"ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந் தாலும் தி.மு.க. கூட்டணி, தேர்தலை நோக்கி விறுவிறுப்பா ஓடிக்கிட்டிருக்கு.''”
"ஆமாம்பா, இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சிகளை முதல்வரின் பேச்சு மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஓரணியில் தமிழ்நாடு எனும் இயக்கத்தை 1ஆம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,’வரும் தேர்தலின்போது, நம் தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேரும். கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்கள் கேட்பது குறித்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் விவாதித்துப் பேசி முடிப்போம். கூடுதல் இடங்கள் கேட்கும் பிரச்சினையை சமாளிப்போம்’ என்றார். தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களோ ‘பேசித் தீர்வு காண்போம் என்கிற ரீதியில் முதல்வர் பேசியிருப்பதிலிருந்து, அதிக இடங்கள் கேட்கும் எங்களின் உணர்வை அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்று உணர்கிறோம். எப்படி வலியுறுத்தினாலும் எங்களுக்கு கூடுதல் சீட் தராமல் ஏமாற்றத்தைத் தருவாரோ என்கிற சின்ன சந்தேகம் மனதில் இருந்தது. இப்போது அந்த சந்தேகம் தீர்ந்திருக்கிறது. அதனால் இந்தமுறை எங்களுக்கு மனம் மகிழ்கிற மாதிரி சீட்டுகள் கிடைக்கும்”என்று அவர்கள் தங்களுக்குள் உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அறிவாலயத் தரப்போ, இந்தத் தேர்தலில் ஸ்டாலின் அணி, மற்ற அணிகளை ஓடவிடப் போகிறது என்கிறது.''”
"கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வரலாம் என்று ஸ்டாலின் யார், யாரை மனதில் வைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார்?''”
"இப்போதுவரை எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் இருக்கும் கட்சிகள் என்றால், இரண்டுபட்டு நிற்கும் பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர், விஜய்யின் த.வெ.க. ஆகியவைதான். நாம் விசாரித்தவரை, இவற்றில் தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் தி.மு.க.வின் சாய்ஸாக இருக்கிறதாம். காரணம், தனித்துப் போட்டி என்றும், தி.மு.க.தான் தங்களின் அரசியல் எதிரி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் த.வெ.க. தலைவர் விஜய். அதனால் அவரது கட்சி, தி.மு.க.விற்கு வரப்போவதில்லை. நாம் தமிழர் சீமான், எடப்பாடியோடு இப்போதும் சீக்ரெட் டீலிங்கில் இருந்துவருகிறார். கூட்டணி என்கிற கான்செப்ட்டுக்குள் அவர் சென்றால் அ.தி.மு.க.வோடு மட்டுமே செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், தி.மு.க. கூட்டணியை அதிகம் விரும்புகிறார் தே.மு.தி.க. பிரேமலதா. தி.மு.க. கூட்டணிதான் இப்போதைக்கு பிரேமலதாவின் முதல் சாய்ஸாக இருக்கிறதாம். இந்த சூழலில், பா.ம.க.வில் நிலவும் மோதல்கள் அனுமானிக்க முடியாத அளவுக்கு இருந்தாலும், ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணிக்கும், அன்புமணி தலைமையிலான பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கும் செல்லலாம் என்கிறார்கள். ராமதாஸ் தி.மு.க. பக்கம் போவாரா என அரசியல் கட்சிகள் சில சோழி உருட்டுகின்றன.''”
"எடப்பாடி அரங்கேற்றிய ஒரு நாடகத்துக்கு பதிலடியாக, ஸ்டாலினும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் என்கிறார்களே?''”
