""ஹலோ தலைவரே, கலைஞரின் 95ஆவது பிறந்தநாள் தி.மு.க.வினரால் ஏகக் கோலாகலமாய்க் கொண்டாடப்பட்டிருக்கு. திருவாரூரில் 1-ந் தேதியே தோழமைக் கட்சிகளை அழைத்து தி.மு.க. தலைமை கலைஞர் பிறந்த நாள் விழாவை உற்சாகமா தொடங்குச்சு. தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் கலைஞர் பிறந்த நாளை மாசம் முழுக்க கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.''’
""ஆமாம்பா, தமிழக அரசியலில் எந்தப் பிரச்சினையா இருந்தாலும், "கலைஞர் இப்ப ஆக்டிவ்வா இருந்திருந்தா...' அப்படிங்கிற ஆதங்கம், கட்சி வேறுபாடுகள் கடந்து எல்லாத் தரப்பிலும் இருக்கு. அந்த ஆதங்கம்தான் கலைஞரின் இந்தவருடப் பிறந்தநாளுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. கொண்டாட்டங்கள் சென்னையில் எப்படி இருந்துச்சு?''’
""தலைவரே, சென்னையில் 2-ந் தேதி இரவே கோபாலபுரத்தில் தி.மு.க. உடன்பிறப்புகள் பெருமளவில் திரண்டிருந்தாங்க. நள்ளிரவு 2 மணிக்கு கலைஞர் வீட்டு வாசலில் தொண்டர்கள் உற்சாகமா கேக் வெட்டினாங்க. விடிஞ்சதும் அகில இந்திய அளவில் அவருக்கு வந்த முதல் வாழ்த்துன்னா, அது, பிரதமர் மோடியின் வாழ்த்துதான். இதையறிந்த தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், ராகுலின் கவனத்துக்குக் கொண்டு போக, அதன் பின்னர் ராகுலிடமிருந்தும் டுவிட்டரில் கலைஞருக்கான வாழ்த்து வெளியாச்சு. இதேபோல் அ.தி.மு.க.வினரைத் தவிர, ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களும் கலைஞரை மகிழ்வோடு வாழ்த்தினாங்க. ரஜினிகிட்டேயிருந்தும் வாழ்த்து வந்துச்சு. காலையில குடும்ப உறவுகளும் கட்சிப் பிரமுகர்களும் கோபாலபுரத்தில் குவிஞ்சிருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் வந்ததும், கலைஞர், அவரது வீட்டு முகப்புக்கு அழைத்து வரப்பட்டார். தொண்டர்கள் முன்னிலையில் கலைஞர் கேக் வெட்டியது எல்லோரையும் நெகிழ வைத்தது. திரண்டிருந்த தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களைக் கேட்டு உற்சாகமடைந்த கலைஞர், அவர்களைப் பார்த்து கைகளை அசைத்தார். அப்ப முன்னிலும் உணர்ச்சிவசப்பட்டு தொண்டர்கள் ஆனந்தக் கண்ணீரோடு வாழ்த்து முழக்கங்களை எழுப்பினாங்க. தொண்டர்கள் வருகையால் உருவான கலைஞரின் தெம்பைப் பார்த்ததும், அன்று மாலை அவரது சி.ஐ.டி காலனி வீட்டுக்கு அவரை அழைச்சிக்கிட்டுப் போனாங்க. அங்க கனிமொழி ஆதரவாளர்கள் கலைஞரோடு போட்டோ எடுத்துக்கிட்டாங்க.''’
""தொண்டர்களிடம் கலைஞர் தன் கைகளை உயர்த்தி, அவர்களை நோக்கி அசைச்சாரே இதுதாம்ப்பா, கட்சித் தொண்டர்களையும் தலைவரையும் நேசத்தோடு இணைக்கும் உணர்ச்சிப் புள்ளி. இதுபோன்ற இணைப்பைத்தான் எப்பவும் தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்கள் எதிர்பார்க்கிறாங்க. இந்த நிலையிலும் கலைஞர் கையைக் காட்டுகிறார். அவர் கைகாட்டும் திசையில் தி.மு.க. விறுவிறுப்பாக நடக்கணும்னு ஒட்டுமொத்தத் தி.மு.க.வினரும் எதிர்பார்க்கறாங்க.''
