"ஹலோ தலைவரே, அண்மைக் காலமாவே ஆளுங்கட்சியில் முதல்வர் தொடங்கி பலரும் சாயந்தரம் ஆனாலே போதும், சென்னை உயர்நீதிமன்ற வெப் சைட்டில், மறுநாள் வரப்போகும் தீர்ப்புகளின் பட்டியலைப் பரபரப்போட பார்க்கறாங்க''’

""18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்ப வரும்னு எல்லோருக்கும் பதட்டம் இருக்காதா?''

""எப்படியும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வந்துடும்ங்கிறதால எல்லோருமே’திக் திக்’ மனநிலையிலே இருக்காங்க. இந்த நேரத்தில், வழக்கை விசாரிக்கும் நீதிபதி சத்யநாராயணா, 5 ஆம் தேதிவரை தீர்ப்பைத் தரமாட்டார்ங்கிற ஒரு செய்தி வந்து அவர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருக்கு. காரணம், துணை நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை மும்முரமா நடத்திக்கிட்டு இருக்காராம். அதனால் ஆளுங்கட்சித் தரப்பு கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பிச்சிருக்கு''’

raghul

Advertisment

""இதேபோல், தேசிய அளவில் பா.ஜ.க. தலைமையும், ரபேல் விமான ஒப்பந்த ஊழல் விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் தேர்தல்னு திணறுதே.. பா.ஜ.க.வின் இந்த நெருக்கடிகளை காங்கிரஸ் எப்படிப் பயன்படுத்திக்கப் போவுது?''’

""தலைவரே, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை பல இடங்களிலும் மக்களிடம் வெளிப்படுது. அப்படியிருந்தும் காங்கிரஸுக்குச் சாதகமாக அது இன்னும் மாறலை. அதனால் அந்தந்த மாநிலங்களிலும் இருக்கும் அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, தேர்தல் கூட்டணிகளை அமைச்சிக்கிட்டு, தெளிவாகச் செயல்படணும்னு ராகுல் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கார். ஆனாலும் அவர் வகுக்கும் வியூகங்கள் சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகுது. சில இடங்களில் அது காங்கிரஸின் காலை வாரி விடுது. குறிப்பா சொல்லணும்னா, சத்தீஷ்கர் மாநிலத்தில், அங்கே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக் கூடியதா தலித் மக்களின் வாக்கு வங்கி இருக்கு. இதைக் கருத்தில் கொண்டு, மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணியை வச்சிக்கணும்னு, காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துச்சு. ஆனால் காங்கிரஸில் இருந்து பிரிந்த அஜித்ஜோகியின் சத்தீஷ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியோட மாயாவதி அங்கே கூட்டணியை அமைச்சிக்கிட்டார். இது காங்கிரஸுக்கு ஏற்பட்ட பலமான சறுக்கல். அதேநேரம் மத்தியபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு சாதகமான அலை வீசியபோதும், அங்கு சமாஜ்வாடி, சி.பி.ஐ., சி.பி.எம்., ஆர்.எஸ்.டி உள்ளிட்ட 6 கட்சிகளோடு பலமான கூட்டணியை ஏற்படுத்திக்கிட்டு விறுவிறுப்பா தேர்தலுக்கு ரெடியாகுது காங்கிரஸ்.''’

""தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், என்ன மாதிரி வியூகத்தை வச்சிருக்கு?''’

Advertisment

pc

""தேர்தலுக்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைமையை மாத்தலாமான்னு ப.சிதம்பரம், அசோக் கெலட், அகமது படேல் போன்ற சீனியர் தலைவர்களோடு அண்மையில் ராகுல் ஆலோசனை நடத்தியிருக்கார். அப்ப தி.மு.க.வுடன் கூட்டணி வலுவா அமையணும்னா, மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றணும்ங்கிற குரலும் கட்சியில் இருக்கேன்னு ப.சி.யிடம் ராகுல் கேட்டிருக்கார். அதுக்கு ப.சி., "மாநிலத் தலைவரை மாற்றுவது பற்றி நான் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பலை'ன்னு பட்டும் படாமல் நழுவ, "நீங்களே, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏத்துக்கங்களே'ன்னு ராகுல் கேட்டுக்கொண்டிருக்கார். அதுக்கும் ப.சி., "என்னைக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுக்குத் தலைவராக நியமிச்சிருக்கீங்க. அது தொடர்பான வேலைகளைப் பார்க்கவே எனக்கு நேரம் போதலை. அதனால் என்னை விட்டுடுங்க'ன்னு சொல்லியிருக்கார். அதனால் தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசருக்கு பதில் வேறு ஒருவரை நியமிக்கலாமா? இல்லை, அவரோடு, புதிதாக செயல் தலைவர்கள்ன்னு சிலரை நியமிக்கலாமான்னும் ஆலோசிச்சிக்கிட்டு இருக்கார் ராகுல். அதேபோல் வலுவான கூட்டணியை அமைத்து, எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பணும்ங்கிற விறுவிறுப்பும் ராகுலிடம் இருக்கு.''’

