""ஹலோ தலைவரே அக்னி நட்சத்திரம் முடிஞ்சு பதினஞ்சு நாளாகியும் வெயிலின் தாக்கம் குறைஞ்சபாடில்லை. அதே மாதிரி இரண்டாவது முறையா பா.ஜ.க. அரசு பதவியேற்று பத்து நாட்களுக்கு மேலாகியும் அமித்ஷாவின் விசாரணையும் குறைஞ்ச பாடில்லை.''
""என்ன விசாரணை, யாரிடம் விசா ரணைன்னு கொஞ்சம் டீடெய்லா சொல் லுப்பா.''
""அதாவதுங்க தலைவரே இந்தியா முழுவதும் பா.ஜ.க. வாரிச் சுருட்டி ஜெயித்திருந்தாலும், தமிழகம் காலை வாரிவிட்டது உங்களுக்குத் தெரியும். தோல்விக்கான காரணம் என்னன்னு தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டது டெல்லி தலைமை. எடப்பாடியும் அமைச்சர்களும் ஒத்துழைக்கவில்லை. ஓ.பி.எஸ்.சும் நம்பிக்கையா நடந்துக்கலை. அதிலும் தனது மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் ஓ.பி.எஸ். கவனம் செலுத்துனாரு. அ.தி.மு.க. தொண்டர்களும் நமக்கு ஓட்டுப் போடவில்லைன்னு கமலாலயம் விளக்கம் சொல்லியது. தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளில் பூத்வாரியாக கிடைத்த ஓட்டு விபரங்களையும் கேட்டி ருந்தார். பி.ஜே.பி. போட்டியிட்ட 5 தொகுதி களிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு லீடிங்கும் கன்னா பின்னான்னு எகிறியிருப் பதைப் பார்த்து ரொம்பவே அதிருப்தி அடைஞ்சிருக்கார் அமித்ஷா.''
""அதற்கு கமலாலயம் என்ன காரணம் சொன்ன தாம்?''
""உ.பி.யில அகிலேஷ்- மாயாவதி கூட்டணி ஒர்க்-அவுட் ஆகல. கர்நாடகத்துல காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி ஒர்க்-அவுட் ஆகல. அதே மாதிரிதான் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஒர்க்-அவுட் ஆகல. காரணம் அ.தி.மு.க.வுக்குள்ளேயே பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் அதிகம்னு சொல்லியிருக்கு. அதற்கு பா.ஜ.க. தலைமையோ, 2014-ல் மேற்குவங்கத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். ஆனா இப்ப 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கோம். ஆனால் தமிழ்நாட்டிலோ நாளுக்கு நாள் கட்சி தேஞ்சுக்கிட்டே போகுது. இப்படியே போனால் தமிழ்நாட்டில் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என ரொம்பவே கவலைப்படுகிறதாம்.''
""மேற்குவங்கத்தில் பி.ஜே.பி. ஸ்ட்ராங்கான மாதிரி, இங்கேயும் ஸ்ட்ராங்காவதற்கு ஏதாவது ஸ்பெஷல் திட்டம் வச்சிருப்பாரே அமித்ஷா?.''
""கரெக்டா சொன்னீங்க தலைவரே. அந்த ஸ்பெஷல் திட்டத்தின் ரெண்டு பாயிண்டுகளை மட்டும் சொல்றேன், கேட்டுக்கங்க. பாயிண்ட் நம்பர் 1. கட்சி ஆரம்பிக்கப் போறேன், கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கிற ரஜினியை, பி.ஜே.பி.க் குள் கொண்டு வந்து அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது. பாயிண்ட் நம்பர் 2. ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கலைன்னா, அவரை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து, அந்தக் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்து 2021-ல் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது. இதற்காக ரஜினியின் குடும்ப உறவுகள் மூலம் வெயிட்டாக பேசி வருகிறது பா.ஜ.க. தலைமை. மோடி-அமித்ஷா-நிதின்கட்கரி இந்த மூவருமே ரஜினியை கன்வின்ஸ் பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்காங்க. ரஜினி என்ன சொல்வாரு, எப்படிச் சொல்வாரு, எப்ப சொல்லுவாருன்னு யாருக்குத் தெரியும்.''
""முதல்வர் எடப்பாடியின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் கோபம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருதாமே? அதப்பத்தின சங்கதிகள் எதாவது உனக்குத் தெரியுமா?''
