"லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்ட நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு சவால்விடும் வகையில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தன்னுடைய வீட்டிற்கு சென்றிருக்கின்றார் ராஜேந்திர பாலாஜி. எப்படியும் காரில் தான் வெளியே வருவார் என வீட்டின் தெருமுனையிலேயே போலீஸார் காவல் காத்திருக்க, வழக்கமான வேஷ்டி சட்டையை தவிர்த்து கைலி, பனியன் உடுத்தி டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம், கிளீனராக மாறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

Advertisment

rajendrabalaji

அதே வாகனத்தின் மூலம் ஆணைக் குட்டம் அணை, எம்.புதுப்பட்டி, மங்கலம் வழியாக பயணித்து, எரிச்சநத்தம் பகுதியில் பட்டாசுக் கம்பெனி அதிபரின் இன்னோவா கார் மூலம் அழகாபுரி விலக்கு வழியாக மூணாறு சென்றுள்ளார். ஏறக்குறைய சுமார் 4 மணி நேரத்திலேயே மாநில எல்லையைக் கடந்திருக்கின்றார். அதன்பின் அங்கிருந்து மங்களூர் வழியாக மும்பை சென்றுள்ளது அந்த இன்னோவா கார். அங்கு ஏற்கனவே காத்திருந்த பா.ஜ.க. பிரமுகரின் மற்றொரு வாகனம் மூலம் தரைவழிப் பயணமாகவே டெல்லிக்கு சென்றுள்ளார் அவர். அங்கு அவரை பாதுகாத்து வருவது மதுரை மாவட்ட பா.ஜ.க. பெண் நிர்வாகி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பெண் பிரமுகர் ஆகியோர்தான். பாலியல் சீண்டல் செய்து சிக்கிக்கொண்ட பா.ஜ.க. பேராசிரியர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது'' என்கிறார் விருதுநகர் மாவட்ட உளவு அதிகாரி ஒருவர்.

வத்ராயிருப்பு பகுதியில் பணியாற்றி, தற்பொழுது பட்டாசு நகரிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றிவரும் "சுபமான' இன்ஸ்பெக்டர் ஒருவரும், பட்டாசு நகரிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றிய கோகுலஇந்திரா உறவுக்கார இன்ஸ்பெக்டர் ஒருவரும் மற்றும் மதுரையில் பணியாற்றி தற்பொழுது மாவட்ட எல்லையில் பணியாற்றிவரும் "லிங்க' இன்ஸ்பெக்டர் ஒருவரும், ராஜேந்திர பாலாஜி தப்பிக்கும் நாளைக்கு முன்னர் தொடர்ச்சியாக பேசியிருக்கின்றனர். அதுபோல் தப்பித்துச் சென்ற அன்றும் மூவருக்கும் புதிய எண்ணி லிருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வந்ததும் போலீஸாருக்கு சந்தேகத் தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அந்த எண்ணை திரும்பத், திரும்ப அழைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

முன்ஜாமீன் மனு ரத்தானதால் ஆர்ப்பாட்ட நேரத்திலேயே ராஜேந்திர பாலாஜியை கைது செய்வது பற்றி தனக்கு மேலே உள்ள அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார் மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் உயரதிகாரி. அவர் தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசியல் ரீதியாக சர்ச்சை எழும் என்று சொல்லி கைது நடவடிக்கையைத் தவிர்த்திருக்கின்றனர். அதுவே ராஜேந்திர பாலாஜி தப்பிக்க காரணமாகிவிட்டது என்ற விவரம், முதல்வரின் கவனத்திற்கும் சென் றுள்ளதாம்.

பணமோசடிப் புகாரில், "புகார் கொடுத்தவர்களிடம் அவர்களுடைய பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டோம். எங்களுக்கு ஜாமீன் கொடுங்கள்'' எனக் கேட்டால் ஜாமீன் கிடைக்க முகாந்திரம் இருப்பதாக வழியைக் கண்டுபிடிக்க, பாலாஜி மீது புகார் கொடுத்த அனைவரிடமும் பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றது மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் டீம் ஒன்று. இதில் சாத்தூரை சேர்ந்த புகார்தாரர் ரவீந்திரனிடம், "உங்களது புகாரை வாபஸ் வாங்குங்கள். ரூ.15 லட்சம் தந்து விடுகின்றேன்'' என பேச்சு வார்த்தையை நடத்த, அவரோ, "நான் கொடுத்தது ரூ.30 லட்சம். அதைவிடுத்து பேச வேண்டாம்'' என்றிருக்கின்றார் ரவீந்திரன். தொடர் நடவடிக்கையால் தனது செல்போனையே சுவிட்ச் ஆப் செய்துள்ளார் ரவீந்திரன்.

rajendrabalaji

Advertisment

"பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அரதப்பழசான டெக்னிக்கையே கையாள்கின்றது காவல்துறை. இன்னமும் ராஜேந்திர பாலாஜி பயன்படுத்திய போனையே சுற்றிவரும் போலீஸ் அவருக்கு நெருக்க மாக இருந்த போலீஸ் அதிகாரிகளை கண்காணிக்கவில்லை. பாலாஜி தப்பியதற்கு முழுக்காரணமும் மாவட் டக் காவல்துறையே. மாவட்டத்திலுள்ள எஸ்.பி., டி.எஸ்.பி.-க்கள், ஒருசில இன்ஸ்பெக்டர்கள் தவிர மீதமுள்ள அனைத்து அதிகாரிகளும் ராஜேந்திர பாலாஜி போட்ட ஆட்களே. அதுதவிர மாவட்ட எஸ்.பி. மனோகரனும் யூனிட்டிலேயே இருந்தவர், கடந்த பத்து வருடங்களுக்குப் பிறகு சட்டம் ஒழுங்கிற்கு வந்துள்ளார். அதுபோல், பாலாஜி தப்பிக்கும் வழியிலான புகார்களையே வழக்காக்கி உள்ளது காவல்துறை. இதில் விஜய நல்லதம்பி மீது மோசடிப் புகார்கள் நிறைய உள்ளது. அப்புறம் எப்படி ராஜேந்திர பாலாஜி கைதாவார்..? போலீஸிடமிருந்து எளிதாகத் தப்பித்தவர் வழக்குகளிலிருந்தும் எளிதாக தப்பித்து விடுவார்'' என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வழக்கறிஞரான பாஸ்கர் மதுரம்.

ஸ்டாலின் அரசுக்கு சவால்விடும் ராஜேந்திர பாலாஜியை போலீஸ் கைது செய்யுமா? கைதானாலும் வழக்கு வலுவாக நிற்குமா? என்ற கேள்விகள் நீடிக்கின்றன.

படங்கள்: விவேக்