"கடந்த வாரம், பா.ம.க. நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. இவர்களின் சந்திப்பு, கடந்த வாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமதாசை சந்தித்த செல்வம், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு நழுவினார். எனினும் கூட்டணியில் பா.ம.க. இல்லாத நிலையில் அவர் ராமதாசை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? என் கிற கேள்வி பரவலாக எதிரொலித் தது. அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. அதாவது, அண்மையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவை, அ.தி.மு.க. வைகைச்செல்வன் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. திருமாவளவன் டைம் ஒதுக் காமல் இந்த சந்திப்பு நடந்திருக்காது என்பது தி.மு.க. தலைமையின் எண்ணம். இதனை உளவுத்துறையும் முதல்வருக்கு உறுதிப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், எடப்பாடி சொல்லித்தான், தி.மு.க. கூட்டணிக் குள் குழப்பத்தை உண்டாக்க திருமாவை, வைகைச்செல்வன் சந்தித்தாராம். இதைப் புரிந்து கொண்ட ஸ்டாலின், எடப்பாடிக்கு கிறுகிறுப்பை உண் டாக்க, ராமதாசை சந்திக்க செல்வப் பெருந்தகையை அனுப்பி வைத்தா ராம்.''
"சங்கரன் கோவில் நக ராட்சியின் ஆளுங்கட்சி சேர்மன் உமாமகேஷ்வரி பதவியை இழந்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, சங்கரன்கோவில் நகராட்சியில், தி.மு.க. அணி கவுன்சிலர்கள் 17 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேரும் உள்ளனர். அங்கே தி.மு.க.வைச் சேர்ந்த உமாமகேஷ்வரி சேர்மனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் பதவி ஏற்றதிலிருந்தே அவர் மீது டெண்டர் குற்றச் சாட்டுகள் எழுந்துவந்தன. தி.மு.க. கவுன்சிலர் கள் ஒன்றுதிரண்டு பேசியும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லையாம். இதனால் அங்குள்ள கவுன்சிலர்கள் 2022-லேயே அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். இந்த நேரத்தில் அறிவாலயம் அறிவுறுத்தி, அதைத் தடுத்து நிறுத்தியது. இதன் பிறகும் சேர்மனின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லாததால், விரக்தியடைந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 24 பேர் ஒன்றுசேர்ந்து, ஜூன் 2ஆம் தேதி சேர்மன் எங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று நகராட்சியின் பொறுப்பு கமிஷனர் நாகராஜனிடம் மனு கொடுத்தனர். இது குறித்தெல்லாம் நமது நக்கீரனில் விரிவாகவே செய்தி வந்திருக்கிறது. இந்த நிலை யில், ஜூலை 2 அன்று, சேர் மன் மீதான நம்பிக்கை யில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. இதன் முடிவில் 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த னர். இதனால் தி.மு.க. சேர்மன் உமாமகேஸ் வரி பதவியை இழந் திருக்கிறார்.''”
"அ.தி.மு.க.வில் உள்நாட்டுக் கலகம் வலுத்திருக்கிறதே?''”
"அ.தி.மு.க.வைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயலும் மாஜி மந்திரி வேலுமணி, கட்சி நிர்வாகிகள் பலருக்கும் போன்செய்து ‘இதுதான் சரியான நேரம். கட்சியை ஒற்றையாய் ஆதிக்கம் செய்யும் எடப்பாடியிடம் இருந்து, நாம் கட்சியைக் கையகப்படுத்த வேண்டும்’ என சொன்னதோடு, சில மூவ்களையும் நடத்தியிருக் கிறார். இதையறிந்து திகைத்துப்போன எடப்பாடி, இந்த முயற்சியை முறியடிக்கப் படாதபாடு பட்டிருக்கிறார். இதனால்தான், திருபுவனம் இளைஞர் அஜித்தின் லாக்கப் டெத் பற்றிகூட உடனடியாக ரீயாக்ட் செய்யமுடியாத மனநிலையில் இருந்தாராம். பின்னர் சுதாரித் துக்கொண்டு தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டு, அதை ஆர்.பி.உதயகுமார் மூலம் மீடியாக்களில் வெளிவரும்படி பார்த்துக்கொண்டாராம்.''”