""நல்லாவே தெரியும்ங்க தலைவரே... இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டு வந்த உயர் சாதியினர், இந்தத் தேர்தலில் நேரடியாகவே பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இதை பா.ஜ.க.வின் ஓட்டு வங்கியா நிலைநிறுத்த மேலிடம் முயற்சிக்குது. ஆனாலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி யால தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலையைக் கட்டுப்படுத்த முடியல. அதனால்தான் தமிழகத்தில் கட்சிக்குப் பெரிய பின்னடை வுன்னு பி.ஜே.பி. மாநில தலைமை ரிப்போர்ட் கொடுத்திருக்குது. அதோடு இ.பி.எஸ். தலைமையிலிருப்பது செயலிழந்த- ஊழல் ஆட்சிங்கிறது தான் பா.ஜ.க.வின் பார்வை. இதையெல்லாம் ஸ்மெல் பண்ணிய எடப்பாடி, குருவா யூரப்பனை தரிசிக்க மோடி வந்தப்ப, அவருக்கு துணையா வந்த கேரள கவர்னர் சதா சிவம் மூலமா சமாதான சமிக்ஞை போட ப்ளான் பண்ணினாரு. ஆனா மோடி யோ சதாசிவம் இதுபற்றி பேசுனப்ப கண்டுகொள்ளவே வில்லை. அதனால இப்ப அ.தி.மு.க. மீது மோடியும் மோடி மீது அ.தி.மு.க.வும் கடுப்புல இருக்கு.''
""ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமைன்னு அ.தி.மு.க.வுல சலசலப்பு சத்தம் அதிகமா கேக்குதே. என்னதான் நடக்குது அந்த ஏரியாவுல.''
""அதப்பத்தின டீடெய்லா ஸ்டோரி நக்கீரன்ல இருக்கு. படிச்சுத் தெளிஞ்சுக்கோங்க. இருந்தாலும் என்கிட்ட இருக்கும் விபரங்களைச் சொல்லிடுறேன். 12-ஆம் தேதி நடக்கப் போகும் அ.தி.மு.க. மா.செ.க்கள், நிர்வாகிகள் கூட்டம் கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் பொதுக்குழு ரேஞ்சுக்கு கூடுது. அந்தக் கூட்டத்தில் இ.பி.எஸ்.மீதும் ஓ.பி.எஸ். மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகள் வைக்கிறதுக்கு ஒரு குரூப் ரெடியா இருக்குது.''
""2012-ல் நடந்த தர்மபுரி இளவரசன் மரணம் தமிழ்நாட்டையே ஓர் உலுக்கு உலுக்குச்சு. அந்த இளவரசனின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட நீதிபதி சிங்காரவேலு கமிஷனின் அறிக்கையில் இளவரசனின் மரணம் தற்கொலைதான் என்றும் இதில் சந்தேகப் படும்படி எதுவும் இல்லை என இருக்குதாமே.''
""அதிகாரப்பூர்வமா வெளியிடப்படாமல் லீக் ஆகியிருக்கு. அந்த அறிக்கைக்கு ரியாக்ட் பண்ணியிருக்கும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ், அப்போது பா.ம.க. மீது பழி சுமத்திய போலிப் புரட்சியாளர்கள் இப்போது மன்னிப்புக் கேட்க வேண்டும்னு சொல்லிருக் காரு. வி.சி.க.தலைவர் திருமாவளவனோ, அறிக்கையின் இறுதிப் பகுதி மட்டும்தான் ரிலீசாகியிருக்கு. முழு அறிக்கையும் வெளி வந்தால் தான் உண்மை தெரியும்னு சொல்லி ருக்காரு.''
""பாலிடிக்ஸ் மேட் டர், சோஷியல் மேட் டர் எல்லாம் ஓ.கே. அதிகாரிகள் மேட்டர் எதுவும் இருக்கா?''
""ஓ...…இருக்கே. தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அந்த இடத்தில் உட்கார்வதற்காக திரிபாதியும் ஜாஃபர் சேட்டும் ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்திருந்த வழக்கை, கோர்ட் மூலம் ரத்து பண்ணியதால் ஜாஃபர் சேட்டின் பெயர் டி.ஜி.பி. பேனலில் இடம் பெற்றது. இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சில தகவல்களை அனுப்பியுள்ளாராம். அதாவது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்ததால் தனக்கு பல விவரங்கள் தெரியும்னும், அதனடிப்படையில் தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் பா.ஜ.க.வுக்கு பக்கபலமாக இருப்பேன் என்பதுதான் ஜாஃபர் அனுப்பிய தகவலின் சாராம்சம். ஓய்வு பெறும் டி.கே.ராஜேந்திரனும் ஜாஃபருக்கு பல வழிகளிலும் துணை நிற்கிறாராம். ஏன்னா ஜெ. ஆட்சிக் காலத்தில் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்ற ராமானுஜம், ஜெ.வின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதேபோல் டி.கே.ராஜேந்திரனை தனது ஆலோசகராக நியமிக்க எண்ணியுள்ளாராம் எடப்பாடி. ஆனால் டெல்லியிலிருந்து இதற்கான பாஸிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. இந்த விஷயங்களையெல்லாம்
ஐ.பி.எஸ். வட்டா ரங்களில் ஆச்சர்யமாக பேசிக் கொண்டி ருக்கிறார்கள்.'' ""ஐ.ஏ.எஸ்.
