""ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்க நெருங்க, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு வழக்குகள் தள்ளுபடி, ஆசிரியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடின்னு முதல்வர் எடப்பாடி யூ டர்ன் அடிக்க ஆரம்பிச்சிட்டாரே?''
""இதனால அ.தி.மு.க ஆட்சியை தேர்தலில் மக்கள் தள்ளுபடி செய்யாமல் தக்க வைப்பாங்களா?''
""சரியான கேள்விங்க தலைவரே.. பொதுவா, ஆட்சி மாற்ற மனநிலை மக்களிடம் இருக்குது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் தோழர்கள் தமிழகம் முழுக்க வீடு வீடாக உண்டியல் ஏந்தி தேர்தல் நிதி வசூலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். காசு கொடுத்தா ஓட்டுப் போட்டுடுவாங்கன்னு நம்பப்படும் தமிழக மக்கள், கம்யூனிஸ்ட்டுகளுக்கு தாராளமாவே நிதியளிக்கிறாங் களாம். மாவட்டத்துக்கு 10 லட்சம் வரை உண்டியலில் விழுவது மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் அளிச்சிருக்குது. மக்கள் மனசில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தையும் மாற்றத்தையும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க.விடம் தோழர்கள் தெரிவிச்சிருக்காங்க.''’
""அறிவாலயத்தில் என்ன ரியாக்ஷன்?''’’
""தி.மு.க. தலைமையிடம் மார்க்சிஸ்ட் தோழர்கள், எங்களுக்குரிய தொகுதிகளை நீங்கள் ஒதுக்கினால் மட்டும் போதும். தேர்தல் செலவுக்கு மக்களே எங்களுக்கு நிறைய வாரிக் கொடுத்திருக்காங்க. அதனால் நாங்கள் நிற்கும் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் தி.மு.க.வினருக்கும் சேர்த்து எங்களால் செலவுசெய்ய முடியும்ன்னு சொல்லியிருக்காங்க. தி.மு.க. தலைமைக்கும் மாநிலம் முழுக்க இருந்து நல்ல ரெஸ்பான்ஸ்தான் வருதாம். தொழிலதிபர்கள், வணிகர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள்னு பலரும் தி.மு.க. தரப்பிடம் ஆர்வமா பேசுவதால், தேர்தல் நேர கலெக்ஷன் வெயிட்டா இருக்கும்னும் இதுதான் மக்கள் மனசை காட்டும் எலெக்ஷன் டிரண்டுன்னும் எதிர்க்கட்சியான தி.முக.வும் தோழமைக் கட்சிகளும் நம்புது''’’
""அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உறவு இன்னும் இழுபறியாவே இருக்குதே?''
""பா.ம.க. வலியுறுத்துவது 40 சீட். அ.தி.மு.க தலைமை 30-க்கு மேல் தாண்டலை. சசிகலா ரிலீஸாகி இருக்குற இந்த நேரத்தில் அ.தி.மு.க. குறைவான இடங்களில் நின்றால், அது இளக்கார மாகிவிடும்னு சொல்லியிருக்கு. இந்த நிலையில் ’மற்ற’ ஒதுக்கீடுகளிலும் அதிக எதிர்பார்ப்பைக் காட்டுதாம் பா.ம.க. ஆனால் எடப்பாடியோ, எப்படியும் பா.ம.க. இறங்கி வந்துதான் ஆகணும். கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்ன்னு சொல்கிறாராம். இந்த நிலையில் சசிகலா வருகை பற்றி, சென்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு தெருக்கூத்துக் காட்சிகளை வேடிக்கை பார்த்திருக்குன்னு’ கிண்டலாவும் மறைமுகமாவும் விமர்சிச்சிருக்கார் டாக்டர் ராமதாஸ்.''’’
""தி.மு.க. கூட்டணிக்குள் என்ன நிலவரம்?''’’
