"ஹலோ தலைவரே, "கஜா' புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு, மத்திய அரசின் நிவாரண உதவியைக் கேட்டு 21-ந் தேதி முதல்வர் எடப்பாடி, டெல்லிக்குப் போனார். எடப்பாடியின் இந்த டெல்லி விசிட் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''’
""பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுசாப் போகாமலே, எந்த அடிப்படையில் எடப்பாடி மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்கப்போனார்?''’
""இதே கேள்வியைத்தான் இங்கிருக்கும் எல்லா அரசியல்கட்சிகளும் கேட்குது. சேத மதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் தனித்தனியாக அறிக்கை வாங்கி, முழுமையான சேத மதிப்பைக் கணக்கிட்டுத்தான் அதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுபோகணும். ஆனால் முதல்வர் எடப்பாடியே இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையாப் போகலை. அப்படி இருக்க, எப்படி மத்திய அரசிடம் நிதி கேட்பார்ன்னு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நீங்க எழுப்பின மாதிரியே கேள்வி எழுப்பியிருக்கார். எடப்பாடியின் இந்த டெல்லிப் பயணமே புயல் நிவாரணத்துக்கானது அல்ல. அவர் வேறு அரசியல் காரணங்களுக்காகத்தான் டெல்லிக்குப் போயிருக்கார்னு டி.டி.வி.தினகரனும் குற்றம் சாட்டியிருக்கார். அவரைப் பொறுத்தவரை, தங்கள் அ.ம.மு.க.வையும் அ.தி.மு.க.வோடு சேர்த்து வச்சி, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினர் முதுகிலும், பா.ஜ.க. குதிரை ஏறப் பார்க்குதுன்னு நினைக்கிறார். அதோட எடப்பாடியின் டெல்லி விசிட், விளையாட்டுத்தனமானதுன்னு சொல்றார். ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்களைப் பத்தி எல்லாம் கவலைப்படாமல், 21-ந் தேதி எடப்பாடி டெல்லிக்குப் பறந்துட்டாரு. போறதுக்கு முன்னாடி, அவர் ஒரு உத்தேச சேதப் பட்டிய லையும் ரெடி பண்ணி எடுத்துக்கிட்டுதான் போனார்ன்னு அதிகாரிகள் தரப்பு சொல்லுது.''’
""இந்த உத்தேசப் பட்டியலை எந்த அடிப்படையில் யார் தயார் செய்தது?''’
""கோட்டையில் தலைமைச்செயலாளர் கிரிஜா, நிதித்துறைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைப்படி 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்புன்னு ஒரு உத்தேச மதிப் பீடு தயாரிக்கப்பட்டிருக்கு. உண்மையான சேதம் இதைத் தாண்டி இருக்கும்ன்னும் சொல்றாங்க. அதேசமயம் தமிழகத்துக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு, தேவையானதைக் கொடுக்காது. இதுமாதிரி விசயங்களில் தொடர்ந்து தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம்தான் செய்துக் கிட்டிருக்குன்னு சொல்லும் அதிகாரிகள், 2011-ல், "தானே' புயல் வந்தப்ப, நிவாரண நிதியா தமிழக அரசு சார்பில் 5, 250 கோடி ரூபாய் கேட்கப்பட் டது. ஆனால் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்திய அரசோ வெறும் 500 கோடி ரூபாயை மட்டும்தான் கொடுத்தது. அதேபோல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் "வர்தா' புயல் 2016-ல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியபோது, தமிழக அரசு சார்பில் 22,500 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டது. மத்திய அரசோ வெறும் 226 கோடி ரூபாய்தான் கொடுத்தது. அதேபோல் ஒக்கிப் புயல் தாக்கிய போது 13,250 கோடி ரூபாய் இழப்பீடாகக் கேட்கப்பட்டும், மத்திய அரசு கொடுத்தது வெறும் 280 கோடிதான். இப்படி கேட்டதில் 10 சதவீத அளவுக்குக் கூட கொடுக்காமல் தமிழகத்தைக் காயப்போடுறதே மத்திய அரசின் வழக்கமா இருக்குன்னும் விவரிக்கும் அதிகாரிகள், மத்திய அரசிடம் தைரியமா சண்டை போட்டு, உரிய நிதியை உரிமையா கேட்டு வாங்கும் முதல்வரா, நம்ம எடப்பாடி இல்லைன்னு தலையில் அடிச்சிக்கிறாங்க''’
""உண்மைதாம்பா, தி.மு.க. பொருளாளர் துரைமுருகனே, முதல்வர் எடப்பாடிகிட்ட நேருக்கு நேரா இதுபத்தி அட்வைஸ் கொடுத்தாராமே?''