""பா.ஜ.க.வுக்கு எதிரா யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு, ஆண்டி இண்டியன், அர்பன் நக்சல்ன்னும் ஏதாவது ஒரு முத்திரையைக் குத்திடுதே பா.ஜ.க.!'’

""உண்மைதாங்க தலைவரே, இங்க தமிழக, கேரள, ஆந்திர எல்லைகள்ல மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் thirunaukarasuஇருக்குன்னு மத்திய உளவுத்துறை சொல்லியிருக்கு. அதை மாநில உளவுத்துறையும் ஆமோதிச்சிருக்கு. உண்மை என்னன்னா... மலைவாழ் பெண்களை சிலர் பாலியல் ரீதியான பயன்பாட்டுக்குக் கொண்டுபோக முயற்சிப்பதைத் தெரிஞ்சிக்கிட்டு, அதைத் தடுக்க சிலர் அங்கே முகாமிட்டு அந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்களாம். அவங்களுக்கு இங்க ஆயுதம் ஏந்தி யுத்தம் நடத்தற திட்டம் எதுவும் இல்லையாம். பிறகு எதற்கு இந்த புலனாய்வு அமைப்புகள், இப்படி மாவோயிஸ்ட்டுகள் பல்லவி பாடணும்னு கேட்டா, காரணம் இருக்குன்னு சொல்றாங்க.''

""என்ன காரணமாம்?''’

""தமிழக -கேரள வனப்பகுதியான பூளுவாம்பட்டி ஏரியாதான், யானைகள் அதிகம் புழங்கும் பகுதி. இங்கே ஜக்கி வாசுதேவ் பெரும்பகுதி இடத்தை ஆக்கிரமிச்சிட்டார். அதேபோல், கிறிஸ்தவ அமைப்பான காருண்யா, அப்புறம் சிறுவாணி மினரல் வாட்டர் நிறுவனம், சாபோல் மினரல் வாட்டர் நிறுவனம் ஆகியவையும் வனப்பகுதியை ஆக்கிரமிச்சிருக்கு. இதற்கு எதிரா சமூக ஆர்வலர்களும், வனப் பாதுகாப்பு அமைப்பினரும் கடுமையாக எதிர்த்துப் போராடிக்கிட்டு இருக்காங்க. இவங்களை எல்லாம் மிரட்டி ஒடுக்கத் திட்டமிட்டு, அதற்கு வசதியா மாவோயிஸ்ட் பல்லவியைப் பாட ஆரம்பிச்சிருக்காங்கன்னு விவரமறிஞ்சவங்க சொல்றாங்க. ஏன்னா, பிரதமரோடு கைகோத்து ஆன்மிக டான்ஸ் ஆடுற அளவுக்கு ஜக்கி செல்வாக்கோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்.''’

grijavidyanathan

""இந்த சூழ்நிலையில் கோவை பகுதியை உள்ளடக்கிய மேற்கு மண்டல ஐ.ஜி.யான பாரி, 30-ந் தேதி ஓய்வு பெற்றிருக்கிறாரே?''’

""பாரியால் காலியாகியிருக்கும் ஐ.ஜி. நாற்காலியைக் குறிவச்சி, கோவை, சேலம் பகுதியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிகள் சிலர், அதுக்கு ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில், உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தியும் இந்தப் பதவியில் உட்கார்ந்துடணும்னு சுறுசுறுப்பா காய்நகர்த்த ஆரம்பிச்சிருக்காரு. காரணம், அடுத்தடுத்து தேர்தல்கள் வரப்போகும் நிலையில் உளவுத்துறை பொறுப்பிலேயே இருந்தால், பணிச் சுமையுடன் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறார் சத்தியமூர்த்தி. அடுத்த ஆண்டு ஓய்வுபெற இருக்கும் அவர், அமைதியாக மேற்கு மண்டல ஐ.ஜி. பதவியில் அமர்ந்துட்டுப் போய்டலாம்ன்னு விரும்பறாராம்''’

""ஐ.பி.எஸ். ஏரியா இருக்கட்டும்.. அரசு ஊழியர்கள் தரப்பில் பலமான கொந்தளிப்பு தெரியுதே?''

""புதிய ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் வாங்கணும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களையணும்ங்கிறது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் ’ஜாக்டோ ஜியோ’ கூட்டமைப்பின் மூலம் வலியுறுத்திக்கிட்டே இருக்காங்க. பிரச்சினைகளை ஆராய அரசு அமைத்த வல்லுநர் குழுவும், இது தொடர்பாக எந்த அறிக்கையையும் தரலை. அதற்குள் அந்தக் குழுவின் காலமும், காலாவதி ஆயிடிச்சி. அதனால் அக்டோபர் 4-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அவர்கள் அறிவிச்சிருக்காங்க. இதையும் அரசு கண்டுக்கலைன்னா, நவம்பரில் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி, தமிழகத்தையே கிடுகிடுக்க வைக்கத் திட்டமிட்டு இருக்காங்க. இதற்காக அக்டோபர் 13-ல் ஒரு ஆயத்த மாநாட்டையும் சேலத்தில் அரசு ஊழியர்கள் நடத்தப்போறாங்க.''’