""தோழமைக் கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அறிவாலயம் கேட்டு வாங்கி வாரக்கணக்காகியும் எந்தப் பதிலும் இல்லையாம். தோழமைக் கட்சிகள் தொடர்பு கொண்டாலும் சொல்லமாட்டேங்குறாங்களாம். இதனால் ஒரு சோர்வு தெரியுது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் தொகுதியை வெளிச்சம் டி.வி. இயக்குநர் பனையூர் பாபுவுக்காக விடுதலை சிறுத்தைகள் கேட்குதாம். செய்யூர் உள்பட சிட்டிங் தொகுதிகளை தி.மு.க. தன் தோழமைகளுக்கு விட்டுக் கொடுக்கிறதா இல்லையாம்.''’’
""சசிகலா வருகையால் அ.தி.மு.கவுக்குள் குழப்பம் ஏற்பட்டது போல, அதிகாரிகள் மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாமே?''’’
""ஜெ. இருந்தவரை உயரதிகாரிகள் பலரும் சசிகலாவுக்கும் சேர்த்து சல்யூட் அடிச்சவங்கதானே.. பரப்பன அக்ரகாரா சிறையையே உல்லாசபுரியா மாத்திக்கிட்ட சசிகலா, தன் அண்ணி இளவரசியோடு ஷாப்பிங் எல்லாம் போய் வந்ததை, அங்குள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கண்டுபிடிக்க, அந்த அத்துமீறல்கள் விசாரணைக் கமிஷனிலும் உறுதியாச்சு. அதனால் சசிகலாவின் தண்டனைக் காலம் நீளும்னு இங்குள்ள அதிகாரிகள் நினைச்சாங்க. அதையும் மீறி அவர் விடுதலையானதால் திகைச்சிப் போயிட்டாங்க. பழையபடியும் பவர்ஃபுல் லேடியாயிடுவாங்களோன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.''’’
""ஆமாப்பா...''
""அதிகாரிகள் பம்முற நிலையில், ஏற்கனவே போயஸ் கார்டன் வாசலில் மிட்நைட்டில் எங்கம்மா.. சின்னம்மானு சொன்ன அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டும் திடீர் பாய்ச்சல் பலருக்கும் ஆச்சரியம்தாங்க தலைவரே... சண்முகத்திடம் உள்ள கனிமவள வளத்துறையில், மணல் விவகாரத்தில் மட்டும் ஆண்டுக்கு லட்சம் கோடிவரை புரளுமாம். அதற்கேற்ப வருமானமும் அதிகம். அதில் மேலிடம்வரை பங்கு கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கிடையே, எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் அடிக்கடி உரசல் இருந்துவந்தது. சசி ரிலீஸ் ஆகிறார்னு உறுதியானதும், சண்முகத்தை ஃப்ரீயா விட்டுட்டாராம் எடப்பாடி. அதற்கு நன்றிக்கடனாத்தான், எடப்பாடி மனம் குளிரும் வகையில், சசிகலாவைத் தாளித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்னு அவங்க கட்சி ஆளுங்களே சொல்றாங்க''’’
’""அ.தி.மு.க.வில் புதுசா இப்ப, "எம்.ஜி.ஆர். மன்றம்', "ஜெ. பேரவை' போல எடப்பாடி ஆதரவாளர்கள், ’"அகில உலக எடப்பாடியார் பேரவை'ங்கிற புதிய அமைப் பைக் கட்சிக்குள்ளேயே தொடங்கறாங்களே?''’’
""ஓ.பி.எஸ். போன்றவர்களை ஓரம் கட்டவும், தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் பதவியும் செல்வாக்கும் கிடைக்கும் வகையிலும், தன் பெயரில் ஒரு அகில உலகப் பேரவையை தொடங்கும்படி, தன் ஆதரவாளர் களுக்கு சமிக்ஞை கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி. அதன்படி தான் தமிழகம் முழுக்க இந்த அமைப்பு உருவாக்கப்படுதாம். அந்த வகையில் மாமல்லபுரத்தில் விடுதிகளை நடத்திவரும் அ.தி.மு.க பிரமுகரான ’"மீன் குழம்பு' கணேசன்’, எடப்பாடியார் பேரவை மூலம், அவரது மணல் சிற்பத்தை உருவாக்கி, எடப்பாடி புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார். இவரும் இவரது மகனும் எடப்பாடி புகழ் பாடுவதில் எல்லாரையும் மிஞ்சிட்டாங்களாம்.''’’
