"ஹலோ தலைவரே, கலைஞர் இறந்து ஒரு வாரமாகியும் இன்னமும் தலைப்புச் செய்திக்கான நியூஸ் அவரை சுற்றித்தான் இருக்குது.''’
""அதுதானே அவரோட ஸ்பெஷாலிட்டி. அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. அவசர செயற் குழுவில் என்ன விசேசம்?''’
""கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறுவதற்கான செயற்குழுன்னாலும் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் ஸ்டாலின் அதற்கு முன்னதாக, கட்சியைத் தனக்கு இசைவாக ஒழுங்குபடுத்த நினைக்கிறார். இந்த செயற்குழுவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருக்கும் அணிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களையும் அழைச்சிருந்தாங்க. ஸ்டாலினைப் பொறுத்தவரை, முதலில் தி.மு.க. சார்பில் கலைஞருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகளை சிறப்பாவும் பரவலாவும் நடத்தியாகணும்னு நினைக்கிறார்.''’
""தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் வரிசையா நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுதே?''’
""சொல்றேங்க தலைவரே, திருச்சியில் பத்திரிகை, டி.வி. ஊடகத்தினர் பங்கேற்கும் நினைவேந்தலையும், மதுரையில் இலக்கியவாதிகள் பங்கேற்கும் நினைவேந்தலையும், கோவையில் திரையுலகினர் பங்கேற்கும் நினைவேந்தலையும் நடத்திவிட்டு, அடுத்து நெல்லை பாளையங்கோட்டையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தப்போறாங்க. கடைசியா சென்னையில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்வாக, மாநில உரிமைகள் மாநாட்டை தி.மு.க. நடத்த இருக்குது. இதெல்லாம் முடிஞ்ச பிறகு செப்டம்பரில் தி.மு.க. பொதுக்குழு கூடி ஸ்டாலினைக் கட்சியின் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கும். ஆனால், இப்பவே மு.க.அழகிரி, ஸ்டாலினுக்கு எதிரான தன் அதிரடியை ஆரம்பிச்சிட்டார். அவரோட ஒவ்வொரு வார்த்தையும் ஊடகங்களின் விவாதப் பொருளா மாறியிருக்கு.''’
""ஆமாம்பா, டெல்லியின் பார்வையும் அழகிரியின் பக்கம் திரும்பியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, ஜெ.’ மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் பலமா ஊடுருவியிருக்கும் பா.ஜ.க., தி.மு.க.விலும் இதுபோல் ஊடுருவ, ஏதாவது விரிசல் கிடைக்காதான்னு பார்த்துக்கிட்டிருக்கு. அதனால்தான் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தறதுக்காக ராஜாஜி ஹால் வந்த பிரதமர் மோடி, அந்தப் பரபரப்பிலும் அழகிரி எங்கேன்னு கேட்டிருக்காரு. அழகிரியோ அப்ப அந்த ஹாலின் பின்பக்க அறையில் சோகமா உட்கார்ந்திருந்தார். அவரிடம், பிரதமர் மோடி தேடுவதாகச் சொல்லப்பட, "இப்ப இருக்கும் மனநிலையில் நான் அவரைப் பார்க்க விரும்பலை'ன்னு சொல்லிட்டாராம்.''
""கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்னு பேச்சு கிளம்பியிருக்கே?''
""கலைஞர் மரணத்தின்போதே திருமாவளவன் இந்த கோரிக்கையை முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா இது பற்றி பேச, பல கட்சியினரும் வலியுறுத்தினர். பா.ஜ.க. அரசு இதை ஏற்றாலும் நிராகரித்தாலும் அரசியல் கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள் கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவதன் மூலம், மெரினா இட சர்ச்சையில் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்கலாம், தி.மு.க.வின் எதிர்ப்பையும் குறைக்கலாம்னு கணக்குப் போடுறாங்க. மோடி கவனத்துக்கும் இது போயிருக்கு.''’
""கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய நேரத்தில் மோடி வந்தப்ப இருந்த பாதுகாப்பு, ராகுல் வந்தப்ப இல்லைங்கிற புகார், அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த மோடிக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதனால் அவர் சிக்கலில்லாமல் வந்து, அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார். ஆனால் அடுத்து வந்த ராகுல்காந்தியோ, ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கிப் படாதபாடுபட்டார். அவரது பாதுகாவலர்கள் ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளோட பக்கவாட்டுச் சுவரில் ஏறிச்சென்று, தவிச்சாங்க. இதையெல்லாம் ஊடகங்கள் மூலம் நாடே பார்த்துத் திகைத்தது. இதுதான் இப்ப தமிழகக் காவல்துறை மீதான விமர்சனத்தை பலமா எழுப்பிக்கிட்டு இருக்கு.''
""ஏன் இந்த அலட்சியமாம்?''
""ராகுலுக்கு மிக உயர்ந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கு. ராகுலோடு வந்த இந்தப் பாதுகாப்பு அதிகாரிகள், டெல்லி போனதும் மத்திய உள்துறையிடம், தமிழக காவல் துறையின் அலட்சியமான அணுகுமுறை குறித்துப் புகார் கொடுத்தாங்க. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜாவிடமும் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டியிடமும் விளக்கம் கேட்டிருக்கு. கிரிஜாவோ, "வருந்துகிறோம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்'ன்னு பதில் சொல்ல, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டியோ, இந்தப் பாதுகாப்புக் குளறுபடிக்குக் காரணமானவர்கள்னு, கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர்கள் முத்துசாமி, செல்வ நாகரத்தினம், சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையைத் தயார் செய்துக்கிட்டிருக்காராம்.''’
