எப்போதும்போல இந்தப் பிறந்தநாளிலும் ரஜினி ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக ரஜினி அறிவித்து, வருகிற டிசம்பர்-31-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது. கட்சியின் உள்கட்டமைப்பு வேலைகள் முழுவீச்சில் நடந்து 90% முடிந்துவிட்டது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத் தரப்பினர் சொல்லும் நிலையில்... புதிய கட்சி பற்றிய அறிவிப்பைத்தான் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களில் "2.ஒ'’பட புரொமோஷனிலும் "பேட்ட'’பட ஷூட்டிங்கிலும் செம பிஸியாக இருந்தார் ரஜினி. சன் பிக்சர்ஸின் "பேட்ட'’படம் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதால், கடந்த 09-ஆம் தேதி, சென்னை புறநகரில் இருக்கும் தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில்’"பேட்ட'யின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது.
அதற்கு நான்கு நாட்கள் முன்பாக சென்னை திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்தைச் சேர்ந்த நாராயணன் ஐயர் தலைமையில் சிலர் போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்தித்துள்ளனர். அப்போது பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்தில் இருக்கும் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கியுள்ளனர். தான் ஆரம்பிக்கும் எந்த நல்ல காரியமாக இருந்தாலும் சரி, ரஜினி ஆலோசனை கேட்கும் ஜோசியர்கள், அய்யர்களில் இந்த நாராயணனும் ஒருவர்.
""உங்கள் ராசிப்படி, டிசம்பர்-10-ஆம் தேதியிலிருந்து, 17-ஆம் தேதி வரை நாள், நட்சத் திரம் எதுவுமே செட்டாகல. அதனால டிச. 09-ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவிச்சா சுபிட்சமா இருக் கும்'' என ஆலோசனை கூறியுள்ளார். "பேட்ட'யின் ஆடியோ ரிலீசும் டிச. 09-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால், மாலை 4:30-6:00 ராகு கால நேரமாக அமைந்ததால், "3:45-க்கோ அல்லது ஆடியோ ரிலீஸ் மேடையிலோ கட்சிப் பெயரை ரஜினி அறிவிக்கப்போகிறார்' என்ற பரபரப்பு தகவல் பரவ ஆரம்பித்தது. ஆனால் ஆடியோ ரிலீஸ் விழா அமர்க்களமாக நடந்ததே தவிர, ரஜினியின் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குனருமான சசிக்குமார், "ரஜினி சார் அவர்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும்' என்ற வேண்டுகோளை வைத்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நிறைவாக மைக் பிடித்த ரஜினி, ""கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதி படைத்த வர்கள் உதவ வேண்டும். "எந்திரன்'’படம் முடிந்த துமே, "2.ஓ' எடுப்பதற்காக எனக்கு 1 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் கலாநிதிமாறன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. இப்போது "பேட்ட'யில் இணைந்திருக்கோம்'' என்றவர், விஜய்சேதுபதியையும் சசிக்குமாரையும் மிகவும் புகழ்ந்துவிட்டு, ""இந்த ஆண்டு பிறந்த நாளின் போதும் சென்னையில் இருக்கமாட்டேன். அதனால் எனது வீட்டிற்கு வந்து யாரும் ஏமாற வேண்டாம்''’என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டார் ரஜினி.
கட்சிப் பெயரை ரஜினி அறிவிப்பதில் தாமதம் ஆக... ஆக, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி கள் மந்தமாகிக்கொண்டே வருவதுடன் சலசலப்பு களும் அதிகரித்தபடியே இருக்கின்றன. நான்கு மாதத்திற்கு முன்பு, ரஜினி வீட்டின் முன்பாகவே குமுறிக் கொந்தளித்தனர் இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.
பழைய மா.செ. பாபுவுக்கு கல்தா கொடுத்து விட்டு, புதிய மா.செ.வாக செந்தில் செல்வானந்த் என்பவரை நியமித்தார்கள். இதேபோல் மகளிர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, இளைஞர் அணி, தொழில்நுட்ப அணி என அனைத்து அணிகளுக்கும் புதிய செயலாளர்களையும் நிர்வாகிகளையும் நியமித்தனர். அப்படி நியமிக்கப்பட்டவர்களில் மகளிர் அணி மா.செ. ப்ரியா ராமச்சந்திரன், சில வாரங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜி னாமா செய்துவிட்டார். அதனால் நான்கு மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட சங்கீதா அலெக் சாண்டரையே மீண்டும் மா.செ.வாக்கியிருக்கிறார்கள்.
மீனவர் அணி செயலாள ராக இருந்த பிரபு பெர்னாண் டோவையும் தொழில்நுட்ப அணியின் மா.து.செ.வாக இருந்த லயன் ராமச்சந்திரனையும் விவ சாய அணிக்கு மாற்றியதால், அதிருப்தி அடைந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். இதேபோல் இராம நாதபுரம் ஒ.செ.இளையராஜா உள்ளிட்ட பல புதிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார்கள். ராஜினாமா நிலவரம் இப்படி என்றால், ஜாதி ரீதியிலான அதிருப்திகளும் அந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தின் வாட்ஸ்-அப் குரூப்புகளில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
“""நியமனங்கள், மாற்றங்கள் எல்லாம் தலைவருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? மாற்றம் இல்லை யென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும்''’என பாலநமச்சி பேசிய ஆடியோ ஒன்று பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
இராமநாதபுரம் நிலவரம் அப்படி என்றால், சேலம் மாவட் டத்திலோ வேறுதினுசாக அதிருப்தி வெடித்திருக்கிறது. ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக 30 வருடங் களுக்கும் மேலாக செயல்பட்டு வந்தவர் பழனிவேலு. ரசிகர் மன்றம், மக்கள் மன்றம் ஆன பிறகு பழனிவேலுவை மா.செ.வாகவும், பாரப்பட்டி கனகராஜை மா.து.செ.வாகவும் அறிவித்தார் ரஜினி. என்ன நடந்ததோ, சில மாதங்களிலேயே பழனி வேலுவுக்கு கல்தா கொடுத்துவிட்டு, நீலா ஜெயக்குமார் என்பவரை மா.செ.வாக நியமித்தார்கள்.
