""ஹலோ தலைவரே, கலைஞர்ங்கிற சூரியன் மறைஞ்சதால தமிழக அரசியலை சூழ்ந்திருக்கிற இருட்டு விலக சில காலமாகும். என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமா மிதப்பேன்னு சொன்ன தலைவர், தன்னோட உடன்பிறப்புகளையும் பொது மக்களையும் ஒருசேர கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டுட்டுப் போயிட்டாரு. அவருடைய புகழ்ங்கிற கலங்கரை விளக்கம் எப்போதும் ஒளிவீசி வழிகாட்டிக்கிட்டிருக்கும்.''’’
""உண்மைதாம்ப்பா, ஒட்டுமொத்த இந்தியாவும் அஞ்சலி செலுத்தி, கலைஞரை கௌரவிச்சிருக்கு. தமிழக அரசியலில் உள்ள இருட்டு, தி.மு.க.வுக்கும் சேர்த்துதானே.. அதுவும் கலைஞரின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. மீதும் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டின் மீதும் எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலும் அதிகரிச் சிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, கலைஞர் காவேரி மருத்துவமனையில் இருந்தப்பவே, தி.மு.க.வின் எதிர்காலம்பற்றி ஆதரவாளர்கள் மட்டுமில்ல, ஆண்டாண்டு காலமாக அதன் எதிரிகளா இருக்கிறவங்களும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பவே, ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான உரசலை மையப்படுத்தி, அரசல் புரசலா செய்திகள் விதவிதமா உலவ ஆரம்பிச் சிடுச்சி. கலைஞரை விசாரிக்க காவேரிக்கு வந்த ரஜினி, அங்கே அழகிரியையும் சந்திச்சிப் பேசிட்டுப் போனார். கலைஞர் மரணத்துக்குப்பின் அவரோட உடல் கோபாலபுரத்துக்கு கொண்டு வரப்பட்டப்ப, ரஜினிக்கு தகவல் சொன்னதும் அழகிரி தரப்பு தானாம். ஆனா கூட்ட நெரிசலால் ரஜினியால் உள்ளே போக முடியாத சூழல். அங்கிருந்தவங்க உண்டாக்குன நெருக்கடியால ரஜினி திரும் பிட்டாரு. ராஜாஜி ஹாலுக்கு ரஜினி வந்தப்ப அழகிரி, அவர் அருகிலேயே இருந்துவிட்டு அதுக்கப்புறம் பின்னர் உள்ளே போய் உட் கார்ந்துக்கிட்டார். இதெல்லாம் அழகிரிபற்றி அரசியல் ரீதியா பல்வேறு கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கு.''
""ஏற்கனவே அழகிரி மூலமா தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. மூவ் பண்ணுவதையும், ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. ப்ளான் பண்ணுவதையும் நம்ம நக்கீரன் விரிவா எழுதியிருக்கே..''
""இந்த மாதிரி செய்திகளை ஸ்டாலினும் உன்னிப்பா கவனிச்சிக்கிட்டிருக்காரு. ரஜினி இன்னும் கட்சியே தொடங்காத நிலையில், அவரை ஹைலைட்டாக்கி வருகிற நியூஸ்களையும், ரஜினிக்கு நெருக் கமா அழகிரி காட்டிக்கிறதையும் ஸ்டாலின் தரப்பு விரும்பலை. அதே நேரத்தில், அரசியலில் எதுவும் நடக்கும்ங்கிற கலைஞ ரோட கணிப்பு ஸ்டாலின்கிட் டேயும் இருக்கு. அவரைப் பொறுத்தவரையில், கலைஞருக்கான சிகிச்சைகளில் கவனம் செலுத்தினாரு. பின்னாடி எந்தவிதமான பிரச் சினையும் வந்துடக் கூடாதேன்னு ரொம்ப வும் ஜாக்கிரதையா, காவேரி மருத்துவ அறிக்கைகளில்கூட வெளிப்படைத் தன்மை இருக்கும்படி பார்த்துக்கிட்டாரு.''’
""வெளியே அறிக்கைகள் வந்து சேர்ந்தாலும், உள்ளே அப்படி இப்படின்னுதானே நியூஸ் கசிஞ்சிக்கிட்டிருந்தது.''’