"பொதுமக்களும் அதைத்தான் எதிர்பார்க்குறாங்க தலைவரே, பட்ஜெட் மானிய கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டத் தொடர்தான், அதிக நாட்கள் நடக்கும் சட்டசபைத் தொடர். இதில்தான் தொகுதிப் பிரச்சினைகள் பத்தியும், துறை வாரியான கோரிக்கைகள் பத்தியும் பேச முடியும். அந்த நேரத்தில் சட்டசபையைத் தி.மு.க. புறக்கணிச்சிட்டு, அண்ணா அறிவாலயத்துக்குள், ’மாதிரி சட்டமன்றம்’ நடத்தியதை பொதுமக்களும் ஏனைய அரசியல் கட்சிகளும் பெருசா விரும்பலை. அ.தி.மு.க. தரப்போ, ஜெ. எதிர்க்கட்சித் தலைவரா இருந்தப்ப,’ ஒரே ஒரு ஆளா தைரியமா சட்டசபைக்கு வந்தாரேன்னு குத்தலா விமர்சனத்தை வச்சிது. தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத்தில் பங்கேற்கணும்னு வலியுறுத்துனாங்க. தி.மு.க.வின் சீனியர்கள் சிலரே சட்டமன்றத்தில் நாம் பேச வேண்டியதைப் பேசுவோம். பேச அனுமதிக்காததை மாதிரி சட்டசபையை நடத்தி அதை மக்களுக்குக் கொண்டு போகலாம்னு சொன்னாங்க.''
""அதனாலதான் 2-ந் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்ததா?''
""ஆமாங்க தலைவரே... சட்டசபைக் கூட்டத்தில் நாம் பங்கேற்கலாமா? வேண்டாமா?ன்னு ஓட்டெடுப்பு நடத்தினாங்க. சீனியர் எம்.எல்.ஏ.க்கள் சிலபேர், எதுக்கு அங்கே போய் உட்காரணும்? போனாலும் பேச விடமாட்டாங்களேன்னு முணுமுணுக்க... எதிர்க்கட்சித் துணைத்தலைவரான துரைமுருகன் உட்பட பெரும்பாலானோர் கூட்டத்துக்குப் போய் நம்ம சட்டமன்றக் கடமையை ஆற்றுவோம்னு கை தூக்குனாங்க. இவர்களில், முதன்முதலாக சட்டமன்றத்துக்கு வந்திருக்கும் புது எம்.எல்.ஏ.க்கள், ஆர்வம் காரணமாக அதிகம் இருந்தனர். இதைத் தொடர்ந்து, புரசை ரெங்கநாதன், ஜெ.’அன்பழகன், எழும்பூர் ரவி ஆகிய எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து, ஏற்கனவே சட்டமன்றக் களேபரத்தின்போது நடந்துகொண்டது போல், நடந்துக்காதீங்க. எந்த நிலையிலும் கண்ணியத்தைக் கைவிடக் கூடாதுன்னு ஸ்டாலின் அட்வைஸ் செய்தார். முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ‘குட்கா விவகாரத்தில் எங்கள் தரப்பில் 21 பேரை தகுதி நீக்கம் செய்தார்கள். அதேபோல் இந்தக் கூட்டத்திலும் எங்களைக் கோபப்படுத்தி, அதை சாக்காக்கி எங்களில் பலரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடப்பாடி கொண்டுவரலாம். இதன்மூலம் மறுபடியும் தன்னை ஸ்ட்ராங்க் பண்ணிக்க பார்ப்பார் எடப்பாடி. தினகரன் அணி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நேரத்தில் எதற்கு இந்த ரிஸ்க்? அதனால்தான் சட்டசபைக் கூட்டத் தொடரைப் புறக்கணிக்க முடிவெடுத்தோம். ஆனால் இப்ப எங்க முடிவு மாறிடிச்சின்னு சொன்னாங்க.''’
""தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுபடியும் சட்டசபைக்கு வர்றதை, முறுக்கிக்கிட்டுப் போன மாப்பிள்ளைகள் திரும்பி வந்துட்டாங்கன்னு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலா விமர்சனம் பண்ணியிருக்காரே?''’
""பொதுவாவே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி சம்பந்தப்பட்ட "சீர்வரிசை'களை, ஆளுங்கட்சி ரொம்ப கவனமா செய்துடுதுன்னு பரவலாப்பேச்சு இருக்குங்க தலைவரே... அதனால்தான் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதிச்ச எடப்பாடி ஆட்சியை, அகற்றுவதற்கான வேலைகளை தி.மு.க. செய்யலையோங்கிற டவுட் தி.மு.க. தொண்டர்களிடமே இருக்கு. அதேபோல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருத்தர் முதன்முதலாக முதல்வராக உட்கார்ந்திருக்கிறார். அவருக்குத் தொல்லை கொடுத்தால், ஏற்கனவே கொங்கு பெல்ட்டில் பலவீனமாக இருக்கும் தி.மு.க., மேலும் வீக் ஆகிவிடுமோன்னு தி.மு.க. பயப்படுறதாவும் டாக் இருக்கு. இப்படிப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தி.மு.க. எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில், ரஜினி, கமல்னு புதிய புதிய அரசியல் சக்திகள் வந்துக்கிட்டு இருக்கு. அதனால் தி.மு.க. இன்னும் வீரியமா செயல்படணும்ங்கிற எதிர்பார்ப்பு, அந்தக் கட்சியினரிடமே இருக்கு.''’
""ஆனாலும் தி.மு.க.விடம் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக்கிட்டே இருக்கே?''’
""தலைவரே, கட்சியின் ரத்த ஓட்டத்தை சரிசெய்யும் நோக்கத்தில், மாவட்ட வாரியாக தி.மு.க.வின் கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார் செயல்தலைவர் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட புகார்ப் பெட்டிகளில், கட்சிப் பிரமுகர்களின் மீதான புகார்களும் குவிஞ்சிது. இதன் அடிப்படையில், அதிரடி நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுப்பார்ங்கிற எதிர்பார்ப்பும் தொண்டர்கள் மத்தியில் அதிகமாவே இருந்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படலை. ஸ்டாலின் எந்த மாவட்டத்துக்குப் போனாலும் பழைய முகங்களைத்தான் அவரோடு பார்க்க முடியுது. இதனால் தலைமையின் வார்த்தையை நம்பி, புகார் எழுதியவர்கள் எல்லாம் கட்சியில் தங்கள் எதிர்காலம் எப்படியோன்னு குழப்பத்தில் இருக்காங்க. புகாருக்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இன்னும் தயக்கம் காட்டுது தி.மு.க. தலைமை. தி.மு.க.வோட இன்றைய பலவீனமே ஆணி அடிச்ச மாதிரி கட்சிப் பதவியில் காலங்காலமா உட்கார்ந்திருக்கும் பிரமுகர்களும் அவர்களின் வாரிசுகளும்தான். அது கட்சித் தொண்டர்களிடமும் மக்களிடமும் அதிருப்தியை உண்டாக்குது. அதனால் தலைமையில் உள்ளவங்க இந்தத் தயக்கத்தையெல்லாம் உடைச்சி நடவடிக்கை எடுக்கணும்ங்கிறதுதான் தமிழகத்தில் மாற்றம் நிகழணும்னு எதிர்பார்க்கும் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பா இருக்குது.''’
""இன உணர்வு, மொழி உணர்வுக்குத் தோதான காலம் கனியணும்ங்கிற விருப்பம் இங்கே பலரிடமும் இருக்கு. ஆனா இதையெல்லாம் முன்னெடுக்க நினைக்கும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் இப்பப் பெரும் நெருக்கடியில் இருக்குதே?''’
