நம் நக்கீரன் ஆசிரியர் கைது நடவடிக்கையின்போது நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தைப் பதிவு செய்தவர் மூத்த பத்திரிகையாளர் ’"இந்து'’என்.ராம். அதுதான், ஆசிரியர் விடுதலைக்கான திருப்புமுனை. நக்கீரன் நடத்தும் சட்டப்போராட்டங்களில் பலமுறை கைகோர்த்து வலு சேர்த்தவர். பத்திரிகை, ஊடக சுதந்திரம் குறித்து தொடர்ந்து குரலெழுப்பிவரும் அவரை சந்தித்தோம்..
நக்கீரன் ஆசிரியரின் கைதுக்குப் பிறகு ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்.ராம்: இதழியல் துறையையே அவமதிக்கும் வகையிலான மிகவும் தவறான அறிக்கை அது. அரசமைப்புச் சட்டம் 124-ஐ தீவிரமாகக் கையாண்டு தோல்வியடைந்துவிட்டார்கள். குடியரசுத்தலைவர் அல்லது கவர்னரின் சட்டரீதியிலான வேலையில் தலையிடுவது, அவர்களைப் பலாத்காரமாக தாக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே இந்த சட்டப்பிரிவைப் பிரயோகிக்க முடியும். எந்த புத்திசாலித்தனத்தோடு இந்தப் புகாரைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. முதலில் கோபாலைக் கைதுசெய்யுமாறு வாய்மொழியாக உத்தரவிட்டதாக கவர்னர் மாளிகை தரப்பு என்னிடம் சொன்னது. பின்னர் அங்கிருந்தே துணைச்செயலாளர் செங்கோட்டையனை வற்புறுத்தி அவரது கையெழுத்துடன் புகார் சென்றிருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட காவல்துறை என்ன செய்யவேண்டும் என்பதுபோல இருந்தது அந்தப்புகார். இத்தனை டிராமா செய்து, நீதிமன்றத்தில் தோல்வியடைந்த பிறகு புகார்பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாமல் அறிக்கை வெளியிடுகிறார்கள். நக்கீரனை முழுமையாகத் தாக்கி மஞ்சள் பத்திரிகையென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குதான் மஞ்சள்நிற அட்டையுடனான இதழ்மூலம் நக்கீரன் பதிலடி தந்துவிட்டதே?
வழக்கு நிலுவையில் இருக்கும்போது அறிக்கை வெளியிடுவது சரியா?
என்.ராம்: தவறானதுதான். நிறைய பத்திரிகைகளில் கைதுக்கு எதிரான செய்தி வெளியானதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இதை சட்டரீதியில் எதிர்கொள்வோம் என்றுகூட சொன்னால் அதுவேறு. அத்தகைய நிதானமோ, சிந்தனையுடன் செயல்படும் போக்கோ அவர்களுக்கில்லை. வெற்று வெறியும், கோபத்துடனும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. செய்திகளில் வெளியானாலும் அது கேலிப்பொருளாக ஆனதுதான் மிச்சம்.
கவர்னர் மாளிகை அறிக்கையில், நக்கீரனை சமூகவிரோத சக்தி என்று குறிப்பிட்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்.ராம்: அந்த அறிக்கையை எழுதிய அதிகாரி மீது அவதூறு வழக்கே பதிவுசெய்யலாம். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட முடியுமா?
மனரீதியில் பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர் எதற்காக கவர்னராக இருக்கவேண்டும் என கேட்டிருந்தீர்களே?
என்.ராம்: நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதுபோன்ற பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி புலனாய்வுக் கட்டுரை வெளியிடுவதன் மூலம் மன உளைச்சல் ஏற்படும் என்றால், அந்தளவுக்கு பலவீனமான மனநிலை கொண்டவர் எதற்காக அந்த நாற்காலியில் இருக்கவேண்டும்? வீட்டிலேயே இருந்துகொள்ளலாமே என்றுதான் சொன்னேன்.
நீதிமன்றத்தில் நீங்கள் கருத்துப்பதிவு செய்தது தவறென்று சிலர் விமர்சிக்கிறார்களே?
என்.ராம்: இதற்கு முன்னர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர் அல்லாதோர் பலர் தங்கள் கருத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பதால், நான் செய்ததும் தவறில்லை. இந்த விஷயத்தில் என்னை மிகைப்படுத்தவும் தேவையில்லை. நீதிபதி கோபிநாதன்தான் அந்த வாய்ப்பை வழங்கினார். நீதிமன்றத்தில் என்னைப் பார்த்ததும் ‘நிபுணர்’ என்கிற முறையில் கருத்துக் கேட்டார் நீதிபதி. நானும் இந்த வழக்கால் இந்திய பத்திரிகைத்துறை சந்திக்கப்போகும் பாதகங்களை விளக்கினேன். அதோடு, ஒட்டுமொத்த ஊடகத்துறையும், அரசியல் கட்சிகளும் இணைந்ததும், நக்கீரன் சார்பில் மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் குழு இருந்ததும்தான் வெற்றிக்கான காரணம் என்பேன். மாநிலம் முழுவதும் இதைவிடவும் மோசமான வழக்குகளைச் சந்தித்த அனுபவம் கொண்டவரல்லவா நக்கீரன்கோபால்.
உங்கள்மீது இதற்குமுன் உரிமைமீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டதா?
என்.ராம்: இந்து குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் ஐந்துபேரின் மீது கொண்டுவரப்பட்டது, என்மேல் கிடையாது. காவல்துறையினர் கைதுசெய்வதற்காக வந்தபோது தொழிலாளர்கள், யூனியனைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் ஒன்றுகூடி எதிர்த்தோம். வாரண்ட் இல்லாமல் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பிவிட்டு, ஐவரையும் பத்திரப்படுத்தினோம். காவல்துறையினர் மிகத்தீவிரமாக அவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். உச்சநீதிமன்றம் சென்று கைதிலிருந்து விலக்கும் பெற்றோம். கோபால் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள், மிரட்டல்களோடு ஒப்பிட்டால் இதெல்லாம் ஒன்றுமே கிடையாது.
பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றி?
என்.ராம்: ஊடகங்கள் தொடர்ச்சியாக தொந்தரவைச் சந்தித்தன. ஊடக சுதந்திரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கி முதல்வரிடம் முறையிட்ட பிறகுதான் கொஞ்சம் குறைந்திருக்கிறது. எமர்ஜென்ஸிக்குப் பிறகு பத்திரிகைகள் மீதான மிகமோசமான தாக்குதல் இப்போதுதான் நடக்கிறது. இந்துதேசம் மற்றும் காவியின் பெயரால் அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். 1992-ல் இருந்து இந்தியாவில் 38 பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டதற்காக கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழுவின் (சி.பி.ஜே) தகவல் சொல்கிறது. கவுரி லங்கேஷ், சுஜாத் புகாரியின் கொலைகள் சமீபத்தியவை. இதில் மோசமான விஷயமே இதில் ஒரு வழக்கில்கூட இறுதிமுடிவை எட்டப்படவில்லை என்பதுதான். சி.பி.ஜே. வெளியிட்ட உலக தண்டனை விலக்குக் குறியீடுக்கான 12 நாடுகளில் இந்தியா இன்னமும் இருக்கிறது. அதை ‘அவமானச் சங்கம்’ என்று சொல்வேன். இந்தியாவில் பத்திரிகையாளர்களின் நிலை மோசமாகவே இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே இதைக் குறைக்க முடியும்.
சந்திப்பு : பெலிக்ஸ்
படங்கள்: ஸ்ரீபாலாஜி
தொகுப்பு : ச.ப.மதிவாணன்