""கலைஞர் இருக்கும்போதே கட்சியிலிருந்து அழகிரி விலக்கப்பட்டுட்டாரு. அவரும் அடிக்கடி மீடியாக்களுக்கு தீனி போடுற வகையில் ஸ்டாலினைச் சீண்டுற மாதிரி கமெண்ட் பண்ணிக் கிட்டிருந்தாரு. கலைஞர் உடல்நிலை குன்றியதும் அழகிரி தரப்பில் பெருசா எந்த கமெண்ட்டும் இல்லை. ஆனாலும் அழகிரியை மறுபடியும் கட்சியில் சேர்ப்பதில் ஸ்டாலின் தரப்பு ஆர்வம் காட்டலை. அதனால, காவேரிக்கு அழகிரி வந்தப்ப தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஸ்டாலின் கோபப் படுவாரோன்னு நினைச்சி, அழகிரியிடம் பேசுற தைக் கூட தவிர்த்துட்டாங்க. இன்னும் சிலரோ, அண்ணன் தம்பி பிரச்சினையில் நாம தேவையில் லாம சிக்கிடக் கூடாதேன்னு அழகிரிக்குப் பொத்தாம் பொதுவா ஒரு வணக்கத்தைப் போட் டுட்டு பவ்வியமா நகர்வதையும் பார்க்கமுடிஞ்சிது. இன்னும் சிலரை அழகிரியே வலியக் கூப்பிட்டு கடிஞ்சிக்கிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.''
""அழகிரி தரப்பைச் சேர்ந்தவங்க, எங்க அண்ணன் சென்னைக்கு வந்ததாலதான் கலைஞரை காவேரி மருத்துவமனைக்கே கொண்டுவந்து ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க. அதனாலதான் கலைஞரோட ஆயுள் கூடுதலா பத்து நாள் நீடிச்சி,. பல தலைவர்களும் அவரை வந்து பார்க்கிற வாய்ப்பும் கிடைச்சிதுன்னு சொல்லிக்கிட்டி ருந்தாங்க. இப்ப கலைஞர் இல்லாத நிலையில் தி.மு.க.வின் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போறாருங்கிற கேள்வி பல தரப்பிலும் இருக்கு?''’
""ஸ்டாலின் அவசரம் காட்டுறதில்லை. ஆனாலும், அவரால எடப்பாடி ஆட்சி யைக் கவிழ்க்க முடியலையேங்கிற விமர்சனம் இருக்கு. அதோட ஜெ. மரணத்துக்குப் பிறகு அ.தி. மு.க.வை இரண்டாக்கிய பா.ஜ.க., கலைஞர் இல்லாத தி.மு.க.வை என்ன செய்யப் போகுது-அதை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப் போறாருங்கிற யோசனை இருக்குது. சொந்தக் கட்சிக் குள்ளேயே மாவட்ட-ஒன்றிய அளவிலான போட்டா போட்டிகளையும் அவர் சரி செய்தாகணும். இந்த நிலையில், குடும்ப உறவுகளின் அரசியல் எதிர்பார்ப்பு தொடர்பா பலமுனையிலிருந்தும் கொடுக்கப்படும் அழுத்தமும் இப்ப ஸ்டாலின் முன் சவாலா இருக்கு.''
""அழகிரி, கனிமொழி, தயாநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் கொடுப்பது சம்பந்தமா காவேரியிலேயே பேச்சுவார்த்தை நடந்து ஒருவித செட்டில்மெண்ட் நடந்ததாகவும் தகவல் கசிந்ததே?''
""பிரச்சினைகள் வரக்கூடாதுன்னு நினைக்கிற குடும்பத்து சீனியர்கள் சிலர் எல்லா தரப்பிலும் பேசுறாங்க. பாகப்பிரிவினை மாதிரி பதவிப்பிரிப்பு பற்றியும் பேசப்பட்டிருக்கு. எதுவா இருந்தாலும், தி.மு.க.வைப் பொறுத்தவரை பொதுக்குழு கூடி கட்சிவிதிகளில் சட்டத்திருத்தம் செய்துதான் அதி காரமிக்க பதவிகளை உருவாக்க முடியும். ஸ்டாலி னைப் பொறுத்தவரைக்கும் வாரிசு அரசியல்ங்கிற பேரு தி.மு.க.வுக்கு இருக்கக்கூடாதுன்னு கவனம் செலுத்துனவரு. அதே நேரத்தில், அவரோட மகன் உதயநிதிக்கு கட்சி நிர்வாகிகள் கொடுக்கும் திடீர் முக்கியத்துவம் மற்ற தரப்புகளில் சலசலப்பை உண்டாக்கியிருக்கு.''
