""ஹலோ தலைவரே, டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு தரும் திட்டம் செப்டம்பர் 25-ந் தேதியில் இருந்து தொடங்கும்ன்னு அறிவிச்சதோடு, பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி வீசியிருக்காரே?''’
""ஆமாம்ப்பா, மாநில முதல்வர்களுக்கு ஆகஸ்ட் 15-ல் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த கலைஞரால் ஏற்கனவே இங்கே நிறைவேற்றப்பட்ட மருத்துவக் காப்பீடு, பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள்ன்னு சிலவற்றை இப்ப மோடி அறிவிச்சிருக்கார். கலைஞரால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் உரிமையைப் பெற்ற முதல்வர் எடப்பாடியும் தன் பங்கிற்கு சிலவற்றை அறிவிச்சிருக்காரே?''’
""உண்மைதாங்க தலைவரே, ஆனால், கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் தர முடியாதுன்னு சொன்ன எடப்பாடி மீதான கோபத்தால், தி.மு.க. கலந்துக்காம புறக்கணிச்சிடிச்சி. இதனால் வருத்தப்பட்ட எடப்பாடி, தனது நட்பு வட்டாரத்திடம் பேசும்போது, கலைஞர் மூத்த தலைவர் என்பதால் அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால் ஆடிட்டர் குருமூர்த்தி போன் போட்டு, எக்காரணத்தைக் கொண்டும் மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுத்துடாதீங்கன்னு கடுமையா எதிர்த்தார். அதோட சட்டசபையில் ஜெயலலிதா அம்மாவின் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஸ்டாலின். அம்மாவை ஏ ஒன் அக்யூஸ்டுன்னு தி.மு.க. விமர்சனம் செய்தது. அதனால சக அமைச்சர்களும் நம்ம தொண்டர்களும் கொதிப்படைவார்கள்ன்னு நினைச்சிதான், மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தேன்னு சொல்லியிருக்காரு.''’
""சக அமைச்சர்கள் மூலமாகவே நிறைய நெருக்கடிகள் வருதுன்னும் முதல்வர் எடப்பாடி வருத்தப்படறாராமே?''’
""ஆமாங்க தலைவரே, அமைச்சரவையில் இருக்கும் பலரும் விவரமே தெரியாம இருக்காங்கன்னும் வருத்தப்படறார் எடப்பாடி. சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கும் 449 கோயில்களில் அரசு சார்பில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர்-துணைமுதல்வர்-அமைச்சர்கள் எல்லோரும் பல கோயில்களில் சமபந்தி விருந்தில் கலந்துக்கிட்டாங்க. இவங்கள்ல திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள், எங்க அம்மா கொண்டுவந்த திட்டம்தான் இந்த சமபந்தி விருந்துன்னு புல்லரிச்சி சொல்லியிருக்காங்க. இதை கவனித்த முதல்வரின் செயலாளர்கள், சமபந்தி விருந்து தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதை ஜெ.’ கொண்டு வந்ததா அமைச்சர்கள் தப்புத் தப்பா பேட்டி கொடுக்கறாங்க. இதெல்லாம் அரசின் மீது வேண்டாத விமர்சனத்தை உண்டாக்கும்ன்னு ரிப்போர்ட் போட்டிருக்காங்க. இவங்களை எல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு எடப்பாடி வருத்தப்பட்டாராம்.''’
""விடுப்பா. விடுப்பா.. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்ங்கிற மாதிரிதான் இதுவும்! நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைஞருக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, "கலைஞரின் இறுதிச்சடங்கில் பல மாநில முதல்வர்களும் கலந்துக்கிட்டாங்க. அதேபோல் எடப்பாடியும் அதில் கலந்து கொண்டிருக்கணும். நீங்க என்ன எம்.ஜி.ஆரா, ஜெ.வா? அ.தி.மு.க. உருவாவதற்குக் காரணமா இருந்தவரே கலைஞர்தான். அதனால் அ.தி.மு.க. ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு அருகில் கலைஞர் படத்தையும் வைக்கணும்'ன்னு பேசினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதிலைச் சொல்லியிருக்கார். தி.மு.க. தொண்டர்களைத் தன் பக்கம் ஈர்க்கவே ரஜினி இப்படிப் பேசியிருக்கார். ஷூட்டிங் வேற சூட்டிங் வேற என்பதை ரஜினி புரிஞ்சிக்கணும்ன்னும் கொந்தளிச்சிருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, ரஜினியைப் பொறுத்தவரை அரசியல் ரீதியா மட்டும் இல்லாமல் தனிப்பட்ட ரீதியிலும் கலைஞரிடம் அன்பும் மரியாதையும் வச்சிருந்தார். கலைஞரும் அதே அன்பையும் மரியாதையையும் ரஜினிக்குக் கொடுத்தார். 2011 தேர்தல்ல ரஜினி இரட்டை இலைக்குதான் ஓட்டுப் போட்டார். அது டி.வி.யிலும் வெளியாச்சு. ஆனா அன்னைக்கு சாயந்தரமே, "இளைஞன்' திரைப்படத்தின் பிரிவியூ காட்சியை, கலைஞரும் ரஜினியும் ஒண்ணா உட்கார்ந்து பார்த்தாங்க. கலைஞரின் இதுபோன்ற பெருந்தன்மை, ரஜினியின் மனசிலேயே ஈரமா இருந்தது. கலைஞர் இறந்த செய்தி கேட்டதும் தன் வீட்டிலிருந்து ஒன்னரை பர்லாங் தூரத்தில் இருக்கிற கோபாலபுரத்துக்கு உடனே அஞ்சலி செலுத்த வந்தாரு. கூட்ட நெரிசலால் முடியாமப் போனதால், மறுநாள் காலையில் குடும்ப சகிதமா ராஜாஜி ஹாலுக்குப் போய் அஞ்சலி செலுத்தினார் ரஜினி. நடிகர் சங்கம் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் தன் மன உணர்வை அப்படியே வெளிப்படுத்திட்டாரு. அது பப்ளிக் கிட்டே ரீச் ஆயிடிச்சி. அதனால்தான் ரஜினி அட்டாக்கால் அ.தி.மு.க. பதறுது''’
""இரங்கல் சூழலில் இருந்து லாவணி சூழலுக்கு அரசியல் வந்திருக்கும் நேரத்தில், தமிழக அரசின் நிலக்கரி ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கணும்னும் இல்லைன்னா வழக்கு தொடருவோம்ன்னும் ஸ்டாலின் குரல் உயர்த்தியிருக்காரே?''’
