"ஹலோ தலைவரே, ரஜினி குறித்து முரசொலியில் வந்த விமர்சனக் கட்டுரை, தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை உண்டாக்கிடிச்சே..''’

""ஆமாம்பா, ரஜினி தன்னோட நீண்டகால ரசிகர்கள் அரசியலில் பதவி எதிர்பார்ப்பது தவறுன்னும், அப்படி எதிர்பார்த்தால் அவர் களுக்கு புத்திபேதலிச்சிடிச்சின்னும் கடுமையா சொல்லியிருந்தாரே! ''’

"".இந்த அறிக்கையை விமர்சித்துதான், 26-ந் தேதி முரசொலியில், "ஹூ ஈஸ் த பிளாக் ஷிப்' என்ற தலைப்பில் ரஜினியும் அவரோட அப்பாவி ரசிகரும் உரையாடுவது போல விமர்சனக் கட்டுரை வந்திருந்தது. அதில், "தலைவா.. 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்குத் தகுதி என்று நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை உயர்த்திபிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடும் தகுதி இல்லையா'ன்னு விமர்சித்திருந்ததோடு, ரஜினியை இயக்குவது பா.ஜ.க.தான்ங்கிற தொனியும் வெளிப்பட்டது.''’

murasoli

Advertisment

""அதிரடி தூக்கலாத்தான் இருக்கு.'’’

""முரசொலி ஆசிரியர் செல்வம்தான் "சிலந்தி'ங்கிற பேருல இதை எழுதியிருந்தாரு. அவர் எப்பவுமே அரசியல் நிலைமைகளை கூர்ந்து கவனிச்சி எழுதுறவரு. அதற்காக, ஜெ. ஆட்சியில சட்டமன்றத்திலேயே கூண்டிலே நிறுத்தப் பட்டவர். கலைஞர் காலத்திலும்கூட, அவர் முரசொலிக்கு வர முடியாத சூழல்களில் செல்வம் ரொம்ப கரெக்ட்டா ஹேண்டில் பண்ணுவாரு. ரஜினி பற்றிய சிலந்தி கட்டுரையும் அரசியல் நிலவரத்தையொட்டி எழுதப்பட்டதுதான். அரசியல் எதிர்பார்ப்பில் உள்ள ரஜினி ரசிகர்களே இந்தக் கட்டுரையைப் பார்த்து மகிழ்ச்சியடைஞ்சாங்க. ஆனா, ரஜினிக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதா ஊடகங்கள் இதை விவாதமாக் கிடிச்சி. ரஜினியும் செம கோபமாயிட்டாரு. ஸ்டாலின் சொல்லாமலா முரசொலியில் இப்படி என்னைக் காட்டமா விமர்சிச்சிருப்பாங்கனு தி.மு.க. தொடர்பில் இருக்கும் தன் நண்பர்களிடம் வருத்தத்தையும் பகிர்ந்திருக்கார்.''’

Advertisment

""அதானே, ஸ்டாலின் சொல்லாமலா இது நடந்திருக்கும்?''’

rajin-stalin""தலைவரே, 25-ந் தேதி தி.மு.க. நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்திய ஸ்டாலின், அங்கிருந்து நேரா, மறைந்த தி.மு.க.வின் மகளிரணிப் புரவலரான நூர்ஜகான் பேகத்துக்கு அஞ்சலி செலுத்த திண்டுக்கல்லுக்குப் போயிட்டார். இதற்கிடையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு முரசொலியில் பிரிண்டும் ஆகி, வெளியே வந்துடுச்சு. அந்தக் கட்டுரை தேவையற்ற பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்துவதைக் கண்ட ஸ்டாலின் ஷாக் ஆயிட்டார். இது குறித்து அவர் சிலரிடம் பேச, அவர் சார்பில், ரஜினியை சந்திக்க சபரீசன் தரப்பு முயற்சி எடுத்தது. ரஜினியிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. அதன்பிறகு, ரஜினியும் ஸ்டாலினும் பேசியிருக்காங்க. தன் கவனத்திற்கு வராமல் அது பிரசுரமானதை சொன்ன ஸ்டாலின், "நீங்கள் உங்கள் மன்றத்தினருக்கு விடுத்த அறிக்கையில், தி.மு.க.வைப் பற்றி எதுவும் சொல்லாதபோது, இப்படி ஒரு அறிக்கை முரசொலியில் வந்ததில் எனக்கும் உடன்பாடில்லை'ன்னு சமாதானப்படுத்தியதோடு மறுநாள் முரசொலியில்...’"சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளிவந்த கட்டுரை, சில நல்ல மனதைப் புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளி யிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது' என்று பெட்டிச்செய்தியும் வைக்கப் பட்டது.''’’

