லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட ஆய்வுக் குழு துணைத்தலைவர் ரமேஷ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, டி.எஸ்.பி. கணேசன், ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு, ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். இரவிலும் அரசு அலுவலகம் இயங்கி யதுதான் ஆச்சர்யம். அலுவலகத்தை விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் வெளியே போகாதபடி லாக் செய்துவிட்டு விடிய விடிய ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், கணக்கில் வராத 79 ஆயிரத்து 252 ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களில், வேலைக்கு வராத 13 பேர் வேலைக்கு வந்ததாகக் கணக்குக்காட்டி கையெழுத்திட்டதாகக் கூறியது லஞ்ச ஒழிப்புத்துறை. துப்புரவுப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, சம்பளப் பட்டுவாடா லெட்ஜர் உட்பட பலவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
விசாரித்தபோது, "ஆற்காடு நகராட்சியின் துப்புரவுப் பணிகளை, காஞ்சிபுரம் ஜே.பி.வின்சபுள் மேன்பவர் ஏஜென்ஸி ஒப்பந்தம் எடுத்து வேலை செய்துவந்தது. 40 நாட்களுக்கு முன்பு, சரியாக வேலை செய்யவில்லையென்றும், தொழிலாளர்களின் பி.எஃப். பணத்தை செலுத்தவில்லை யென்றும் சொல்லி, அந்நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்துசெய்தனர். நியாயமாக அந்நிறுவனத்தை ப்ளாக் லிஸ்டில் வைத்திருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்யவில்லை. அதன்பின் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள ஆற்காடு நகரத்திலுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவை பயன்படுத்த லாமென்று தன்னிச்சையாக முடிவெடுத்து அரசின் விதிமுறைகளைமீறி அவர்களை பணியமர்த்தினார்கள்.
தற்போது 184 மகளிர், வாகன ஓட்டுநர்கள் 10 பேர் என 194 பேர் துப்புரவுப்பிரிவில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ஒருநாள் கூலி 421 ரூபாய். இதில் பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ. 50 ரூபாய் பிடித்தம் செய்துகொண்டு மீதிப் பணத்தை கூலியாகத் தருகின்றனர். இதில், வேலைக்கு வராதவர்களை வந்தவர்களாகக் கணக்கு காட்டி ஊழல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ரெய்டு நடந்ததில், நகராட்சி ஆணை யாளர் வெங்கடலஷ்மணன், சூப்பர்வைஸர்கள் சிக்கியுள்ள னர் என்கிறார்கள் .
இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, "நாங்கள் நேர்மையாக நடந்துகொள் கிறோம் எனக் காட்டிக்கொள்ள நகராட்சி அலுவலகத்துக்குள் 18 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அலுவலகத்துக்கு வெளியே பாலாற்றங்கரை சுடுகாட்டில் லஞ்சப்பரிமாற்றம் நடக்கிறது. புதிய வீடு கட்ட, கடைகள் கட்ட, லேஅவுட் ப்ளாட் அப்ரூவல் வாங்க உள்ளிட்டவற்றுக்கு கவுன்சிலர் ஒருவரின் அலுவலகத்தில் பேரம் நடக்கும், பணம் கைமாறியபின் அவர் இதனை சேர்மன் கணவர் பென்ஸ். பாண்டியனுக்கு தெரிவித்தபின் சுமுகமாக முடியும்.
பேருந்து நிலையமருகே பிரபல ஹோட்டல் உள்ளது. பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. எனவே ஹோட்டலுக்கு வழிவிடுவதற்கு 50எல் கேட்டுள்ளார்கள். ஹோட்டல் தரப்பு 25 தருவதாகச்சொல்ல, டீல் முடியாமல் காம்பவுண்ட் சுவர் கட்டிவிட்டார்கள். மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் மன்றக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் சேர்மன் தேவி தனது மொபைலை ஆன் செய்துவிட்டு உட்கார்ந்துக்கொள்வார். சேர்மன் அறையில் அவரது கணவர் பென்ஸ் பாண்டியன் அமர்ந்துகொண்டு மன்றத்தில் நடப்பதை மானிட்டரில் பார்த்து, கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் டைப் செய்து அனுப்புவார். சேர்மனை எதிர்த்தோ, கை நீட்டியோ பேசக்கூடாது. கைநீட்டிப் பேசியதால் அ.தி.மு.க. கவுன்சிலர் உதயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நகராட்சி ஒப்பந்தங்கள் பலவற்றை தனது பினாமி பெயரிலேயே சேர்மன் கணவர் எடுத்துச் செய்கிறார், கமிஷன் கவுன்சிலர்களுக்கு தருவதில்லை. இதுபற்றி கேள்வி கேட்டால், மா.செ.வும் அமைச்சருமான காந்தி பெயரைச்சொல்லி மிரட்டுகிறார்'' எனப் புலம்பினார்கள்.
இதுகுறித்து சேர்மன் தேவி சார்பாக அவரது கணவர் பென்ஸ் பாண்டியன் நம்மிடம், "ஒப்பந்தமெடுத்திருந்த கம்பெனி மாதம் 15 ஆயிரம் வரை துப்புரவுப் பணியாளர்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை 4 ஆயிரம் வரை மட்டுமே தந்துள்ளார்கள். அதனால்தான் ஒப்பந்தம் கேன்சலானது. அவர்களின் 2 கோடி பணத்தையெடுத்து பி.எஃப் பணத்தை கட்டினோம். அவர்கள்மீதான விசாரணைக்கு பின்பே பிளாக் லிஸ்டில் வைக்கமுடியும். இந்த ரெய்டுக்கு பின்னால் அந்த கம்பெனி தான் இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். கவுன்சிலர்கள் சிலர் பழைய கம்பெனியிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது. அதுகுறித்து விசாரிக்க விஜிலென்ஸில் புகார் தருகிறோம். மகளிர் சுய உதவிக்குழுக்களை கலெக்டர் அனுமதியோடு பணியமர்த்தி சரியாக கூலி தருகிறோம். 15 நாட்களாகத்தான் மகளிர் குழுவினர் வேலை செய்கிறார்கள். அதனால்தான் வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்தமுடியவில்லை. 5 பேரின் சம்பளத்தை எடுத்து, கணக்கில் வராத பணம், வராத ஊழியர்களின் பெயரில் சம்பளம் எடுத்துள்ளார்கள் எனச்சொல்கிறது. என்மீது புகார் சொல்வது மூன்று கவுன்சிலர்கள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது'' என்றார். நகராட்சி விதிப்படி நடக்கிறது என்றால் சேர்மன் கணவர் ஏன் ஆக்டிங் சேர்மனாக இருக்கிறார்?