""தலைவரே, 2012-ல் இருந்து 2016 வரை 12,250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கு. இந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கு 1500 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டிருக்குன்னு சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கை அறிக்கை சொல்லியிருக்கு. அதில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாவும் தெரியவந்திருக்குதாம். சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரி 61 டாலரா விலை குறைஞ்சிருந்த நேரத்திலும், அதை சிங்கப்பூர், பிரிட்டன், ஹாங்காங், துபாய் போன்ற நாடுகளிடமிருந்து அதிக விலைகொடுத்து வாங்கியிருக்காங்க. அதோட அதன் தரமும் சரியா இல்லையாம். அதே சமயம் தரச் சான்றுக்காக இவங்களே இடைத் தரகர்கள் மூலம் ஏஜென்ஸிகளை உருவாக்கி, அதன் மூலம் தரச்சான்றும் பெற்றிருக்காங்க. அதானி தொடர்புள்ள இந்த விவகாரத்தில், அப்ப மின்துறை அமைச்சரா இருந்த நத்தம் விசுவநாதன், மின்வாரிய சேர்மனாக இருந்த ஞானதேசிகன், இப்ப இதையெல்லாம் மூடிமறைக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி என பலரும் சிக்கப்போறாங்கன்னு சொல்லி தி.மு.க. இதைக் கையில் எடுத்திருக்கு.''’’
""இந்த விவகாரத்தை எடப்பாடி அரசு எப்படி எதிர்கொள்ளப் போவுது?''’
""அ.தி.மு.க. சீனியர்களிடமே விசாரிச்சேங்க தலைவரே, இந்த சி.ஏ.ஜி., எப்பவுமே எதையுமே மிகையாகத்தான் சொல்லும். அது சொன்ன நம்பர்களை வச்சிதான் 2 ஜி பத்தி நாங்க பேசினோம். அப்படின்னா சி.ஏ.ஜி.யின் 2 ஜி புகாரைத் தி.மு.க. ஏற்குமா? அதோட இது எங்க அம்மா ஆட்சியில் நடந்தது. இப்ப மின்துறை அமைச்சரா இருக்கும் தங்கமணி, நிலக்கரி தொடர்பான கொள்முதலிலோ, இறக்குமதியிலோ தலையிடுவதில்லை. ஏற்கெனவே மின்வாரிய சேர்மனா இருந்து, இப்ப முதல்வரின் செயலாளர்களில் ஒருவரா இருக்கும் சாய்குமாரும், இப்ப மின்வாரிய சேர்மனா இருக்கும் விக்ரம் கபூரும்தான் இதுபோன்ற விவகாரத்தை எல்லாம் கவனிக்கிறாங்க. அதிலும் ஜெ.’ஆட்சிக்கப்புறம் உதய் மின் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்த பிறகு, மத்திய எரிசக்தித் துறையும், மத்திய அரசும்தான் இதையெல்லாம் கையிலெடுத்து செய்யுது. அவங்கதான் கொள்முதல் விவகாரங்களை எல்லாம் முடிவுபண்றாங்க. அவங்களுக்கு சாதகமா செயல்படும்படி இங்க இருக்கும் நம் அதிகாரிகளை நிர்ப்பந்திக்கவும் செய்யறாங்க. எரிசக்தித் துறையும் மத்திய அரசும் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த நிலக்கரி விவகாரங்களை, மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரிச்சி என்ன சொல்லிடப்போகுதுன்னு அலட்சியமா கேட்குறாங்க.''’
""நானும் அ.தி.மு.க. தரப்பிலிருந்தே ஒரு முக்கிய தகவலைச் சொல்றேன். தி.நகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான சத்யா, அண்மையில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரை அழைத்தார். அவர்கள் சார்பில் அவர்களது வாரிசுகளும் உறவுக்கார இளைஞர்களும் போய் ஜாலியா சுத்திட்டு திரும்பியிருக்காங்க. அப்படி திரும்பும்போது, வெளிநாட்டிலிருந்து துணைக்கு ஆட்களைக் கொண்டு வந்து குளுகுளு கொடைக்கானலையே கிளுகிளுப்பாக்கிட்டதா, வாய்ப்பு கிடைக்காம போனவங்க குமுறுறாங்க.''’