""இதற்கு என்ன எஃபெக்ட்?''

""ஒரு சிலர், இந்திராகாந்தியோட எமர்ஜென்சியையும், எம்.ஜி.ஆர்-ஜெ. காலத்து அடக்குமுறையையும் எதிர்கொண்ட முரசொலியும் தி.மு.கவும் ரஜினியைக் கண்டு பம்முவதான்னு விமர்சனம் செய்தாங்க. பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவு இதை பரப்புவதில் ரொம்பவே கவனம் செலுத்துச்சு. தி.மு.க ஆதரவு சமூக வலைத்தளப் பதிவர்களும் விமர்சனம் செஞ்சாங்க. தி.மு.க. சீனியர்களோ, "நமக்கு இப்ப எதிரிகள்ன்னா, டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியும் இங்கிருக்கும் எடப்பாடி ஆட்சியும்தான். இவர்களுக்கு எதிரான யுத்தத்தில் கவனம் முழுதையும் செலுத்த வேண்டிய நேரத்தில், கட்சி தொடங்கவே யோசிக்கும் ரஜினியை அநாவசியமா சீண்டி, எதுக்கு நாமாக தேர்தல் நேரத்தில் அரசியல் களத்தில் இழுத்து விடணும்? ஏற்கனவே கல்யாண மண்டபத்தை இடிச்சி கோபத்துல விஜயகாந்த் ஒரு கட்சியை ஆரம்பிச்சி, அவரும் ஜெயிக்காம நம்மையும் 2016-ல் ஆட்சிக்கு வரவிடாம செஞ்சிட்டாரு. இன்னொரு சர்ச்சை எதுக்கு'ன்னு சமாதானப் படுத்துனாங்க.'’

""எடப்பாடி அரசுக்கு எதிரா தி.மு.க. கையிலெடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்காலத் தடை விதிச் சிருக்கே?''’

""தலைவரே.. எடப்பாடித் தரப்பு மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம்தான் தி.மு.க. முதலில் புகார் கொடுத்துச்சு. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடணும்னு தி.மு.க. உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுச்சு. உயர்நீதி மன்றம்தான் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கணும்னு உத்தரவிட்டுச்சு. இதை எதிர்த்து, முதல்வர் தரப்பின் விருப்பப்படி, லஞ்ச ஒழிப்புத் துறை டெல்லியில் டேரா போட்டு, வழக்கை நாங்கள் உரிய வகையில் விசா ரித்து வருவதால் சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை விதிக்கணும்னு கேட்டது. இதைத் தொடர்ந்து 29-ந் தேதி இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான முதலாம் அமர்வு விசா ரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இந்த நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எல்லாமே விதிப்படிதான் நடந்திருக்கு. இது தொடர்பாக விளக்கம் கேட்டால் அதைத் தரத் தயாராக இருக்கிறோம்ன்னு வாதம் வைத்தனர். தி.மு.க. தரப்பு வழக்கறிஞர்களோ ‘டெண்டர் விவகாரத்திலேயே அதிக முறைகேடு நடந்திருக்கு. அதை நிரூபிக்கத் தயார்ன்னு வாதம் வைத்தனர். இதைக்கேட்ட தலைமை நீதிபதி, "டெண்டரில் ஊழல் என்றால், டெண்டரை ரத்துசெய்ய வேண்டும் என்றுதானே நீங்கள் கோரியிருக்கவேண்டும். அதற்காக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதே ஊழல் வழக்கு தொடுப்பீர்களா?' என்று கேட்டுவிட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்..''’