""ஆமாங்க தலைவரே, தி.மு.க. சார்பில் புயல் நிவாரண நிதியா 1 கோடி வழங்கப்படும்னு ஸ்டாலின் அறிவிச்சிருந்தார். அதன்படி அந்தத் தொகையைக் கொடுக்க முதல்வரின் கிரீன்வேஸ் சாலை வீட்டிற்குப் போனார் துரைமுருகன். நிதியைக் கொடுத்த துரைமுருகனிடம் நான் இன்னைக்கு டெல்லி போறேன். பிரதமர்ட்ட நிவாரண நிதி கேட்கப்போறேன்னு முதல்வர் எடப்பாடி சொல்லியிருக்கார். அதுக்கு துரை முருகன், அங்க போய் வளைஞ்சி நெளிஞ்சி பணிவால்லாம் கேட்காதீங்க. கம்பீரமா, துணிச்சலா பேசுங்க. எங்க மாநிலம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. அதனால், எங்களுக்கு இவ்வளவு நிதியை நீங்க தந்துதான் ஆகணும்னு அழுத்தமா சொல்லுங்க. அப்பதான் கேட்பதில் பாதியாவது கிடைக்கும்னு அனுபவ அறிவோட எடப்பாடிக்கு அறிவுரை சொல்லியிருக்கார்.''’
""கஜாவால் பாதிப்புக்கு ஆளான 8 மாவட்டங் கள்ல, அதிக சேதத்தை சந்திச்சிருப்பது நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்தான். அப்படி இருக்க நாகை-திருவாரூர் எடப்பாடி தலை காட்டாததுக்கு வேற காரணம் இருக்குதா?''
""தலைவரே, நம்ம நக்கீரனில் அதைப் பற்றி எழுதியிருக்காங்க. எனக்கு கிடைச்ச தகவலையும் சொல்றேன். 16-ந் தேதி புயல் வீசிய பிறகு, களத்துக்குப் போன மந்திரிகளைப் பொதுமக்கள் துரத்தியடிச்சதைப் பார்த்து திகைச்சுப் போயிட்டார் எடப்பாடி. உடனே உளவுத்துறை அதிகாரிகளைத் தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஆலோசனை செய்தார். அப்ப அவங்க, பொதுமக்களிடம் அரசு மீது பரவலா அதிருப்தி இருப்பது உண்மைதான். அந்த மக்களை அமைச்சர்களுக்கு எதிராவும் அரசுக்கு எதிராவும் தூண்டிவிட்டுத் துரத்தியடிக்கிறது தினகரனின் அ.ம.மு.க.காரங்கதான். திருவாரூர், நாகை பக்கம் பரவலா அவங்க கள வேலை பார்க்கறாங்க. தினகரன் தனிப்பட்ட முறையில் பண உதவியும் வேட்டி, சேலை, அரிசியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க இருக்கார். அதைச் சொல்லியே அவர் கட்சிக்காரங்க மக்களை அரசுக்கு எதிரா முடுக்கிவிடறாங்க. அதனால் நீங்க அந்தப் பகுதிகளுக்கு இப்ப போறது ரிஸ்க்குன்னு சொல்லியிருக்காங்க. இதனால் ஷாக்கான எடப்பாடி, சில பகுதிகளுக்கு மட்டும் வான் வழிப் பயணத்தை நடத்திவிட்டு, அந்தப் பகுதிகளுக்குப் போகாம எஸ்கேப் ஆயிட்டார். அதோட, தமிழகத்தில் தினகரன் தரப்பு கலவரத்தைத் தூண்டப் பார்க் குதுன்னு ஒரு ரிப்போர்ட்டையும் தயார் பண்ணி, டெல்லிக்கு எடப்பாடி எடுத்துக்கிட்டுப் போனாரு.''’