ரசிகர் மன்றத்தினருக்கும் ரஜினிக்கும் பரிச்சயமே இல்லாத இந்த நீலா ஜெயக்குமார், வீரபாண்டி ராஜாவின் சம்பந்தி மற்றும் டாக்டர் இளவரசனின் நெருங்கிய உறவினர். மா.செ.வாக நியமிக்கப்பட்ட பிறகு, பழைய நிர்வாகிகள் யாரையும் சந்திக்காததோடு, மாவட்ட அலுவலகத்தையும் மூன்று மாதங்கள் திறக்கவேயில்லையாம். அதோடு கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு நீலா ஜெயக்குமார் ஜம்ப் ஆகப் போவதாக தகவல் கிடைத்ததும், செந்தில்குமார் என்பவரை மக்கள் மன்றத்தின் புது மா.செ.வாக நியமித்துவிட்டார்கள்.
தே.மு.தி.க.விலிருந்து சமீபத்தில்தான் ர.ம.ம.விற்கு வந்துள்ள செந்தில்குமார், அ.தி.மு.க.வில் எம்.பி.யாகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த அர்ஜுனனின் மகன்+ கரன் சிப் பார்ட்டி. தொழில் அதிபரான எஸ்.கே.கணேசன் என்பவரை மா.இ.செ.வாக நியமித்திருக்கிறார்கள். செந்தில்குமாரின் நியமனத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்ததால், மா.து.செ.வாக இருந்த கனகராஜை செயற்குழு உறுப்பினராக்கிவிட்டது ர.ம.ம. தலைமை.
இது குறித்து கனகராஜை சந்தித்துக் கேட்டபோது, ""ரசிகர் மன்றத்திலேயே தகுதியானவர்கள் இருக்கும் போது, வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு ஏன் பதவி கொடுக்க வேண்டும்? எனவேதான் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து விட்டேன். ஆனால் இறுதிவரை தலைவருக்கு விசுவாசமாக இருப்பேன்''’என்றார்.
மா.செ. செந்தில்குமாரோ, ""மா.செ.வாக நான் நியமிக்கப்பட்டதும் அதிருப்தி நிர்வாகிகளைச் சந்தித்து, எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்படலாம் எனக் கூறி னேன். ஆனால் அவர்களோ ஆலோசனைக் கூட்டங் களுக்கு வர மறுக்கிறார்கள். இதற்கு மேல் எதுவும் சொல்வது, தலைமையின் உத்த ரவை மீறியதாகும்''’என்பதோடு முடித்துக் கொண்டார். இதேபோல் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்மன்றச் செயலாள ராக 30 வருடங்களாக இருக்கும் உலகநாத னுக்கு பதவி எதுவும் கொடுக்காததால், அ.தி. மு.க. விற்கு தாவிவிட்டார். கதிர்வேல் என் பவர் மா.செ.வாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
17 மாவட்டங்களில் இப்படிப்பட்ட அதிருப்திகளும் குழப்படிகளும் நீடிப்பதால், கடந்த நான்கு மாதங்களாக பூத் கமிட்டி அமைப்பதிலும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும் ரொம்பவே சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் நம்மிடம் சொன்னார் நெல்லை மாவட்ட நிர்வாகி ஒருவர். தலைமை நிர்வாகத்தில் உள்ள சிலரும் மாறலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
""இதெல்லாமே மேலோட்டமா இருக்குற சின்னச் சின்ன குறைபாடுகள்தான். கட்சிப் பெயரை தலைவர் அறிவித்துவிட் டால் எல்லாம் சரியாகிவிடும். தைமாசம் மூன்று தேதிகளைக் குறித்துக் கொடுத்திருக் கிறார் ஜோசியர் ஒருவர். அந்தத் தேதியில் கட்சிப் பெயரை அறிவித்துவிட்டு, மார்ச் மாதத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸின் "நாற் காலி' பட ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார். அனேகமாக அந்தப் படத்தில் கட்சிக் கொடி யும் இடம் பெறும். அதற்குத் தோதாக ஸ்கிரீன்ப்ளேயில் சில கரெக்ஷன்களைச் செய்யும்படி முருகதாஸிடம் சொல்லியிருக் கிறார் தலைவர்'' என நம்மிடம் உற்சாகமாக பேசினார் தென்சென்னை மாவட்ட பொறுப்பில் இருக்கும் ஒருவர்.
"போர் (தேர்தல்) வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றார் ரஜினி. ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தினரோ, "அடுத்தடுத்து நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிப் போர் வரும்போது படை தயாராக இருக்கவேண்டுமே...' என்கின்றனர்.
ரஜினியின் "நாற்காலி' வியூகம் பற்றிய எதிர்பார்ப்பு மட்டும் அரசியல் களத்தில் குறையவில்லை.
-ஈ.பா.பரமேஷ்வரன், அருள்குமார், இளையராஜா