ஹலோ தலைவரே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், எல்லாப் பக்கமும் இன்னும் கூட்டணி இழுபறிகள் நீடிக்குது'' ’’
""ஆமாம்பா, காங்கிரஸோடு தி.மு.க. இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும், தொகுதி எண்ணிக்கை இரு தரப்புக்கும் இடையில் நந்தியா நிக்குதே'' ’’
""உண்மைதாங்க தலைவரே, காங்கிரசுக்கு கணிசமான அளவுக்கு சீட் வேணும்ன்னு ராகுல்காந்தி ஒரே பிடியா நிக்கிறதால்தான் இழுபறின்னு, அவங்க தரப்பே சொல்லுது. இங்கே தென் மாவட்டங்கள்ல சுற்றுப்பயணம் செய்த ராகுல், குற்றாலத்தில் உள்ள இசக்கி ரெசார்ட்டில் தங்கியிருந்தார். அங்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை செய்தார். அப்ப அவங்க, "நம் கட்சியில் இருக்கும் சிலரே, தி.மு.க.வுக்கு சாதகமான மன நிலையில் இருக்காங்க. அவங்க தி.மு.க.வின் பி டீம் மாதிரியே செயல்படறாங்க. அதனால்தான், தி.மு.க.வும் நமக்குக் குறைவான சீட்டுகளைக் கொடுத்து, நம்மை தங்கள் பக்கம் உட்கார வச்சிக்கலாம்ன்னு நினைக்கிது'ன்னு ராகுலிடம் செமையா போட்டுக் கொடுத்துட்டாங்க'' ’’
""இதுக்கு ராகுலின் ரியாக்ஷன் என்ன?'' ’’
""இதைக்கேட்டு டென்ஷனான ராகுல், மாநில நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, "என்ன பேச்சு வார்த்தை நடத்தறீங்க? தி.மு.க. நம்மை ஆரோக்கியமா அணுகினால், 35 சீட்டு களுக்கு ஒத்துக்கங்க. அதற்கும் கீழே குறைக்க அனுமதிக்காதீங்க. தி.மு.க.விடம் காங் கிரசை அடகு வைக்கிற மாதிரி நடந்துக்காதீங்க'ன்னு சற்று காரமாகவே சொல்லியிருக்கார். இந்த நிலையில் தி.மு.க.வோ, காங்கிரசுக்கு 12 சீட்தான் தரமுடியும்னு ஆரம்பிச்சி, பிறகு 15, 18-ன்னு கொஞ்சம் கொஞ்சமா உயர்த்தி, கடைசியா 20 சீட்டுக்கு ஒப்புக் குறதுன்னா வாங்கன்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லிடிச்சி. அதே போல், அண்மையில் மறைந்த வசந்த் அன் கோ, வசந்தகுமாரின் குமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் இந்த முறை நாங்கள் நிற்க விரும்பறோம்னு பேச்சு வாக்கில் சொல்லி, மேலும் காங்கிரஸ் தரப்புக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருப்பதா சத்தியமூர்த்தி பவனில் பேச்சு கேட்டது. அதனால் அடுத்து எப்படி மூவ் பண்றதுன்னு நிர்வாகிகள் கூடி ஆலோசிச்சாங்க.''’
""மறுபடியும் பா.ஜ.க. ரஜினியை எதிர்பார்க்குதாமே?'' ’’
""ஆமாங்க தலைவரே, ரஜினியை அண்மையில் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர் உடல் நிலை பற்றி அக்கறையா விசாரிச்சிட்டு, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க., சக்கரம் உடைஞ்ச வண்டியாத்தான் இருக்குது. இப்ப இருக்கும் எடப்பாடிக்கோ, ஓ.பி.எஸ்.சுக்கோ , ஆட்சியைப் பிடிக் கும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. ஜெயலலிதா வாங்கிக்கொடுத்த வெற்றியை வச்சிக்கிட்டு, ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. அதனால், ஆட்சி அதிகாரம் தி.மு.க.வின் கைக்குப் போகாமல் இருக்கணும்னா, நீங்க அ.தி.மு.க கூட்டணியை ஆதரிச்சி, வாய்ஸாவது கொடுக்கனும்ன்னு வலியுறுத்தியிருக்கார். அதேபோல் எடப்பாடித் தரப்பும் ரஜினியை மூவ் பண்ணியிருக்கு. ரஜினியோ, பிடிகொடுக்காமல்... யோசிச்சிட்டு சொல்றேன்னு சொல்றாராம். இதுக்கு அவர் எத்தனை வருசம் யோசிக்கப் போறாரோன்னு அவங்க தரப்பில் இருந்தே கமெண்ட் கிளம்புது.''
""சென்னை வந்த அமித்ஷா, அ.ம.மு.க.வை. அ.தி.மு.க.வோடு இணைக்கனும்ன்னு ரொம்ப அக்கறையா வலியுறுத்திவிட்டுப் போயிருக்காரே?''
