் திறமையானவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசின் திட்டக்குழு வின் பெயர், கடந்த ஆண்டே ’மாநில வளர்ச்சி கொள்கைக் குழு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டி ருந்தது. இதன் தலைவர் முதல்வர்தான். அதன்படி, மு.க.ஸ்டாலின் இதன் தலைவர். துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சனை நியமித்திருக்கிறது தி.மு.க. அரசு. இதில் பேராசிரியர் ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பகுதி நேர உறுப் பினர்களாக, ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி தி.மு.க. எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, டி.வி.எஸ். நிறுவனத்தின் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.''”
"இதில் நர்த்தகி நடராஜ், திருநங்கை. அரசாங்கத்தின் குழுவில் திருநங்கைக்கு இடம் கொடுத்ததை, கலைஞர் வழியில் செயல்படும் ஸ்டாலின் அரசுன்னு மூன்றாம் பாலினத்தவர்கள் பாராட்டு றாங்க.''
"தமிழக அரசாங்கத்தின் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவிக்கான நியமனமும் கவனிப்பை பெற்றிருக்குங்க தலைவரே.. தி.மு.க. இளைஞரணியின் துணைச் செயலாளரான அசன்முகமது ஜின்னா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி யான, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமனம் செய் யப்பட்டிருப்பதைப் பலரும் கூர்ந்து கவனிக்கிறாங்க. முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை திறம்பட நடத்த வேண்டும் என்று நினைக்கும் முதல்வர் ஸ்டாலின், அதற்கான இடத்தில் ஜின்னாவை நியமிச்சிருக்காரு. 45 வயதில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கு. ராகிங்கால் படுகொலையான சரிகாஷா வழக்கிலும், கண்ணகி சிலை அகற்றப்பட்ட வழக்கிலும் திறம்பட வாதாடி நீதியை நிலைநாட்டியவர் ஜின்னா. கலைஞர் ஆட்சியில் அடிஷனல் பி.பி.யாக இருந்து பல வழக்குகளை சிறப்பாகக் கையாண்டவர். அமெரிக்காவில் நடந்த சர்வதேச இளம் தலைவர்கள் மாநாட்டில் தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட பெருமையும் இவருக்கு உண்டு. கலைஞரின் திருவாரூரைச் சேர்ந்த ஜின்னாவின் அப்பா வழக்கறிஞர் அசன் முகமது, எமர்ஜென்சி காலத்தில் முரசொலியில் துணை ஆசிரியராக இருந்து கலைஞருக்குத் துணை நின்றவர்.''”
"ஸ்டாலினின் இந்த நியமனங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், செய்தித் துறையில் இருக்கும் அதிகாரிகளில் ஒரு தரப்பினரிடம் ஒருவித புழுக்கம் தெரியு தேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில், தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட செய்தித்துறை அதிகாரிகள் பலரும் ஓரங்கட்டப்பட்டே வைக்கப்பட்டிருந்தார்கள். தி.மு.க.விற்கு எதி ராக செயல்பட்ட அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகளுக்கே அப்போது முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சி வந்த பிறகும் இதே நிலைதான் இன்னும் தொடர்கிறதாம். தி.மு.க. ஆதரவு அதிகாரிகள், தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெறக்கூட முடியாமல் தவிக்கிறாங்களாம். அதே சமயம், அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகளோ, இப்போது முக்கியமான பதவிகளில் அமர, தீவிரமாக லாபி செய்து வருகிறார்களாம். இப்படிப்பட்ட செய்திகளில் அடிபட்டுக்கிட்டு இருக்குது செய்தித்துறை.''”