"உட்கட்சிப் பிரச்சினைக்கு மத்தியிலும் எடப்பாடியின் சுற்றுப்பயண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறதே?''”
"தி.மு.க. அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்ட மிட்டிருக்கும் எடப்பாடி, 7 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை முதற்கட்ட பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கவிருக்கிறது. அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட் டணி அமைந்தாலும் இரண்டு கட்சிகளுக்கு மான இணக்கம் உருவாகவில்லை என்கிற கருத் துக்கள் இரு கட்சிகளிலும் இருந்து வருவதால், இதைக் களைவதற்காக, தனது சுற்றுப்பயணத் தொடக்கவிழாவிற்கு, நயினார் நாகேந்திரனை அழைத்திருக்கிறார் எடப்பாடி. மேலும் இவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளி லும் உள்ள பா.ஜ.க.வினரும் கலந்துகொள்ள வேண்டும் என, அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.''”
"பா.ஜ.க.வில் மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் இழுபட்டு வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. வினர் ஆவலோடு எதிர்பார்க்கும் நிர்வாகிகள் பட்டியலை இன்னும் டெல்லி தலைமை வெளி யிடவில்லை. கட்சியின் தேசியத் தலைமையிடம் கொடுக்கப்பட்ட பட்டியலில் முழுக்க, முழுக்க மாநில தலைவர் நயினாரின் ஆதரவாளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்ததாம். இதற்கு எதிர்ப்பு பலமாகக் கிளம் பியதால், அதை பரிசீலனையிலேயே வைத்திருக்கிறார்களாம். இதற்கிடையில் பட்டியலில் உன் பெயர் இருக்கிறதா? என் பெயர் இருக் கிறதா? என்றெல்லாம் பா.ஜ.க. பிரமுகர்கள் மத்தியில் பெட்டிங் நடந்துவருகிறதாம்.''”
"தி.மு.க. அரசுக்கு எதிராக நடிகர் விஜய் களத்தில் குதிக்கிறாரே?''”
"அஜீத்குமார் படுகொலையைக் கண்டித் தும், இதுவரை நடந்துள்ள லாக்கப் டெத் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தி.மு.க. அரசுக்கு எதிராக சென்னையில் 3ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார் நடிகர் விஜய். இதன் மூலம் திமுக அரசுக்கு எதிராக முதல் கட்டப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளார் அவர். ஆரம்பத்தில் இதற்கு அனுமதி மறுத்திருக்கிறது போலீஸ். ஏற் கனவே எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது இருக்கிறது. எனவே நாங்கள் நீதிமன்றத்தை அணுகவேண்டி இருக் கும் என்று த.வெ.க. சார்பில் சொல்லியிருக் கிறார்கள். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை 6 ஆம் தேதி வைத்துக் கொள்ளும்படி கூறி, அனுமதி தரப்பட்டிருக்கிறது. தி.மு.க. அரசிற்கு எதிரான இந்த போராட்டத்தை மிக பிரமாண்ட மாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற் காக ஆட்களைத் திரட்டும் முயற்சியையும் முடுக்கி யுள்ளார்.இந்தப் போராட்டம் வெற்றி அடை யுமா? பிசுபிசுத்துப் போகுமா? என்று அ.தி.மு.க. தரப்பு ஆர்வத்தோடு கவனிக்கிறது.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். மாஜி அ.தி.மு.க. மந்திரி செல்லூர் ராஜு, 200 கோடிக்கு மேல் பறிகொடுத்த விவகாரத்தில், தி.மு.க. தரப்பிலிருந்து வந்த பரிந்துரையால், சட்டம் -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதமே நேரடியாகக் களமிறங்கி, அதைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக் கிறாராம். இதனால் குளிர்ந்துபோயிருக்கும் செல்லூர் ராஜு, தி.மு.க.வில் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம்.''”