""ஹலோ தலைவரே, போன சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடு திப்புன்னு போலீஸ் கைது செய்ய, மதியத்துக்குள் ஜாமீனில் வந்துட்டாரே!''

""ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைதுன்னு எடப்பாடி அரசும் ஆரம்பிச்சிடிச்சா?''

stalin

""அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த கலைஞர் வாசகர் வட்டக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இன மக்கள் பற்றிச் சொன்ன சில வார்த்தைகள் அப்போதே சர்ச்சையைக் கிளப்புச்சு. ஆர்.எஸ்.பாரதி அதற்கு வருத்தம் தெரிவிச்ச போதும், புகார் தெரிவிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆரும் போடப்பட் டது. அது சம்பந்தமா ஆர்.எஸ்.பாரதி போட்டிருந்த முன்ஜாமீன் மனு மே 27-ந் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில்தான் 23-ந் தேதி அதிகாலையில் அவர் அதிரடி யாகக் கைது செய்யப்பட்டார். வழக்குப் பதிவாகி 100 நாள் கடந்த நிலையில் இந்தக் கைது நடந்திருக்கு.''

Advertisment

""அதனை வரவேற்றும் எதிர்த்தும் நிறைய கருத்துகள் வெளிப்பட்டதே?''

""தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அதுக்கு முதல் நாள்தான் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி இருந்தார். அவர், மாநில பா.ஜ.க. தலைவரான முருகனிடம், தி.மு.க.வில் நானும் சாதிய ஒடுக்கு முறையை அனுபவிச்சிருக்கேன். ஆர்.எஸ்.பாரதி போல் பலரும் அங்கே சாதீய உணர்வோடு, பட்டியல் இனமக்களை நடத்தறாங் கன்னு சொல்லியிருக்கார். உடனே முருகன், இதை பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவரான நட்டாவின் கவனத்துக்குக் கொண்டு போக, இதைத் தொடர்ந்து ஆ.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கும் படி, டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதால தான் இந்த நடவடிக்கையாம்.''

""எடப்பாடி அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதால்தான் தன்னை கைது செய்ததா ஆர்.எஸ்.பாரதி சொன்னாரே?''

Advertisment

""தி.மு.க.வின் சட்டத் துறைச் செயலாளராக இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பும் அளவுக்கு செயல் பட்டவரு. இப்ப ஓ.பி.எஸ் துறை ஊழல்கள், வேலுமணியின் ப்ளீச்சிங் பவுடர் ஊழல்கள் தொடர்பா டாக்குமெண்ட்டுகளை சேகரித்து வந்த நிலையில் கைது செய்ததாகவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்த முடியாதுன்னும் ஆர்.எஸ்.பாரதி சொன்னாரு.''

""தி.மு.க தலைமை இதை எப்படிப் பார்த்தது?''

""79 வயதாகும் ஆர்.எஸ்.பாரதியை அதிகாலை யில் கைது செய்த தகவல் கிடைச்சதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஷாக் ஆயிட்டாரு. அதைப் புரிஞ்சிக்கிட்டு வில்சன் எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் கோர்ட்டில் கூடிட்டாங்க. அதே நேரத்தில், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இதனை அரசியல்ரீதியா ஸ்ட்ராங்காக்க நினைத்தது. சட்ட ரீதியா வழக்கு வலுப்படுவதை விரும்பலை. தி.மு.க.வை தலித் விரோத கட்சியா பிரச்சாரம் பண்ணி, தேர்தல் வியூகம் வகுக்க இதைப் பயன்படுத்திக்கணும்ங்கிறது தான் எடப்பாடி வியூகம். அதேநேரத்தில், வன் கொடுமை தடுப்புச் சட்டம் விஷயத்தில் அவர் தனது கொங்கு பெல்ட்டின் மனநிலை பற்றி யோசிச்சிருக் காரு. வழக்கை பலப்படுத்தினா, அது தன் ஏரியாவில் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கும்ங்கிற தால, ஆர்.எஸ்.பாரதிக்கான ஜாமீன் விஷயத்தில் பெரியளவில் எதிர்ப்பை அரசுத் தரப்பு காட்டலை. இதன்மூலம் தன் மனநிலையை கொங்கு பெல்ட்டுக்கு எடப்பாடி தெரிவிச்சிட்டாருன்னு அவர் தரப்பில் உள்ளவங்க சொல்றாங்க.''