""ஆமாங்க தலைவரே, அது பற்றி தனிக்கட்டுரையே நம்ம நக்கீரனில் வந்திருக்குது. அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணைக்கணும்னு எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.முக. தலைவர்களிடம் நள்ளிரவு வரை அமித்ஷா வலியுறுத்தியது உண்மைதான். என்றாலும் அதுக்கு தினகரன் மீதான அக்கறை காரணம் இல்லையாம். இப்படி ஏடாகூடமா ஒரு டிமாண்டை வச்சி, ஒரு திணறலை ஏற்படுத்தி, அதைக் காரணமாகக் காட்டி அ.தி.மு.க.விடம் இருந்து அதிக சீட்டை வாங்கணும்னு நினைச்சி தான் பா.ஜ.க. அப்படி ஒரு தாயத்தை உருட்டிப் போட்டுச்சாம். ஆனால் எடப்பாடி உள்ளிட்டவர்களோ, எங்களுக்கு தினகரனை இணைப்பதால் எந்த லாபமும் இல்லை. அவரால் கஷ்டம்தான் ஏற்படும். அதனால் அவரை நீங்கள் விரும்பினால், உங்கள் கூட்டணியிலோ, உங்கள் கட்சியிலோ அவரை சேர்த்துக்கங்க. அவரை நாங்க சேர்த்துக்காததுக்கு பெனாலிட்டி... எக்ஸ்ட்ரா சீட் வேண்டுமானால் தர்றோம்னு கையெடுத்துக் கும்பிடறாங்களாம். அதனால் இந்தப் பக்கமும் இழுபறிதான்'' ’’
""பா.ஜ.க.வின் அரசியல் சூதாட்டத்தை புதுவையில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸும் வெறுக்க ஆரம்பிச்சிடுச்சே?'' ’’
""ஆமாங்க தலைவரே, என்.ஆர். காங்கிரஸ் தலைவரான ரெங்கசாமி, பா.ஜ.க. தலைமை மீது, குறிப்பாக அமீத்ஷா மீது ஏக கடுப்பில் இருக்கிறார். காரணம், காங்கிரஸ் நாராயணசாமி ஆட்சியைக் கவிழ்த்தால், அடுத்த முதல்வர் வேட்பாளர் நீங்கதான்னு அவருக்கு பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்ததாம். அதை நம்பித்தான் அவரும் களமிறங்கி, பல்வேறு சித்து வேலைகளில் இறங்கினாராம். காரியம் முடிந்த பிறகு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்வோம்ன்னு அமித்ஷா, திடீர் பல்டி அடிச்சிட்டாராம். இந்த நிலையில், புதுவையில் இருக்கும் முப்பது சீட்டு களையும் என்.ஆர்.காங் கிரஸ்-அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா 10 தொகுதிகள் வீதம் பிரிச்சிக்கலாம்ன்னு சொல்கிறாராம் அமித்ஷா. ஆனால் ரெங்கசாமி, எங்கள் என்.ஆர்.காங்கிரஸுக்கு 17 சீட்டைக் கொடுத்துட்டு, 6 ஐ அ.தி.மு.க.வுக்கு கொடுத்துட்டு நீங்க வேணும்ன்னா 7 -ஐ எடுத்துக்கங்கன்னு அமித்ஷாவிடம் சொல்ல, அதெல்லாம் சரிப்படாதுன்னு அமித்ஷா புறக்கணிச்சிட்டாராம். அதனால் பா.ஜ.கவோடு கூட்டணி வைப்பதா? வேண்டாமாங்கிற குழப்பத்துக்கு வந்துட்டாராம் ரெங்கசாமி'' ’’
""மக்கள் நீதி மய்யம் நடிகர் கமலுக்கு எதிரா, அவங்க தரப்பில் இருந்தே முணுமுணுப்பு கேட்குதே?'' ’’
""ஆமாங்க தலைவரே, சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நண்பர்கள் டீம், தொடர்ந்து நடிகர் கமலுக்கு சப்போர்ட்டா இருந்து வந்திருக்கு. இந்த நிலையில் அந்த டீம், வரும் தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் 4 நண்பர்களுக்கு சீட் கொடுங்கன்னு கமலிடம் கோரிக்கை வச்சிருக்கு. கமல் தரப்போ, அதுக்கு ஒரு நன்கொடையை பிக்ஸ் பண்ண, ஷாக்கான அந்த டீம், நம்மிடமே இப்படி கறார் காட்டறாரே. சீட்டுக்குக் நன்கொடை கொடுக்க றவங்க, பிறகு ஊழல் பண்ண மாட் டாங்களா? கமலும், அந்த கரன்ஸி பார் முலாவுக்கு இறங்க லாமா?ன்னு புலம்ப றாங்களாம். இதே போல் அ.தி.மு.க. தரப்பிலும், சீட் வேணும்ன்னு வர்றவங்க 2 சி’யைக் கட்சியின் தேர்தல் பொறுப்பாள ரிடம் கொடுக்க வேண்டும் என்றும், ஒரு வேளை சீட் கிடைக்கலைன்னா, அந்தத் தொகை செய்கூலி சேதாரம் இல்லாமல் திருப்பித் தரப்படும் என்றும் சொல்லுதாம்'' ’’
""சரிப்பா, வன்னி யர்களுக்கு 10.5 சத உள் ஒதுக்கீட்டைக் கொடுத்தது, அ.தி.மு.க.வுக்கு சாதகமா பாதகமானு விவாதம் ஓடிக்கிட்டிருக்கே?'' ’’
