"ஹலோ தலைவரே..… பட்ஜெட் கூட்டத் தொடர் 20-ஆம் தேதி முடியற அதேநாளில் தி.மு.க.வுல விருப்ப மனு வாங்கப்படும்னு அறிவிச் சிருக்காங்க.''”
"ஒருவழியா தேர்தல் களை தமிழகத்துல தென்பட ஆரம்பிச் சுருச்சு.''”
"ஆமாம் தலைவரே, தமிழகம், புதுச்சேரியில போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பூர்த்திசெஞ்சு மார்ச் 2-ஆம் தேதிக்குள்ள அறிவாலயத்துல விண் ணப்பிக்கணும்னு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிச்சிருக்காரு. பொதுத்தொகுதிக்கு 25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிச்சிருக்கு அறிவாலயம். 2021 தேர்தலில் விருப்பமனு கொடுக்கப்பட்ட எண்ணிகையைவிட இந்த முறை அதிகமா இருக்கும்னு அறிவாலய வட்டாரம் சொல்லுது. தங்களுக்காக விருப்ப மனு கொடுக்கவிருக்கும் உடன்பிறப்புகள் பலர், தங்கள் மாவட்டத்தில் போட்டியிடவேண்டும்னு ஸ்டாலினுக்காகவும், உதயநிதிக்காகவும் விருப்ப மனு கொடுக்கப்போறாங்க.''”
"துரைமுருகன்னு சொன்னதும் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருதுப்பா… துரைமுருகன் உட்பட சீனியர்கள் பலருக்கும் இந்த முறை தேர்தலில் சீட் இல்லைன்னு ஸ்டாலின் முடிவுசெஞ்சிருக்கிறதா நம்ம நக்கீரனில் எழுதியிருந்தது தி.மு.க. தரப்புல ஏக வைரலாயிடுச்சாமே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rang1-2026-02-19-17-08-50.jpg)
"அதுமட்டுமில்லை தலைவரே.. இந்த நிலையில அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்த துரைமுருகனை சந்திச்சாரு ஸ்டாலின். அவரைப் பார்த்ததும் துரைமுருகன் கண்கலங்க, உடல்நலம் விசாரிச்ச ஸ்டாலின், அவ ருக்கு தைரியம் சொன் னாரு. அங்கிருந்தபடியே சில அரசியல் மூவ்களை எடுக்கும் வகையில் முக்கியமான ஒரு தலைவர்கிட்டேயும் பேசியிருக்காங்க. தேர்தல் சமயத்துல இதற்கான ரியாக்ஷன் தெரியவரும். ஹாஸ்பிட்டலிலிருந்து ஸ்டாலின் கிளம்புபோது, எனக்கு சீட் இல்லைன்னு சொல்லியிருக்கீங்கன்னு சொல்லி அழுதிருக்காரு துரைமுருகன். அதைப் பார்த்த ஸ்டாலின், "நீங்க இப்படி அழறதை நிறுத்துங்கண்ணே. காட்பாடி உங்களுக்குத்தான்'னு உறுதி தந்ததும்தான் அவருக்கு நிம்மதி வந்திருக்கு.''
"தமிழகத்துல காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் மார்ச்-16 ஆம் தேதி தேர்தல் நடக்குதே?''”
"ஆமாம் தலைவரே, அதுல ஒரு முக்கியமான தகவலும் காதுல விழுந்துச்சு. எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வெச்சு தி.மு.க. 4 இடங் களையும் அ.தி.மு.க. 2 இடங்களையும் பிடிக்க முடியும். 6 பேர் மட்டுமே களத்துல நின்னா, தேர்தல் நடக்காது. போட்டியின்றி அந்த 6 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவாங்க. 6 பேருக்கு கூடுதலா ஒருத்தர் நின்னாலும் தேர்தல் நடக்கும். ராஜ்யசபா சீட் கேட்டு தி.மு.க.விடமும், அ.தி.மு.க.விடமும் கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுத்திட்டு வரும் நிலையில், அவங்களை ஸ்டாலினும் எடப் பாடியும் எப்படி சமாளிக்கப் போறாங்கங்கிறதுதான் பெரிய சவால். சபரீசனை ராஜ்யசபா எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பிவைக்கணும்னு இப்பவே தி.மு.க.வுல குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி யிருக்கு. இதைப் பத்தி முதல்வர் ஸ்டாலின் சீரியஸா டிஸ்கஸ் பண்ணியிருக்காரு. இதனால தி.மு.க.வின் நேரடி அரசியலுக்குள் சபரீசன் இறக்கி விடப்படுவாரான்னு சீனியர்களிடம் விவாதம் ஓடிக்கிட்டிருக்கு.''”
"காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னைக்கு வந்துட்டுப்போயிருக்காரே, ஏதேனும் வெளிவராத விசேஷம் இருக்கா?''”
"ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறவங்க, தி.மு.க.வைச் சீண்டுற வகையிலும், கூட்டணியை உடைக்கணும்ங் கிற பாணியிலும் விமர்சனம் பண்ணிக்கிட்டி ருக்காங்க. காங்கிரசின் இந்த அட்ராசிட்டியை தி.மு.க.வும், ஸ்டாலினும் ரசிக்கலை. இந்த நிலை யிலதான், எங்க பொறுமையை சோதிக்கிறமாதிரி சீண்டிப் பார்க்கிற காங்கிரஸ் பிரமுகர்கள் மீது ஆக்ஷன் எடுக்கணும்னு தி.மு.க. தரப்புல இருந்து ராகுலுக்கு மெசெஜ் சொல்லப்பட்டிருக்கு. அதேநேரம், காங்கிரஸ் முன்னெடுக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்துக்க கே.சி.வேணுகோபால் சென்னைக்கு 16-ஆம் தேதி போவதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அது நினைவுக்கு வந்ததும், உடனே கே.சி.வி.யைத் தொடர்புகொண்ட ராகுல்காந்தி, "சென்னையில பத்திரிகையாளர்களை பார்த்தீங்கன்னா, கூட்டணிக்கு சிக்கல் வர்றமாதிரி பேசறது தனிநபர் கருத்து, நம்முடைய கருத்து இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்க, மத்ததைப் பேசிக்கலாம்'னு சொல்லியனுப்பி யிருக்காரு.''”
"ஓஹோ..… அதனால்தான் தி.மு.க.வுக்கு எதிரா மாணிக்கம்தாகூர் பேசறது அவருடைய சொந்தக் கருத்து, அது காங்கிரஸின் கருத்து இல்லைன்னு கே.சி.வேணுகோபால் சொன்னாரா?''”
"அதுமட்டும் இல்லைங்க தலைவரே… மாவட்டத் தலைவர்கள் கூட்டத்துலயும் இதப்பத்தி தீர்மானமும் நிறைவேத்தினாங்க. ஆனா, கூட்டணிக்கு எதிரா பேசுனவங்க மீது ஆக்ஷன் எடுக்கணும்ங்கிற தி.மு.க.வின் கோரிக்கையை காங்கிரஸ் நிறைவேத்தல! சென்னைக்கு வந்த கே.சி.வேணுகோபால், ஸ்டாலினை சந்திக்கவும் ஒரு திட்டம் இருந்தது. ஆனா, தி.மு.க.வின் கோரிக்கை யை நிறைவேத்தாததினால அந்த சந்திப்பு நடக்கலையாம். மாவட்டக் கூட்டத்துல கலந்துக் கிட்ட கே.சி.வேணுகோபால், கூட்டம் முடியறதுக்கு முன்னாடியே வெளியே கிளம்பிப்போய்ட்டாரு. அவருக்கும் ஐவர் குழுவில் இருக்கும் மூன்று நபர்களுக்கும் ஏர்போர்ட் பக்கத்துல இருக்கிற ட்ரைடண்ட் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணப் பட்டிருந்தது. அந்த ஹோட்டலுக்குத்தான் போறாருன்னு நினைச்சாங்க. ஆனா, தனக்கான செக்யூரிட்டி டீமை தன்னைப் பின்தொடர வேண்டாம்னு சொல்லிட்டு, வேறு ஒரு காரை புக்பண்ணி, வேற எங்கேயோ போனாரு கே.