""கொரோனா காலத்திலேயே 30க்கும் மேற்பட்ட வன்கொடுமைப் புகார்கள் சம்பந்தமா அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்கிறதை விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவை அதியமான் போன்றவங்க சுட்டிக்காட்டி, இது தி.மு.க.வுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைன்னு சொல்லியிருக்காங்களே.''

rr""அதனால்தான் மறுநாளே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் போன்றவங்களின் பேச்சுகளால் தி.மு.க.வுக்கு எதிரா பட்டியல் இன மக்களைத் திருப்பும் வேலையில் பா.ஜ.கவும் அ.தி..மு.க.வும் தீவிரமா இருப்பது பற்றியும், கரூர் செந்தில் பாலாஜி, கோவை கார்த்திக் போன்ற எம்.எல். ஏக்களை கைது செய்து உள்ளே தள்ள திட்டமிடுவதையும், சமூக வலைத்தளங்களில் அரசை அம்பலப்படுத்துவோரை கைது செய்வதைத் தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தொண்டருக்கும் தி.மு.க. வழக்கறிஞர் அணி பாதுகாப்பளிக்கும்னு ஸ்டாலின் சொன்னாரு.''

""மாவட்ட வாரியா மந்திரிகளின் ஊழல்களை பட்டியலிடுவோம்னும் தீர்மானம் போடப்பட்டதே?''

""தி.மு.க. மீதான பொய் வழக்கை அரசியல் ரீதியா எதிர்கொள்ளணும்னா, அ.தி.மு.க அமைச்சர்களின் துறை வாரியா ஊழல் புகாரை கையில் எடுக்கணும். அதாவது, உள்ளாட்சி அமைப்புகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை தோண்டித்துருவ மண்டல வாரியா தி.மு.க. வழக்கறிஞர் டீம் இதற்காகவே அமைக்கப்பட்டி ருக்குது. அதே நேரத்தில், தி.மு.க. நிர்வாகிகள் கண்ட்ரோல் இல்லாம மேடையில், செல்போனில் லூஸ் டாக் விடுறதும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்திருக்கு. கவனமா பேசணும்னு எச்சரிக்கை குரலில் சொல்லியிருக்காரு. தி.மு.கவைப் பொறுத்தவரை இன்றைய தலைமுறையையும் சூழலையும் புரிந்து பக்குவமா பேசுறதுக்கு கனிமொழி, ஆ.ராசா போன்றவங்க இருக்காங்க. அவங்களை மீடியா முன்னாடி பேசுறதுக்கு தலைமை அனுமதிச்சா, தேவையற்ற சிக்கல் வராதுன்னு கட்சி மேல அக்கறையுள்ளவங்க சொல்றாங்க.''

""அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தீவிரப் படுத்தும் விதத்தில் தி.மு.க. எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், முதல் ஆளா களத்தில் குதிச்சிருக் காராமே?''

""ஆமாங்க தலைவரே, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வேண்டியவர்களின் கட்டுமான நிறுவனமான சாய் பில்டர்ஸ், இந்த கொரோனா காலத்திலேயே வீட்டு வசதித்துறையின் 300 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டரை எடுத்திருக்குதாம். இது தொடர்பான அத்தனை ஆவணங்களையும் திரட்டியிருக் காரு வில்சன். அமைச்சரோ, தகவல்கள் எல்லாம் யார் மூலம் எதிர்முகாமுக்குப் போனதுன்னு தன் தரப்பில் இருக்கும் அத்தனைப் பேரையும் சந்தேகப்பட்டு விசாரிக்கிறாராம். ஓட்டுநராக இருந்த முருகனை வேலையை விட்டு நிறுத்தியவர், அடுத்து தனது பாதுகாப்பு அலுவலரான சக்தி வேலையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டாராம். அடுத்து வந்த பாதுகாப்பு அலுவலர் ரகுராமன் மீதும் சந்தேகப்பட்ட அமைச்சர், புதுக்கோட்டைக்குப் போகும் போது, நடுவழியிலேயே இறக்கி விட்டுவிட்டுட்டாராம்.''

""ம்...''

""தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மனுக்களோடு கோட்டைக் குப் போனப்ப, தலைமைச் செயலாளர் சண்முகம் தங்களை நடத்திய விதம் தொடர்பா, மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் தரப்பட்டி ருந்தது. அது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வகிக்கும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கு. அது இந்தப் புகார் குறித்து, எடப்பாடியிடம் விளக்கம் கேட்டிருக்கிறதாம். அதே மாதிரி, டி.வி. விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பிரதமர் குறித்து தெரிவித்த கருத்தை தமிழக பா.ஜ.க. பூதாகரமாக்குது. பிரதமரின் பாதுகாப்புப் படையினர், பிரதமரின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜோதிமணி பேசியிருப்ப தால் அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மோடிக்கு ஒரு ஃபைலை அனுப்பியிருக்கிறது. அதில், இதற்கு முன் மோடியையும் பா.ஜ.க.வையும் ஜோதிமணி எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறார் என்ற ரிப்போர்ட்டையும் இணைத்திருக்கிறார்களாம்.''

