அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 5-ந் தேதி நடத்தி, அடிக்கல் நாட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. 40 கிலோ எடை கொண்ட வெள்ளியினால் செய்யப்பட்ட செங்கல்லை, அங்கே கருவறைக்கான இடத்தில் நட்டதோடு, பாரிஜாத மரத்தையும் ஊன்றி, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டிருக்கிறார். இந்த விழாவுக்காக முதல்நாளே லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி, அயோத்தி நகரையே ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்திருந்தனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தீப ஒளியை ஏற்றியும் மத்தாப்பூ பட்டாசு வெடித்தும் தன் மகிழ்வை ஆரவாரமாக வெளியிட்டார்.
உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என பச்சைக் கொடி காட்டிய தால்,’"ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. கோயில் கட்டுமானப் பணிகளை கவனிக்கும் சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகாந்த்தும் அவர் மகனான ஆசிஷும் செய்தி யாளர்களிடம் “வடமாநிலத்தின் பிரதான கட்டிடக்கலையான நாகரா கட்டுமானத்தின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட இருக்கிறது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்களோடு 360 அடி நீளத்திலும் 235 அடி அகலத்திலும் 161 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி எழுப்பப்படும். எண் கோணவடிவில் கருவறை இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் வழிகாட்டுதலின்படியே இக்கோயில் கட்டப்படுகிறது’’ என்று பெருமிதம் பொங்க விவரிக்கின்றார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் இந்த பூமி பூஜை நடத்தப்பட்டிருக்கிறது. ராமர்கோயில் கட்டப்படும் இந்த இடம், தன்மீது மிகப்பெரிய கதையொன்றைச் சுமந்து கொண்டிருக்கிறது.
அயோத்தியில் 1528-ல் மொகலாயப் பேரரசரான பாபரின் தளபதி மீர்பாகி என்பவர், வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதியைக் கட்டினார். இதே இடத்தில் கி.பி.100-லேயே விக்கிரமாதித்ய மன்னன் ராமர் கோயிலைக் கட்டிவிட்டார் என்று இந்துக்கள் அமைப்பு தொடர்ந்து கொடிபிடிக்கத் தொடங் கியது. 1949ல் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப் பட்டு பதற்றம் உருவானது. காங்கிரஸ் அரசு நீக்குப்போக்காக நடப்பதாக அப்போதிருந்தே புகார்கள் எழுந்தன. 1990ல் ரதயாத்திரை நடத்தி னார் பா.ஜ.க. தலைவர் அத்வானி. 1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ராமர் கோவில் கட்டுவதை முன்னிறுத்தி பா.ஜ.க. தனது அரசியல் செல்வாக்கை வளர்த்தபடி இருந்தது.
1993-ல் மத்திய அரசு, பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தையும் அரசு கைப்பற்றியது. ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியே இருந்தன. குஜராத் கலவரம் வரை அது நீண்டது. 2010-ல் பிரசினைக்குரிய இடத்தை ராம் லல்லா, நிர்மோஹா அஹாரா, வக்புவாரியம் ஆகிய அமைப்புகள் சரி சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூன்று அமைப்புகளும் மேல்முறையீடு செய்தன. 2019-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல்நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
40 நாள் நடந்த தொடர் விசாரணைக்குப் பின் 2019- நவம்பர் 9-ல் ரஞ்சன் கோகாய் தலைமையிலான இந்த ஐவர் அமர்வு, பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலமும் ராம் லல்லாவுக்கே சொந்தம் என்றும் அது ராமர் கோயில் உருவாக்கத்திற்காக அமைக்கப்பட இருக்கும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு, இஸ்லாமியத் தரப்புக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கும்படியும் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம் 498- ஆண்டுகால பாபர் மசூதி விவகாரம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்தே இப்போது அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை போடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. தனது முக்கியமான மூன்று நோக்கங்களில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை 2019 ஆகஸ்ட்டில் ரத்து செய்தது. 2020ல் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது. அதன் மூன்றாவது நோக்கம், பொது சிவில் சட்டமாகும். பெரும்பான்மை பலம் கொண்ட மத்திய அரசு தன் வசம் இருப்பதாலும், எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாலும் ஜனநாயகத்தின் பேரிலேயே பா.ஜ.க. மேற் கொள்ளும் முயற்சிகளுக்கு எவ்வித எதிர்ப்புகளும் பெரியளவில் இல்லை.
கொரோனா பரவலிலும் உயிரிழப்புகளிலும் இந்தியா உலக நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்க, பொருளாதார நிலவரம் பாதாளத்தில் இறங்க, இமேஜ் அரசியலில் எப்போதும் கவனமாக இருக்கும் மோடி, அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி சாதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். ராமருக்காக ரதயாத்திரை நடத்திய அத்வானி இந்த விழாவில் இல்லை.
ராமர் என்றால் அன்பு. அன்பு ஒருபோதும் வெறுப்பில் தோன்ற முடியாது என ட்வீட் செய்திருந்தார் ராகுல்காந்தி. அதுதான் மக்களின் குரலும்.
- தமிழ்நாடன்