""காங்கிரசின் சீனியரான குலாம்நபி ஆசாத்துக்கு நாடாளுமன்ற மேலவையில் 9-ந் தேதி நெகிழ்ச்சியான பிரிவு உபசார நிகழ்ச்சி நடந் திருக்குதே?''’
""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத்தைப் பொறுத்த வரை பிரிவு உபசார விழாக் களில் கட்சி வேற்றுமைகளைத் தாண்டி, சம்மந்தப் பட்ட பிரமுகர்களின் பண்பைப் போற்றுவதுதான் வழக்கம். கம்யூனிஸ்ட் தலைவர்களை வலதுசாரித் தலைவர்கள் பாராட்டியிருக்காங்க. காங்கிரசாரை கம்யூனிஸ்ட்டுகள் பாராட்டியிருக்காங்க. அதுபோலத்தான் இப்போது காங்கிரஸ் சீனியரும் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் உள்பட, ஜம்மு- காஷ்மீரிலிருந்து தேர்வான 4 எம்.பி.க்களின் பதவிக்காலம் இந்த 15-ந் தேதியோட முடிவடையுது''’’
""யூனியன் பிரதேசமாக காஷ்மீர் மாற்றப்பட்டபிறகு, அங்கு எந்தத் தேர்தலும் நடக்காததால், அங்கிருந்து இப்போதைக்கு ராஜ்யசபா எம்.பி.க் கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லையேப்பா''’’
""உண்மைதாங்க தலைவரே, அதனால்தான் இந்த 4 எம்.பி.க்களுக்குமான பிரிவு உபசார நிகழ்வுக்கு கூடுதல் கவனிப்பு இருந்தது. அப்ப குலாம்நபியைப் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, அவருக்கும் தனக்குமான நட்பையும் அவரது ஆளுமையையும் விவரித்துக் கண்கலங்கினார். மேலும் அவரது இடத்தைப் பூர்த்திசெய்ய யாரா லும் முடியாதுன்னு சொல்லிவிட்டு, அவருக்கு சல்யூட்டும் வைக்க, அவையே உணர்ச்சிமயமா ஆயிடிச்சி. அதோடு நிறுத்தாத மோடி, குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் முடிந்தாலும் அவரை ஓய்வெடுக்க விடமாட்டேன். என் கதவுகள் அவருக்காக எப்போதும் திறந்தே இருக்கும்னு சொல்லி, காங்கிரஸ் தரப்பில் சலசலப்பையும் ஏற்படுத்திவிட்டார்''
""ஏற்கனவே, குலாம்நபி ஆசாத் மீது, சந்தேகப் பார்வை காங்கிரசில் இருந்ததே?''’’
""உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் காங்கிரசின் தேர்தல் தோல்வி பற்றி கருத்து சொன்ன ஆசாத், "கட்சி தன்னை சுய பரிசோதனைக்கு ஆளாக்கிக்கணும்'னு சொன்ன தோட, "கட்சிக்கு முழுநேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படணும்' என்றும், அதற்காக உள் கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை வலியுறுத்தி சோனியாவுக்குக் கடிதமும் எழுதினார். அவர் தலைமையில் 23 தலைவர்கள் தலைமைக்கு எதிராகக் குரல் உயர்த்தினார்கள். அதோடு, காங்கிரசில் ஸ்டார் ஓட்டல் கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாகவும் அழுத்தமாகச் சொன்னார். இதெல்லாம் அவர் மீது சந்தேகப் பார்வையை விழ வச்சிது''’’
""மோடி, அந்த சந்தேகத்தைச் சாதகமாக்கிக் கிட்டு, அவரைத் தன் வலையில் விழ வைக்க முயற்சிக்கிறாரா?''’’
