"என்னது ராஜபக்சே பிரதமரா?' -இலங்கையில் நடந்த தடாலடி அரசியல் மாற்றம் தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்திய அதிர்வலை இது. இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றை ஆட்சி முறையை நடத்திக்கொண்டிருந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்து இலங்கை அரசியலில் அதிர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் மைத்ரிபால சிறிசேன!
""என்னை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது. சட்டத்திற்குப் புறம்பாக நான் நீக்கப்பட்டிருக்கிறேன். நானே இலங்கையின் பிரதமர்'' என பிரகடனப்படுத்தியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே. ஆனால், புதிய பிரதமரான மகிந்த ராஜபக்சே, ""பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேற வேண்டும், இல்லையேல் வெளியேற்றப்படுவார்''‘என மிரட்டியிருக்கிறார்.
800-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உயர்மட்டப் பாதுகாப்புகள் ரணிலிடமிருந்து விலக்கப்பட்டு சொற்ப அளவிலான பாதுகாப்பே அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு உயர் பதவிகளிலுள்ள ரணிலின் அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய நியமனங்களை மைத்ரியும் ராஜபக்சேவும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், அரசியலமைப்பின் 42.3 மற்றும் 42.4 ஆகிய சட்டப் பிரிவுகளின்படி பிரதமரை நியமிக்கவும் நீக்கவும் தனக்கு வானளாவிய அதிகாரமிருப்பதாக மைத்ரிபால சிறிசேன சொல்லி வரும் நிலையில், ""நாடாளுமன்றத்தைக் கூட்டி யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிலைநிறுத்தும் நடவடிக்கையை மைத்ரி எடுக்க வேண்டும்'' என அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
பெரும்பான்மை வலிமை இல்லாத ராஜபக்சே, பெரும்பான்மை பலத்தை உருவாக்கிக்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்தை இரு வாரங்களுக்கு முடக்கியிருக்கிறார்; மூடியிருக்கிறார் மைத்ரி. இதனை ஏற்க மறுத்துள்ள நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா, ரணில்தான் அதிகாரப்பூர்வ பிரதமர் என மைத்ரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதம் அதிரடி பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.
அந்த கடிதத்தில், ""’நாடாளுமன்றத்தின் தலைவர் என்கிற முறையில் அவை உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் மற்றொரு பிரதமர் தேர்ந்தெடுக்கும் வரை தற்போதைய பிரதமர் ரணிலின் உரிமைகளை பாதுகாப்பதுதான் ஜனநாயக கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணிலுக்கே பிரதமராக தொடர அதிகாரம் உண்டு. நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு முன்பு என்னிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறேன். உங்கள் முடிவினை பரிசீலிக்க வேண்டும்''‘என காட்டமாக எழுதியுள்ளார் ஜெயசூர்யா.
மைத்ரியால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைகளை நடத்திவரும் ரணில் விக்ரமசிங்கேவை பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் சந்தித்து வருகின்றனர். மகிந்த ராஜபக்சேவும் இதேபோன்ற சந்திப்புகளை நடத்தி வரும் நிலையில், ""இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பூகோள அரசியல்களே காரணம்''‘என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னா குற்றம் சாட்டியிருப்பது முக்கியத்துவமானது.
இதுகுறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ‘’""இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவை, தன் பிடியில் வைத்திருந்தது சீனா. ராஜ்பக்சேவும் இந்தியாவை விட சீனாவிடமே தனது நெருக்கத்தையும் விசுவாசத்தையும் அதிகம் காட்டினார். இதனை அப்போதைய மன்மோகன் அரசும், தற்போதைய மோடி அரசும் ஜீரணிக்கவில்லை. இதனால், 2015-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரியையும் ரணிலையும் ஓரணியில் நிற்க வைத்து ராஜபக்சேவை தோற்கடித்தது இந்தியா.
ஜனாதிபதியான மைத்ரிக்கும், பிரதமரான ரணிலுக்கும் இடையில் உருவான குறைந்தபட்ச செயல்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு பல்வேறு முரண்பாடுகளை வளர்த்தபடியே இருந்தது. இத்தகைய முரண்பாடுகளே, பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவிற்கு அமோக வெற்றியைத் தந்தது. இதனால் மைத்ரிக்கும் ரணிலுக்குமான முரண்பாடுகள் விரிசலை ஏற்படுத்தியது. ரணிலின் கொள்கைகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் குற்றம்சாட்டினார் மைத்ரி. ஒரு கட்டத்தில், பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்கவும் மைத்ரி எடுத்த முயற்சியை தோற்கடித்தார் ரணில். இந்த களேபரங்களையெல்லாம் அவதானித்தபடி இருந்தது இந்தியா.
