"ஹலோ தலைவரே, அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகியிருக்கு.''’
""ஆமாம்பா, தமிழகம் முழுக்க பரவலா மழைபெய்ய ஆரம்பிச்சிருக்கே?''’
""7-ந் தேதி வாக்கில் கடும் கனமழையா மாறக்கூடும்ன்னும், அது தமிழகத்துக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடும்ன்னும், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக அரசுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்கு. முதல்வர் எடப்பாடி பரபரப்பாயிட்டார். காரணம், போன மாதம் இதேபோன்ற கேரளாவுக்கான ரெட் அலர்ட்டுக்குப் பிறகு கடும் மழை வெள்ளத்தில் மூழ்கி கேரளாவே மூச்சுத் திணறியது. அதனால், 3-ந் தேதி கோட்டையில் அவசர கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி. பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை போன்ற அரசின் முக்கிய துறைகள் அலர்ட் பண்ணப்பட்டிருக்கு. அதேபோல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலகத்தில் இருந்து எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டிருக்கு. இருந்தாலும், ‘"வந்தால் பார்த்துக்கலாம்'ங்கிற மனோபாவமே பல துறைகளிலும் இருக்கு. இது எங்கபோய் முடியப்போகுதோன்னு கோட்டை வட்டாரத்திலேயே முணுமுணுப்பு கேட்குது.''’
""மன்னார்குடித் தரப்பிலும் இப்ப ’தட்ப வெப்பம்’ சரியில்லை போலிருக்கே?''’
""ஆளாளுக்குத் தனி ஆவர்த்தனம் பண்ணிக்கிட்டு இருக்காங்க தலைவரே. அ.ம.மு.க. தினகரனின் நெருக்கமான உறவினரான டாக்டர் வெங்கடேஷும் பண்ணைவயல் பாஸ்கரும் தங்களை மதிக்கிறதே இல்லைன்னும், தங்களிடம் தேவையில்லாமல் அதிகாரம் செய்யிறாங்கன்னும் கட்சிப் புள்ளிகள் பலரும், தினகரனிடம் புகார் சொன்னதால், அவங்க ரெண்டு பேரையும் கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுக்கத் தொடங்கிட்டாரு தினகரன். இது அவரது உறவினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு. தனிக்கட்சி தொடங்கியிருக்கும் திவாகரனோ, தன் கட்சிக்காக ஒரு தொலைக்காட்சிச் சேனலையும் நாளிதழ் ஒன்றையும் தொடங்கும் மும்முரத்தில் இருக்கார். இதற்காக முகமது ரஃபி என்பவரை கட்சியின் செய்தித் தொடர்பாளராக்கி, பொறுப்பைக் கொடுத்திருக்கிறாராம் திவாகரன்.''’
""இதையெல்லாம் சரிபண்ண சசி வெளியில் இல்லாட்டியும், ஜெ.’ மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன்ல நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர் காதுக்குப் பக்காவா போய்டுதாமே?''
""உண்மைதாங்க தலைவரே, ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகறவங்க கொடுக்கும் ரகசிய வாக்குமூலங்கள், சசி தரப்புக்கு அப்படியே வரி பிசகாமல் போய்ச் சேர்ந்துடுதாம். இது அங்கிருக்கும் கோமளா என்கிற கிளர்க் வழியாகத்தான் போகுதோங்கிற சந்தேகம் கமிஷனில் உள்ளவர்களுக்கு எழுந்திருக்காம். இந்த கோமளா பற்றி நக்கீரன் ஏற்கனவே எழுதியிருக்கு. இவர், ஓ.பி.எஸ். ஆதரவாளரான பாபுவின் மனைவியாம். சந்தேக வளையத்தில் தான் சிக்கியிருப்பதையும் தான் விசாரிக்கப்படுவதையும் அறிந்த கோமளா, 10 நாள் லீவு போட்டுட்டுப் போய்ட்டாராம். அதனால், உள்ளே இருந்தபடியே, ஜெ.’ குறித்த விசாரணைகளில் விருப்பம் போல் விளையாடுகிறதாம் சசி தரப்பு.''’
""விளையாட்டுத் துறையிலும் விளையாட்டுகள்’ நடக்குது போலிருக்கே?''’
