ஹலோ தலைவரே, டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு சமீப காலமா தமிழகம் என்றாலே அலர்ஜியாக இருக்கிறதாம். அதனால், டெல்லிப் பிரமுகர்கள் பலரும் தமிழக நிகழ்ச்சி என்றாலே டிமிக்கி கொடுக்க ஆரம்பிச்சிடறாங்க.''
""ஆமாம்பா, துக்ளக் விழாவில் கலந்துக்க இருந்த மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, அந்த நிகழ்ச்சியில் தலைகாட்டலையே?''
""உண்மைதாங்க தலைவரே, ஊழல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எடப்பாடித் தரப்புமீது பா.ஜ.க.வின் டெல்லித் தலைமை கடும் அதிருப்தியில் இருக்குதாம். அதேபோல் தமிழக பா.ஜ.க.வினரின் செயல்பாட்டிலும் அதற்கு திருப்தி இல்லையாம். அதனால்தான் தமிழகம்னாலே இப்பல்லாம் டெல்லி ரொம்பவே முகம் சுளிக்குது. இந்தக் காரணத்தால்தான் துக்ளக் விழாவை ரத்து செய்துவிட்டு, குஜராத் மாநில ஆமதாபாத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவுக்குப் போயிட்டாராம் அமித்ஷா.''
""ஜெயலலிதாவின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்னு சொல்லப்பட்டதே? அவர் ஓகே சொல்லிட்டாரா?''
""ஜெ நினைவிடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துக்க முதலில் ஒப்புதல் கொடுத்திருந்தார் மோடி. ஆனால் இப்ப ஏற்பட்டிருக்கும் அதிருப்தி காரணமாக, நான் வரலைன்னு மோடி சொல்லிவிட்டாராம். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்குதாம். சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ-1 குற்றவாளியான ஜெயலலிதா, தீர்ப்பிற்கு முன்னதாக மரண மடைந்து விட்டாலும், அவர் மீதான வழக்கில் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்டவங்களுக்கு ஜெயில் தண்டனை கிடைத்தது. அதனால் ஜெ. நினைவிடத்தைத் திறந்து வைத்தால், சட்ட ரீதியிலான சிக்கல்களையும் கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரலாம்னு மோடி நினைக்கிறாராம். இருந்தும், கான் பரன்சிங் வழி யாக வேனும் ஜெ. நினை விடத்தைத் திறந்து வையுங் கள்ன்னு எடப்பாடித் தரப்பு மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்து தாம்.''
""ரிபப்ளிக் டி.வி. அர்னாப் கோஸ்வாமி விவகாரத்தாலும் பா.ஜ.க.வுக்கு சிக்கலாமே?''
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. எம்.பி. சப்போர்ட்டில் நடக்கும் ரிபப்ளிக் டி.வி.யின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி, பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர். அண்மையில் கட்டுமான நிறுவன உரிமையாளரான அன்வே நாயக்கைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கை தூசு தட்டிய மகாராஷ்டிரா போலீசாரால் அர்னாப் கைது செய்யப்பட்டார். இவர், கைதுக்கு முன் பார்க் அமைப்பின் மாஜி சி.இ.ஓ.வான பார்த்தோ தாஸ்குப்தாவோடு, தங்கள் டி.வி.யின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக்கொள்வது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் விரிவா விவாதிச்சிருக்கார். அப்ப, காஷ்மீரில் தீவிரவாதிகளால் நடத்தபட்டதாகச் சொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல், மற்றும் பாகிஸ்தான் எல்லையான பாலக்கோட்டில் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களை, அவை நடப்பதற்கு முன்னதாகவே தெரிந்துகொண்டு அது குறித்தெல்லாம் உரையாடியிருக்கிறார்.''
""ஆமாம்பா, இந்த உரையாடல் தொடர்பான 500 பக்க அறிக்கையை மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் அண்மையில் அம்பலப்படுத்தியிருக்காரே? ப.சிதம்பரமும் இந்தத் தகவல் இன்னும் யார் யாருக்கு முன்கூட்டியே தெரிந்ததுன்னு கேட்கிறாரே?''
""ஆமாங்க தலைவரே, அதுதான் இப்ப இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. இதன் மூலம், 40 இந்திய ராணுவ வீரர்களின் உயிரைக் குடித்த புல்வாமா தாக்குதல் முன்னதாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செட்டப் தாக்குதல் தானாங்கிற கேள்வியை, மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அரசு எழுப்புது. அதோட, மோடி அரசு பேர் வாங்கறதுக்காக ராணுவ வீரர்களின் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டதா? என்கிற சர்ச்சையையும் அதிரடியாகக் கிளப்புது. நாட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையெல்லாம் தேசவிரோதிகள், ஆன்ட்டி இண்டியன், அர்பன் நக்சல்கள்னு சொல்லிக் கிட்டிருந்த பா.ஜ.க.தான், ராணுவத்தைப் பணயம் வைத்த ஆன்ட்டி இண்டியன்னு விமர்சனம் கிளம்பியிருக்கு. முன்னாள் எம்.பி. மணிசங்கரய்யர் போன்றவர்கள் ரிபப்ளிக் டி.வி. மைக்கிலேயே நீங்கதான் ஆன்ட்டி நேஷனல்னு ஓப்பனாவே சொல்லியிருக்காங்க.''’