சி.வி. அன்னைக்கு ராத்திரி முழுக்க ஹோட்டலுக்கு வரலை. எங்க போனாருன்னு காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும் தேடிக்கிட்டு இருந்தாங்க. யாருக்குமே தெரியலை. இதனால் ராத்திரி முழுக்க அவங்களுக்கு டென்ஷன். மறுநாள் காலையிலதான் வந்தாரு. எங்க சார் போனீங்கன்னு செல்வப் பெருந்தகை கேட்டப்பவும் கே.சி.வி. சொல்லலை. மதியம் 1 மணிக்கு அவரை ப்ளைட் ஏத்தி டெல்லிக்கு அனுப்பிவெச்சாரு செல்வப்பெருந்தகை. அப்போ, "சி.எம்.மை மீண்டும் சந்திப்பேன். கூட்டணி பத்தி கேட்டா நான் என்ன சொல்றது?'ன்னு செல்வப்பெருந்தகை கேட்டிருக்காரு. "அதுல பிரச்சனைல்லாம் ஒண்ணுமில்லே! நான் டெல்லிக் குப் போனதும் ஸ்டாலின்ஜியிடம் ராகுல்ஜி பேசுவாரு'ன்னு மட்டும் கே.சி.வி. சொல்லியிருக்காரு. ஆனா, ராத்திரி முழுக்க கே.சி.வி. எங்கே போனாருங்கிற கேள்விக்கு மட்டும் இப்பவும் காங்கிரஸ்காரங்களுக்கு விடை கிடைக்கலை.''”
"நீ அதை அப்படியே விடமாட்டியே, உனக்கு ஏதும் தகவல் வந்துச்சா?''”
"இந்த ராத்திரி மர்மம் பத்தி நான் விசாரிச் சேன் தலைவரே… 16-ஆம் தேதி விஜய்கிட்ட ராகுல் பேசியிருக்காரு. அப்போ, "கே.சி.வி. சென்னைக்குத்தான் வந்திருக்காரு. ஸ்டாலினை சந்திக்கிற அப்பாயின்ட்மெண்ட் எதுவும் அவருக்கு இல்லை. உங்களைச் சந்திப்பாரு'ன்னு சொல்ல, "ஈ.சி.ஆர். சாலையிலுள்ள ஹெஸ்ட் ஹவுஸுக்கு வரட்டும். அங்கே சந்திக்கிறேன்'னு விஜய் சொல்லியிருக்காரு. ஆனா, பாதுகாப்பு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துட்டு அவரால வெளியே வரமுடியலை. அதனால, கடைசி நேரத்துல விஜய்யின் நண்பர் ஒருத்தரையும், த.வெ.க.வின் முக்கிய நபரையும் கே.சி.வி.யை சந்திக்க அனுப்பிவெச்சிருக்காரு விஜய். அவரை நள்ளிரவில் சந்திச்சு விஜய்யின் தூதுவர்கள் நீண்ட நேரம் பேசியிருக்காங்க. அந்த நள்ளிரவு ரகசியங்களை ராகுலிடம் விவரிச்ச கே.சி.வி., காங்கிரசின் வலிமையை உணர்ந்திருக்கேன்னு விஜய் சொன்னதா சொல்லி யிருக்காரு. அதனால, கூட்டணியில காங்கிரஸ் இருக்குமா? இருக் காதா?ன்னு இப்பவும் பட்டிமன்றம் நடந்துக்கிட்டுதான் இருக்கு.''”
"காங்கிரசின் ஐவர் குழுவுல இருக்கிற ஒரு வி.ஐ.பி.யின் அலப் பறை தாங்கமுடியலைன்னு புகார் வாசிக்கிறாங்களே?''”