""தலைவரே, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்னு முன்கூட்டியே தெரிந்ததால், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை எஸ்.பி.யான ரத்னசபாபதி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமூகத்தினருக்கும் அதைக் கொடுத்தாகனும்ன்னு கொடி பிடிச்சிக்கிட்டு களமிறங்கிவிட்டார். அதோட, முத்தரையர், முக்குலத்தோர், யாதவர் உள்ளிட்ட ஏனைய சமூக அமைப் பினரையும் திரட்டி பிப்ரவரி 15-ந் தேதியே கோவையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். அதேபோல் போன 25-ந் தேதி, திருச்சியிலும் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டி, எங்கள் சமூகத்துக்கும் உள் ஒதுக்கீடு கொடுங்கன்னு கேட்டார். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிரான குரல்தான் அதிகமா எழுந்திருக்கு. உடனே அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர் வேலுமணி, உங்கள் கோரிக்கையை, தேர்தலுக்குப் பிறகு வச்சிக்கங்களேன்னு சொல்லியிருக்கார். ஆனால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கலை. அதனால் தேர்தல் நேரத்தில் இவர்களின் போராட்டக் குரல் ஆளும்கட்சிக்குப் புதிய தலைவலியை உண்டாக்கி இருக்கு'' ’’
""அ.தி.மு.க.வில் இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் இஷிகா பற்றி, சமீபத்தில் நீ சொன்ன செய்தியை இஷிகா மறுக்கு றாங்களேப்பா? பொதுவாழ்வில் உள்ள பெண்கள் பற்றிய தகவலில் ரொம்ப கவனமா இருக்கணும்ப்பா…'' ’’
""தப்புதாங்க தலைவரே, இஷிகா அ.ம.மு.க. தினகரன் தரப்பைச் சேர்ந்த ஒருவரின் மனைவி என்றும், அவர் அ.தி.முக.வில் ஓ.பி.எஸ். மூலம் சேர்ந்து, பாசறைப் பதவியை வாங்கிட்டாருன்னும் எனக்குக் கிடைச்ச தகவலை உங்ககிட்ட சொன்னேன். கணவர் பெயர் ஜெக்கு என்று விளக்கமளித்துள்ள இஷிகா, தனக்கும் தினகரன் தரப்பைச் சேர்ந்த நாம் குறிப்பிட்ட நபருக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்றும், தான் 2011-ல் இருந்தே அ.தி.மு.க.வில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தவறுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன்'' ’’
""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்பா, அண்மையில் எடப்பாடி 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றினார். அடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் அதேபோல் டிரான்ஸ்பர் செய்ய, ஒரு லிஸ்ட்டை அவர் ரெடி செய்தார். அதை அறிவிப்பதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால், பட்டியல் பெண்டிங்கில் இருக்குது. இனி அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம்தான் இருக்கு. அதனால் மாவட்ட கலெக்டர்களைத் தேர்தல் ஆணையம் மாற்ற நினைக்கும்போது, தங்களுக்குத் தோதான அதிகாரிகளை தோதான இடத்துக்கு மாற்ற வசதியா, இப்பவே அந்தப் பட்டியலை, தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விடம் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி.''
________
இறுதிச்சுற்று!
டாப்ஸியை குறிவைத்த பா.ஜ.க.!
திரைப்படப் பிரபலங்களான நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை யினர் கடந்த மார்ச் 3-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
இவர்கள் இருவரும் டெல்லியில் நடைபெற்றுவரும், நூறாவது நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறியவர்கள் ஆவர். அனுராக் காஷ்யப் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட பல விஷயங்களில் அரசுக்கு எதிராக தன் கருத்தை வெளிப்படுத்தியவர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாப் பாடகி ரியானா ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தபோது, இந்தியாவில் எழுந்த எதிர்ப்புக்கு எதிராக, “""ஒரு ட்வீட் உங்களது ஒற்றுமையைக் குலைக்குமென்றால், ஒரு ஜோக் உங்களது மதநம்பிக்கையை அசைக்குமென்றால், நீங்கள் உங்கள் மதிப்பீடுகளைப் பலப்படுத்தவேண்டுமே தவிர மற்றவர்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கக்கூடாது''’என ட்வீட் செய்தார் டாப்சி.
இதற்கு எதிராக, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை ஒருவரது மதிப்பைச் சீர்குலைப்பதற்காகப் பயன்படுத்தக்கூடாதென எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-மணி