டப்பாடி மகன் மிதுனுக்கு நெருக்கமான, முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 115 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டுகளை பற்றிய செய்திகளின் ஈரம் காயும் முன்பே, அதே மிதுனுக்கு நெருக்கமான மற்றொரு கம்பெனியான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடி ரெய்டை ஆரம்பித்தது வருமான வரித்துறை.

ops-epsஇராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் செய்யாதுரை தேவர். இருபது வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பாளையம்பட்டிக்கு வந்த இவர் ஆடுகளை மேய்ப்பது, அவற்றை வெட்டி விற்பது தவிர வேறெந்த தொழிலும் செய்யாதவர்.

சமூகப் பின்னணியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனிடம் நெருங்கி, நெடுஞ்சாலைத் துறையில் சிறிய அளவிலான காண்ட்ராக்டராக மாறினார். கொஞ்சம் கொஞ்சமாக காசு பார்த்த செய்யாதுரை மதுரை நகரில் பிரபலமான அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரில் எஸ்.பி.கே. தங்கும் விடுதி என்கிற லாட்ஜை வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். அங்கு தா.கிருஷ்ணன் வந்து போனதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து தங்கும் இடமாக மாறியது. ஆட்சி மாறியதும், அதே சமூகப் பின்னணியில், ஓ.பி.எஸ்.சின் விசுவாசியாக மாறினார் செய்யாதுரை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மூலம் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கொஞ்சம் பெரிதாக செய்ய ஆரம்பித்தார்.

ஓ.பி.எஸ்.சுக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் புழங்க ஆரம்பித்ததும், செய்யாதுரை தனது மகனான நாகராஜை வியாபாரத்திற்கு கொண்டு வந்தார். வயது ஒத்துப் போனதால் ஓ.பி.எஸ். மகனும் செய்யாதுரை மகன் நாகராஜும் நகமும் சதையுமானார்கள். ஓ.பி.எஸ். மூலம் அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடிக்கு நாகராஜ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, எடப்பாடியின் மகன் மிதுன், நாகராஜுக்கு நெருக்கமானார். லாட்ஜ் தொழில் தந்த அனுபவத்தால், பலவித சர்வீஸ்களை அமைச்சர்கள், அவர்களின் மகன்கள் என வஞ்சனையில்லாமல் செய்தனர் செய்யாதுரையும் அவர் மகனும்.

Advertisment

அதன் மூலம் விறுவிறு வளர்ச்சி ஏற்பட்டது. சொந்தமாக நூற்பாலை, மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் நெருக்கம், சொந்தமாக பெரிய கல்குவாரி என நெடுஞ்சாலைத்துறை வேலைகளுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள். செய்யாதுரையின் மற்ற மகன்களான கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்ரமணியன் ஆகியோரும் தொழிலுக்கு வந்தனர். மு.க.அழகிரியின் நிழலாக சென்னை தலைமைச் செயலகம் வரை கொடி கட்டிப் பறந்த பொட்டு சுரேஷின் அடியாளாக வலம் வந்த கருப்பசாமி, மதுரை பகுதி நெடுஞ்சாலை பணிகளை பார்த்துக் கொண்டார். அவருக்குத் துணையாக மற்றொரு மகனான பாலசுப்ரமணி இயங்க ஒட்டுமொத்த மதுரையில் நடைபெறும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் இவர்கள் வசமானது. செய்யாதுரையின் இன்னொரு மகனான ஈஸ்வரன் கோவையில் ஒரு சில பணிகளை செய்து வந்தார்.

இவையெல்லாம் ஜெ. மறைவுக்கு முன்பு வரை செய்யாதுரை குடும்பம் செய்துவந்தவை. எடப்பாடி முதல்வர் ஆனதும், விருதுநகரில் ஒரேயொரு நெடுஞ்சாலை பணியை 600 கோடி ரூபாய்க்கு செய்யாதுரையின் வகையறாக்களுக்கு சொந்தமான எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு எடப்பாடி ஒதுக்கினார். அதேபோல் ராமநாதபுரத்தில் 517 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை பணியை எடப்பாடி ஒதுக்கினார். அத்துடன் நிற்காமல் கொங்கு மண்டலத்தில் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை பணியை ஒதுக்கினார் எடப்பாடி. கடைசியாக மதுரை நெடுஞ்சாலைத்துறை பணியை செய்யாதுரையின் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தி.மு.க. புகார் தந்தது.

