""ஹலோ தலைவரே, பா.ஜ.க. ஆட்சி நடத்தும் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் கோவிலில் ஜனாதிபதியையே சாதி பாகுபாட்டால் அனுமதிக்கல. தமிழ்நாட்டில் நீட் கொடுமை. இது எல்லாமே, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் இமேஜையும் சேர்த்துத்தான் பொத்தலாக்கியிருக்கு''.
""இதையெல்லாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மோடி எப்படி சரிசெய்யப் போறாராம்?''’
""தலைவரே... இந்தியா முழுக்க பா.ஜ.க.வின் இமேஜும் தனது இமேஜும் சரிந்துவருவதை மோடி உணர்ந்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனது பிரதிநிதிகளை அனுப்பி, சரி பண்ணப் பார்க்கிறார். தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், தொழிலதிபர்கள், ஊடக அதிபர்கள், அரசியல் விமர்சகர்கள் என்று பல தரப்பினரையும் சந்திச்சிருக்காரு. அப்போது, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் பாதிப்புகள் பற்றி தொழிலதிபர்கள் பலரும் சொல்ல, ஹெச்.ராஜா போன்றவர்களின் இந்துத்வா அத்துமீறல்கள், பா.ஜ.க.வுக்குக் குழிவெட்டிக்கிட்டு இருக்குன்னு ஊடகத் தரப்பினர் கருத்துகளை எடுத்துவச்சிருக்காங்க. மோடி குறித்த விமர்சனங்களை அவருக்கே நேரடியாக அனுப்புங்கள்னும் அவங்ககிட்ட நிர்மலா சீதாராமன் கேட்டுக்கிட்டாராம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தங்கள் பிம்பத்தை சரிசெஞ்சிக்கத் துடிக்கிது பா.ஜ.க. தரப்பு.''’
""சாதி ரீதியிலான வாக்கு வங்கிகளையும் பா.ஜ.க. குறிவைக்குதாமே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, சட்டமன்ற- நாடாளுமன்றத் தொகுதிகள் தொடங்கி, மாநகரம், நகரம், ஒன்றியம் வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் செல்வாக்கா இருக்கும் சாதி அமைப்புகள் பற்றியும், சின்னஞ்சிறு சாதி அமைப்புகள் பற்றியும் கவனம் வைக்கிது பா.ஜ.க. இதற்காக தங்கள் கட்சியைச் சேர்ந்த பி.டி.அரசகுமார், கே.டி.ராகவன் உள்ளிட்ட சிலரைக் களமிறக்கியிருக்கு. இவர்கள் அந்தந்த சாதிய அமைப்புகளோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, பா.ஜ.க. பக்கம் அவர்களை இழுத்துவரும் முயற்சியில் இறங்கியிருக்காங்க. புதிய தமிழகத்தைப் பா.ஜ.க. பக்கம் இந்த பாணியில் இழுத்திருக்கும் இவர்கள், தற்போது வன்னியர் சமூக அமைப்புகளிடம் நட்பு பாராட்டி வருகின்றனர். சாதீய அமைப்புகளைக் கையிலெடுப்பதன் மூலம் தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள்வரை கைப்பற்ற முடியும் என்பதும் பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்.''’’
""அகில இந்திய அளவில் காங்கிரஸில் இருக்கும் பெரிய தலைகளையே இந்துத்வா தூண்டிலில் சிக்கவைக்கும் கில்லாடிகளாச்சே அவர்கள்.''’
""ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் தலைவர் சோனியாவால் ஜனாதிபதிக்கு நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜியே 7-ந் தேதி நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில், காங்கிரஸ் தரப்பின் எதிர்ப்பையும் மீறிப் பங்கேற்றிருக்கிறார். முகர்ஜி போலவே காங்கிரசை சேர்ந்த பிராமண சமுதாயத்தினரையும் ஆனந்த் சர்மா, ஜனார்த்தன திரிவேதி, ஜெய்ராம் ரமேஷ், சதுர்வேதி போன்ற காங்கிரசின் சீனியர்களும் இந்துத்வா டச்சில் இருக்காங்களாம்.''’
""மதம் மனிதர்களை மட்டுமல்ல, எல்லாத்தையும் ஆக்கிரமிக்கும். அதுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழக விவகாரமே சாட்சி.''’
""சரியா சொன்னீங்க தலைவரே, தஞ்சையருகே வல்லத்தில், திறந்தவெளி சிறைச்சாலையை உருவாக்க தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட இடம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, அது ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாமாக பயன்பட்டதை நம்ம நக்கீரன்தான் அம்பலப்படுத்தியது. சாஸ்த்ராவால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் அரசுக்கு வேண்டும்ன்னு தஞ்சை கலெக்டர் சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்த நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், சாஸ்த்திராவால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு அழுத்தமா சொல்லியிருக்காரு.''’
""தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலரா இருந்த ‘சர்ச்சை நாயகர்’ டாக்டர் பாலாஜி, ராஜினாமா பண்ணியிருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, ஜெ. அப்பல்லோவில் இருந்தபோது தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளின் இடைத் தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெ. கைநாட்டு வைத்ததற்கு சாட்சியாக அறிவிக்கப்பட்டவர்தான் இந்த பாலாஜி. இந்த சாட்சியத்துக்கான வெகுமதியாக, இவரைவிட சீனியர்கள் பலர் இருந்தபோதும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையப் பொறுப்பில் இவர் உட்கார வைக்கப்பட்டார். இவர்தான் இப்போது ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பாக விசாரித்தபோது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உறுப்புமாற்று சிகிச்சை நடக்கிறது. அதேபோல் இங்குதான் அவை வெற்றிகரமாகவே நடத்தப்படுகிறது. ஆனால் இங்கே உறுப்புதானம் பெற பலர் காத்திருக்கும் நிலையிலும், வசதியான வெளிநாட்டு நபர்களுக்கே சீனியாரிட்டிகளைத் தாண்டி, இந்த சிகிச்சை கிடைக்கிது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கடந்த 6 மாதமாகக் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டபடியே இருக்குது. மேலிடங்களின் தலையீட்டால் நடக்கும் இந்த முறைகேடுகளில், தேவையில்லாமல் தான் சிக்கிக்கொள்ளக் கூடாதுன்னுதான், பாலாஜி ராஜினாமா பண்ணிவிட்டார்ன்னு அவர் தரப்பு சொல்லுதுங்க தலைவரே.''’
""நானும் இது தொடர்பா விசாரிச்சேம்பா. இந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடு சம்பந்தமா டாக்டர் பாலாஜியிடமும் கேள்வி எழுப்பப்பட்டதால், அவர் ராஜினாமா செய்திருக்காருன்னும் சொல்றாங்க. ஜெ.’ கைநாட்டு தொடர்பான வழக்குகளில் டாக்டர் பாலாஜி, அரசுக்கு எதிராக பல்டியடித்து வாக்குமூலம் கொடுப்பாரானால், இடைத்தேர்தல் வெற்றிகள் செல்லாமல் போய்விடும். அதனால் அவரை வேறு வகைகளில் அரசு குளிர்விக்கவேண்டிய கட்டாயத்தை, இந்த ராஜினாமா மூலம் டாக்டர் பாலாஜியே ஏற்படுத்தியிருக்காருன்னு ஒரு தரப்பு சொல்லுது.''’