""ஆகஸ்ட் 19-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூடும்ன்னு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கலைஞர் மரணத்தால் இது தள்ளிவைக்கப் பட்டால்கூட, பொதுக்குழு கூடும்போது, செயல் தலைவரா இருக்கும் ஸ்டாலினை கட்சியின் தலைவரா தேர்ந்தெடுப்பாங்க, இதுபற்றி அழகிரி தரப்பு என்ன நினைக்குதாம்?''’
""கலைஞருக்குப்பின் ஸ்டாலின்தான் தலை வர்ங்கிறதை தி.மு.க. தொண்டர்கள் ஏத்துக்கிட்டாங்க. அதே நேரத்தில், அழகிரி ஏற்கெனவே கட்சியோட தென்மண்டல அமைப்புச் செயலாளரா இருந்தாரு. அதனால இப்பவும் தென்மாவட்ட கண்ட்ரோலை அவர்கிட்ட கொடுக்கணும்ங்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கு. அழகிரியோ வேற மாதிரியான டிமாண்டை வைக்கிறாராம். அதாவது, அ.தி.மு.க.வில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருப்பது மாதிரி அதிகாரப் பகிர்வு இருக்கணுமாம்.''
""கொஞ்சம் விளக்கமா சொல்லுப்பா.''…
""அதாவது, அழகிரியை தி.மு.க.வோட தலைவ ராக்கணும். முதல்வர் வேட்பாளரா ஸ்டாலின் இருக்கட்டும்னு அழகிரி தரப்பு வலியுறுத்துதாம். தி.மு.க. ஜெயித்து ஸ்டாலின் ஆட்சி அமைத்தால், அவர் விசயத்தில் நான் எதிலும் தலையிடமாட் டேன்னு வலியுறுத்தப்படுதாம். கட்சியின் சீனியர் கள் சிலர், அழகிரியோட டச்சில் இருக்காங்க. ரகசிய பேச்சுவார்த்தைகள் போய்க்கிட்டிருக்காம்.''
""கட்சிக்கு ஒரு தலைமை.. ஆட்சி அமைந்தால் அதற்கு இன்னொரு தலைமைங்கிறது தி.மு.க.வுக்கு சரிப்படுமா?''
""அண்ணா மறைவுக்குப் பிறகு தி.மு.க.வில் யார் தலைவர், ஆட்சிக்கு யார் முதல்வர்னு வந்தபோது கலைஞர், நாவலருக்கிடையில் போட்டி வந்தது. அப்பகூட இதுபோன்ற இரட்டைத் தலைமைபற்றி பேச்சு வந்தது. ஆனா, அது கட்சியைப் பலவீனப் படுத்தி, ஆட்சியையும் காவு வாங்கிடும்னு சீனியர் கள் சொன்னாங்க. தி.மு.க. மேலே அக்கறை கொண் டிருந்த பெரியாரும் இரட்டைத் தலைமை சரிப் படாது. கட்சியையும் ஆட்சியையும் நடத்த கலை ஞர்தான் சரியானவரு. அவருதான் சர்வாதிகாரத் தோட தலைவராகணும்னு சொன்னாரு. இப்ப கலைஞர் இல்லாத இக்கட்டான நிலையில், இரட்டைத் தலைமை சரிப்படுமாங்கிற விவாதமும் நடக்குது.''
""அப்ப கலைஞர் எப்படி செயல்பட்டாரோ அதுபோல இப்ப தலைமையில் உள்ளவங்களும் செயல்படணுமே?''
""கரெக்ட்தாங்க தலைவரே.. .. கலைஞர் மாதிரி ஸ்டாலின் செயல்படுவாராங்கிற டவுட் கட்சிக்குள்ளேயே இருந்தது. அதிலும் குறிப்பா, கலைஞர் இறந்த செய்தி வெளியாகி, கொஞ்ச நேரத்தில் மெரினாவில் இட மில்லைன்னு கவர்மெண்ட் சொன்னதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், அதிரடி காட்டாமல் சட்டரீதியான போராட் டத்தை கையிலெடுத்த ஸ்டாலின், அதை சரியா நகர்த்திட்டுப்போனாரு. அதனாலதான் வெற்றிகரமான தீர்ப்பு கிடைச்சி, கலைஞருக்கு பெருமை சேர்த் தது. கலைஞர் உடல் இருந்த ராஜாஜி ஹாலில் அந்த வெற்றிச் செய்தி ஏற் படுத்திய தாக்கம், ஸ்டாலின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்த தொண்டர்கள்கிட்டேயும் நிர்வாகி கள்கிட்டேயும் அதிகரிக்க வச்சிது. காவேரியி லிருந்து மெரினா வரை ஸ்டாலின் காட்டிய பொறுமை, ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை இதெல்லாம் தொடர்ந்ததுன்னா, கலைஞர் இல்லாத சூழலை அவர் சமாளிச்சிடுவாருன்னு தி.மு.க.வில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கு.''
