""ஹலோ தலைவரே, கலைஞரின் மரணத்துக்குப் பிறகும் அவர்தான் தமிழ்நாட்டு அரசியலின் மையமா இருக்காரு. தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்போடு மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைச்சி நடத்திக்கிட்டிருக்காரு.''’’
""கட்சி கடந்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படுதே!''
""ஆமாங்க தலைவரே.. கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை சென்னையில் நடத்திய நினைவேந்தல் நிகழ்வு ரொம்ப உணர்ச்சியாவும் உணர்வுப்பூர்வ மாகவும் நடந்தது. அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடித்து திரும்பிய விஜயகாந்த், ஏர்போர்ட்டிலிருந்து நேரடியா கலைஞர் நினைவிடத்துக்குப் போய், தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாம மெல்ல மெல்ல நடந்து, கண்கள் கலங்க அஞ்சலி செலுத்துனது எல்லோரையும் நெகிழ வச்சிடிச்சி.''
""அரசியலில் எதிரா இருந்தவங்க.. அடிக்கடி விமர்சிச்சவங்ககூட கலைஞரோட பன்முகத் திறமைக்கும் உழைப்புக்கும் உண்மையான மரியாதையைக் கொடுக்கிறதைப் பார்க்க முடியுதுப்பா..''
""ஆமாங்க தலைவரே.. பகுத்தறிவுவாதியான கலைஞருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் "ஆழ்வார்கள் ஆய்வு மையம்'’ சார்பிலும் 28-ந் தேதி அருளாஞ்சலி நடத்தப்பட இருக்குதாம். இப்படி பலரும் பலவிதமா கலைஞருக்கு நினைவாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துறாங்க. இந்த நிலையில்தான், தி.மு.க. சார்பில் திருச்சியில் ஊடகத்துறையினர் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்வையடுத்து, மதுரையில இலக்கியவாதிகள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்வும் நடந்திருக்குது. அழகிரி என்ன பண்ணப் போறாருன்னு அரசியல் வட்டாரம் எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற நேரத்தில், மதுரையில் தி.மு.க. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டியிருக்குது.''
""தலைவரே, அழகிரி தரப்பு யார் யாரை தொடர்பு கொள்ளுது, யார் யார் அந்தத் தரப்புக்கு ரெஸ்பான்ஸ் பண்றாங்கன்னு தி.மு.க. தலைமை கூர்ந்து கவனிக்கிது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, நிர்வாகிகளில் கிட்டதட்ட எல்லோருமே ஸ்டாலின் பக்கம்தான் இருக்காங்க. இப்பவே தி.மு.க.வின் மாவட்டக் கழகங்கள் கூடி ஸ்டாலின்தான் எங்க தலைவர்ன்னு தீர்மானம் நிறைவேற்றிக்கிட்டிருக்கு. குறிப்பா சேலம், நாமக்கல், திருவள்ளூர் தெற்குன்னு மாவட்ட தி.மு.க.வினர் கூடி மு.க.ஸ்டாலினை கழகத் தலைவராக முன்மொழிகிறோம்ன்னு தீர்மானம் போட்டுக்கிட்டு இருக்காங்க. தி.மு.க.வில் உடைப்பு, தெறிப்புன்னு சோதனைகள் வந்தப்பல்லாம், கட்சியின் கட்டுக்கோப்பை உருக்குலையாமல் காப்பாற்றியது கட்சியின் நிர்வாகிகள்தான். கலைஞரின் இதே பாலிசியை ஸ்டாலின் தரப்பும் கச்சிதமா கடைப்பிடிக்குது. அழகிரி சப்ஜெக்ட்டில் கலைஞர் குடும்பத்தினர்கூட இப்போதைக்கு பெருசா கவனம் செலுத்தலை. பொதுக்குழுவில் முறைப்படி கட்சித் தலைவரா மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுக்கவும், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கும் தி.மு.க. தயாராகுது. செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த ப்ளான் பண்ணி யிருக்கும் அழகிரியோ, அதற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸைப் பொறுத்து, அடுத்த கட்டத்துக்கு நகரலாம்னு நினைக்கிறாராம்.''
""அவங்க ஏரியாவில் சைலன்ட்டா இருந்தாலும், அரசியல் ஏரியாவில் தி.மு.க.வில் அடுத்த சலசலப்பு என்னங்கிறதுதானே கவனிக்கப்படுது?''’’