raid

Advertisment

அந்த காண்ட்ராக்ட்டை சேகர் ரெட்டியுடன் இணைந்து எஸ்.பி.கே. நிறுவனம் செய்து வருகிறது. அதன் மதிப்பு மட்டும் 200 கோடி ரூபாய். எடப்பாடி முதல்வராக பதவியேற்றதில் இருந்து இந்த ஓராண்டு காலத்தில் சுமார் 1557 கோடி ரூபாய் பணிகளை பெற்றுள்ளது எஸ்.பி.கே. நிறுவனம். இதன் சென்னை ஆபரேஷன்களை கவனித்து வரும் செய்யாதுரையின் மூத்த மகன் நாகராஜ், எடப்பாடியின் மகன் மிதுன் ஆகியோர் நட்பாக கலந்துருகி கமிஷன் பார்த்த விவகாரத்தால் தான் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நெடுஞ்சாலை பணிகள் ஒதுக்கப்பட்டன. ராமநாதபுரத்திலும் விருதுநகரிலும் எஸ்.பி.கே. நிறுவனம் போடாத சாலைகளை போட்டதாக சொல்லி பில் போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையில் யார் எங்கு வேலை பார்க்க வேண்டும் என்பதை நாகராஜும் மிதுனும்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் கொடுத்த பில்களை எல்லாம் அப்படியே பாஸ் செய்து அவர்கள் கேட்கும் தொகையை கொடுப்பார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். இப்படியே இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1557 கோடியில் கடந்த ஒரு வருடத்தில் சாலைகள் போடாமலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நாகராஜ் பெயரை முன்வைத்து எடப்பாடியின் மகன் மிதுன் சம்பாதித்தார் என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் கோல்மால்களில் ஒரு பகுதியை புகாராக்கி முதலில் வெளியிட்டார் டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல். அதையே இன்னும் விரிவாக புகாராக சொன்னார் தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி. தமிழக கவர்னர் புரோகித்திடமும் லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் இந்த புகார்களை கொடுக்க, அதை புரோகித் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்பொழுது உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கும் தொடர்ந்துள்ளது.

raid

எடப்பாடி மீது நெடுஞ்சாலைத்துறையில் குவியும் புகார்களை உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய அரசும் பிரதமர் மோடியும், எடப்பாடி மீது கை வைப்பதற்கான சூழலைத் தேடியது. முதற்கட்டமாக ப.சி.யுடனும் எடப்பாடியின் மகன் மிதுனுடனும் ஒரே நேரத்தில் தொடர்பு வைத்திருந்த கிறிஸ்டி புட்ஸ் நிறுவனமும் அதற்கு உதவி செய்த ஜெயப்பிரகாஷும் குறிவைக்கப்பட்டனர். உடனே எடப்பாடி அருண்ஜெட்லியிடம் முறையிட்டார். அருண் ஜெட்லி இதுபற்றி பிரதமர் மோடியிடம் பேசினார். அதற்கு மோடி, கிறிஸ்டி புட்ஸுக்கும் எடப்பாடிக்கும் சசிகலாவிற்கும் உள்ள தொடர்புகளை கூறினார்.

இதையடுத்து ஜெட்லி, ""எனக்கு உடம்பு சரியில்லை. வருமான வரித்துறை ரெய்டு என்றால் என்னிடம் தமிழகத்திலிருந்து ஓடி வருகிறார்கள். நான் என்ன செய்ய'' என மோடியிடம் கேட்டார். அதற்கு மோடி, ""நீங்க நன்றாக இருக்க வேண்டுமென்றால் நிதி அமைச்சராக இருங்க..'' என பொருள் பொதிந்த பதிலைக் கூற, ஜெட்லி சைலண்டானார் என இந்த ரெய்டுக்கான பின்னணியை சொல்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

