"ஹலோ தலைவரே, ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தரப்பை, வழக்குகள், ரெய்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள்ன்னு ஏகப்பட்ட சிக்கல்கள் முற்றுகையிட்டு "பக் பக்'கை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. இருந்தும் அவங்க இந்தச் சிக்கல்கள்ல இருந்து விடுபட "குரு'வைத்தான் நம்பறாங்க.''

""குரு யாரு? எம்.ஜி.ஆரா? ஜெ.வா?''

""இவங்கல்லாம் போஸ்டருக்கும் ஃபங்ஷனுக்கும்தான் உதவுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியும். தங்கள் சிக்கல்கள்ல இருந்து விடுபட அவங்க நம்பறது குரு பகவானைத்தான். அக்டோபர் 4-ந் தேதி, துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயருது. இது ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பலாபலன்களைக் கொடுக்குமாம். அதனால் தங்கள் ராசிப்படி இந்த குருப் பெயர்ச்சி, தங்களுக்கு நல்ல பலன்களைத் தருமான்னு முதல்வர் எடப்பாடி தொடங்கி அவர் அமைச்சரவையில் இருக்கும் அத்தனை மந்திரிமார்களும் ஜாதகமும் கையுமா, ஜோதிடர்களை நோக்கிப் படையெடுத்துக்கிட்டு இருக்காங்க. அண்மையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் முதல்வர் எடப்பாடியும் தனித்தனியா திருப்பதிக்குப் போய், ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செஞ்சிருக் காங்க. அப்ப அங்க இருந்த ஜோதிடர்களிடமும் தங்கள் பதவியின் ஸ்ட்ராங்பற்றிய பலன்களைக் இரண்டுபேருமே கேட்டாங்களாம்.''

""சரிப்பா, அ.தி.மு.க.வின் உண்மையான குருவான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் 30-ந் தேதி நடக்குதே?''

Advertisment

eps-tirupathi""ஜெ. இருந்தப்பவே 2016-ல் இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைத் தொடங்கியிருக்கணும். ஆனால் ஜெ. அதில் ஆர்வம் காட்டலை. அவர் மரணத்துக்கப்புறம் கட்சிக்குள் புகைச்சல் எல்லாம் வந்ததும், எம்.ஜி.ஆர். அவங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாகத் தேவைப்படறார். அதனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் அரசு சார்பில் நடத்தி முடிச்சிட்டு, அதன் நிறைவு விழாவை தலைநகரான சென்னையில் நடத்தறாங்க. இதில் பிரதமர் மோடியை கலந்துக்க வைக்கணும்னு அவங்க பலவிதமா முயன்றும், டெல்லி அசைஞ்சி கொடுக்கலை. அதனால் நாமே நடத்திடலாம்னு இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் முடிவெடுத்துட்டாங்க. அரசு விழா, அதிலும் நிறைவுவிழா என்பதால் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. தினகரன், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி போன்ற ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களும் அழைப்பிதழில் இடம்பிடிச் சிருக்கு. தினகரன் இந்த விழாவில் கலந்துக்கப் போவதில்லைன்னு அறிவிச் சிட்டார். ஸ்டாலினோ, எந்த ரியாக்ஷனை யும் காட்டலை.''

""அவர் திடீர்னு அப்பல்லோவில் அட்மிட் ஆனாரே?''

stalin""26-ந் தேதி இரவு ஸ்டாலின் அப்பல்லோவில் அட்மிட் ஆனார். அவரது வலது தொடையில் இருந்த நீர்க்கட்டி சின்ன சர்ஜரி மூலம் அகற்றப் பட்டிருக்கு. மறுநாள் மதியமே அவர் டிஸ்சார்ஜ் ஆயிட்டார். கலைஞருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை காவேரியை விட்டுட்டு, அவர் ஏன் ஜெ.’வுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோவில் போய் அட்மிட்டாகணுங்கிற "டாக்'கும் பரவலா ஓடுச்சு. எப்படி, குடும்ப மருத்துவர்களின் வழிகாட்டலில் கலைஞர், காவேரியில் அட்மிட் ஆனாரோ, அதேபோல்தான் மருத்துவர்களின் வழிகாட்டலின் படி அப்பல்லோவில் ஸ்டாலின் அட்மிட் ஆனார். ட்ரீட்மெண்ட்தான் முக்கியம். சென்ட்டிமெண்ட் முக்கியமில்லைன்னு டாக்டர்கள் சைடில் சொல்றாங்க''’

Advertisment

""அறிவாலயத்தில் தி.மு.க.வின் ஐ.டி.விங் பொறுப்பாளரான மதுரை பி.டி.ஆர்.தியாக ராஜனின் அறையை ஸ்டாலின் பறித்துக் கொண்டாருன்னும் ஒரு செய்தி வந்ததே?''’