""அரசாங்கம் நடத்துன எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா எப்படி?''’

cm

""இது சம்பந்தமா நக்கீரன்ல விரிவாவே ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கு. நான் ஒரு தகவல் மட்டும் சொல்றேன்.. எம்.ஜி.ஆரோடு நடித்தவர்களை கௌரவிக்கிறோம்னு, விஜயகுமார், "வெண்ணிற ஆடை' நிர்மலா, பாக்கியராஜுன்னு 22 திரைப்படக் கலைஞர்களை விழாவுக்கு அழைத்து, அவர்களை ஏறத்தாழ 4 மணி நேரம் காக்க வச்சிட்டாங்களாம். இதில் அவங்க ரொம்பவே நொந்து வெதும்பிப் போயிட்டாங்களாம்''’

""நானும் ஒரு வெதும்பல் செய்தியைச் சொல்றேன்…. சமீபகாலமா ஆடிட்டர் குருமூர்த்தியும், பதிப்பு துறையைச் சேர்ந்த ஒரு நபரும் அரசு நிர்வாகத்தில் அதிகமாக மூக்கு நுழைக்கிறாங்களாம். இதில் மனரீதியா டார்ச்சரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இது தொடர்பாக, சக அதிகாரிகளிடம் வெதும்பிப் புலம்பிக்கிட்டிருக்காராம்...''

__________________________

இறுதிச் சுற்று!

குருப்பெயர்ச்சி! ரஜினி செண்டிமென்ட்!

rajini

துலாம் ராசியிலிருந்து விருச்சிகத்திற்கு அக்டோபர் 4-ல் இடம் பெயர்கிறார் குருபகவான். மகரராசி திருவோண நட்சத்திரம் கொண்ட தனக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ரஜினி. ஏழரைச்சனியிலும் பாதி கடந்துவிட்டதால் குருப்பெயர்ச்சி காலத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கும் முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் ரஜினியின் நட்பு வட்டாரத்தினர்.

லக்னோவில் "பேட்ட' ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினி 03-ஆம் தேதி சென்னை திரும்பி, ஆலோசனைக் கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில்... பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குழப்பம் கூடிக்கொண்டேதான் போகிறது. இராமநாதபுரத்தில் இத்தனை ஆண்டு காலம் ரசிகர்மன்ற தலைவராக இருந்து, "ரஜினி மக்கள் மன்றம்' என அறிவிக்கப்பட்ட பிறகு பூத் கமிட்டி அமைக்க பல லட்சம் செலவு செய்தவர் மா.செ.ராமச்சந்திரன் (எ) பாபு. இவரை டம்மியாக்க செந்தில் செல்வானந்த் என்பவரை மாவட்டப் பொறுப்பாளராக போட்டுள்ளார், தூத்துக்குடி மா.செ.வான ஏ.ஜே. ஸ்டாலின். மகளிர்அணிச் செயலாளர் பதவிக்காக ஆசிரியை வேலையை ராஜினாமா செய்த சங்கீதா அலெக்சாண்டரைத் தூக்கிவிட்டு சண்முகப்ரியா ராமச்சந்திரனை நியமித்திருக்கிறார். இப்படி 17 அணிகளின் செயலாளர்களை திடீரென நீக்கியுள்ளார்.

"ரஜினி முன்னிலையில் 05-ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகும் ஆலோசனைக் கூட்டத்தில் இதெல்லாம் வெடிக்கும்' என்கிறார்கள்.

-ஈ.பா.பரமேஷ்

அரசியல் மிரட்டல்!

secretariat

எடப்பாடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் ஊழல்களுக்கு எதிரான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடுகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.முக. இதனை சமாளிக்க, தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி என மூன்று வாரங்களுக்கு முன்பாகவே ராங்காலில் பதிவு செய்திருந்தோம். முதல் பிரச்சனையாக கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை கையிலெடுத்துள்ளார் எடப்பாடி. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கலைக்கப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி அரசு, "தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு இவ்வழக்கை அனுப்பவிருக்கிறோம்' என சொல்லியிருக்கிறது. இதனையடுத்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் ரெய்டு நடத்தும் நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இது குறித்து உள்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ""லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இன்னும் வழக்கே ஒப்படைக்கவில்லை. வழக்கு அவர்களிடம் சென்று அதனை பதிவு செய்து அடிப்படை விசயங்கள்பற்றி அத்துறை அதிகாரிகள் விவாதித்து முடிக்கவே குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும். அதன்பிறகு, தேவைப்பட்டால்தான் ரெய்டு நடத்துவார்கள். அப்படி எதுவும் இப்போதைக்கு திட்டமிடப்படவில்லை. ஒரு மிரட்டல்தான்'' என்கிறார்கள். இந்நிலையில், தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கி பணத்தை விரயம் செய்தது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது நீதிமன்றம்.

-இளையர்