""சரிப்பா, அந்த ரிப்போர்ட் இருக்கட்டும். ஜெ.’ மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், தன் ஃபைனல் ரிப்போர்ட்டுக்கு ரெடியாகுதாமே?''’
""ஆமாங்க தலைவரே, வர்ற 2019 பிப்ரவரி 24-ந் தேதிக்கு முன்னாடி ஆறுமுகசாமி கமிஷனின் பணிக்காலம் நிறைவடையுது. இனிமேலும் அதற்குக் கால நீட்டிப்புத் தரமுடியாதுன்னு முதல்வர் எடப்பாடி சொல்லிட்டாராம். அதனால் இப்ப விசாரணை வேகம் பிடிச்சிருக்கு. ஜெ.’வுக்கு சிகிச்சையளித்த இன்னும் 17 டாக்டர்களிடம், கமிஷன், விசாரிக்க வேண்டியிருக்குதாம். அதோடு, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இவர்களோடு சசிகலாவையும் விசாரிப்பதற்கான ஆயத்த வேலைகள் நடக்குது. அண்மையில் வாக்குமூலம் கொடுத்த அப்பல்லோ மருத்துவரான சாமுவேல், 25.11.2016-ல் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு இதய மருத்துவர், ஜெ.’வுக்கு ஆஞ்சியோ செய்யலாமா?ன்னு கேட்டார்ன்னு சொல்லியிருந்தாரு.''
""மற்றொரு அப்பல்லோ டாக்டரான பாபு ஆப்ரஹாம், மருத்துவ சிகிச்சைகள் எல்லாமே சசிகலா சொன்னபடிதான் நடந்ததுன்னு சொல்லி யிருக்காரே. அதேபோல், சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவகுமார், போயஸ்கார்டனில் ஜெ.’ நிற்கும்போதே குதிப்பது போல் இருந்ததுன்னு சொல்லியிருக்காரு. அப்படியானால், அதை உட னடியாகக் கவனித்து அதற்கு ஏன் சிகிச்சை தர முயல வில்லை என்ற கேள்விக்கு அங்கே பதில் இல்லையே.''
""ஆமாங்க தலைவரே... அதேபோல் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெ.’வுக்கு வெளிநாட்டில் சிகிச்சை தர நினைத்தோம். ஆனால் அதை யார் தடுத்தார்கள் என்பது ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணையில், அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வரும்னு சொல்லியிருக்காரு. இப்படிப்பட்ட விசாரணைகள் போகும் போக்கு பற்றி கமிஷன் ஊழியர்கள் தரப்பில் விசாரித்த போது, கார்டனிலேயே ஜெ.வின் உடல் நிலை சரிவரப் பராமரிக்கப்படவில்லை. அவருக்கு உரிய மருத்துவமும் தரப்படவில்லை. அப்பல்லோவிலும் உரிய சிகிச்சைகளைத் தர மருத்துவர்கள் அனு மதிக்கப்படவில்லை என்பதெல்லாம் சாட்சியங்கள் மூலம் தெரியவந்திருக்கு.. இதையெல்லாம் பார்க்கும் போது, ஜெ.’வுக்கு மரணம் வரவழைக்கப்பட்டி ருக்கிறது என்றுதான் முடிவுக்கு வர வேண்டி யிருக்கு. ஆனால், இதை கமிஷனால் விரிவாக சொல்லமுடியுமா? என்பதும் கேள்விக்குறிதான். சம்பந்தப்பட்டவர்கள் அந்த நேரத்தில், தன் பவர் மூலம் புலனாய்வு அமைப்புகள் வரை கையில் வைத்துக்கொண்டு இஷ்டம் போல் விளையாடும் டெல்லியிடம் தஞ்சமடைந்து, தங்களைக் காப்பாற் றிக் கொள்ளவும் தயாராவார்கள் என்கிறார்கள்.''’