""எடப்பாடிக்கு எல்லாமே சாதகமா இருக்கிற நிலையில், வன்னியர் சமூகமும் பாராட்டு விழா நடத்தியிருக்கே?''’

""இது தொடர்பா முழுத் தக வல்களையும் சொல்றேங்க தலை வரே, ராமசாமிப் படையாச்சியார் பிறந்தநாள் விழாவை அரசு விழாவா அறிவிச்சதையும், அவருக்கு மணிமண்டபம் கட்டப்போறதா அறிவிச்சதையும் பாராட்டும் விதமா, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வன்னிய சமூக அமைச்சர்களான சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, துரைக்கண்ணு ஆகியோருக்கு வன்னியர் சங்கங்கள் பெயரில் 28-ந் தேதி விழா எடுக்கப் பட்டது. உண்மையில் வன்னியர் சங்கங்களின் பெயரில் எடப்பாடி தரப்பு, தனக்குத்தானே எடுத்துக்கிட்ட விழாதான் இது. இதற்காக கலைவாணர் அரங்குக்கு கொடுக்கப்பட்ட வாடகை தொடங்கி, அனைத்து செலவையும் அமைச்சர்களே பார்த்துக்கிட்டாங்க. இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, ராமசாமி படையாச்சியார் படம், சட்டசபையிலும் திறக்கப்படும்னு அறிவிச்சாரு. மேடையில் இருந்து அவர் இறங்கிய பிறகுதான், இந்த விழாவின் சாக்கில் தொடர்புடைய சமுதாயப் பிரமுகர்கள் ஏகத்துக்கும் வெளியே வசூலை நடத்தியிருப்பதே அவருக்குத் தெரிஞ்சிருக்கு. இதில் எடப்பாடி பெரும் அப்செட். இதையெல்லாம் கவனிச்ச பா.ம.க. தரப்பு, டாக்டர் ராமதாஸ் நம் சமூகத்துக்குச் செய்யாத சாதனையா? அதை எடுத்துச் சொல்லும்விதமா ஒரு மாநாட்டை பிரமாண்டமா நடத்திடுவோம்னு களத்தில் இறங்கியிருக்கு. அதே போல், தி.மு.க.வில் இருக்கும் வன்னிய சமூகப் பிரமுகர்களும், வன்னிய சமூகத்துக்கு கலைஞர் செய்த சாதனைகளை விளக்கும் விதமா ஒரு நிகழ்ச்சிக்கு ரெடியாயிக்கிட்டு இருக்காங்க.''’

""தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பாராட்டு, விருதெல்லாம் கிடைச்சிருக்கே?''’

""விமானப் பயணத்தில், பாசிஸ பா.ஜ.க. ஒழிகன்னு கோஷம் போட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவை மிரட்டியது தொடர்பா தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இருக்கும் பன்னாட்டு கலாச்சார ஒருங் கிணைப்பு சான்றோர் மையம் சார்பில், தமிழிசைக்கு ‘"இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்'ங்கிற விருதை சிகாகோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி சிறப்பிச்சிருக்கு.''’

thambidurai""பா.ஜ.க.வும் அ.திமு.கவும் ஒன்றை ஒன்று திரை மறைவில் தழுவிக்கிட்டாலும், நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, அடிக்கடி பா.ஜ.க.வுக்கு எதிரா வாய்திறக்கிறாரே?''’