""ஓ... ''
""காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளுக்கான சட்டப் பிரிவு 370 நீக்கப்பட இருப்பது குறித்தும் முன்னதாகவே அர்னாப் விவாதிச்சிருக்கார். இது போன்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் தேர்தலுக்குப் பயன்படும் என்றும் அவர் சொல்லியிருக்காராம். பா.ஜ.க. ஆதரவாளரான அர்னாப் கோஸ்வாமிக்கு, அரசின் ராணுவ ரகசியங்கள் எப்படிக் கிடைத்தது? அதை வைத்து, அவர் தனது டி.வி.யின் டி.ஆர்.பி. ரேட்டை எந்த வகையில் உயர்த்தினார் என்றெல்லாம் இப்ப இன்னொரு புறம் மும்பை காவல்துறை கிளறிக்கிட்டு இருக்கு. அதனால் அவரோடு நெருக்கமான தொடர்பில் இருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் அம்பலமாகலாம்.''
""புதுச்சேரியில் புதிய அரசியல் வியூகத்தை தி.மு.க. வகுப்பதா சொல்றாங்களே?''
""புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை 96-ல் ஜானகிராமன் தலைமையில் அமைந்த ஆட்சிதான், கடைசி தி.மு.க. ஆட்சி. அதன் பிறகு காங்கிரஸுக்கே அதிக சீட்டுகளையும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் தி.மு.க. கொடுத்துவிட்டது. ஆனால் இந்த முறை, காங்கிரஸுக்குள் அதிகமாக உள்குத்து விவகாரங்கள் இருப்பதால், மீண்டும் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி உருவாகனும் என்றும், தி.மு.க.தான் ஆட்சி அமைக்கனும் என்றும், அதன் மாநில அமைப் பாளர்களில் ஒருவரான சிவா எம்.எல்.ஏ. அதிரடி யாகக் குரல் எழுப்பிக்கிட்டு இருக்கார். அதனால் புதுவையின் தட்ப வெப்பத்தை தி.மு.க.வுக்கு சாதகமாக மாற்றனும்னு, மாஜி மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனை, அங்கே ஸ்டாலின் பொறுப்பாளர் ஆக்க, ஜெகத்தும் அங்கே ஆர்வமாகக் களவேலையை ஆரம்பிச்சிட்டார். அநேகமா அவரே முதல்வர் வேட்பாளரா முன்னிலைப் படுத்தப்படலாம்.''
""ம்.. அடுத்த தகவல்?''
""கொரோனாவைக் காரணம் காட்டி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று மூடப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த ஓட்டலில், முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் தரப்புக்கு, ரெகுலரா ஒரு சூட் ஒதுக்கப்பட்டிருந்ததாம். அங்குதான் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் தொடர்பான பிஸ்னஸ் டீலிங் குகள் எல்லாம் நடக்குமாம். இது தொடர்பாக அங்கே சில நேரம் கைகலப்பும், சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்திருக்குதாம். இவை எல்லாம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்ததாம். இதை, எடப்பாடி உள்ளிட்ட ஆளுங்கட்சிப் புள்ளிகளை வேவு பார்க்கும் மத்திய உளவுத் துறை, ஸ்மெல் செஞ்சிருக்கு. இதையறிந்து ஷாக்கான எடப்பாடித் தரப்பு, அந்தப் பதிவுகளை எல்லாம் அழிக்கச் சொல்ல, ஓட்டல் நிர்வாகமோ, சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை அழிக்க உடன்படலையாம். அந்தக் கோபத்தில்தான் அந்த ஓட்டலை, ஓரிருவருக்கு ஏற்பட்ட கொரோனாவைக் காரணம் காட்டி, எடப்பாடி மூட வச்சிட்டாராம்.''
""அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கனும்னு சொன்ன ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அ.ம.மு.க. தினகரன் கடும் கண்டனம் தெரிவிச்சிருக்காரே?''
""சசிகலாவை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்த குருமூர்த்தி, துக்ளக் விழாவில் பேசும் போது, தீ எரியும் போது கங்கை ஜலமா? சாக்கடை ஜலமா?ன்னு பார்க்காமல், வாரி இறைக்கனும். அதுபோல் தி.மு.க.வை எதிர்க்க சசிகலாவை அ.தி.மு.க. வில் சேர்க்கனும்னு சொன்னதோட, மன்னார்குடித் தரப்பை பழைய பழக்கத்தில் மாபியா என்று வர்ணித்தார். சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டு, அவரது மன்னார்குடித் தரப்பை மாபியான்னு குருமூர்த்தி வர்ணித்ததைப் பார்த்த சசி தரப்பு, கடும்கோபம் அடைஞ்சிடிச்சி. அவர்கள் கோபம் இதைக் கண்டிக்காத தினகரன் மீது திரும்ப, அதன் பிறகே சுதாரித்துக் கொண்ட தினகரன், குருமூர்த்தியின் பேச்சை டுவிட்டரில் கண்டிச்சிருக்கார்.''
""நான் இந்த முறை ஒரு இரங்கல் செய்தியை சொல்றேன்.… முன்னாள் எம்.பி.யும் த.மா.கா.வின் துணைத் தலைவருமான ஞானதேசிகன் மறைவு அரசியல் தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர், மாரடைப்பால் இறந்த நிலையில், கட்சி சார்பற்ற முறையில் பல தலைவர்களும் இரங்கல் தெரிவிச்சிருக்காங்க. 2012ஆம் ஆண்டு நக்கீரன் அலுவலகம்மீது அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட அக்கட்சியினர் பலரும் கொடூரத் தாக்குதல் நடத்தியபோது, அதனைக் கண்டித்து துணிந்து குரல் கொடுத்த ஒரு சில அரசியல் தலைவர் களில், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான ஞானதேசிகனின் குரல் ஓங்கி ஒலித்தது. பண்புமிக்க அரசியல் பிரமுகரான ஞானதேசிகனுக்கு நக்கீரனின் அஞ்சலி.''