""சமீபத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஹாக்கி அணி மூன்றாம் பரிசைப் பெற்று சாதனை செஞ்சிருக்கு. இந்திய அணியில் விளையாடிய ஸ்ரீஜேஸ் என்ற வீரரை, தமிழக வீரர்ன்னு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலரான ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழக அரசுக்குப் பரிந்துரைசெய்ய, அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு 20 லட்ச ரூபாய் பரிசை அறிவித்து வாழ்த்தினார் முதல்வர் எடப்பாடி. ஆனால், ஸ்ரீஜேஸ் தமிழ்நாட்டுக்காரர் இல்லை; அவர் கேரளாவைச் சேர்ந்தவர், உள்நோக்கத்தோடு தவறாகப் பரிசு தரப்பட்டிருக்குன்னு, அரசுக்கு ஏகப்பட்ட புகார்கள் போயிருக்கு. இதைப் பார்த்து ஷாக்கான முதல்வர் எடப்பாடி, உடனடியாக ஸ்ரீஜேஸைத் தவறாகப் பரிந்துரை செய்த ரீட்டா ஹரீஸ்தாக்கரை, சர்க்கரைக் கழக ஆணையராக டிரான்ஸ்பர் செய்தார். இருந்தும் புதிய இடத்துக்குப் போகாமல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாய் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திலேயே உட்கார்ந்துகொண்டு ஃபைல்களைக் கிளறிக்கிளறி விளையாடிக் கொண்டிருக்கிறாராம் ரீட்டா.''’
""காங்கிரஸ் கட்சியில் நடக்கும் கோஷ்டி யுத்த விளையாட்டுகள், இப்ப சுவாரஸ்ய கட்டத்தை எட்டியிருக்காமே?''’
""வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை உத்தேசித்து, தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றலாமா செயல் தலைவர்களை நியமிக்கலாமான்னு கட்சியின் சீனியர் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசிச்சது பத்தி போனமுறையே நாம் பேசிக்கிட்டோம். இந்தத் தகவல் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தரப்புக்கும் கிடைத்ததால், தலைவருக்கு இடையூறு தரும்படி செயல் தலைவர்களை நியமிச்சிடாதீங்க. அது தமிழக நிலவரத்துக்குப் பொருந்தாது. இப்பவே ஆயிரத்தெட்டு கோஷ்டிகள் இருக்கு. செயல் தலைவர்களை நியமித்தால், கட்சியில் குழப்பங்களும் அடிதடிகளும் தகராறுகளும்தான் மிஞ்சும்ன்னு, பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் டெல்லித் தலைமைக்கு லெட்டர் அனுப்புறாங்க. இதேபோல் திருநாவுக்கரசரும், ராகுலுக்கு அழுத்தம் கொடுத்துக்கிட்டிருக்கார்.''’
""அது ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழகத்தில் தி.மு.க. அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்ன்னு ப.சி., அழுத்தம் திருத்தமா சொல்லியிருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, கலைஞருக்குத் தோழமை வணக்கங்கிற தலைப்பில் சென்னையில் தி.மு.க. மா.செ. சேகர்பாபு நடத்திய புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், ’தமிழகத்தை இருண்ட மாநிலமாக ஆக்கி வைத்திருக்கும் எடப்பாடி அரசை விரட்ட, தி.மு.க. தலைமையில் இங்கே பலமான கூட்டணி அமையும். அதில் காங்கிரஸும் இருக்கும். இதை எங்கள் கட்சித் தலைமையே என்னிடம் சொல்லியிருக்குன்னு’ கூட்டணி பற்றிய ஊசலாட்டச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு பேசிய முதல் பேச்சிலேயே பா.ஜ.க.வுக்கு எதிரான முழக்கத்தை எழுப்பியதைக் குறிப்பிட்டு இது எங்களை எல்லாம் மேலும் நெருங்க வைத்திருக்கிறது என்று ஸ்டாலினையும் மனம் திறந்து பாராட்டினார். மத்தியில் பா.ஜ.க.வைத் துரத்தியடிக்க, எல்லா மாநிலங்களிலும் பலமான கூட்டணியை அமைக்க நினைக்கும் காங்கிரஸ், எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்தக் கட்சி வலிமையாக இருக்கிறதோ, அதன் தலைமையை ஏற்பதுங்கிற முடிவையும் எடுத்திருக்கு. இது பற்றி சமீபத்தில்தான் நாம் பேசிக்கிட்டோம். அதன் வெளிப்பாடுதான் ப.சி.யின் கூட்டணிப் பேச்சு.''’
""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு முன்னால பெரம்பலூர் பியூட்டி பார்லருக்குள் புகுந்து சத்தியாங்குற பெண்ணை வெளுத்துக் கட்டினாரு தி.மு.க.வைச் சேர்ந்த செல்வகுமார். அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ரிலீஸ் பண்ணியது அதே தி.மு.க.வைச் சேர்ந்த பிரபாகர். அந்த பிரபாகரை தனது அலுவலகத்திற்கு வரச் சொன்ன கட்சியின் வி.வி.ஐ.பி. "ஒங்க கோஷ்டி அக்கப்போரில் கட்சியின் மானத்தை வாங்கிட்டீங்களேய்யா' எனச் சொல்லிக் கொண்டே ஆ...க்ரோசமாக அடி பின்னி எடுத்துட்டாராம்.''’