"ராகுல்காந்தியின் அறிவுறுத்தலின்படி தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துறதுக்காக கிரீஷ் ஷோடங்கர் தலைமையில ரெண்டு மாசத் துக்கு முந்தி ஐவர் குழுவை அமைச் சாரு ராகுல். இந்தக் குழுவுல நிவேதித் ஆல்வான்னு ஒரு வி.ஐ.பி. இருக்காரு. இவரு, காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மார்க் கரெட் ஆல்வாவோட மகன். இவர் சென் னைக்கு வந்தா, 5 ஸ்டார் ஹோட்டல்லதான் ரூம் போடணும், பி.எம்.டபிள்யூ. கார்லதான் அழைச்சிட்டுப் போகனும், ஸ்டார் ஹோட்டல் சாப்பாடுதான் வேணும்னு ஏக அலப்பறை பண்றாராம். இதனால் காங்கிரஸ் கமிட்டி நொந்துபோகுது. இதுமட்டுமல்ல, எந்த நேரமும் பொண்ணுங்ககூடத்தான் பேசிக்கிட்டிருக்காராம். தேர்தல்ல சீட் வாங்கித் தாரேன்னு பெண் களுக்கு வாக்குறுதி தர்றாராம். இதத் தெரிஞ்சுக்கிட்ட கதர்ச்சட்டைங்க பலரும், எனக்கு சீட் வாங்கித் தாங்கன்னு பேரம் பேசிக் கிட்டிருக்காங்க. இந்த வில்லங்கம் எப்போ வெடிக்கப் போகுதோ?''
"அதென்னப்பா ஆண்டிப் பட்டி விவகாரம்?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rang2-2026-02-19-17-07-58.jpg)
"டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலை யில் கொண்டுவரப்பட்ட 2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மகாராஜன். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டது அவ ருடைய உடன்பிறந்த தம்பியான லோகிராஜன். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் மகாராஜன் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை வெற்றிபெற்றார். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த லோகிராஜன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்து ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஆனார். இந்நிலையில், ராஜன் சகோதரர்கள் குடும்பத்தில், "இரண்டு தடவை ஜெயிச்சுட்ட. இந்த தடவை விட்டுக் கொடுத் துடு'’என மகாராஜனிடம் பேச்சு வார்த்தையை நடத்தியிருக்கின்றன ராம். பேச்சுவார்த்தை முழுமை யடைந்தாலும், அதில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதை மறைக்கின்றன அந்த குடும்பங்கள். ஒருவேளை மகாராஜனுக்கு தி.மு.க. மீண்டும் சீட்டை ஒதுக்கினால் என்னாகும்? என கேள்வி யெழுப்புகின்றனர் விவரமறிந்த வர்கள்.''”
"ஓ.பி.எஸ். அ.தி.மு.க. கூட்டணியிலே தொடரப்போறதா செய்தி வருதே என்ன விஷயம்?''”
"முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவருமான ஓ.பி.எஸ்.ஸை அழைத்து ரூ.200 கோடியை செட்டில் செய்துள்ளது "பாஷ்யம் பில்டர்ஸ்.' தொழிலில் முதலீடு செய்யும் பொருட்டு வடக்கு மாவட்டத்திலுள்ள பாஷ்யம் பில்டர்ஸிடம் பெரும் பணத்தை முதலீடு செய்தார் ஓ.பி.எஸ்.. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் போட்ட முதலீடு திரும்பவர வில்லை. பதவியில் இல்லை. அதிகாரத்தில் இல்லை என்பதால் தனக்கு பணத்தை தரமறுக்கிறதா என்ற கவலையில் அமித்ஷாவிடம் புலம்பியிருக்கின்றார் ஓ.பி.எஸ்.. இந்நிலையில், திடீரென ரூ200 கோடியை ஓ.பி.எஸ்.ஸுக்கு திரும்பக்கொடுத்துள்ளது பாஷ்யம் பில்டர்ஸ். இதனால் நெகிழ்ந்து போன ஓ.பி.எஸ்., "ஜி நன்றி! என்னுடைய நிலைபுரிந்து உதவிசெய்தீர்கள். நீங்கள் கூறியபடி அ.தி.மு.க. கூட்டணியை விட்டு விலகமாட்டேன்' என சத்தியம் செய்யாத குறையாக அமித்ஷா விடம் வாக்களித்திருக்கிறாராம்.''”