""அறிவாலயத்தில் கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கு ஒரு தனி அறை இருப்பது போலவே, கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கு. அதேபோல்தான் ஐ.டி. விங் பொறுப்பாளர் தியாகராஜனுக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அவர் ரொம்பவும் நவீனப்படுத்தி வச்சிருந்தார். இந்த நிலையில் கட்சியின் முதன்மைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு எந்த அறையை ஒதுக்குறதுங்கிற பேச்சு வந்தப்ப, ஐ.டி.விங் அறை பெரும்பாலும் சும்மாதானே இருக்கு. தியாகராஜனும் தினமும் வர்றதில்லையே... அதனால் அந்த அறையையே பாலுவுக்கு ஒதுக்கிடலாம்னு ஸ்டாலின் சொல்லியிருக்கார். சட்டுபுட்டுனு மாற்றம் நடந்திடிச்சி. அதனால் ஐ.டி.விங்கிற்கு அறிவாலயத்தில் வேறு அறையைத் தயார்செய்து கொடுக்கப் போகிறார்களா? இல்லை, இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் அறையை ஒதுக்கப் போகிறார்களா? இல்லை ஐ.டி.விங்கை ஆன்லைன்லேயே நடத்துங்கள்னு சொல்லப்போகிறார்களான்னு தெரியலை.''’

""சரிப்பா, ஆளுங்கட்சிப் பக்கம் வருவோம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யா தொடர்ந்து சர்ச்சையில மாட்டுறாரே?''

sathya-mla

""ஆமாங்க தலைவரே, சென் னையில் வாக்குரிமை பெற்றிருக்கும் சத்யா, திருப்பதியில் தான் வாங்கியிருக்கும் தன் வீட்டு முகவரியை வைத்து, அங்கும் ஓட்டர் லிஸ்டில் தன் பெயரைச் சேர்த்திருக்காராம். சட்டப்படி இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக் கும் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டும்தான் ஓட்டுரிமை இருக்கணும். அதை மீறி இரண்டு இடத்தில் சத்யா வாக்குரிமை பெற்றிருப்பதை அறிந்த அவரது அரசியல் எதிரிகள், இது குறித்து தமிழகத் தேர்தல் அதிகாரிக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் புகார்க் கடிதங்களை அனுப்பியிருக்காங்க. இதனால் தனது எம்.எல்.ஏ., பதவிக்குப் பாதிப்பு வந்துடுமோன்னு இப்ப சத்யா தரப்பு கை பிசையுது.''’

""அமைச்சர் வேலுமணி தரப்பும் எரிச்சலில் கை பிசையுதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, வட நெமிலிச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கும், கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்துக்கான கான்ட்ராக்ட்டை, அமைச்சர் வேலுமணி, தனக்கு நெருக்கமான சூயஸ் நிறுவனத்துக்குப் பெற்றுத்தர முயற்சிப்பது குறித்து போனமுறை நாம் பேசிக்கிட்டோம். இது முதல்வர் எடப்பாடி கவனத்துக்குப் போனதால், இந்த டெண்டர் சூயஸ் நிறுவனத்துக்குக் கிடைக்காமல் போயிடுச்சி. டெண்டர் சூயஸுக்கு கிடைச்சிருந்தால், 500 ’சி’வரை அதற்கான பயன் கிடைச்சிருக்குமாம். லம்பா கிடைக்க வேண்டி யது கை நழுவிப்போனதில் அவர் தரப்புக்கு எரிச்ச லான எரிச்சலாம். நம்ம நக்கீரன் மூலம் இந்த விவகாரம் வெளியே வந்ததால், நம் மீதும் குரோதப் பார்வை பார்க்குதாம் அமைச்சர் தரப்பு.''’

rajini

""யார் கோபம் யாரை என்ன பண்ணும்? சரிப்பா, ரஜினி தரப்பில் ஏதோ புத்துணர்ச்சி தெரியுதே?''’