"அ.தி.மு.க.வினரைப் போலவே, பா.ஜ.க.வினரும் தி.மு.க. ஆட்சியில் பவர்ஃபுல் பதவிகளுக்கு மூவ் பண்றாங்களே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, செய்தித்துறை இணை இயக்குநர் அந்தஸ்த்தில் சேலம் செய்தித்துறையில் பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ஹரிராம், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தீவிரமான பா.ஜ.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான இவருக்கு இரண்டு அண்ணன்கள். அவர்களில் ஒருவர், பா.ஜ.க. முன்னாள் மாவட்டத் தலைவராக இருந்தார். இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ்.சில் தேசிய பொறுப்பில் இருக்கிறார். இப்படிப்பட்ட காவிப் பின்னணி கொண்ட ஹரிராம், இப்போது அரசு போக்குவரத்து கழக அதிகாரியாக நாகர்கோயி லுக்குச் செல்லவேண்டும் என்று துடிக்கிறார். இவருக்காக அவரது நண்பரான அ.தி.மு.க. தளவாய் சுந்தரமும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தியும் ஜரூராகக் கள மிறங்கியிருக்கிறார்களாம்.''”
"வன்னியர் சமூகத்தின் சார்பில் அரசுத் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்குதே?''”
"கடந்த அ.தி.மு.க. அரசு, கடைசி நேரத்தில் வன்னியர் சமூகத்துக்கு 10.5 சத உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணையைப் பிறப்பித்து விட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத் தின் மேற்பார்வையில், தமிழக நீதிமன்றங்களில் உள்ள 3,557 காலி பணி யிடங்களை நிரப்புவதில், இந்த உள் ஒதுக்கீடு கடை பிடிக்கப்படலைன்னு வன்னியர் சமூகத் தலை வர்கள் குற்றம் சாட்டறாங்க. இதைத் தொடர்ந்து, இந்த நிராகரிப்புக்கான விளக்கம் கேட்டும், வன்னியர்களுக் காக உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்னு வற்புறுத்தியும், தலைமை நீதிபதி, தமிழக கவர்னர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு, ’ஏ.கே. நடராஜன் சமூக நற்பணி மன்றத்தின்’ பொதுச் செய லாளர் இராம.நாகரத்தினம் என்பவர், வழக்கறிஞர் உதயகுமார் மூலம் நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறாராம்.''”
"தி.மு.க. மாஜி மத்திய அமைச்சர், புதிய சிக்கலில் சிக்கி இருக் கிறாரே?''”
"அவர் இலங்கையில் 25 ஆயிரம் கோடி முதலீடு செய்திருப்பதாக, அவரை வருமான வரித்துறையும், அமலாக் கத்துறையும் நெருக்கிவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, இது தொடர்பாக அவர், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திச்சார். பா.ஜ.க. தரப்போ, மாஜி அமைச்சர் தங்கள் கட்சியில் இணைந்தால், அவரது சிக்கலைத் தீர்த்து வைப்பதோடு, அவரை கர்நாடக கவர்னராகவும் ஆக்குவதாய் ஆசைகாட்டி வந்தது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் அருகே, ஒரு எண்ணெய் நிறுவனம் தொடங்குவதற்காகத்தான் மாஜி அமைச்சர் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், இலங்கை அரசு, அமைச்சர் வாங்கிப் போட்டிருந்த நிலத்தையும் சேர்த்து, சீனாவிடம் ஒரு பகுதியை ஒதுக்க, அங்கே சீனா தனது சுயாட்சி கொண்ட தனி நாட்டையே உருவாக்கிவிட்டது. இதனால் திகைத்துப்போன மாஜி அமைச்சர், இலங்கையிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரும்படி, தனது டெல்லி செல்வாக்கை வைத்து பா.ஜ.க.விடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்க விரும்பறேன். தி.மு.க. எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களமிறங்கி, தொற்று குறைப்புக்குப் பெரிதும் பாடுபட்டதை கவனித்த கொங்கு மண்டல தி.மு.க.வினர், எங்கள் மண்டலத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும் பொறுப்பாளராக கனிமொழியை நியமிக்கணும்னு கோரிக்கை வச்சி ருக்காங்க. பொள்ளாச்சி விவகாரத்தில், பெண்களைத் திரட்டி கனிமொழி நடத்திய போராட்டங்களைச் சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கையை வச்சிருக்காங்களாம். கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று குறையாத நிலையில், முதல்வரின் உத்தரவுப் படி கனிமொழி அங்கே களமிறக்கப்படலாம்ங்கிறது தான் லேட்டஸ்ட்டாக்.''”