""காங்கிரஸ் தரப்பிலும் ஆலோசனைகள் வேகமெடுத் திருக்குதே?''

""மே 23-ந் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சோனியா காந்தி நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் தொடங்கி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், மதசார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவகவுடான்னு தேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துக்கிட்டாங்க. அதேசமயம் ’பகுஜன் சமாஜ்’ தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சிலர் பங்கேற்கலை. வெளிமாநிலத் தொழிலாளர்கள்படும் துயரங்களுக்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம்ன்னு குற்றம்சாட்டி, இந்தக் கூட்டத்தை மாயாவதி புறக்கணிச்சிட்டார். உ.பி. அரசியலில் பிரியங்கா காந்தி கவனம் செலுத்துற தால இந்தப் புறக்கணிப்பாம்.''’

""காங்கிரஸ் சீனியர் தலைவர்களோடும் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தியிருக்காரே?''’’

""25ந் தேதி நடந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பில் பா.ஜ.க. அரசின் தோல்வி பற்றி விவாதிக்கப்பட்டிருக்கு. ப.சிதம்பரம் பேசுறப்ப, ஏழை குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மத்திய அரசு நிவாரணம் வழங்காமல் நிலைமையை சமாளிக்க முடியாதுன்னும் இதற்காக பா.ஜ.க. அரசு புதுசா ஒரு பட்ஜெட் டையும் போடனும்ன்னு ஆலோசனை சொன்னார். இது பற்றி அறிக்கை கேட்ட சோனியா, பா.ஜ.கவின் தோல்விகளை மக்களிடம் அம்பலப்படுத்துவதில் தீவிரமா இருக்காராம்.''

rr

""துணை முதல்வர் ஓ.பி.எஸ் திடுதிப்னு மருத்துவமனையில் அட் மிட்டாகி பரபரப்பாக்கிட்டாரே?''

""அதைப் பற்றி நான் சொல் றேன்.. எடப்பாடியின் தொடர் நடவடிக்கைகள், சசிகலா ரிலீஸ் செய்தி இதெல்லாம் ஓ.பி.எஸ்.சுக்கு டென்ஷனை அதிகமாக்கிடிச்சாம். 24-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட, கார்டியாலஜி மருத்துவரான மதனுக்குத் தகவல் போக, எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ஓ.பி.எஸ்.ஸை வரவைத்து பரிசோதிக்கப்பட்டதில், இதயத்தில் உப்புப் படிவால் லேசான அடைப்புகள் இருப்பது தெரிய வந்திருக்கு. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருக்கு. இதையறிந்த எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸை நேரில் நலம் விசாரிச்சாரு. கொஞ்சநாளைக்கு நல்லா ஓய்வெடுக்கணும்னு டாக்டர்கள் அட்வைஸ் பண்ண, இந்த அரசியல் சூழலில் ஓய்வெடுத்தால் உள்கட்சியிலேயே ஓவர் டேக் பண்ணிடு வாங்களேன்னு ஓ.பி.எஸ். கவலைப்படுறாராம்.''

_______________

இறுதிச்சுற்று

நக்கீரன் எஃபெக்ட்! சி.பி.சி.ஐ.டி.க்கு மாறும் காசி வழக்கு!

பொள்ளாச்சி பாலியலை மிஞ்சும் விதமாக நடந்தியிருக்கும் நாகர்கோவில் காசியின் பாலியல் வேட்டையில் 90-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் இளம் பெண்கள் வசதி வாய்ந்த குடும்ப பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ மிரட்டல்விடும் காசியையும் அவன் கூட்டாளிகளையும் நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

காசியின் வழக்கை குமரி மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ விசாரணை கோரி பொதுமக்களும் மாதர் சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மே 26ந் தேதி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மா.செ. செல்லசுவாமி, மாநில குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், மாதர் சங்க மாநில துணை தலைவர் உஷாபாசி, அந்தோணி, கண்ணன், பாசி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் காசியின் பாலியல் வேட்டையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததால், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற எஸ்.பி. ஸ்ரீநாத், டி.ஜி.பி. திரிபாதிக்கு பரிந்துரைத்தார். காசி மீதான 6 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மற்றும் விசாரணையின்போது காசி மற்றும் அவனின் தொடர்பில் இருந்து சந்தேகப்படும் நபர்களின் தகவல்களை சரியா வைத்திருக்கும்படி மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி.யிடமிருந்து உத்தரவு வந்துள்ளதாம்.

குண்டாசில் உள்ள காசி வழக்கில் பிடி இறுகுவதற்கு நக்கீரனின் தொடர் புலனாய்வு முக்கிய காரணம் என்கிற குமரிமாவட்ட மக்கள், உண்மைக் குற்றவாளிகள் தப்பக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

-ராம்கி &மணிகண்டன்