""டெல்லியின் பவர் விளையாட்டு கடவுள் சந்நிதானத்தைக் கூட விட்டுவைக்கலையே?''’
""சரியா சொன்னீங்க தலைவரே, சபரி மலையில் பெண்கள் அனுமதிக்கப்படணும்னு சுப்ரீம்கோர்ட் கொடுத்த மகத்தான தீர்ப்பை, எப்படியும் நடைமுறைப்படுத்திடணும்னு கேரள அரசு முயற்சிபண்ணுது. பா.ஜ.க.வோ, இந்துத்துவா வின் மகிமையும் வைதிகமும் அங்கே தோற்றுவிடக் கூடாதுன்னு பிடிவாதமா இருக்கு. அதனால், தங்கள் கட்சியில் இருக்கும் வி.ஐ.பி.க்களை தொடர்ந்து சபரிமலை விசிட்டுக்கு அனுப்பி, அந்த நேரத்தில் எப்படியாவது பிரச்சினையை ஏற்படுத்திடணும்னு நினைக்கிது. இந்த வி.ஐ.பி.க்களின் விசிட் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்னார் தொடங்கி அமித்ஷாவரை இருக்கிறார் களாம். அதனால் உஷாரான கேரளாவின் பினராய் விஜயன் அரசு, சபரியில் எந்த வகையிலும் கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாதுன்னு 144 தடை உத்தரவைக் போட்டு, கவனமா கண்காணிக்கிது.''
""தடையை மீறித்தான் பொன்னார் அங்கே போனாரா?''
""அவர் வழக்கம்போல் விரதமிருந்து இருமுடி கட்டிக்கிட்டு 16-ந் தேதி கட்சித் தொண்டர்கள் கார்களில் புடைசூழ சபரிக்குப் புறப்பட்டார். கஜா புயல் தாக்கியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கூடப் பார்க்காமல் சபரிக்குப் போகிறாரேன்னு தமிழக பா.ஜ.க.வினர் ஆதங்கப்பட்ட நிலையில், பொன்னார் சபரி நோக்கி விரைந்தார். அவரை நிலக்கல் பகுதியில் வழி மறிச்ச எஸ்.பி. யதிஷ்சந்திரா, அமைச்சர் என்பதால் நீங்கள் மட்டும் போகலாம், உங்களுடன் வந்த மற்றவர்களை அனுமதிக்கமாட்டோம்ன்னு சொன்னார். பம்பை வரை எங்களை அனுமதிக்க வேண்டும்ன்னு பொன் னார் கேட்டும், மறுத்துட் டார் எஸ்.பி. இதனால் அரசுப் பேருந்தில் பம் பைக்குப் பயணம் செய்தது பொன்னார் டீம். அவர் தரிசனம் முடிச்சிட்டுத் திரும்பும் போதும் அவரைக் கண்காணிச்சி அனுப்பிவைத்த கேரள போலீஸ், கொஞ்ச நேரத்தில் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்த காரையும், அதில் வந்த லோக்கல் பா.ஜ.க.வினரையும் அனுமதிக்கலை. தகவல் கேள்விப்பட்டு பொன்னார், அங்கே திரும்பி வர முயன்றார். ஆனால், கேரள போலீஸ், அதையும் அனுமதிக்காமல் திருப்பியனுப்பி, சலசலப்புக்கும் கைகலப்புக்கும் இடமில்லாமல் செஞ்சிடுச்சி. இருந்தும் பா.ஜ.க.வினர், பொன்னாருக்காக குமரியில் வரிஞ்சிகட்டி பஸ்ஸை சிறைப்பிடிச்சி, ஏரியாவையே பதட்டமாக்கிட்டாங்க.''’