வட்டாரங்களில் அதைவிட ஆச்சர்யம் + அதிசயத் தகவல் ஒண்ணு ஓடிக் கொண் டிருக்காமே?'' ""கவர்னர் மாளிகை ராஜகோபால் பேரைச் சொன்னாலே அமைச்சர் களுக்கும் அதிகாரிகளுக்கும் சும்மா அதிரும். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையில் கொடிகட்டிப் பறப்பவர். அந்த ராஜகோபால்தான் கடந்த வாரம் ஒரு நாள் இரவு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பவ்யம் காட்டியிருக்கார். ஏன்னா இந்த மாதம் ரிடையர்டாகப் போகும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடத் திற்கு குறி வைத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் உதவியை நாடியிருக்கார். பியூஷ் கோயல் கொடுத்த ஐடியாப்படிதான் தங்கமணி யைச் சந்தித்தாராம். எப்படி அதிகாரம் பண்ணியவர், இப்படி பம்முறாரே எல்லாம் பதவி படுத்தும்பாடு என ஆச்சர்யமாகவும் அதிசய மாகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் பேசிக்கிறாங்க.''
""நானும் ஒரு தகவல் சொல்றேன். பா.ஜ.க. ஆட்சி யில் இல்லாத தமிழகம், ஆந்திரா, மேற்குவங்க மாநி லங்களின் கவர்னர்களான பன்வாரிலால், நரசிம்மன், திரிபாதி ஆகியோரின் டெல்லி பயணம் இப்போ தைய சூழலில் உற்றுக் கவ னிக்கப்படுகிறது. அதிலும் தமிழக சட்டமன்றம் கூடுவதை தள்ளிப் போடு மாறு எடப்பாடியிடம் இருந்து வந்திருக்கும் கோரிக்கை, 7 பேர் விடு தலையில் என்ன முடிவு எடுப்பது உள்ளிட்ட பிரச் சனைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவாதித்திருக்கிறார் பன்வாரிலால். தேவைப் பட்டால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கும் திட்டத்தில் உள்ளாராம் பன்வாரிலால். அதே நேரம் தமிழகத்திற்கு புது கவர்ன ரை நியமிக்கும் ஐடியாவில் மோடி இருப்பதால், பன்வாரிலாலிடமிருந்து ராஜினாமா கடிதம் வாங்கப்படலாம் என்றும் டெல்லியில் பேச்சு ஓடிக் கொண்டிருக்குது.''
________________
இறுதிச்சுற்று
"பார்' நாகராஜை காப்பாற்றும் பொள்ளாச்சி போலீஸ்!
சி.பி.ஐ தீவிரமாக களம் இறங்கி விசாரித்துக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, ஜவ்வாக இழுத் தடிக்க வைக்கும் பலவித டெக்னிக்குகளில் இறங்கியிருக்கின்றனர் பொள்ளாச்சி போலீசார். அதில் ஒரு டெக்னிக்தான் கடந்த 07-ஆம் தேதி இரவு ‘"பார்' நாகராஜ் கைது செய்யப்பட்டது. விஷயமும் இது தான், விஷமும் இது தான். கோட்டாம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ‘பக்’ என்ற வகையைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்திருக்கிறான். பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் மகன் சபரீசன், 25 ஆயிரம் ரேட் பேசி அந்த நாயை வாங்கியிருக்கிறான்.
நாய் விற்ற காசை வாங்கும் பிரச்சனையில் ரம்ஜான் அன்று இரவு அந்த இளைஞனையும் அவனது நண்பர்களையும் சபரீசன் தூண்டுதலில் வெளுத்துக் கட்டிவிட்டார்கள் பார் நாகராஜ் ஆட்கள். இரண்டு தரப்பிலும் 14 பேர் மீது கேஸ் போட்டு கைது செய்து கோவை மத்திய சிறையில் தள்ளிவிட்டனர் பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார். ""இங்க தானுங்க சூட்சுமமே இருக்கு. அடிதடி கேஸுங்கிறது சும்மா ஒப்புக்குத் தாங்க. பார் நாகராஜை உள்ளே தள்ளிட்டா, சி.பி.ஐ. விசாரணை தள்ளிப்போகும்னு எங்க ஆளுங்க பக்காவா ப்ளான் போட்டுட்டாங்க. அரெஸ்ட் ஆனவுடனேயே நெஞ்சு வலின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட்டானான் பார் நாகராஜ். உடம்பு நல்லாத்தான் இருக்குன்னு டாக்டர்கள்கிட்ட சர்டிபிகேட் வாங்கி, நாங்க கரெக்டா இருக்கோம்னு காண்பிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நெஞ்சு வலின்னு நடிச்ச பார் நாகராஜைவிட எங்க ஆளுங்க நல்லாவே நடிக்கிறாங்க''’என நம்மிடம் விரிவாகவே பேசினார் நமது போலீஸ் சோர்ஸ்.
-அருள்குமார்