------------------
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் விளக்கம்
கடந்த இதழில் வெளியான ‘ஊழல் அதிகாரிக்கு பதவி’ என்ற கட்டுரைக்கு அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.ஜோதிநிர்மலாசாமி விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
நான் பதிவுத்துறை ஐ.ஜியாக கடந்த 25.9.2019 முதல் 27.10.2020 வரை சற்றேறக்குறைய ஒரு வருடகாலம் பணியாற்றினேன். பெரும்பாலும் கொரோனா காலமாகக் கடந்த இக்கால கட்டத்தில் பத்திரப்பதிவு துறையில் மிக கவனமாகவும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் மக்கள் சேவை ஆற்றினேன்.
தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ள இரு நேர்வுகளும் நான் பணியாற்றிய காலத்திற்கு பின்பாகவும் முன்பாகவும் நிகழ்ந்தவை. தமிழ் நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப் பட்ட கோயம்பேட்டில் உள்ள மதிப்புமிகு நிலத்தை அபகரிக்க சிலர் முயன்றதும், அதற்காக மிகப் பெரிய அளவில் எனக்கு நெருக்கடி வந்ததும் உண்மை தான். ஆனால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலர் களிடம் உரிய ஆலோசனை நடத்தி அரசு நிலத்தை தனி நபர் பெயரில் பதியவிடாமல் கவனம்கொண்டேன். நான் ஐ.ஜி. பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்நிலம் குறித்த பதிவு நடந்திருக்கிறது என்பதையும், அதன் பின்னர் அப்பதி வினைச் செய்த துணைப்பதிவாளர் தென் மாவட்டத் திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதையும் தற்போது தங்கள் பத்திரிகை கட்டுரை வெளியான பின்பு அத்துறையில் விசாரித்து அறிந்து கொண்டேன். நான் மாறுதலாகி வந்தபின் நடந்தவற்றை நான் பணியாற்றிய காலகட்டத்தில் நடந்ததாக கூறியிருப்பது ஆதாரமற்றது.
அடுத்ததாக, விருகம்பாக்கத்தில் ஒரு பில்டருக்கு சாதகமாக பதிவுகள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் 2017-ஆம் ஆண்டு, அதாவது நான் ஐ.ஜி.யாக பதவியேற்பதற்கு முன்பாக நடைபெற்ற சில பதிவுகள் ஆகும். எனது பணிக்காலத்தின்போது நடைபெறாத நேர்வுகளை நான் நேர் கொண்டு நடத்திய தாக உண்மைக்கு புறம்பான செய்தியாக தங்களது பத்திரிகையில் பிரசுரித்திருப்பது எனது நேர்மையை வலிக்கச் செய்கிறது. விதிமுறைகளை மீறி எந்தவொரு செயலை யும் நான் எந்த ஒரு பணியின்போதும் செய்ததில்லை. நான் இதுவரை பணி யாற்றியுள்ள எந்தவொரு மாவட்டத்திலும் எந்தவொரு பணியிடத்திலும் நான் சேவை செய்த மக்களிடமோ என்னுடன் பணி யாற்றிய அலுவலர்களிடமோ யாரிடம் வேண்டு மானாலும் யார் வேண்டுமானாலும் விசாரித்து எனது நேர்மை குறித்து அறிந்து கொள்ளலாம்.
நான் ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பில் நேர் மையின் வீரிய துணையோடு இன்னமும் உள்ளார்ந்த உணர்வோடு மக்கள் பணியாற்ற உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் -என விளக்கம் தந்துள்ளார் ஜோதிநிர்மலாசாமி. நம்முடைய கட்டுரையில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்பதால் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் விளக்கத்தையும் பதிவிட்டுள்ளோம்.
-ஆ.ர்.