""தூத்துக்குடி நோக்கிப்போன தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, புதுப்புது வழக்குகளைப் போட்டு எடப்பாடி அரசு புழல் சிறையில் அடைச்சிருக்கு. இதேபோல் தமிழ்த் தேசியம் பேசும் சீமான், பெ.மணியரசன், இயக்குநர்கள் அமீர், கௌதமன், மே 17 இயக்க திருமுருகன் காந்தின்னு பலரையும் சிறைக்கு அனுப்ப நினைக்கிது எடப்பாடி அரசு. அதனால் அவர்கள் மீதான பழைய வழக்குகளை எல்லாம் தூசிதட்டி எடுத்துக்கிட்டு இருக்கு. இதையறிந்த தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு 2-ந் தேதி கடலூரில் வேல்முருகன் அண்ணனான திருமால்வளவன் தலைமையில் ஆலோசனை நடத்தியது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், த.மு.மு.க.ன்னு பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கிட்டாங்க. அரசின் இதுபோன்ற அடாவடிகளைக் கண்டித்து, முதற்கட்டமாக ஜுன் 8-ந்தேதி, கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துறதுன்னு அந்தக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்காங்க.''’
""சென்னையிலும் தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒண்ணு நடந்திருக்கே?''’
""பொதுவா தமிழ்த் தேசியம் பேசும் இயக்கங்கள், இடதுசாரிச் சிந்தனை கொண்டவையாக இருக்கும். இப்படிப்பட்ட தமிழ் அமைப்புகள், ஒரே பக்கம் ஒரே அணியா இணைஞ்சிடக் கூடாதுன்னு நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலரை அழைத்து, சென்னை- கிண்டி பகுதியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தியது. சர்வதேச அளவில் இருக்கும் தமிழ் அமைப்புகளை இதன் மூலம் தனது கையில் வைத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். தீவிர முயற்சியில் இறங்கியிருக்கு.''
""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். தூத்துக்குடியில் ரஜினி கொடுத்த பிரஸ் மீட்டுக்குப் பிறகு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மீம்ஸ்களும் பதிவுகளும் சமூக வலைதளங்களை பரபரப்பாக்கிக்கிட்டு இருக்கு. அதில் திலக் என்பவர், ரஜினியை ஒருமையில் படுமோசமாகத் திட்டியும் விமர்சித்தும் முகநூலில் வீடியோ பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். இதைப் பார்த்து டென்ஷனான ரஜினி குடும்பத்தினர், காவல்துறையில் புகார் செய்ய, சைபர் க்ரைம் போலீஸ் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தது. இதையறிந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசர், அந்த திலக் மீது எஃப்.ஐ.ஆர். போடாதீர்கள் என காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம். ஏனென்றால், அந்தத் திலக், திருநாவுக்கரசரின் மகனான ராமச்சந்திரனுக்குச் சகலையாம்.''
இறுதிச்சுற்று
பழி வாங்கும் நீட்!
2018 ஆம் ஆண்டின் நீட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே ஜுன் 4ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவில் 40% தேர்ச்சியை தமிழகம் பெற்று இருக்கிறது. இந்த தேர்ச்சியானது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவானது. கடந்த ஆண்டு 83 ஆயிரம் பேரில் 32ஆயிரம் (41%) பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 45,336(40%)பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இந்திய அளவில் முதல் 50 இடத்தில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டத்தில் பயின்ற தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா(676) 12-வது இடத்தை பிடித்து ஆறுதல் அளித்திருக்கிறார். கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த 2 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த நீட் தேர்வின் போது தமிழக மாணவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று எழுதியது பற்றிய எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. மொத்தம் 7314 பேர் மற்ற மாநிலத்திற்குத் தேர்வு எழுதி இருப்பது தேர்வு முடிவில்தான் தெரியவந்திருக்கிறது. தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 40% தேர்ச்சி பெற்று 35-வது இடத்தை பெற்று இருக்கிறது. இதனிடையே முதல்முறையாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வந்த பிறகு தேர்வில் தோல்வி அடைந்த தீபா, ரபீனா, மலர்விழி, அங்காள பரமேஸ்வரி ஆகிய மாணவிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
-சி.ஜீவா பாரதி