இந்த நிலையில், ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்த சுப்ரமணியசாமி, பிரதமர் மோடியை சந்திக்க வைத்தார். ராஜபக்சேவை வளைத்து வைத்திருந்தது போல, ரணிலையும் சீனா தன் பிடியில் வைத்திருந்ததால் கடந்த இரு வருடங்களாக இலங்கைக்கான இந்தியாவின் திட்டங்களை செயல்படுத்த மறுத்து வந்திருந்தார் ரணில். இதனால் ரணில் மீது கோபமாக இந்தியா இருந்ததால் மோடி-ராஜபக்சேவின் சந்திப்பு இயல்பாகவும் இலகுவாகவும் இருந்தது. இந்தியாவுடனான ராஜபக்சே உறவு மீண்டும் இறுகியது.
இதனையறிந்து அவசரம் அவசரமாக டெல்லிக்கு படையெடுத்த ரணில், மோடியை சந்தித்துப் பேச, அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து இந்தியாவின் அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் மோடி. இதில் மன உளைச்சலாகி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மைத்ரிதான் இருப்பதாக குற்றம்சாட்டிவிட்டு திரும்பினார் ரணில். இதனையறிந்த மைத்ரிபால சிறிசேன, இந்தியாவின் கோபத்தை எதிர்கொள்ள சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளார். சீனா போட்டுக்கொடுத்த திட்டத்தின் படியே இப்போதைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் மைத்ரி.
இந்தியாவுடனான நட்பை ராஜபக்சே புதுப்பித்துக் கொண்டிருப்பதைப் பற்றி சீனா அலட்டிக்கொள்ளவில்லை. பிரதமர் பதவியில் சிக்கலில்லாமல் ராஜபக்சே அமர்ந்த பிறகு அவரை தங்கள் பிடிக்குள் கொண்டு வரும் சூத்திரம் சீனாவுக்குத் தெரியும்''‘என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் மைத்ரியின் அதிரடிக்கு பின்னணியில் அமெரிக்க-இந்தியாவின் கூட்டு சதி இருப்பதாகவே சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுவீடனிலுள்ள சால்மர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் விஜய் அசோகனிடம் நாம் பேசியபோது, ‘’""இலங்கையின் அரசியல் விவகாரங்களை அமெரிக்காவின் உள்விவகாரங்களே தீர்மானிக்கின்றன. அதை நடைமுறைப்படுத்தும் செயல்களை மட்டுமே இந்தியா செய்து வருகிறது. ஈழத்தில் 2009-ல் போர் நடந்துகொண்டிருந்தபோது, எல்லா நாடுகளிலும் தமிழர்கள் போராடிக்கொண்டிருந்தோம். அனைத்து நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து விவாதித்தபோது, "புலிகளை ராஜபக்சே பார்த்துக்கொள்வார். ராஜபக்சேவை நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என்றுதான் சொன்னார்களே தவிர, தமிழர்களின் நலன் சார்ந்த தீர்வுகளை முன்னெடுக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து, இலங்கையில் இன அழிப்பை நடத்தி முடித்த நிலையில், சிறிசேன-ரணில் இணைப்பில் ஒற்றை ஆட்சி முறையை 2013-லேயே நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்தன. ஆனால், 2015-ல்தான் சாத்தியமானது. மைத்ரி-ரணில் தலைமையில் நல்லாட்சி அமைந்துவிட்டது; இனி உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்; இனி போர்க்குற்றங்களை பெரிதுபடுத்தாதீர்கள் என தமிழர்களிடம் மூளைச் சலவை செய்தது சர்வதேசம். நார்வேயில் நான் கலந்துகொண்ட கூட்டத்தில் எரிக் சோல்கைய்ம் இதனை அழுத்தமாகப் பேசினார். உலக முழுவதுமுள்ள தமிழர்களிடம் அமெரிக்க ராஜதந்திரிகளும், ‘ "இந்த ஆட்சியை நம்புங்கள். உங்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ ஒற்றை ஆட்சிக்குள் அமைதியாக வாழலாம்'‘என்பதைத்தான் வலியுறுத்தினார்கள்.
இதனை நம்பி, 2015-லிருந்து 2018 வரை போர்க்குற்றங்களுக்கு எதிராக உலக முழுவதும் எந்த போராட்டங்களையும் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை. இதனால் மைத்ரி-ரணில் ஆட்சியை பொத்திவைத்து பாதுகாத்த அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
இந்தியாவுக்கு வந்த ராஜபக்சேவும், "சீனாவுடனான உறவு ராஜாங்க உறவு என்கிற அளவில் மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு எந்த அளவு உண்மையாக இருப்பேன்' என சொல்லி விட்டு வந்தார். சிறிசேனாவுக்கு முன்பு ராஜபக்சே அதிபரானது சீனாவின் பின்னணியில் இல்லை. அமெரிக்க-இந்திய கூட்டணியின் பின்புலத்தில்தான் வந்தார். அதனால், ராஜபக்சே என்கிற ஒற்றை மனிதர் மட்டுமே தமிழர்களுக்கு எதிரி இல்லை. ஒற்றை ஆட்சி முறையும் சிங்கள பேரினவாத பௌத்த பிக்குகளின் தலைமையால் உருவாக்கப்பட்டிருக்கும் அரச கட்டமைப்பும் தான் எதிரிகள்.