""முக்கியமான கட்சின்னா மற்றவங்க பார்வை அங்கேதானே இருக்கும்... தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசர், டெல்லியில் முகாமிட்டு ராகுல்காந்தியிடம் தமிழக அரசியல் நிலவரம் பற்றிப் பேசியிருக்காரு. அப்ப, தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸுக்குக் குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்குகள் இருக்கு. இருந்தும் தி.மு.க. நம்மை இளக்காரமாகவே பார்க்குது. அங்கே அழகிரி பவர்யுத்தம் நடத்திக்கிட்டிருக்காரு. இந்த வீக்னெஸ்ஸை வச்சி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கு முன்பாகவே, தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிக சீட்டுகளை வாங்கிடணும்னு வலியுறுத்தினாராம். இதைக் கேட்ட ராகுல், நான் விரைவில் தமிழகம் வந்து தி.மு.க. தலைமையிடம் இதுபற்றிப் பேசுறேன்னு சொல்லியிருக்காராம். இதற்கப்புறம்தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் தி.மு.க.வை காங்கிரஸ் ஆதரிக்கும்னு திருநாவுக்கரசர் அறிவிச்சிருக்காரு.''’
""ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் என்ன நடக்குது?''’
""முதல்வர் எடப்பாடி இப்பவே எம்.பி. தேர்தலுக்கு ரெடியாயிட்டார். கட்சி எம்.பி.க்களில் தன் ஆதரவு எம்.பி.க்களை மட்டும் அழைத்துப் பேசிய அவர், பா.ஜ.க.வைப் பத்தியெல்லாம் கவலைப் படாமல், எல்லோரும் இப்பவே உங்கள் தொகுதிகளில் களமிறங்கி வேலையை ஆரம்பியுங்கள். தேர்தல் செலவுக்குத் தேவையானதை நான் கொடுக்குறேன்னு உற்சாகமூட்டி, அவங்களுக்கு "கீ'’கொடுத்திருக்கார். அதேசமயம் கட்சியில் இருக்கும் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்களை அவர் கண்டுக்கவே இல்லையாம். இதனால் அப்செட்டான அவங்க, நமக்கு மட்டும் சீட்டும் பணமும் உறுதியாகலையே... ஓ.பி.எஸ்.சும் இதுபத்தி வாயைத் திறக்க மாட்டேங்குறாரேன்னு பகிரங்கமாவே புலம்பிக் கிட்டிருக்காங்க.''’
""அ.தி.மு.க.வில் எடப்பாடித் தரப்பும் ஓ.பி.எஸ். தரப்பும் பதவிக்காகவும் முட்டி மோதுதாமே?''’
""அது எப்போதும் நடக்குறதுதாங்க தலைவரே, எடப்பாடியின் ஆதரவாளரான அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கும் இடையில், இப்ப பதவியைக் குறிவைத்து முட்டல் மோதல் ஆரம்பிச்சிருக்கு. அமைச்சர் கே.பி.அன்பழகன் வைத்திருக்கும் தர்மபுரி மா.செ.பதவியைத் தனக்கும், எக்ஸ் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி வைத்திருக்கும் கிருஷ்ணகிரி மா.செ. பதவியைத் தன் ஆதரவாளரான ஜெ.பேரவை மாநில முன்னாள் செயலளரான டி.ஆர். அன்பழகனுக்கும் கொடுக்கணும்னு எடப்பாடியிடம் முட்டிமோதுகிறார். எடப்பாடியோ, கோவிந்த சாமியின் மா.செ.பதவியைப் பறிக்கமுடியாது. கே.பி.அன்பழகனும் நீங்களும் ஒரே சமூகம்தானே... அவர் வைத்திருக்கும் மா.செ. பதவி உங்களுக்கு வேண்டுமானால், அதை நீங்கள் இருவருமே பேசித் தீர்த்துக்கொளுங்கள். என்னிடம் வராதீர்கள்னு கழண்டுகிட்டாராம். அமைச்சர் கே.பி. அன்பழகனோ, என் மா.செ.பதவியை எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று வரிந்துகட்ட, கே.பி.முனுசாமியும் மல்லுக் கட்டுறாரு. அதனால் அங்கே குழப்படியில் இருக்கிறது இலைத் தரப்பு.''’
""டெல்லி பா.ஜ.க., எடப்பாடித் தரப்புக்கு எதிராக காய் நகர்த்துதுன்னும் காத்து வாக்கில் தகவல் வருதே?''’
""உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே பா.ஜ.க. மேலிடத் தின் கண்ணசைவுக்கு ஏற்ப, வருமானவரித்துறையினர் முதல்வர் எடப்பாடியைக் குறிவைத்து ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடத்தியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியது. அடுத்து எடப்பாடியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கம் தரப்பையும், காண்ட்ராக்டர் செய்யாதுரை மற்றும் எடப்பாடியின் சம்பந்தி சுப்பிரமணி தரப்பையும் ரெய்டுமூலம் சலித்து, ஏகப்பட்ட கரன்ஸியையும் ஆவணங்களையும் அள்ளியது. அதேபோல் சசிகலா, தினகரன், இளவரசி தரப்பிலும் பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. இப்படி எடப்பாடி, சசிகலா தரப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டுகளின் விவரத்தை, அண்மையில் குஜராத்தில் இருந்து அனுப்பப்பட்ட அதிகாரிகள் தீவிரமா விசாரித்துவிட்டுப் போனார்கள். இப்போது இந்த ரெய்டுகளின் முழு விவரத்தையும் உடனடியாக அனுப்பும்படி டெல்லி கேட்டிருக்கிறதாம். அதனால், இதன் அடிப் படையில் அடுத்தகட்ட அதிரடி ஆக்ஷன் இருக்கலாம்ங்கிற எதிர்பார்ப்பு புலனாய்வு அதிகாரிகள் மத்தியிலேயே இருக்கிறது.''’
""திவாகரன் தரப்பில் புது விறுவிறுப்பு தெரியுதே?''’
""தினகரனுக்கு எதிராக திவாகரன் ‘அண்ணா திராவிடர் கழகம்ங்கிற கட்சியைத் தொடங்கி யிருக்கிற நிலையில், தினகரனிட மிருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத், அதில் இணைந்து பரபரப்பா செயல்படப்போறார்னு சொல்லப்படுது. தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லைன்னு சொல்லித்தான் அங்கிருந்து வெளியேறினார் சம்பத். இப்போது திவாகரன் கட்சியின் பெயரில் அண்ணாவும் திராவிடமும் இடம் பிடித்திருப்பதால், கட்சிக்கு பெயர் வைக்க ஐடியா தந்ததே நாஞ்சில் சம்பத்துதானோன்னும் பேச்சு அடிபடுது. ஜெ.’ காலத்திலிருந்தே அ.தி.மு.க. நிகழ்ச்சிகள்னா எம்.ஜி.ஆர். பட டூயட் டான்ஸ்தான் களைகட்டும். திவாகரன் கட்சிக்கு நாஞ்சில் சம்பத் வந்தா, டூயட் டான்சுக்குப் பதில், பழைய தி.மு.க. பாணியில் பட்டிமன்றம் நடத்தப்படும்னு சொல்றாங்க.''’
""நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேன்... ரிசர்வ் பேங்கின் அலுவல் சாரா இயக்குநர்களில் ஒருத்தராக மோடி அரசால் ஆடிட்டர் குருமூர்த்தி, நியமிக்கப்பட்டிருக்காரு. இது சம்பந்தமா, தன் டிவிட்டரில் மகிழ்ச்சியை வெளி யிட்டிருக்கும் குருமூர்த்தி, எத்தனையோ பதவிகள் என்னைத் தேடிவந்தும் நான் அதையெல்லாம் ஏற்கவில்லை. இது ரிசர்வ் வங்கிப் பதவி என்பதால் ஏற்றுக் கொண்டேன்னு சொல்லியிருக்கார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்தவரான அ.தி.மு.க. பிரமுகர் கோவை செல்வராஜோ, பல்லில்லாத இந்தப் பதவிக்கே இவ்வளவு அலப்பறையான்னு கிண்டலடிச்சிக் கிட்டிருக்கார்.''’
படங்கள் : சுந்தர், ஸ்டாலின்
_________________
இறுதிச்சுற்று
வைகோ காரசாரம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 6 வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி கள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகள் இடம்பெற்று இருப்பார்கள். இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை சார்ந்தவர் அல்லாமல் கேரளா அல்லது கர்நாடகாவை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் தரப்பு வாதிட்டது. அதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ""தமிழ் நாட்டை சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்களின் நேர்மையை சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்தக் குழுவிற்கு யாரை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதை ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது'' என்றார். ஸ்டெர்லைட் நிர்வாக தரப்பு வழக்கறிஞருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிற்குமிடையே காரசாரமான விவாதம் நடைபெற்று இருக்கிறது. இந்தக் குழுவானது சுற்றுச்சூழல் ஆய்வு, ஆலையை ஆய்வு செய்து திறப்பதா? வேண் டாமா? என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவுசெய்யும் என தீர்ப் பாயம் கூறியுள்ளது. அதேநேரத் தில் தமிழக அரசு சார்பில் அழுத்த மான வாதங்களோ, ஸ்டெர் லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான ஆதாரங் களோ வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-சி.ஜீவாபாரதி