மோடி இவ்வளவு கோபப்படுவதற்கு காரணம், எடப்பாடி எட்டு வழிச்சாலை திட்டத்தில் மோடிக்கும் கொஞ்சமும் பிடிக்காதவரும், மோடிக்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ். தரப்பால் முன்னிறுத்தப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் காட்டும் நெருக்கமும்தான் என சொல்லும் பா.ஜ.க.வினர், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் எல்லாம் கட்கரியும் எடப்பாடியும் சேர்ந்து சம்பாதிக்க போட்ட திட்டம் என மோடி சந்தேகப்படுகிறார் என்கிறார்கள்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருடனும் தொடர்பில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் புகுந்த அதிகாரிகள் சுமார் 3,500 கோடி ரூபாய் அளவிற்கான வரி ஏய்ப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள். வரி ஏய்ப்பே இவ்வளவென்றால் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருக்க வேண்டும் என ஆவணங்களைத் தேடி புறப்பட்ட வருமான வரித் துறையினருக்கு செய்யாதுரை உறவினர் ஜாய்ஸ் என்பவரது வீட்டில் 100 கிலோ தங்கம் கிடைத்தது. 30 இடங்களில் ரெய்டு செய்த வருமான வரித்துறை 100 கோடி ரூபாய் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறது.

கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்குள் ரெய்டு செய்த மாதிரியே ஏகப்பட்ட முன் தயாரிப்புகளுடன் ஆவணங்களுடன்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினரை பார்த்து வாயடைத்துப் போனது செய்யாதுரை குடும்பம்.

வருமான வரித்துறையிடம் ""எல்லாவற்றிற்கும் எடப்பாடியின் மகன் மற்றும் சம்பந்திதான் காரணம். நாங்கள் வெறும் கருவிதான்'' என புலம்பினார்கள். இதையெல்லாம் கேட்டு டென்ஷனான எடப்பாடி, கேரள கவர்னர் சதாசிவத்திற்கு போன் போட்டுக் கதறியுள்ளார். உடனே பிரதமர் அலுவலகத்தை சதாசிவம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

"உங்களுக்கு தேவையானதையெல்லாம் எடப்பாடி தருகிறார். உங்களுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறார். நீங்கள் எடப்பாடியின் மகனை டார்கெட் செய்வது நியாயமா?' என டெல்லியிடம் நியாயம் கேட்டிருக்கிறார் கேரள கவர்னர். அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. இது ஓ.பி.எஸ். செய்யும் வேலையா? அல்லது ஓ.பி.எஸ்.சுக்கும் சேர்த்து குறி வைக்கும் மத்திய அரசு டி.டி.வி. தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக திரும்பிவிட்டதா? எதனால் எடப்பாடியையும் அவரது குடும்பத்தினரையும் குறி வைக்கிறார்கள் என ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டரும் கேட்கிறார்கள். இதற்கு எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.

கிறிஸ்டி புட்ஸ், எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் இரண்டு நிறுவனங்களில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் சிக்கியுள்ளது என்றால் ஒட்டுமொத்தமாக எடப்பாடி குடும்பத்தை சசிகலா குடும்பம் போல நேரடி ரெய்டுக்குள்ளாக்கினால் எத்தனை லட்சம் கோடி கிடைக்கும் என சொல்லும் வருமான வரித்துறையினர் அடுத்தகட்டமாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகிய மூவரையும் குறி வைத்துள்ளனர் என்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.

-தாமோதரன் பிரகாஷ்

-சி.என்.இராமகிருஷ்ணன்

_________________

அன்றே சொன்ன நக்கீரன்!

nakkheeranwra

""2016-17 நிதியாண்டில் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட 4,100 கோடியில், சுமார் 1,500 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த தொகை முழுவதும் நெருங்கிய உறவினர்கள் மூலம் எடப்பாடியின் பாக்கெட்டுக்குத்தான் சென்றுள்ளது’’என கடந்த மார்ச் மாதம் பகிரங்கமாக தலைமைச் செயலகத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும் பேட்டி கொடுத்தனர். இதை 2018 மார்ச் 06-08 தேதியிட்ட நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். "சொந்தங்கள் ’கொள்ளையடிக்க எடப்பாடி போட்ட புதுரோடு!'’ என்ற அட்டைப்படத் தலைப்பிலான அந்தச் செய்தியில் எஸ்.பி.கே.& கோ, பாலாஜி டோல்வேய்ஸ் என்ற கம்பெனிகளுக்கு மட்டுமே, கோபி-ஈரோடு, ஒட்டன்சத்திரம்- தாராபுரம்-திருப்பூர், நெல்லை-தென்காசி ஆகிய வழித்தடங்களில் சாலை போடுவதற்காக 5,171 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 3,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். அந்த எஸ்.பி.கே.& கோ மீது தான் பாய்ச்சல் நடத்தியுள்ளது வருமான வரித்துறை.