"லாட்டரி அதிபர் மனைவி அ.தி.மு.க. பக்கம் சாய்ஞ்சிருக்காரே என்ன விஷயம்?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rang3-2026-02-19-17-10-18.jpg)
"எல்லாம் கையில காசு. வாயில தோசை விவகாரம்தான். அரசியல் அதிகாரம் இருந்தா வசதி என நினைக்கும் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ், அ.தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக ரூ 300 கோடி தருகிறேன். எனக்கு சீட் ஒதுக்குங்கள் என்று அட்வான் ஸாக ரூ.230 கோடியை முன்னாள் அமைச்சர் வேலுமணி மூலம் எடப்பாடியிடம் கொடுத்து கட்சி யில் சேர்ந்திருக்கிறார். "மீதத் தொகை எப்பொழுது வரும்?' என்றதற்கு, "தேர்தலில் திருவாடனை தொகுதியை எனக்கு ஒதுக்கீடு செய்யுமுன் உங்கள் கையில் இருக்கும்'’என வாக்கு கொடுத்திருக்கின்றாராம்.''”
"பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த முறை அ.தி.மு.க.வோடதான் கூட்டணி வைக்குதுபோல''”
"ஆமாம் தலைவரே, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங்கும் அ.தி.மு.க.வுடன் பேரம் பேசிவருகிறார். திரு.வி.க. நகர் தொகுதியில் நிற்பதற்கு சீட்டும் கேட்டுவருகிறார்.
இந்தப் பேரத்தையும் சீட்டையும் முடித்துக்கொடுக்க உதவியாக இருப்பவர் சசிகாந்த் செந்திலின் சித்தப்பாவான பூவை. ஜெகன் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.''”
"இந்த முறை அ.தி.மு.க. தலைமை தம்பிதுரைக்கு எம்.பி. சீட் கொடுக்காம கல்தா தரப்போவுதாமே?''”
"உங்களுக்குத் தெரியாத விஷயமா தலைவரே, தம்பிதுரைக்கு இந்த முறை ராஜ்யசபா சீட் வழங்கும் மூடில் எடப்பாடி இல்லையாம். அவருக்குப் பதில் ஒரு பெரிய பணக்கார கட்சிக்காரரை நிறுத்தப்போவதா அ.தி.மு.க.வினர் சொல்கின்றனர். இரண்டாவது சீட்டை அன்புமணி எதிர்பார்க்கிறார். ஆனால் அ.தி.மு.க. அந்த சீட்டை அன்புமணிக்குக் கொடுக்கப்போவதாக வெளிப் படையாக எங்கும் அறிவிக்கவில்லை.''”
"ராமதாஸுக்கு த.வெ.க. தரப்புல கூட்டணிக்கு நோ சொல்லிட்டாங்களாமே?''”
ஆமாம் தலைவரே, பட்ட காலிலே படும் கிறதுதானே பழமொழி. ராமதாஸை சேர்த்துக் கொண்டால் தலித் வாக்குகள் எல்லாம் பாதிக்கும் என்று விஜய் தரப்பு நினைக்கிறது. ஒருங்கிணைந்த பா.ம.க.வா இருந்தாலும் பரவாயில்லை. கட்சி பிரிந்துகிடக்கும் நிலையில தலித் வாக்கு களை மனதில் வைத்து ராமதாஸுக்கு நோ சொல்லிருக்கிறதா தகவல் வருது.''”
"சசிகலாமேல அமித்ஷாகிட்ட கம்ப்ளை யிண்ட் பண்ணியிருக்காராமே எடப்பாடி?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rang4-2026-02-19-17-08-24.jpg)
"கடந்த முறை தேர்தலில் டி.டி.வி. தினகரன் 40 இடங்களில் எடப்பாடியைத் தோற்கடித்தார். இந்தத் தேர்தலில், அதேபோல நான் தோற்கடிப்பேன்னு குமுறிக்கிட்டிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிட கழகத்தின் சார்பில் த.வெ.க.வுடன் பேசிக்கொண்டிருக்கிறார். 40 சீட்டுகள் வரை த.வெ.க. தரத் தயாராக இருப்பதாக சசிகலா வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இந்தத் தலைவலியையும் அமித்ஷா தீர்த்துவைச்சா நல்லாயிருக்குமேன்னு எதிர் பார்க்கிறார் எடப்பாடி.''”