""உண்மைதாங்க தலைவரே, சமீபத்தில் கூட அ.தி.மு.க.வுக்கு எதிராகப் புலனாய்வு அமைப்புகளை ஏவ, மத்திய அரசுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்குதுன்னும், தி.மு.க.வை ரிங் மாஸ்டரா இருந்து அமித்ஷா ஆட்டி வைக்கிறாருன்னும் தம்பிதுரை குற்றம் சாட்டினார். இலங்கை விவகாரத்திலும் மோடி அரசை குற்றம் சாட்டியிருக்காரு. என்ன காரணம்ன்னு விசாரிச்சப்ப, அரசியல்ரீதியா தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நெருக் கடியை ஏற்படுத்த, தம்பிதுரையை எடப்பாடி பயன்படுத்துறாராம். அதோடு, அ.தி.மு.க. அமைச்சர் களுக்கு எதிராக அடிக்கடி வருமானவரித்துறை நடத்தும் ரெய்டுகளுக்கு அமித்ஷா மூலம் தி.மு.க. தரப்பு கொடுக்கும் அழுத்தம் தான் காரணம் என்றும் எடப்பாடி தரப்பு நம்புகிறதாம்..''’

""நானும் அ.தி.மு.க. ஏரியாவிலிருந்து ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தமா கிளம்பிய புகாரில் சம்பந்தப்பட்ட பெண்மணி சிந்துவை, கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அமைச்சருக்கு எதிரான பாலியல் புகாரைக் கொடுக்கவைக்கும் முயற்சியில் களமிறங்கியிருந்தது டி.டி.வி.தினகரன் தரப்பு. இந்த நிலையில் சிந்துவின் காதலன் என்று சொல்லப்பட்ட சந்தோஷ், தன்னை சிந்து ஏமாற்றி பல லட்ச ரூபாயை மோசடி செய்திருப்பதாகப் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். இதேபோல் மேலும் பல புகார்கள் சிந்து மீது குவியத் தொடங்கியதால், டி.டி.வி தரப்பிற்கும் ’பெப்பே’ காட்டிவிட்டு, சிந்து இப்போது எஸ்கேப் ஆகிவிட்டாராம்.''’

_____________

இறுதிச்சுற்று!

பரிந்துரையை நிராகரித்த கவர்னர்!

rang call

பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் 2-2-2000 அன்று ஜெ.வுக்கு ஸ்பெஷல் கோர்ட் சிறைத் தண்டனை விதித்ததை எதிர்த்து, தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் நடத்திய வன்முறை போராட்டத்தில் கோவை வேளாண் கல்லூரி பஸ் எரிக்கப்பட்டு கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயி ரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக் கிய இந்த வழக்கில், அ.தி.மு.க. பிரமுகர் களான நெடுஞ்செழி யன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஏறத்தாழ 18 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் இவர்களை, அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது, அதற்கான பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பியிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார் கவர்னர். இது ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் மன நிலையை எதிரொலிக்கிறதோ என்கிற கவலையை தமிழுணர்வாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

-இளையர்

தவறான சித்தரிப்பு!

2018 அக்.27-30 நக்கீரன் இதழில் 21ஆம் பக்கத்தில் ""அந்த 20 "சி' சுருட்டிய கும்பலை சுட்டுத்தள்ள போலீஸ் ரெடி'' என்ற செய்தியில் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

தி.மு.கழகத்தில் பல நிர்வாகிகளுடனும் இணைந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரை தி.மு.க. உறுப்பினர்கள் ஆக்கியுள்ளேன். அப்படி இணைந்தவர்தான் பா.ஜ.க.விலிருந்து வந்த அருண். அவர் இன்னும் உறுப்பினர் அட்டைகூடப் பெறவில்லை.

அவர் என்னிடம் 15 லட்சம் கொடுத்து கழகத்தில் சேர்ந்தார் என்றும், ஒரு கொள்ளைக் கும்பலின் கூட்டாளியாக என்னை சித்தரித்தும் இச்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தங்கள் நிருபர் என்னிடம் கருத்துக் கேட்கவில்லை. இச்செய்தியை நான் முற்றாக மறுக்கிறேன். எனது இக்கருத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-சி.ஆர்.ராமச்சந்திரன், எக்ஸ். எம்.எல்.ஏ.,

மாவட்டச் செயலாளர், கோவை வடக்கு.