""போலீஸ் அதிகாரிகள் தரப்பு என்ன சொல்லுதாம்?''’
""அவங்க என்ன சொல்றாங்கன்னா, ராகுல்காந்தியோடு கூடவே இருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், எங்களோடு கம்யூனிகேஷன்ல இருந்து, உரிய பாதுகாப்போடு ராகுலை அழைத்து வந்திருக்கணும். ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லைன்னு அவர் பக்கம் பந்தைத் தள்ளிவிடறாங்க. காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைமையும் திருநாவுக்கரசரிடம், ஏன் இப்படி நடந்ததுன்னு அறிக்கை கேட்டிருக்குதாம். இதுக்கிடையில் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் அஜய் தோவல், ராகுலின் பாதுகாப்புக் குறைபாடுகளுக்குக் காரணமான தமிழக காவல்துறை அதிகாரிகளை, மெமோ கொடுத்து விசாரிக்கணும்னு மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்திருக்காராம்.''’
""கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது தொடர்பான குழப்பம் அ.தி.மு.க.விலும் நிலவுதாமே?''’
""ஆமாங்க தலைவரே, கலைஞருக்கு அஞ்சலி செலுத்தப்போன முதல்வர் எடப்பாடி, தன்னோடு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால்னு பலரையும் கூடவே அழைச்சிக்கிட்டுப் போனாரு. இதைப் பார்த்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பி.ஹெச்.பாண்டியன் போன்றோர் எடப்பாடியிடமே போய், "கலைஞரை எதிர்த்துதான் அ.தி.மு.க.வே தொடங்கப்பட்டது. அப்படி இருக்க, கலைஞருக்கு அஞ்சலி செய்ய இத்தனை பேரோட நீங்க போய்த்தான் ஆகணுமா? தி.மு.க.வை அனுசரிச்சிப் போய்த்தான் நீங்கள் ஆட்சியை நடத்தணுமா? இனியும் உங்க போக்கு மாறலைன்னா, நாங்க தனி ஆவர்த்தனம் பண்ணவேண்டியிருக்கும்'னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லியிருக்காங்க. எதுவும் பேசாமல் மௌனமா கேட்டுக்கிட்ட எடப்படியோ, தன் கூடவே வந்து அஞ்சலி செய்த ஓ.பி.எஸ்.தான், தனக்கு எதிரா இவங்களை இப்படிப் பேச வச்சிருக்காரோன்னு அவர்மேல் கடுப்பான கடுப்பில் இருக்காராம்.''’
""தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, அவர் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்தப்ப 8 கோடி ரூபாயைக் கையாடல் செய்ததா கைது செய்யப்பட்டிருக்கார். இவர் ஏற்கனவே காங்கிரஸின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி.யில் இருந்தவராம். அ.தி.மு.க.வில் இவர் ஐக்கியமானப்ப, ஜெ.கிட்ட, "நானும் உங்களைப் போல கல்யாணம் ஆகாதவன்தான். குடும்பம் கிடையாது. அதனால் என் வாழ்க்கையையே கட்சித் தொண்டிற்காக அர்ப்பணிச்சிட்டேம்மா'ன்னு சொல்லி, நல்ல பெயரெடுத்தவர். ஜெ. கொடுத்த சுதந்திரத்தால், அண்ணா தொழிற்சங்கத்தில் இஷ்டத்துக்கும் விளையாடிட்டாரு. ஜெ.’ மறைவுக்குப் பின் எடப்பாடி அணியில் இருந்த இவரை அண்மையில் அங்கே கட்டம் கட்டினாங்க. அதுக்கப்புறம்தான், டாக்டர் வெங்கடேஷை வெயிட்டா கவனிச்சி அ.ம.மு.க.வில் சேர்ந்தார். இன்னைக்கு அ.ம.மு.க. அணியிலும் தொழிற்சங்கப் பொறுப்பு கொடுக்கப்பட்ட போது பல தரப்பிலும் எதிர்ப்பு. தினகரனோ, அவர் எடப்பாடிகிட்டயே நம்ம ஸ்லீப்பர் செல்லாத்தான் இருந்தார்ன்னு சொல்லி சமாதானப்படுத்தினாராம்.''’
""எந்த ஒரு விஷயத்திலும் ரொம்ப கவனமா இருக்கணும். கலைஞருக்கு மெரினாவில் இடம் அளிக்க உத்தரவிட்ட இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தரின் படம் நம்ம நக்கீரனில் போனமுறை மாறிடிச்சு. அதே பெயரில் உள்ள இன்னொரு நீதியரசர் எம்.சுந்தர் படம் வெளியாயிடிச்சு. இந்த தவறை சரிப்படுத்தும் விதத்தில் சாதனை தீர்ப்பளித்த நீதியரசர் எஸ்.எஸ். சுந்தர் படம் இப்ப இடம் பிடிச்சிருக்கு. தவறுக்கு வருந்துகிறோம்.''
""நானும் ஒரு தகவல் சொல்றேன்... மன்னார்குடியில் தினகரன் பெருங்கூட்டத்தைக் கூட்டினார். இதை விமர்சித்த திவாகரன், "தலைக்கு 160 ரூபாய் கொடுத்து அழைத்துவரப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்தான் அதிகமா இருந்தாங்க. நாங்க உண்மையான தொண்டர்களை, இதைவிட பலமடங்கு கூட்டிக்காட்டுகிறோம்'னு சவால்விட்டுக்கிட்டிருக்கார். சொந்த பந்தங்கள்தான் கழகங்களுக்கு வேட்டு வச்சிக்கிட்டிருக்கு.''