""அப்படிதான் டெல்லித் தரப்பு சொல்லுது. ஆனால் காங்கிரசில் இருக்கும் ஒரு தரப்பு, மோடியின் வலையில் ஆசாத் எப்போதோ விழுந்துவிட்டார். அவரை வைத்து காங்கிரசில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகிறார் மோடி. அதன் ஒரு வடிவம்தான் குலாம்நபி உள்ளிட்ட 23 பேர் எழுதிய கடிதம்னு அப்போதே மூத்த தலைவர்கள் சிலர், சோனியாவிடமே குற்றம் சாட்டினர். இருப்பினும் குலாம்நபிக்கான இடத்தை சோனியா புறக்கணிக்கலை. இப்ப மோடி, அவரை ஓய் வெடுக்க விடமாட்டேன்னு சொன்னதைச் சுட்டிக்காட்டும் சிலர், "விரைவில் ஆசாத் பா.ஜ.க.வில் இணைவார்'னு சொல்லத் தொடங்கிவிட்டார்கள். எதிரிகளிடம் வாழ்த்து வாங்கறது கூட சாபம்தான் போலிருக்கு''’’
""தமிழக சட்டமன்றத்துக்குள் குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டு போன ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவையின் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசையும் உயர்நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்திருக்குதே?''’’
""தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைபாக்குகள் தமிழ்நாட்டில் ஓப்பனா விற்பனையாகுதுன்னு ஆதாரப்பூர்வமாக காட்டு வதற்காக ஸ்டாலினும் தி.மு.க.வின் மற்ற எம்.எல்.ஏ.க் களும் பேரவைக்குள் அந்த பாக்கெட்டுகளைக் கொண்டுபோனாங்க. ஏற்கனவே குட்கா ஊழலில் சிக்கியுள்ள எடப்பாடி அரசு, குட்கா விற்பனையைத் தடுக்காமல், அதை அம்பலப்படுத்துனவங்களுக்கு சபாநாயகர் மூலமா உரிமைக்குழு வழியா நோட்டீஸ் அனுப்பியது. முதல் நோட்டீஸை நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில்... இரண்டாவது முறையும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அதையும் இப்ப நீதிமன்றம் ரத்து செய்திடிச்சி. குட்கா அரசு விரைவில் வீழும்னு ஸ்டாலின் ட்வீட் செய்திருக்காரு.''’’
""மு.க.அழகிரி மூவ் என்னவாம்?''’’
""அவர் சைலன்ட்டா இருக்காரு. கோபாலபுரம் குடும்பத்தினர் சமாதானக் கொடி பறக்க முயற்சி பண்ணுறாங்க. ஒரு டி.வி. பேட்டியில் மு.க. அழகிரி பற்றிய கேள்விக்கான ஒரு வரி பதிலாக, என் அண்ணன் என்று அழுத்தமாகச் சொன்னார் ஸ்டாலின். அது முரசொலியிலும் பதிவானது. பல ஆண்டுகள் கழித்து தன் பெயர் முரசொலியில் வந்திருப்பது பற்றி முரசொலி செல்வத்திடமும் செல்வியிடமும் அழகிரி சொல்லியிருக்காரு. தேர்தல்வரை அமைதியாக இருந்து, அதன்பிறகு கறுப்பு-சிவப்புக் கட்சியின் அண்ணன்-தம்பியிடையே வெள்ளைக் கொடி பறக்கலாம்னு சொல்றாங்க.''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலை சொல்றேன். அமைச்சர்களின் கார் டிரைவர்கள் செல்வாக்கா காரியம் சாதிக்கிற மாதிரி, ஆரோக்கியமான துறைச் செயலாளரின் கார் ஓட்டுநரான முருகக் கடவுள் பெயர் கொண்டவர் செயலாளருக்கே தெரியாமல் புகுந்துவிளையாடுறாராம்.''’’