""ஹலோ தலைவரே, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா வேகப்படுத்தியிருக்காரே?''’
""சம்பந்தப்பட்டவர்கள் ஏரியாவில் பதட்டமாமே?''
""உண்மைதாங்க தலைவரே, 4-ந் தேதி நீதிபதி சத்யநாராயணா வழக்கு விசாரணையைக் கைல எடுத்தப்ப, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன், பேச எழுந்தார். அப்போது நீதிபதி, நான் இந்த வழக்கு ஆவணங்கள் எல்லாம் முழுசாப் படிச்சிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாதா?ன்னு கேட்டார். திகைத்துப்போன அட்வகேட் ஜெனரல், ஏதேதோ சொல்ல... அதற்கு நீதிபதி, 23-ந் தேதியில் இருந்து இந்த வழக்கைத் தொடர்ந்து 5 நாள் விசாரிக்கிறேன். அப்போது உங்கள் ஆர்க்யூமெண்ட்டுகளை எல்லாம் வையுங்கள். புதிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் தாக்கல் செய்யுங்கள்னு சொன்னார். இவரது வேகத்தைப் பார்த்தால் சுதந்திர தினத்துக்கு முன்னாடி தீர்ப்பு வந்துடும்னும் எதிர்பார்ப்பு இருக்குது.''
""இதில் ஆளுங்கட்சித் தரப்பின் வியூகம் என்ன?''’
""சொல்றேங்க தலைவரே, நீதிபதி சத்யநாராயணா, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிக்கிறவர். கிரானைட் ஊழல் வழக்கை விசாரிக்க, சகாயம் ஐ.ஏ.எஸ்.சுக்கு அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்ட போதும், வி.வி.மினரல்ஸ் குறித்த விசாரணையின்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடிக்கு முட்டுக்கட்டை போடப்பட்ட போதும் அவற்றை நீக்கி சுதந்திர விசாரணைக்கு வழிசெய்தவர். அதோடு இந்தவாரம் மதுரையருகே ஒரு கிராமத்தில் ஒருவர் சோலார் வேலி போட்டது தொடர்பான வழக்கில், வனத்துறையிடம் நீதிபதி விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு வனத்துறை, குவாரித் திருட்டும் சட்ட விரோதச் செயல்களும் நடப்பதால், தனிநபரின் அந்த வேலி பாதுகாப்பாக இருக்கும்னு பதில் சொன்னது. உடனே நீதிபதி, உங்கள் பதிலை அப்படியே சமூக ஊடகத்தில் பதிவிடலாமா?ன்னு கேட்டதோடு, அந்த வேலியை உடனே அப்புறப்படுத்தணும்னு அதிரடியா உத்தரவு போட்டுவிட்டார். எனவே இவரது போக்கை உணர்ந்த ஆட்சித் தலைமை, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள, அவரை சட்டரீதியாக எப்படி அணுகுறதுன்னு தீவிரமா வழிதேடிக்கிட்டு இருக்கு''’
""இந்த சட்டரீதியான நெருக்கடியோடு, ஓ.பி.எஸ். தரப்பின் தனி ஆவர்த்தன நெருக்கடியும் எடப்பாடியைப் பதறவைக்குதே''’
""ஆமாங்க தலைவரே, கடந்தவாரம் கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளின் திருமண விழாவில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் கலந்துக்கிட்டப்பவே, அவங்க தனித்தனியா தங்கள் ஆதரவாளர்களோட உட்கார்ந்திருந்ததைப் போனமுறையே நாம பேசிக்கிட்டோம். அந்த விழாவுக்கு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தனித்தனியாத்தான் வந்தாங்க. அப்படி வரும்போதே, தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன், தன் வீட்டில் எடப்பாடிக்கு மட்டும் 2 ஆயிரம் பேரைத் திரட்டி, வரவேற்பும், தேநீர் விருந்தும் கொடுத்தார். அப்ப எடப்பாடி, எனக்கு கேபி.முனுசாமி ஏற்பாட்டில் நடக்கும் கிருஷ்ணகிரி நிகழ்ச்சியில் பங்கேற்கவே பிடிக்கலை. அதனால் ரெண்டுதடவை தேதி கேட்டும் கொடுக்கலை. இந்தமுறையும் தேதி கொடுக்காட்டி, அவர் ஓ.பி.எஸ்.சை மட்டும் பிரதானப்படுத்தி அந்த விழாவை நடத்திடுவார். அதனால்தான் இப்ப வந்தேன்னு சொல்லியிருக்கார். எடப்பாடியின் மன ஓட்டத்தைப் புரிஞ்சிக்கிட்ட அமைச்சர் அன்பழகன், தன் ஆதரவாளர்களை, அந்த விழாவுக்கு வரவேண்டாம்னு தடுத்துட்டாராம். ஓ.பி.எஸ்.ஸைவிட தனக்கு இமேஜ் அதிகமா இருக்கணும்னு தீயா வேலை செய்யுது எடப்பாடி தரப்பு''’
""அதற்காகத்தான் எடப்பாடி புதிய நியூஸ் சேனலைத் தொடங்க நினைக்கிறாரா?''