""ரஜினி வர்ற அக்டோபர் 5 ஆம் தேதியில் இருந்து 5 நாட்கள், தனது மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியா சந்திச்சிப் பேச இருக்காரு. இந்த செய்தியே அவரது ரசிகர்களுக்கு பரவசத்தை உண்டாக்கியிருக்கு. அதே சமயம் அவர்கள் மத்தியில் அமைப்பு தொடர்பான சில சலசலப்பும் இருக்கு. அதுக்குக் காரணம், ரசிகர் மன்றத்தில் நீண்டகாலமாக இருந்தவர்களே மா.செ.க்களாகவும் ந.செ, ஒ.செ.க்களாகவும் நியமிக்கப்பட்டிருக்காங்க. இவர்களுக்கிடையில் முன்பின் அறிமுகமில்லாத புதிய ஆட்களுக்கு திடீர்னு மாவட்ட பொறுப்பாளர்னு பதவி வழங்கப்பட்டிருக்கு. உதாரணத்துக்கு, புதுக்கோட்டை மா.செ.வாக மன்ற சீனியர் குணசேகரன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் வேலைபார்த்தபடி, எப்போதாவது இங்கு வந்துபோகும் முருக பாண்டியன் என்பவருக்கு, அங்கே மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்காம். அதேபோல் கட்சியில் சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகள் கொடுக்கப்பட்டிருக்காம். மன்றத்தின் மாநில ஒங்கிணைப்பாளரான இளவரசனுக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்குதாம். அதனால் ஒருவருக்கு ஒரு பதவி என்பதையும் ரஜினி உறுதி செய்யணும்னு அவங்க எதிர்பார்க்கிறாங்க. இந்த நிலையில், புதிய நீதிக் கட்சியின் தலைவரும் கல்வியாளருமான ஏ.சி.சண்முகம், டிசம்பரில் ரஜினி, தனது கட்சியின் பெயரை அறிவிப்பார்னு சொல்லியிருக்காரு. ரஜினியோ முதலில் களையெடுப்பு, அப்புறம் கட்சிப் பெயர்ங்கிற முடிவில் இருக்காராம்.''

""நானும் ஒரு விறுவிறுப்பான தகவலைச் சொல்றேன். நிர்மலாதேவி விவகாரத்தில் அவ ரோடு தொடர்பில் இருந்த மாணவிகள்னு 123 பேர் அடிபட்டுச்சு. அந்தப் பெயர்கள், நிர்மலா வின் போன் காலரில் இருந்து தொகுக்கப் பட்டவையாம். அவங்க பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவங்களாம். இந்த விவகாரத்தில் களமிறங்கி யிருக்கும் சி.பி.எம். கட்சி, ஓர் உண்மையறியும் குழு மூலம், முழுமையாக விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றப்போறாங்களாம்.''’

_______________

இறுதிச்சுற்று!

சிலை கடத்தலில் பிரபல தாதாக்கள்!

finalround

பழனி முருகன் சிலை மோசடியைக் கண்டுபிடித்த பிறகு, அதே பழனிக்குச் சென்று மொட்டை போட்டார் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல். சாமி சிலை கடத்தல் வழக்கைத் தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது லேட்டஸ்டாக கிளம்பியிருக்கும் பூதம் ரன்வீர் ஷா. சிலை கடத்தலில் மூளையான தீனதயாளனின் திக் ஃப்ரண்டான ரன்வீர்ஷா, சென்னை -கிண்டியில் பி.எஸ். அப்பாரெல்ஸ் என்னும் பெயரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதோடு சிலைகளை வாங்கி விற்கும் வேலையும் செய்கிறார். 2016-ல் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி சில சிலை களைக் கைப்பற்றியபோது, அதற்கு முறையான ஆவ ணங்கள் இருப்பதாக கூறியதால் அப்போது தப்பித் தார் ஷா. ஆனால் ஷா மீது ஒரு கண் வைத்தபடியே இருந்த பொன்.மாணிக்கவேல், கோர்ட் அனுமதி யுடன் கடந்த வியாழனன்று சோதனை நடத்தியதில் 89 சிலைகளை மீட்டு கும்பகோணத்திற்கு அனுப்பி யுள்ளார். இது குறித்து ஷாவின் வக்கீல் தங்கராசுவிடம் கேட்ட போது, ""சிலைகளை வாங்குவதற்கு லைசென்ஸ் இருக்கு, விற்பதற்கு இல்லை. ரன்வீர் ஷா தலைமறைவாகவும் இல்லை'' என்றார். ரன்வீர் ஷாவை மிரட்டிப் பணம் பறித்த பிரபல ரவுடி சி.டி.மணிக்கும் சிலை கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்பதை போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டதால், ரன்வீர் ஷா எஸ்கேப்பாகி விட்டார்.

-அரவிந்த்