"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. ஹரியானாவில் தேசிய அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து மகளிர் சுயஉதவிக் குழுவினர் பொருட்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர். இதில் கோவையிலிருந்து சென்றவர்கள் சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அதிரசம், முறுக்கு, லட்டு, மிக்சர் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். "நீங்கள் கொண்டுவந்த இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கண்காட்சியிலேயே தயாரித்துதான் விற்கவேண்டும். நீங்கள் தயாரித்து கொண்டுவந்த பொருட்களை விற்பனை செய்யவேண்டுமென்றால், 10,000 பணம் கொடுங்க' என தமிழக ஒருங்கிணைப் பாளரான சங்கர் மிரட்டியுள்ளார். இதனால் கோவை மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுவின் விற்பனை மேலாளர் நித்யாவிடம், சுயஉதவிக் குழுவினர் உதவிகோரியுள்ளனர். என்னால், ஒன்றும் செய்யமுடியாது என அவர் ஜகா வாங்க, இதனால் செய்வதறியாமல் நிர்க்கதியாய் நின்றிருக்கின்றனர் கோவை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர்.''
_____________
இறுதிச் சுற்று!
"தி.மு.க. கூட்டணி பலப்படும்''-வைகோ
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rangbox1-2026-02-19-17-09-36.jpg)
தி.மு.க. கூட்டணி யில் தே.மு.தி.க. இணைந் திருப்பது குறித்து மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப் பது இனிப்பான செய்தி. இதனை நாங்கள் வர வேற்கிறோம். தி.மு.க. கூட்டணி தனிப் பெரும்பான் மையுடன் ஆட்சியமைக்கும் என்பது என் கணிப்பு. ம.தி.மு.க. இந்தமுறை தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும். தே.மு.தி.க. இணைந்திருப்பது தி.மு.க. கூட்டணியை பலப்படுத்தியுள்ளது. இதனால், அ.தி.மு.க. கூட்டணி கலகலத்துப் போனது'' என்று தெரிவித்தார்.
-இளையர்
மறுக்கும் காங்கிரஸ்! துரத்தும் ஆதவ் அர்ஜுனா!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rangbox-2026-02-19-17-09-14.jpg)
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும்விதமாக மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்ரவர்த்தியும் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்த நிலையில்... அதற்கெல்லாம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பத்திரிகை யாளர்களிடம், "தி.மு.க. எங்களின் பழைய கூட்டாளி. பார்லிமெண்ட் தேர்தலைப்போல, தமிழக சட்டசபை தேர்தலில் எங்களின் கூட்டணி தொடர்கிறது. காங்கிரஸ் பிரமுகர்களின் கருத்து எங்கள் கருத்தல்ல. கூட்டணி குறித்து யாரேனும் கருத்துகள் கூறினால், அது அவர்களின் சொந்தக்கருத்து. கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக பேசக்கூடாது என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி குறித்த உங்கள் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது'' என்றார்.
இந்த சூழலிலும், "எப்படியாவது தி.மு.க.விடமிருந்து காங் கிரஸை பிரித்து த.வெ.க.வுடன் கூட்டணியில் சேர்ப்பேன். தலைவர் விஜய்யின் விருப்பமும் அதுதான். அதை நிறைவேற்றுவதற்கு முழுக் காரணமும் நான்தானென்பது விஜய்க்கு தெரியவரும்போது நான் அவருக்கு நெருக்கத்தில் இருப்பேன்'' என்ற எண்ணத்தோடு, காங் கிரஸை இழுப்பதற்கான முயற்சிக்காக கடந்த வியாழக்கிழமையன்று டெல்லிக்கு கிளம்பியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இதுகுறித்து, "இது ஆதவ் அர்ஜுனாவிற்கு தேவையில்லாத ஆணி! கண்டிப்பாக காங்கிரஸ் வராது. இருக்கின்ற பெயரும் டேமேஜாகப் போகிறது' என்கிறது பனையூர் வட்டாரம். இருப்பினும், "காங்கிரஸ் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை' என்கிறது காங்கிரஸ் வட்டாரம்!
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/rang-2026-02-19-17-07-12.jpg)