சமீபத்தில் ஐ.நா.பொதுசபையில் பங்கேற்க அமெரிக்கா சென்ற மைத்ரி, அதிபர் டொனால்ட் ட்ரம்பை புகழ்ந்து பேசியதுடன் அவரை சந்தித்து விவாதித்துவிட்டு இலங்கை திரும்பினார். அந்த சந்திப்பில், போர்க்குற்றங்களிலிருந்து இலங்கை விடுபட விரும்புவதை விவரித்து பேசியிருக்கிறார் மைத்ரி. அதேபோல, ட்ரம்பின் பொருளாதார கொள்கையை முன்வைத்தே எனது ஆட்சி நடந்தது என்பதை சமீபகாலமாக சொல்லி வருகிறார் மகிந்த ராஜபக்சே. இதனையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கிறது அமெரிக்கா. அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா மீதோ அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதோ போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் நடத்த முயற்சித்தால் அதனைப் பார்த்துக்கொண்டு அமெரிக்கா அமைதியாக இருக்காது' என எச்சரித்திருக்கிறார்.!
ராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் எண்ணெய்வள ஒப்பந்தங்கள் மூலம் திருகோணமலைக்குள் அமெரிக்கா நுழைந்துவிட்டது . இதற்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனை நிறைவேற்றும் வரை ரணிலின் ஆதரவு தேவைப்பட்டது. தனது ஒப்பந்தங்களை இனி தடையின்றி அமல்படுத்தவும் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும் இலங்கைக்குள் தனது ராணுவ வலிமையை நிலை நிறுத்தவும் ரணிலை விட ராஜபக்சேவே சரியானவர் என திட்டமிட்டு, மைத்ரி மூலம் பிரதமர் மாற்றத்தை நடத்தி முடித்திருக்கிறது அமெரிக்கா''‘என்கிறார் அழுத்தமாக.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ""ராஜபக்சேவின் வருகையால் ஈழத்தமிழர்களின் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றம் அதிகரிக்கும் அபாயம் அதிகமுள்ளது. போர்க்குற்ற நடவடிக்கைகளிலிருந்து எளிதாக வெளியே வந்துவிடுவார் ராஜபக்சே. ஐ.நா.சபை வழியாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமாகவோ ஈழத்தமிழர்கள் சர்வதேச குற்றவிசாரணைகளை முன்னெடுக்கும்போது அதனை தடுக்கும் சக்தியாக அமெரிக்கா இருக்கும்.
கடந்த 3 வருடங்களாக நீர்த்துப் போயிருக்கும் தமிழர்களின் போராட்டம், ராஜபக்சே வருகையால் மீண்டும் வலிமை பெறலாம். ஆனால், எந்த தீர்வும் கிடைக்கப்போறதில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது. கடும் சிங்களப் போக்காளரான ராஜபக்சேவால் தமிழர்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்படும். இதனை தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான் அவர்களின் அரசியல் இருக்கிறது. அதனால் வெறும் சீன ஆதிக்கம் என்கிற அளவில் இலங்கை அரசியலை மாற்றத்தை அணுகாமல் அமெரிக்கா-இந்தியாவின் கூட்டணியில் உருவாகியிருக்கும் சதித்திட்டங்களின் நீட்சியாகப் பார்ப்பதே நிலையான தீர்வை நோக்கி தமிழர்களைப் பயணிக்க வைக்கும்''‘என்கிறார் முனைவர் விஜய்அசோகன்.
அமெரிக்காவின் திட்டத்தில் நடந்திருக்கும் இலங்கையின் பிரதமர் மாற்றத்தை மேற்குலக நாடுகளும் தெற்காசிய நாடுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
-இரா.இளையசெல்வன்
தமிழ்க் கூட்டமைப்பின் நிலை!
இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், மைத்ரிபாலவையும் ரணிலையும் தனித்தனியாக சந்தித்து கடுமையாக விவாதித்திருக்கிறார்.
மைத்ரியை சந்தித்த அவர், ""பத்தொன்பதாவது (19-வது) அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு பிரதமரை நீக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஜனாதிபதியிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதை கவனிக்க நீங்கள் தவறுகிறீர்கள். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் அதிகாரம் இருக்க வேண்டும்''‘என வாதிட்டுள்ளார். இதற்கிடையே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைக் கேட்டு சம்மந்தனிடம் ரணிலும், ராஜபக்சேவும் பேசிய நிலையில், ரணிலை சந்தித்து, ‘’""தனி நபர்களின் நலன்களை முன்னிறுத்தி எங்களது ஆதரவை வழங்க இயலாது. கொள்கை அடிப்படையில் முன்னிறுத்தப்படும் தீர்மானங்களுக்கு மட்டுமே ஆதரவளிக்க முடியும்''’என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் இரா.சம்பந்தன்.