""அந்தச் செய்தியும் உங்கக் காதுக்கு வந்துடுச்சா? ’"நியூஸ் ஜெ.'ங்கிற பேர்ல எடப்பாடி தரப்பு நியூஸ் சேனலைத் தொடங்கப்போறது உண்மைதாங்க தலைவரே. இதை மந்திரிகளான வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் டீமோட ஆட்கள்தான் நிர்வகிக்கப் போறாங்க. இதுக்கு பப்ளிக் ஷேர் வாங்கலாமான்னும் ஆலோசனை நடக்குது. சன் டி.வி.யின் முன்னாள் சி.இ.ஓ.வான ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை தங்கள் சேனலுக்கு இழுக்கவும் பேச்சுவார்த்தை நடக்குது''’
""ஜெ.’மரணத்தை விசாரிக்கும் விசாரணை ஆணையத்தில், ஆளாளுக்கு அதிரடி வாக்குமூலம் கொடுக்கிறார்களே...''’
""தலைவரே... போனவாரம் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர் சிநேகா, அப்பல்லோவில் அட்மிட்டாகும் முன்பே போயஸ்கார்டனில் ஜெ.வுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருந்ததுன்னு வாக்குமூலம் தந்ததா செய்தி வெளியாகி பரபரப்பானது. இது அங்கிருக்கும் வழக்கறிஞர்கள் கிளப்பிவிட்ட தகவலாம். பேஸ்மேக்கர் கருவியை வைக்க ஒரு மேஜர் ஆபரேசனே நடத்தவேண்டும். ஆனால் கார்டனில் ஜெ.வுக்கு அப்படி எதுவும் நடக்கலையாம். அதேசமயம் அப்பல்லோவுக்கு அவர் கொண்டுவரப்படும்போது, கார்டனில் மயக்க நிலையில் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருந்தாராம். இதை மட்டும்தான் அந்த டாக்டர் சொன்னதாகவும், தவறான தகவல் பரப்பப்படுதுன்னும் அந்த டாக்டர் தரப்பே பதட்டத்தோடு சொல்லுது''’
""தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் கார் ஓட்டுநர் பாலு பற்றியும்கூட ஒரு பரபரப்பான தகவல் பரவிக்கிட்டு இருக்கே?''
""ஆமாங்க தலைவரே, ஸ்டாலினின் டிரைவரான பாலு, ஸ்டாலினின் ஒவ்வொரு மூவ்வையும் தன் பத்திரிகை நண்பர் மூலம் உளவுத்துறைக்குத் தெரிவித்ததாகவும், இதைக் கண்டுபிடித்த ஸ்டாலின் அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் செய்திகள் பரவியதை நானும் பார்த்தேன். சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால், பாலு வேலையில் கவனக்குறைவா தொடர்ந்து இருந்ததால்தான், கணக்கு முடித்து அனுப்பப்பட் டிருக்காருன்னும் வாட்ஸ்அப்பில் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் சேர்க்கப்பட்டிருக்குன்னும் சொல்றாங்க.''
""குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.க்கும் மாநில லஞ்சஒழிப்புத் துறைக்கும் உரசலாமே?''
""இதுவும் தவறான செய்தின்னு விசாரணை வட்டாரம் சொல்லுது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்த இந்த வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்கணும்னு அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுச்சு. இதைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்த சி.பி.ஐ., அதில் குற்றச்சாட்டுக்கு ஆளான பெரும்புள்ளிகளின் பெயர்களைப் பதிவு செய்யலை. இது தொடர்பாகக்கூட விமர்சனங்கள் எழுந்துச்சு. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு அனுப்பச்சொல்லி, சி.பி.ஐ, இங்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளிக்கு போனவாரம் கடிதம் எழுதியிருக்கு. அதனை அனுப்புவதற்கான வேலைகள் நடக்குது. இதுதான் இப்போதைய நிலவரம்''’
""அது இருக்கட்டும்பா. அமித் ஷாவின் தமிழக வருகை, இங்கே பா.ஜ.க.வைத் தழைக்கச் செய்யும்னும், மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும்னும் தமிழிசை சொல்லியிருக்காரே?''’
""அதைப்பற்றி நான் சொல்றேன். 9-ந் தேதி அமித் ஷா தமிழகம் வர்றார். போனமுறை நம்ம நக்கீரனில் ஈ.சி.ஆர். ரோட்டில் நடந்த மிட்நைட் பார்ட்டியை எக்ஸ்க்ளூசிவ்வா வெளியிட்டிருந்தாங்களே... அந்த ஏரியாவில்தான் அமித் ஷா மீட்டிங் நடக்குது. 30 மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய சக்திகேந்திரா + 10 ஆயிரம் பேர் அடங்கிய கோசக்திகேந்திரான்னு தனித்தனியா நடக்குமாம். வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் ஓரங்கட்டிட்டு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை முழுசா வளைச்சாகணும்னு இங்குள்ள பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருந்தாரு. அதை எந்த அளவுக்கு அவங்க முன்னெடுத்திருக்காங்கன்னு விசாரிக்க இருக்காராம். குறிப்பா மிஸ்டுகால் உறுப்பினர் சேர்க்கை, ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அளவுக்கு நடந்திருக்குன்னும் ஆராய இருக்காராம். அதேபோல் வருகிற தேர்தலில் பா.ஜ.க. தனியாகப் போட்டியிட்டால் எப்படி இருக்கும்? கூட்டணி வைப்பதென்றால் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பதுன்னும் நிர்வாகிகளிடம் அலசுகிறாராம் அமித் ஷா.''
-----------------------------------------------------------
இறுதிச் சுற்று!
திவ்யபாரதியைத் துரத்தும் போலீஸ்!
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிவுசெய்யும் விதமாக ஒரு ஆவணப்படம் தயாரித்துவருகிறார் திவ்யபாரதி. அதற்கான டீசர் வெளியிட்ட நிலையில்... கடந்த ஜூலை 3-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்திலேயே சேலம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், திவ்யபாரதியின் வண்டிச்சாவியைப் பிடுங்கி ஒருமையில் பேசி மிரட்டினார். மறுநாள் மதுரை -ஆலங்குளத்திலுள்ள அவரது வீட்டை 20 போலீசார் சோதனை என்ற பெயரில் அலங்கோலம் செய்தனர். மத்திய-மாநில அரசுகளைக் குற்றம்சாட்டும் அந்த ஆவணப்படத்தை தடைசெய்வதற்காகவே இந்த நடவடிக்கை. ஜூலை 6-ஆம் தேதி வரை திவ்யபாரதியைக் கைதுசெய்ய தடைவிதித்திருக்கிறது உயர்நீதிமன்றம். "ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா?' என சந்தேகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் திவ்யபாரதி
-அண்ணல்