"" அடிமட்டத் தொண்டர்களின் பல்ஸை கரெக்ட்டா கலைஞர்போல கண்டுபிடிச்சி, அதற் கேற்ப செயல்பட்டா கட்சி எப்பவும் ஸ்ட்ராங்தான். ராஜாஜி ஹாலில்கூட தொண்டர்களிடம் ஸ்டாலின் வைத்த உருக்கமான வேண்டுகோள் ஒர்க் அவுட் ஆகியிருக்கே.. அதே நேரத்தில், போலீஸ் தரப்பில் பாதுகாப்புப் பணி ஒழுங்கா நடந்ததா தெரியலையே?''’
""உண்மைதாங்க தலைவரே, அங்க டி.சி.யா இருப்பது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட் டத்தின்போது, அடாவடியா நடந்துக்கிட்டார்ன்னு பலராலும் புகார் சொல்லப்பட்ட செல்வ நாகரத்தினம்தான். அவரோடு ஜே.சி.அன்பு, கூடுதல் கமிஷனர் சாரங்கன்னு அதிகாரிகள் டீமே இருந்தும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தறதில் அக்கறை காட்டாததற்கு காரணம், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியிடமிருந்து எந்தவித வழிகாட்டுத லும் இல்லையாம். ஏன் இப்படின்னு விசாரிச்சப்ப, கலைஞர் இறுதிச் சடங்கு விவகாரத்தில் எடப்பாடி காட்டிய அலட்சியத்தால்தான் எல்லாமே கோளாறாகி, அங்கே நெருக்கடி, அடிதடி, உயிரிழப்பு படுகாயம்னு அரங்கேறுச்சாம்.''’
""கலைஞருக்கு ராஜாஜி ஹாலில் இறுதியஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி, அண்ணா நினைவிடத்துக்குப் போகும் வழியில் காணாமல் போய்ட்டார்ன்னும் சொல்றாங்களே?''’
""ராஜாஜி ஹால்ல இருந்து கிளம்பிய ராகுலைப் பின்தொடர்ந்து போன அவரது செக்யூரிட்டிகள், கூட்டத்துக்கு மத்தியில் ராகுலும் அவர் உதவியாளரும் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ந்து போய்ட்டாங்க. ஒரே பரபரப் பாயிடிச்சி. அரைமணி நேரத்தில் அவங்க இருந்த இடத்துக்கு ராகுல் வந்துட்டாராம். இடையில் அவர் எங்கே போனார்னு செக்யூரிட்டி அதிகாரிகளுக்கே தெரியலையாம். எல்லாம் முடிந்து அவரை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி போன்றோர் ஏர்போர்ட்டுக்குப் போய் வழியனுப்பிட்டு வந்தி ருக்காங்க.''’
""விமானத்துக்காக காத்திருந்தப்ப ராகுல் நடத்திய டிஸ்கஷன் பத்தி நான் சொல்றேன். காங்கிரஸ் பிரமுகர்களிடம், கலைஞரின் இழப்பு பெரும் இழப்புன்னு தன் வருத்தத்தைப் பகிர்ந்துக்கிட்ட ராகுல், திடீர்ன்னு, ரஜினிக்கு என்ன செல்வாக்கு இருக்கு? அவருடைய அர சியல் பிரவேசம் எப்படி இருக்கும்? அவர் உண் மையிலேயே அரசியலுக்கு வருவாரான்னு ஆர் வமா விசாரிச்சிருக்கார். அப்ப, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசர், தேர்த லுக்கு முன் அப்படி ரஜினி நேரடியா அரசியல் கட்சியைத் தொடங்கினார்ன்னா, நாம் நம் கூட்டணி குறித்து விவாதிக்க வேண்டியிருக் கும்ன்னு பிட்டு போட்டு வச்சிருக்காராம்.''
______________________
திருவாரூரில் யார்?
2016 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிட்ட மண்ணின் மைந்தரான கலைஞரை தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்கள் திருவாரூர் தொகுதிவாசிகள். தற்போது அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு இடைத்தேர்தல் வந்தால், தி.மு.க. தரப்பில் சீட் கேட்க பலத்த போட்டி நிலவுகிறது. கனிமொழி, உதயநிதி ஆகியோர் பெயர்களும் அடிபடுகின்றன.