""பவர் விளையாட்டு’பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு பெரிய அணியை உருவாக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு, அதில் லேசான பின்னடைவுன்னும், அதனால் 22-ந் தேதி டெல்லியில் கூட்ட இருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அவர் ஒத்தி வைச்சிட்டாருன்னும் தகவல் வருதே?''’
""வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு மாபெரும் அணியை உருவாக்கறதுதான் நாயுடுவின் திட்டம். இதற்காக மம்தா, நித்திஷ்குமார், முலாயம்சிங் யாதவ் தொடங்கி இங்க இருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்வரை சந்திச்சிப் பேசினார். ராகுல் காந்தியும், இந்த முயற்சிக்கு காங்கிரஸ் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து ஒத்துழைக்கும். நான் பிரதமர் வேட்பாளராக அறி விக்கப்படுவது கூட இந்த அணிக்கு சங்கடம் தந்தால், அந்த முடிவையும் வாபஸ் வாங்கத் தயார்ன்னு சந்திரபாபு நாயுடுவிடம் உத்தரவாதம் கொடுத் திருந்தார். அதையொட்டிதான் டெல்லியில் 22-ந் தேதி அந்தக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜியும், உ.பி.யின் மாயாவதியும், காங்கிரசோடு கூட்டணி வைப்பது பற்றி தயக்கம் காட்டுறதால, எல்லாரையும் இணைத்து கூட் டத்தை நடத்தலாம்னு ஒத்தி வச்சிருக்காரு.''
_______________
இறுதிச் சுற்று
காஷ்மீர் கலைப்பு!
காஷ்மீரில் பா.ஜ. கூட்டணியுடன் முதல்வர் பதவியைப் பிடித்தார் மெஹ்பூபா. தொடர் கருத்துவேறுபாடுகளால், பா.ஜ.க. ஆதரவை வாபஸ் வாங்க, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஆளுநர் ஆட்சிக்கான கெடு வரும் டிசம்பர் 18-உடன் முடியவிருப்பதால், காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதில் மெஹ்பூபா மும்முரம் காட்டினார். தேசிய மாநாட்டுக் கட்சியும் மெஹ்பூபா தரப்பில் இணைய மெஜாரிட்டிக்கும் அதிகமான சீட்டுகள் (56) கைவசமிருந்தன. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைக்க ஆளுநருக்கு பேக்ஸ் அனுப்பினார் மெஹ்பூபா. ஆனால் பா.ஜ.க. ஆதரவுத் தரப்பு எடுத்திருந்த மக்கள் மாநாட்டுக் கட்சி தங்களுக்கும் மெஜாரிட்டி இருப்பதாக ட்வீட் செய்தது. பேக்ஸ், ட்வீட் இவற்றுக்கிடையில் என்ன நடந்ததோ, காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், "கொள்கையளவில் முரண்கொண்ட கட்சிகளுக் கிடையிலான ஒற்றுமை நீடிக்காது, குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்' எனக் கூறி ஜம்மு- காஷ்மீர் சட்டசபையை நவம்பர் 21-ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டிருக்கிறார். பாகிஸ்தான் உத்தரவின் பெயரில்தான் காஷ்மீரில் ஆட்சியமைக்க கூட்டணி என்ற தொனியில் பேசிய பா.ஜ.வின் ராம் மாதவ், எதிர்க்கட்சிகளின் கிடுக்கிப்பிடியால் தன் கருத்தை திரும்பப் பெற்றிருக்கிறார்.
-சுப்பிரமணி